ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:18 Minute, 15 Second

‘ஆள்பாதி ஆடை பாதி’ என்பர். ஆள் பாதியில் பாதி நமது தலை. நம்மைப் பார்த்ததும் நம் முகமும் முடியும்தான் அனைவர் கண்களிலும் படும். “ஃபர்ஸ்ட் இம்ப்பிரஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்பிரஷன்” என்ற வழக்குச் சொல் ஆங்கிலத்தில் உண்டு. அந்த ஃபர்ஸ்ட் இம்ப்பிரஷனை கொடுக்க ஆண்களும், பெண்களும் அதிகமே மெனக்கெடுகிறோம்.

விளைவு இயற்கை சார்ந்த விசயங்களை மறந்து நம்மைச் சுற்றிச் சுழலும் விளம்பரங்கள் தரும் மோகத்தில் உடல் ஆரோக்யத்தை மறந்தே போகிறோம். எந்த ஒரு மாற்றமும் உடனடியாக நிகழாதுதான். இது இயற்கையின் நியதி. அதேபோல்தான் மனித உடலின் வெளித்தோற்றத்தில் உடனடியாய் ஒரு புற மாற்றத்தை வெளிப்படுத்த நினைத்து நாம் செய்யும் எந்தக் காரியமும் நாளடைவில் நமக்கே எதிர்வினையாற்றத் துவங்கும்.

“ ‘ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது’ என்ற நமது தொடரின் கூற்றின்படி, முகம் மட்டுமல்ல, முடியினை வேண்டிய விதங்களில் மாற்றுவது, இயற்கைக்கு மாறான வண்ணங்களை நமது கூந்தலில் செயற்கையாக உண்டாக் குவது, நீளமாக இருக்கும் கூந்தலை சுருட்டுகிறேன் என்றும், சுருண்டிருக்கும் கூந்தலை நேர் படுத்துகிறேன் என்றும் அழகை வெளிப்படுத்த இயற்கைக்கு மாறாக நாம் செய்யும் அத்தனை செயல்களுக்கு பின்னால் நாளடைவில் பக்க விளைவுகளை நிறைய சந்திக்க நேரிடும்.

ஏனென்றால் நீங்கள் செய்யும் அத்தனை மாற்றங்களும் இயற்கைக்கு மாறானது. ரசாயனம் சார்ந்தது. நீங்கள் கூந்தலில் உட்செலுத்தும் அத்தனை ரசாயனத் தயாரிப்புப் பொருட்களும், பக்க விளைவுகளையும் சேர்ந்தே ஏற்படுத்தும்” என்கிறார் அழகுக்கலை நிபுணரான ஹேமலதா. முடியென்பதை பாதுகாப்பு சார்ந்தது என்பதைத் தாண்டி, அழகு சார்ந்த விஷயமாகப் பார்க்கிறோம். நம்மை அழகாக வெளிப்படுத்துவது முக்கியம்தான். ஆனால் இயற்கையுடன் இணைந்து, நமது வீடுகளில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே அழகுபடுத்துங்கள் என்கிறார் இவர்.

கூந்தல் நமது உடல் அமைப்பிற்கும் மிகவும் பாதுகாப்பான மிகமிக முக்கியமான ஒரு கவசம். முடியை அழகு சார்ந்தது என்பதையும் தாண்டி பாதுகாப்பு சார்ந்த ஒன்று என்று யாரும் நினைப்பதில்லை. ஏனெனில் முடியைப் பற்றி நமக்கு சரியான விழிப்புணர்வு இல்லை என்பதே இதில் முக்கியமான விஷயம்.

முடி கொட்டுவதை நினைத்து வருந்தும் நாம் நமது உடலில் எதற்காக முடி இருக்கிறது, அதுவும் தலையில் அதிகமாகவும், உடலில் உள்ள மற்ற பாகங்களில் குறைவாகவும், பெண்களைவிட ஆண்களுக்கு உடலில் அதிகமாகவும் ஏன் முடி வளர்கிறது என்றெல்லாம் யோசித்துப் பார்ப்பதில்லை.

மனித உடலின் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் ரத்த ஓட்டம், நமது முடியில் இருக்காது. மனித உடலில் தலை முதல் கால்வரை தோராயமாக ஒன்றரை லட்சத் திலிருந்து ஐந்து மில்லியன் வரை முடி இருக்கும். நாம் தலையை சீப்பு கொண்டு சீவும்போது, ஒரு நாளைக்கு 100 முடி கொட்டுதல் மிகவும் இயல்பானது. இதனால் எனக்கு முடி கொட்டுகிறதே என புலம்ப வேண்டிய அவசியம் இல்லை.

