தேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்!! (கட்டுரை)
பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளை இலங்கை தேசத்தின் சமூக பொருளாதார பிரச்சினையாக அணுகப்படாதவரை அதற்கு உரிய தீர்வினை நாட முடியாது என்கிறார் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா .
தினக்குரல் ஒன்லைன் உடனான உரையாடல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவருடனான உரையாடல்;
தினக்குரல்: ஆயிரம் ரூபா சம்பள விடயத்தை அரசாங்கம் 2021 வரவு செலவு திட்டத்தில் இணைத்து இருப்பது பற்றிய உங்களது கருத்து என்ன ?
திலகர்: சாத்தியமில்லாத அறிவிப்புதான் ஆனாலும் வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பினை சாதகமாக்கி தோட்டத் தொழிலாளர்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வைத் தேடலாம்.
தினக்குரல்: ஏன் சாத்தியமில்லாத அறிவிப்பு என்கிறீர்கள்?
திலகர்; 2020 ஜனவரி மாதம் இதே அரசாங்கம் 1000ரூபா சம்பளவுயர்வைப் பெற்றுக் கொடுக்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்தது. அதுவும் நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி சமர்ப்பித்த பத்திரம். ஆனாலும் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. நான் பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்திலேயே அமைச்சரவைப் பத்திரம் மூலம் ஆயிரம் ரூபா சாத்தியமில்லை என்பதை எடுத்துரைத்தேன். அதுவே நிதர்சனமானது. அதே போல வரவு- செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டாலும் அது சாத்தியமில்லை. ஏனெனில் அத்தகைய ஒரு முறைமையில் பெருந்தோட்டக் கைத்தொழில் நடாத்திச் செல்லப்படவில்லை.
தினக்குரல்: இந்த அறிவிப்பை சாதகமாக்கி தீர்வினை நாடலாம் என்கிறீர்களே அது எவ்வாறு?
திலகர்: கடந்த நல்லாட்சி அரச காலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக மேற்கொண்ட அழுத்தம் அரசியல் ரீதியாக வலுவடைந்தது. தொழிற்சங்க பிரச்சினையாக நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசித்தீர்க்கப்பட்டுவந்த குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு உள்ளே உரைகள், பிரேரணைகள் மூலம் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு அரசாங்கம் அதன் தாக்கத்தை உணரும் நிலை வந்தது.
எனவே திறைசேரி நிதி யைக் கொண்டு மானியமாக 50ரூபா கொடுப்பது போன்ற நிலையை அரசாங்கம் பரிசீலிக்க நேர்ந்தது. அப்போது எதிர்க்கட்சியில் இருந்த தரப்பு இதனால் உந்தப்பட்டு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் ரூபா பெற்றுத்தருவோம் என அரசியல் ரீதியான பிரசாரத்தை நாடாளுமன்றத்துக்கு உள்ளே எடுக்க நேர்ந்தது. அதனை நடைமுறைப்படுத்த முயற்சித்ததன் விளைவே அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்ததும், வரவு செலவு திட்ட முன் மொழிவுமாகும். ஆனால் இவை சாத்தியமில்லை.
இந்த இரண்டு முறைமையிலும் அதற்கான ஆணை (Mandate) இல்லை. 1992 ஆம் ஆண்டு அமைச்சரவைப் பத்திரம் ஊடாக தனியார் மயப்படுத்தலுக்கு உள்ளான பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு தனியாருக்கு வழங்கப்பட்டாயிற்று. அவர்கள் இருபது வருடங்களுக்கு மேலாக ‘கூட்டு ஒப்பந்தம் மூலம்’ நாட் சம்பளத்தை தீர்மானித்து வருகிறார்கள்.
தினக்குரல் : அப்படியானால் அரசாங்கம் இதனை எவ்வாறு கையாளப் போகிறார்கள் என நினைக்கிறீர்கள்?
