அமெரிக்கத் தேர்தலும் பட்டினத்துப் பிள்ளையின் தத்துவமும்!! (கட்டுரை)

Read Time:10 Minute, 1 Second

அமெரிக்க சனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 3ல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளில் திட்டவட்டமான நிலை ஏற்படுவதில், வழமைக்கு மாறாகத் தாமதம் ஏற்பட்டிருந்தது. அமெரிக்காவின் அடுத்த சனதிபதியாக, ஜோ பைடன் தெரிவு செய்யப்படுவதற்கான திட்டவட்டமான சமிக்ஞைகள், நவம்பர் 7ல் வெளியாகின.

ஒரு வேட்பாளர் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு 270 எலக்டோரல் கொலேஜ் (தெரிவாளர் குழு) வாக்குகளைப் பெறவேண்டும். ஜோ பைடனுக்கு 290 வாக்குகள் கிடைத்துள்ளதாகக் கணிக்கப்படுகின்றது.

தேர்தல் நடைபெற்றதிலிருந்து சுமார் நான்கு வாரங்களின் பின்னரே உத்தியோகபூர்வமான சனாதிபதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகின்றது. காரணம்: தபால் வாக்கு எண்ணிக்கை பூர்த்தியாகவேண்டும். அத்துடன், மீள் வாக்கு எண்ணிக்கை செய்யவேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படலாம்.

அமெரிக்க சனாதிபதித் தேர்தல் இரண்டு வழிகளில் சமாந்திரமாக நடைபெறுகின்றது. முதல்நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெறுகின்றார் என்பது கவனிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் இரண்டாவது நிலையில், எலக்டோரல் கொலேஜ் சனாதிபதியைத் தெரிவு செய்கின்றது. எலக்டோரல் கொலேஜின் அங்கத்துவம் சனத்தொகை அடிப்படையில் ஐம்பது மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. அதனிடம் 538 வாக்குகள் காணப்படுகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் (48), எலக்டோரல் கொலேஜ் தன்னிச்சையாக வாக்களிக்கும் மரபைக் கொண்டவை அல்ல. மாறாக, அந்தந்த மாநிலங்களில் அதிகவாக்குகளைப் பெறுகின்ற வேட்பாளருக்கே, அந்த மாநிலத்தின் எலக்டோரல் கொலேஜின் மொத்த வாக்குகளும் அளிக்கப்படுகின்றன. எலக்டோரல் கொலேஜ் வாக்குகளில் 270ஐப் பெறுகின்ற வேட்பாளர் வெற்றி பெற்றவராகக் கணிக்கப்படுகின்றார். அந்தவகையிலேயே, வாக்கு எண்ணிக்கை முடிவடைகின்ற தருணங்களில், எலக்டோரல் கொலேஜ் வாக்கு மூலமாக வெற்றி பெறுவது யார் என்பது கணிக்கப்பட்டுவிடுகின்றது.

அமெரிக்க சனாதிபதித் தேர்தலை மாநில அரசுகளே நடாத்துகின்றன. அதனால் தேர்தல் மேலாண்மை முறைகள் மாறுபடுகின்றன. தேர்தல் தொடர்பான சட்டங்களும் வேறுபடுகின்றன. அமெரிக்க சனாதிபதித் தேர்தல், கவுண்டி என வரையறுக்கப்பட்ட பிரதேசங்கள் (மாவட்டமுறை போன்றது) வாரியாகவே நடைபெறுகின்றன. வாக்களிப்பு நேரங்களின் ஆரம்பமும் முடிவும் மாநிலங்கள்தோறும் வேறுபடுகின்றன. வாக்களிப்பு முறை, வாக்கு எண்ணப்படுகின்ற ஒழுங்கு என்பனவும் வித்தியாசப்படுகின்றன. உதாரணத்திற்குச் சொல்வதானால், சில மாநிலங்கள் வாக்களிப்பு தினத்திற்கு முன்னதாகவே தபால் வாக்குகளை எண்ண ஆரம்பிக்கின்றன. வேறு சில மாநிலங்கள், வாக்களிப்புத் தினத்தில் அளிக்கப்படுகின்ற வாக்குகளையே முதலில் எண்ணுகின்றன. அதன்பின்னரேயே, தபால் வாக்குகளை எண்ண ஆரம்பிக்கின்றன. சில மாநிலங்கள் வாக்களிப்புத் தினம் வரையில் கிடைத்த தபால் வாக்குகளையே எண்ணுகின்றன. வேறு சில மாநிலங்கள், வாக்களிப்புத் தினம் வரையில் அஞ்சலில் சேர்க்கப்பட்டு அஞ்சல்திகதி பொறிக்கப்பட்ட வாக்குகளையும் எண்ணுகின்றன. அத்தகைய வாக்குகள் வாக்குப்பதிவு தினத்திற்கு பின்னரே தேர்தல் அலுவலகத்தை வந்தடைகின்றன.