நமது முடி மூன்று நிலைகளில் வளரும். அதாவது அனாஜன்(Anagen), கேட்டஜன்(Catagen), டெலோஜன்(Telogen). இந்த மூன்று நிலைதான் முடி வளர்ச்சி. நமது முடி அனைத்தும் ஒரே நிலையில் வளராது. ஒவ்வொரு முடியும் இந்த மூன்று நிலையில் ஏதாவது ஒரு நிலையில் வளரும் தன்மை கொண்டது. அனாஜன் முடியின் ஆயுள் காலம் குறைந்தது இரண்டு ஆண்டிலிருந்து 7 ஆண்டுகள் வரை இருக்கும். அனாஜன் காலகட்டத்தில் முடி 18 முதல் 30 இஞ்ச் அதாவது ஒரு மீட்டர் வரை வளரும். 85 சதவிகித முடி அனாஜன் முடி. அதனால்தான் நமது தலையில் எப்போதும் முடி இருந்து கொண்டே இருக்கும். நாம் சிக்கெடுக்கும்போது வலியோடு வரும் முடிகள் அனாஜன் முடிகளே. இதுதான் நிலையான முடி. காய்ச்சல் வந்த பிறகும், குழந்தைப் பேற்றின் பிறகு கொட்டும் முடிகள் அனாஜன் வகை முடிகள்தான்.

அடுத்தது கேட்டஜன் நிலை. இதன் ஆயுட் காலம் 10 நாள் முதல் 3 மாத காலம்வரை மட்டுமே. நாம் தலை சீவும்போது சுலபமாக சீப்பில் வரும் முடிகள் எல்லாம் இந்த கேட்டஜன் மற்றும் டெலோஜன் முடிகள்தான். இரண்டாவது மூன்றாவது நிலை முடிகள் கொட்டியபிறகு சற்று இடைவெளியில் மீண்டும் அனாஜன் முடிகள் தோன்றும். எனவே முடிகள் அனாஜன், கேட்டஜன், டெலோஜன் என்ற மூன்று நிலையிலும் மாறி மாறி வளர்கிறது. அதனால்தான் முடி கொட்டினாலும் நம் தலையில் எப்போதும் முடி இருந்து கொண்டே இருக்கும்.

இந்த மூன்று நிலை முடிகளும், முடி கொட்டக்கொட்ட இடைவெளி விட்டு மீண்டும் வளரவே செய்யும். விவசாய நிலத்திற்கு எப்படி ரெஸ்டிங் இடைவெளி தேவைப்படுகிறதோ அதேபோல்தான் முடியும். முடி கொட்டியதும் மீண்டும் முடி வளர கொஞ்சம் இடைவெளியாக ரெஸ்டிங் பீரியட் தேவைப்படும். தோலின் நிறத்திற்கு எப்படி மெலனின் எனப்படும் நிறமி காரணமோ அது போலவே நமது முடியின் நிறம் மற்றும் அதன் அடர் தன்மைக்கும் மெலனின் நிறமியே காரணம். மெலனின் நிறமி காரணமாகவே முடி கருப்பாகவும், வெள்ளையாகவும், நீளமாகவும், சுருட்டையாகவும் தோன்றுகிறது.

தோலின் நிறம் அதிக கருப்பாக இருந்தால் முடி சுருட்டையாக திக்காக இருக்கும். அதனால்தான் ஆப்பிரிக்கர்களின் முடி கருமையாகவும், சுருட்டையாகவும், அடர்த்தியாகவும் இருக்கிறது. வெள்ளைக்காரர்களின் முடி வெள்ளை நிறத்தில் நீள முடியாக உள்ளது. உடலைவிட முடிதான் முதலில் விரைவில் அழுக்காகும். பொடுகு, நுனிமுடியில் வரும் பிளவு, முடி கொட்டுதல், அழுக்காகுதல் இதெல்லாம் ஏற்பட்டால் நம் முடியில் பிரச்சனைகள் ஆரம்பமாகும்.

எப்போதும் நம் முடியினை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு நாளுக்கொருமுறை தலைமுடியை சுத்தம் செய்தல் வேண்டும். முடியை பாதுகாக்காமல் அழகை வெளிப்படுத்துகிறேன் என்ற எண்ணத்தில் பாதுகாப்புக் கவசமாய் தலையில் இருக்கும் முடிகளை மாற்ற எத்தனிப்பதும், உடலில் பரவி இருக்கும் முடிகளை வாக்சின் செய்கிறேன் என்ற பெயரில் நீக்க நினைப்பதும் ஆபத்தின் ஆரம்பம்.