திலகர் : தோட்டக் கம்பனிகள் மீது அழுத்தத்தைப் பிரயோகித்து குறைந்த பட்சம் மொத்த நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக ஆக்குவதற்கு முயற்சிக்கிறார்கள். அது நடக்காத போது பிராந்திய கம்பனிகளை மறுசீரமைத்து சிறு, சிறு தோட்டங்களை பல நூறு கம்பனிகளுக்கு பகிர்ந்தளிக்க எண்ணுகிறார்கள். இதனால் நிர்வாக மேத்தலைச் செலவுகளைக் குறைத்து தொழிலாளர்களின் நாளாந்த வருமானத்தை அதிகரிக்க எண்ணுகிறார்கள். அதாவது இப்போது பிராந்திய கம்பனிகள் முன் மொழியும் திட்டத்தை தங்கள் வசப்படுத்த எண்ணுகிறார்கள்;. இதன் மூலம் பலநூறு வெளியார் சிறு தோட்ட உடமையாளர்களாக உள்ளே வரும் வாய்ப்பு உள்ளது. தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமை, தொழிலாளர் உரிமை பாதிக்க வாய்ப்பு உள்ளது. தொழிலாளர்கள் மேலும் அடிமைச்சமூகமாக மாறும் வாய்ப்பு உருவாகலாம்.
தினக்குரல் : அரசாங்கம் ஜனவரியில் சட்டம் ஒன்றை முன்வைக்க உள்ளதாகவும் வரவு – செலவு திட்டத்தில் முன்மொழியப் பட்டுள்ளதே ?
திலகர் : அந்த சட்டத்தைத் தான் நான் முன்னைய பதிலில் எதிர்வு கூரல் செய்கிறேன். இதுவரைகாலம் முன்மொழியப்பட்டுவந்த ‘சிறுதோட்ட உமையாளராக்குதல்’ எனும் கோரிக்கையையை திசை திருப்பும் சட்டமாக அது அமையலாம். எனவே மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றில் அதனைச் சரியாக கையாள்வதன் மூலம் அரசாங்கம் கொண்டு வரவுள்ள சட்டத்தை சாதகமாக்கலாம். அதற்கு தெளிவான அரசியல் புரிதல் தேவை.
தினக்குரல் : உங்கள் கூற்றுப்படி 1000ஃ- நாடசம்பளம் ஜனவரியில் சாத்தியமில்லை என்கிறீர்களா?
திலகர் : ஆம். அதற்கான சாத்தியங்கள் இல்லை. மாறாக அது நடைபெறவில்லை என்ற தோரணையில் மாற்றுத்திட்டத் தெரிவு நோக்கிய நகர்வுகள் இடம்பெறும். அதனையும் தாண்டி தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை அரசாங்கம் இதய சுத்தியோடு செய்வதாக இருந்தால் அதனை ஒரு சட்டத்திருத்தம் ஊடாக செய்யலாம்.
குறைந்த பட்ச சம்பளச் சட்டத்தில் ஆகக்குறைந்த நாட்சம்பளம் 1000ரூபா என திருத்தம் செய்தால் போதுமானது. இப்படி சுற்றி வளைத்துக் கொண்டு இருக்க தேவையில்லை. இதனையும் நான் நாடாளுமன்ற உறுப்பினராக சிங்கள மொழியிலேயே வலியுறுத்தி உரையாற்றி உள்ளேன்.
இலங்கை தேசத்தின் சமூகப் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு இல்லை. கம்பனிகள் இப்போதே வரவு செலவுத்திட்ட அறிவிப்பை மறுதலிக்க தொடங்கிவிட்டன. தொழிற்சங்கத்தின் தலைவர் ஒருவர் அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமர்ந்து கொண்டு அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாகவோ, வரவு செலவுத்திட்ட அறிவிப்பின் ஊடாகவோ தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் கம்பனிகள் உறுதியாக உள்ளன.
Average Rating