அனைத்து மாநிலங்களிலும், வாக்குப்பதிவு தினத்திலே அளிக்கப்படுகின்ற வாக்குகள் உடனேயே எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகள் அன்றைய தினத்தில் எண்ணி முடிக்கப்படுவதில்லை. ஆனால், வாக்களிப்புத் தினத்தில் கிடைக்கின்ற வாக்கு எண்ணிக்கை முடிவை, தபால்வாக்கு மாற்றியமைப்பவையாக இருப்பதில்லை. காரணம்: தபால் வாக்களிப்பு எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவானதாகும். பொதுவாக, வெற்றி பெறுகின்ற வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கை, தபால் வாக்கு கணக்கெடுக்கப்படுவதற்கு முன்னரேயே திட்டவட்டமானதாக அமைந்துவிடுகின்றது. அதனாலேயே, வெற்றி பெறுகின்ற வேட்பாளர் யார் என்பது வாக்களிப்புத் தினத்திலேயே தெரிந்துவிடுகின்றது.

தற்போதைய தேர்தலிலே வெற்றிகரமான வேட்பாளரைக் கணிக்கமுடியாத சூழ்நிலை வாக்களிப்புத் தினத்திலே காணப்பட்டது. காரணம்: பென்சில்வேனிய, நெவாடா, ஜோர்ஜியா உள்ளிட்ட சில மாநிலங்களில், திட்டவட்டமான வெற்றியை உறுதிப்படுத்துகின்ற வாக்கு எண்ணிக்கை எந்தவொரு வேட்பாளருக்கும் கிடைக்கவில்லை. அதனால், தபால் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்னரேயே, வெற்றி பெறக்கூடிய வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கை, திட்டவட்டமான முன்னணி நிலையைத் தொட்டது.

தற்போதைய சனாதிபதித் தேர்தலிலே தபால் வாக்கு அதிகரித்திருந்தது. கொரோனாத் தொற்று அச்சம் காரணமாகவே, அதிகமான வாக்காளர்கள் தபால் வாக்களிப்பைத் தெரிவு செய்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அதுவே, திட்டவட்டமான தேர்தல் முடிவு அமைவதை தாமதப்படுத்தியிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

சனாதிபதித் தேர்தல் முடிவு வெளியாக ஆரம்பித்ததிலிருந்தே, கள்ளவோட்டு பதிவாகியுள்ளதான குற்றச்சாட்டுக்களை டொனல்ட் டிரம்ப் முன்வைக்கின்றார். அக்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குகளும் தொடுக்கப்படுகின்றன. மறுவளத்தில், கள்ளவோட்டு என்னும் குற்றச்சாட்டில் எத்தகைய அடிப்படைகளும் கிடையாது என்பதை, வெவ்வேறு மாநிலங்களின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் திட்டவட்டமாக மறுக்கின்றனர்.

அமெரிக்காவில் கள்ளவோட்டு என்னும் குற்றச்சாட்டு எழுந்திருப்பதே கவனத்தைச் சுண்டியிழுக்கின்றது. அதனைச் சாதாரணமான ஒருவர் சொல்லவில்லை. எழுபது மில்லியன் அமெரிக்கர்களின் வாக்குகளினால் அலங்கரிக்கப்பட்ட ஒருவர் சொல்லியிருக்கின்றார். கோவலன் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க ஒரு பத்தினி ஆவேசம்கொண்டாள். அமெரிக்கா என்ன செய்யப் போகின்றது என்னும் கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

உலகின் நாலாமூலைக்கும் ஓடியோடி சனநாயகம் குறித்து வகுப்பெடுக்கின்ற அசகாய தேசத்துக்கா இந்தநிலை ஏற்பட்டிருக்கின்றது என்னும் ஆச்சரியத்தை எளிதில் கடந்து போகமுடியவில்லை.

பிறத்தியாரை ஒருநாளும் நெளிக்கக்கூடாது மோனை. அது திருப்பி எங்களுக்கே வந்துசேரும் என்று என்னுடைய தாய்வழிப் பேத்தியார் சொல்லுவார். ஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமானதும் எதிரானதுமான விளைவு உண்டு என்பதை ஐசக் நியூட்டன் கண்டறிந்தார். தன்வினை தன்னைச் சுடும் என்று பட்டினத்தார் சொன்னார். ஒப்பாரும்மிக்காருமற்ற சனநாயகத் தேசத்துக்கு, அவர்களுடைய பேத்தியார் புத்திசொல்லவில்லையோ என்னவோ. ஆனால், பட்டினத்துப் பிள்ளையின் தத்துவம் உள்ளது. புரிந்துகொள்வதோ அல்லது புரிந்துகொள்ள மறுப்பதோ அவர்களுடைய தெரிவுதானே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post India -வை பாதுகாக்கும் Top 10 ஆயுதங்கள்!! (வீடியோ)
Next post அளவுக்கு மீறினால்..? (அவ்வப்போது கிளாமர்)