கூந்தல் டிப்ஸ்…
கடுகு எண்ணையை சூடுபடுத்தி தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து 20 நிமிடத்திற்கு பின் அலச வேண்டும். சின்ன வெங்காயத்தை அரைத்து சூடாக்கி அதில் காட்டனை முக்கி எடுத்து தலையின் முடிக்கால்களுக்கு இடையில் தடவ வேண்டும். குளிர்ச் சியான பொருள் என்பதால் வெயில் காலத்தில் பகல் நேரத்தில் பயன்படுத்த வேண்டும். தேன் முடிக்கு நல்ல மாய்ச்சரைசர். முட்டையின் மஞ்சள் கருவோடு தேனை கலந்து அதை முடி மற்றும் தலையில் தடவி 30 நிமிடம் கழித்து சுத்தம் செய்ய வேண்டும். தேனால் முடி வெள்ளையாகும் என்பது ஒரு மாயை.

கொத்தமல்லி ஜூஸ், தேங்காய்ப்பால் இரண்டும் முடிக்கு நல்ல மாய்ச்சரைசர் தர வல்லது. நெல்லிக்காய், செம்பருத்தி, கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, மருதாணி – இவை எல்லாம் முடி வளர்ச்சிக்கும், முடியின் பாதுகாப்பிற்கும் இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை. வெளியில் செல்லும்போது தூசியால் முடி பாதிக்காத அளவுக்கு தலைமுடியினை மூடி பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.

அடிக்கடி தலைக்கு மசாஜ் கொடுக்க வேண்டும். இது முடி வளர்ச்சியைத் தூண்டும். வைட்டமின் ஈ மாத்திரையினை, தேங்காய் எண்ணை, விளக்கெண்ணை, பாதாம் எண்ணை இவற்றில் ஏதாவது ஒன்றில் கலந்து முடியில் தடவி நன்றாக மசாஜ் செய்தால் முடி நன்றாக வளரும். பெண்கள் ஜடை பின்னிப் போடுவதால் நுனிமுடி பிளவு தடுக்கப்படும்.

வெந்தயத்தை பொடி செய்து கொதிக்கும் நீரில் போட்டு நன்றாக கொதிக்கவிட்டு வடிகட்டிய நீரில், ஒரு காட்டன் துண்டை உள்ளே அமிழ்த்தி நனைத்து நம் தலையில் கட்டி வைக்க வேண்டும். வெந்தயத் தண்ணீர் தலை மற்றும் முடியில் நன்றாக இறங்கி பரவியதும், 40 நிமிடம் கழித்து முடியை அலச வேண்டும்.

தேங்காய் எண்ணையினை சூடுபடுத்தி அதில் நெல்லிக்காயினை சிறுசிறு துண்டாக போட்டு கொதிக்க வைத்த எண்ணையை வாரத்தில் இரண்டு நாட்கள் முடி மற்றும் முடிக்கால்களுக்கு இடையில் தடவினால் முடி நன்றாக வளரும்.

சென்ற இதழில் சில கேள்விகளை வாசகர்கள் கேட்டிருந்தார்கள். அதன் பதில்கள் இங்கே…

உடம்பில் ஏன் முடி வளர்கிறது?
உள் உறுப்புகளை நமது தோல் எப்படி பாதுகாக்கிறதோ அப்படித்தான் நமது தோலை முடி பாதுகாக்கிறது. அதனால்தான் நமது தோல்களில் சின்னதும் பெரியதுமான நிறைய முடிகள் பரவியுள்ளன. சூரியனில் இருந்து நேரடியாக வரும் யுவி கதிர் வீச்சிலிருந்து நம் தோலை பாதிக்காத அளவு முடி நம் உடலை கவசமாகப் போர்த்தி பாதுகாக்கிறது. மேலும் உடலின் முக்கிய உறுப்புகளான கண், காது, மூக்கு இவற்றிலும், மறைவான இடங்களிலும் சிறு தூசிகள் உள் நுழைந்து அவற்றின் உள்ளுருப்புகளை பாதிப்படையச் செய்துவிடாமல் பாதுகாக்கவே அங்கெல்லாம் முடிகள் உள்ளன.

முக்கியமாக உடலில் எந்த அளவிற்கு முடி வளர்ந்துள்ளதோ அவர்களை கொசு கடிக்காதாம். முடி இன்மையால்தான் குழந்தைகள் கொசுக்களால் அதிகம் பாதிப்படைகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு. பெண்களை விட ஆண்களுக்கு உடலில் முடி வளர்ச்சி சற்று கூடுதலாக இருப்பதால் ஆண்கள் கொசுக்களிடமிருந்து சற்று தப்பிக்கின்றனர்.

