உள் உறுப்புகளுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு !! (மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள அஞ்சறைப்பெட்டியில் இருக்கிற உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் நுங்கு, செம்பருத்தி போன்றவற்றை பயன்படுத்தி கோடை வெயிலை தணிக்க கூடிய பானங்கள் தயாரிப்பது குறித்து பார்க்கலாம்.பல்வேறு நன்மைகளை கொண்ட செம்பருத்தியை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: செம்பருத்தி, சந்தனப்பொடி, கற்கண்டு பொடி, நன்னாரி சர்பத்.
ஒரு பாத்திரத்தில் செம்பருத்தி பூவின் இதழ்களை எடுக்கவும். இதனுடன் சந்தனப்பொடி, கற்கண்டு பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குளிரவைத்து நீர்விடவும். இதனுடன் நன்னாரி சர்பத் சேர்த்து கலந்து குடித்துவர உடல் குளிர்ச்சி அடையும். இது உள் உறுப்புகளை குளிர்விக்கும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை தணிக்கும்.
நுங்குவை பயன்படுத்தி குளிர்ச்சி தரும் பானம் தயாரிப்பது குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நுங்கு, ரோஜா அல்லது மாதுளை சர்பத், கற்கண்டு பொடி .ஒரு பாத்திரத்தில் நீர் எடுக்கவும். இதில் கற்கண்டு பொடி, ரோஜா அல்லது மாதுளை சர்பத், இளம் நுங்கு சேர்த்து நீர்விட்டு கலந்து குடிக்கவும். இதனால், உடல் குளிர்ச்சி அடையும். வயிற்று எரிச்சல், குடல் புண் சரியாகும். கண்களில் ஏற்படும் எரிச்சலை போக்கும்.பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட நுங்கு உண்பதற்கு இளநீரை போன்ற சுவையுடையது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. நாவறட்சியை போக்க கூடியதாகிறது. கோடைகாலத்தில் இழந்த நீர்ச்சத்தை மீட்டு தருகிறது. இனிமையான இது ஊட்டச்சத்து மிக்கது.
இளம்நுங்கு சாப்பிடுவதற்கு மிகுந்த சுவையுடையது. இளம்நுங்கு வயிற்று வலியை போக்கும். முற்றிய நுங்கு வயிற்று வலியை ஏற்படுத்தும். செரிமான சீர்கேடு ஏற்படும். நுங்கை தோலில் பூசும்போது வியர்குரு சரியாகும். நுங்கை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நுங்கு, நெய், சார பருப்பு, பால், கற்கண்டு. ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு, சார பருப்பு சேர்த்து பொறிக்கவும். பின்னர், இதை குளிர்ந்த பாலில் சேர்க்கவும். இதனுடன் கற்கண்டு பொடி, நுங்கு சேர்த்து கலந்து குடித்து வர உடலுக்கு பலம் கொடுக்கும். புரதம், கால்சியம் சத்துக்கள் நிறைந்த இந்த பானத்தை கோடைகாலத்தில் அன்றாடம் ஒருமுறையாவது எடுத்துகொள்வது நல்லது. இதனால், சிறுநீர்தாரை எரிச்சல், வயிற்று கடுப்பு, வயிற்று புண், சோர்வு, தலைவலி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் சரியாகும்.
நுங்கு, செம்பருத்தி போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கும் பானங்களை குடிப்பதன் மூலம் கோடை வெயிலில் இருந்து உடல்நலத்தை பாதுகாக்கலாம். பசியை தூண்டுவதற்கான உணவு குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு நார்த்தை மருந்தாகிறது. நார்த்தையை உப்பில் இட்டு ஊறவைத்து வெயிலில் காயவைக்க வேண்டும். இதை ஊறுகாயாகவோ, வற்றலாகவோ வைத்துக்கொண்டு சாப்பிட்டால் செரிமான பிரச்னை தீரும்.
Average Rating