உடல் சோர்வை போக்கும் புளி!! (மருத்துவம்)
எளிதில், அருகில் நமக்கு கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடல் சோர்வு, வலி, வீக்கத்தை போக்க கூடிய தன்மை கொண்ட புளியின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.புளி உணவுக்கு சுவையை கூட்டுகிறது. இந்திய உணவில் புளி முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கிறது. புளியில் பொட்டாசியம், வைட்டமின் சி, கால்சியம் ஆகிய சத்துக்களை உள்ளன. புளி நோய் நீக்கியாக விளங்குகிறது.
புளியை பயன்படுத்தி உள்நாக்கு அழற்சியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புளி, உப்பு. செய்முறை: புளியை சுடுநீரில் ஊறவைத்து பசையாக அரைத்து எடுக்கவும். சிறிது புளி பசையுடன் உப்பு சேர்த்து கலந்து உள்நாக்கின் மீது மேல்பற்றாக பூசினால் அழற்சி சரியாகும். தொண்டை வீக்கம் குணமாகும். ஒருநாளைக்கு 2 முறை இதை பயன்படுத்தலாம். இந்த பசையை ஈறுகளில் வைப்பதால் ஈறுகளில் ஏற்படும் வீக்கம் கரையும். பல் ஆட்டம் குறையும்.
புளியை பயன்படுத்தி, வெயிலால் உண்டாகும் சோர்வை போக்கும் பானம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: புளி, வெல்லம், ஏலக்காய்.
செய்முறை: புளிக்கரைசலுடன் நசுக்கிய ஏலக்காய் போடவும். இதனுடன் தேவையான வெல்லம் சேர்த்து நீர்விட்டு நன்றாக கலக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சோர்வு விலகும். வருகிற மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயிலில் சுற்றுவதால் நீர்சத்து குறையும். இந்நிலையில், இந்த பானத்தை குடித்துவர உடல் சோர்வு நீங்கும். மயக்க நிலை மாறும். புத்துணர்வு ஏற்படும்.
புளியை பயன்படுத்தி வலி, வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: புளி, மஞ்சள். செய்முறை: புளி பசையுடன் மஞ்சள் பொடியை சேர்த்து கலந்து மேல்பற்றாக போட்டுவர வலி, வீக்கம், சுளுக்கு போன்றவை குணமாகும்.
புளியை கொண்டு முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: புளி, எழுமிச்சை, தேன்.
செய்முறை: புளிப்பசையுடன் சிறிது எழுமிச்சை பழ சாறு, தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் மேல்பூச்சாக பூசி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த கழுவிவர முகத்தில் உள்ள கரும்புள்ளி மறையும். கழுத்தை சுற்றி ஏற்படும் கருமை, கண்களுக்கு கீழே ஏற்படும் கரும் திட்டுக்கள் இல்லாமல் போகும். தோல் இயல்பு நிலைக்கு வரும். சுருக்கங்கள் மாறும். வயது முதிர்வை தடுத்து நல்ல தோற்றத்தை கொடுக்கும்.
புளி உன்னதமாக மருத்துவ குணங்களை கொண்டது. இதை உணவில் சேர்ப்பதால் இதய அடைப்புக்கு காரணமான கொழுப்பை குறைக்கும். ரத்த ஓட்டத்தை தூண்டக்கூடியது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. மஞ்சள் காமாலைக்கு காரணமான பித்தத்தை சமன் செய்கிறது. குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் தொண்டை வீக்கம், வலிக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். கோடைகாலத்தில் தாகத்தை தணிக்கும் வகையில் குளிர்பானம், குளிர்ந்த நீர் குடிப்பதால் தொண்டையில் அழற்சி, வீக்கம் ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு சீரகம் மருந்தாகிறது. கால் ஸ்பூன் சீரகம் எடுத்து சிறிது சுக்கு பொடி சேர்த்து தேனீராக்கி குடித்துவர தொண்டையில் ஏற்படும் வலி, வீக்கம் சரியாகும்.
Average Rating