தலையில் மட்டும் முடி அதிகமாகவும் நீளமாகவும் வளரக் காரணம்?
நம் உடலிலே மிகவும் முக்கியமான பகுதி தலைதான். வெயிலானாலும் மழையானாலும் முதலில் படுவது நம் தலையில்தான். நமது தலைக்குள் இருக்கும் மூளை முக்கியமான பகுதி. இந்த மூளையை பாதுகாப்பது நமது மண்டை ஓட்டிற்கு மேலிருக்கும் கபாலம் எனப்படும் ஸ்கால்ப். அந்த ஸ்கால்ப்பிற்கு பாதிப்பு வராமல் பாதுகாக்கவே மற்றப் பகுதிகளைவிட தலையில் அதிகமாக முடி இருக்கிறது. அதிக உஷ்ணத்திலும், பனியிலும் இயற்கையின் பாதிப்பு மண்டைக்குள் இறங்காமல் முடி ஸ்கால்ப்பினை பாதுகாக்கிறது.

சிலருக்கு மட்டும் ஏன் வழுக்கை விழுகிறது?
வழுக்கை என்றவுடன் நினைவில் வருபவர்கள் ஆண்களே. ஆனால் வழுக்கை பெண்களுக்கும் வரும். பரம்பரை குறைபாடு இது. ஆனால் பரவாது. ஹார்மோனால் இன்பாலன்சினால் ஆண்களில் ஒரு சிலருக்கு வழுக்கை வருகிறது.

வழுக்கையால் 30 வயதிற்குள் 30 சதவிகிதம் ஆண்கள் பாதிப்படைகின்றனர். டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பில் ஆண்களுக்கு குறை இருந்தாலும் வழுக்கை விழும். பெண்களுக்கு மெனோபஸ் நிலைக்கு பிறகு ஈஸ்ட்ரோஜென் குறைபாட்டால் வழுக்கை வரும் வாய்ப்புள்ளது. சொரியாஸிஸ் முடியில் இருந்தாலும் வழுக்கை விழும்.

முடி கொட்டுதல் யாருக்கெல்லாம் அதிகம் நிகழும்?
மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், சரியான சரிவிகித உணவு எடுக்காதவர்களுக்கு கட்டாயம் முடி கொட்டும். குழந்தைபேற்றுக்குப் பின் பெண்களுக்கு கண்டிப்பாக முடி கொட்டும். ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி இழப்பு ஏற்படும்.

ஹைபோ தைராய்டு இருந்தாலும் முடி கொட்டும். முடியை நிறைய காஸ்மடிக் பொருட்களை பயன்படுத்தி அலங்கரிப்பவர்களுக்கும், அதிலிருக்கும் ரசாயனங்களால் முடி கொட்டும். குழந்தைப் பேறு தடுப்பு மாத்திரை உட்கொண்டால் முடி கொட்டும். நோய் எதிர்ப்பிற்கான மாத்திரைகளை அதிகம் எடுப்பவர்கள் மற்றும் வயோதிகம் காரணமாகவும் முடி கொட்டும்.

நரைமுடி ஏன் வருகிறது?
மெலனின் நிறமி கம்மியாக இருந்தால் இளம் வயதிலே முடி வெள்ளையாகத் தோன்றும். முடியில் மெலனின் கம்மியாக இருக்க பரம்பரை மற்றும் இளம் வயதில் புகை பிடித்தல், குடிப் பழக்கத்திற்கு ஆளாகுதல், துரித உணவுகளையே அதிகம் உண்பது, புரோட்டீன், பயோட்டின் குறைபாடு, ஷாம்பூக்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவது போன்றவை காரணமாக இருக்கிறது.

கீழ்க்கண்ட கேள்விகளுக்கான பதில் அடுத்த இதழில்…
1. முடியில் ஏற்படும் வறட்டுத் தன்மையை எப்படி சரி செய்வது?
2. எத்தனை நாளைக்கு ஒரு முறை முடியை வெட்டி குறைக்கலாம்?
3. ஹேர் கலரிங் முடியில் நீண்ட
நாட்கள் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
4. முடியினை ஸ்டிரெய்ட்டெனிங் பண்ணுவது முடிக்கு நல்லதா அல்லது கெட்டதா?
5. ஒரு வெள்ளை முடியை தலை
யிலிருந்து பிடுங்கிவிட்டால் நிறைய வெள்ளை முடி தோன்றும் என்பது உண்மையா?

வாசகர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு இதழ் முகவரிக்கு ‘ப்யூட்டி பாக்ஸ்’ என்னும் பெயரில் கேள்விகளை அனுப்பினால் அழகுக்கலை நிபுணர் ஹேமலதா தங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கார்மேகக் கூந்தல் வேண்டுமா? (மகளிர் பக்கம்)
Next post சூர்யாகிட்ட எல்லா கெட்ட விஷயமும் சொன்னேன்!! (வீடியோ)