இனி, முஸ்லிம்களே பலிக்கடாக்கள் !! (கட்டுரை)

Read Time:14 Minute, 35 Second

அரசாங்கத்தை நிறுவத் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் ஆதரவைப் பெறுவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினதும் அதன் நட்புக் கட்சிகளினதும் அரசியல்வாதிகள், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் கூறினார்கள்.

கூறியதைப் போலவே அவர்கள், தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும் பொதுவாகத் தமிழ், முஸ்லிம் சமூகங்களினது ஆதரவின்றியே, ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றார்கள்.

பின்னர், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கும் போதும், அதற்காகத் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில்லை எனக் கூறினார்கள். ஆனால், விவாதம் நெருங்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ், பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

ரிஷாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒரு ‘டீல்’ காரணமாகவே, ரியாஜ் விடுதலையானார் என, பேராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மறைமுகமாகக் கூறியதை அடுத்து, “எந்தவொரு ‘டீலும்’ இல்லை” என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிக்கையொன்றின் மூலம் மறுத்திருந்தார்.

ரியாஜ்ஜின் விடுதலை, ‘அந்த டீலின்’ காரணமாக இடம்பெற்றதோ இல்லையோ, 22ஆம் திகதி, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அரசாங்கத்துக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கும் இடையே, ‘டீல்’ ஒன்று இருந்திருப்பது தெளிவாகியது.

அந்த வாக்கெடுப்பின் போது, 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக, முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்கள் நால்வரும் முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வென்ற, மக்கள் காங்கிரஸின் அலி சப்ரி ரஹீம் உள்ளிட்ட மக்கள் காங்கிரஸ் எம்பிக்கள் இருவரும் அந்தத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அத்தோடு, தமிழ் முற்போக்கு முன்னணியின் அரவிந்த குமாரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பி டயனா கமகேயும், 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் அது, 156 வாக்குகளைப் பெற்று நிறைவேறியது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் அதன் நட்புக் கட்சிகளுக்கும், ஒக்டோபர் 22ஆம் திகதியாகும் போது, நாடாளுமன்றத்தில் 150 எம்.பிக்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் ஒருவர், சபாநாயகராக இருந்தார். எனவே, அந்தத் திருத்தத்தை அப்போது நிறைவேற்ற, மேலும் ஓர் எம்.பியின் ஆதரவு தேவையாக இருக்கும் போது, எந்த நம்பிக்கையில், அரசாங்கத் தரப்பு எம்.பிக்கள் அதனை நிறைவேற்ற நாடாளுமன்றத்துக்கு வந்தார்கள்.

“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், 157 வாக்குகளால் நிறைவேறும்” என்று, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, முன்னரே கூறியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வாக்களித்து இருந்தால், அவர் கூறிய எண்ணிக்கை சரியானதாகவே இருந்திருக்கும்.

அதாவது, அரசாங்கத் தரப்பு எம். பிக்களுக்கு, இந்த ‘டீலை’ப் பற்றி முன்கூட்டியே தெரியும். இவ்வாறு இருக்கும்போதுதான், 21ஆம் திகதி மாலை வேளையில், அமைச்சர் விமல் வீரவன்ச, “இந்தத் திருத்தத்துக்கு, தீவிரவாதிகளின் ஆதரவை நாடுவதில்லை” என, முஸ்லிம் கட்சிகளைக் குறிக்கும் வகையில் கூறினார். “அவர்கள் வாக்களித்தால், என்ன செய்யப் போகிறீர்கள்” என, ஊடகவியலாளர் கேட்ட போது, “பலாத்காரமாக யாரும் வாக்களித்தால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்” எனப் பதிலளித்தார். அவ்வாறாயின், இந்த முஸ்லிம் எம்.பிக்கள் அறுவருக்கும் எவ்விதத் தூண்டுதலுமின்றி, ‘பலாத்காரமாகவா’ வாக்களித்தார்கள்?

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது, “எமக்கு, சிறுபான்மையின அரசியல்வாதிகள் இனித் தேவையில்லை” என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினரும் இனவாதிகளும் கூறினார்கள். ஆனால், அரசமைப்பில் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை, முஸ்லிம்களின் ஆதரவை நாடாமல் நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை, இவர்களுக்கு ஏற்பட்டது. சிறுபான்மையின வாக்குகள் இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்; ஆனால், பிரதான நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள, இவர்களால் முடியவில்லை என்பதை, இது காட்டியது.

அதேவேளை, ‘பயங்கரவாதிகள்’, ‘தீவிரவாதிகள்’ என்றெல்லாம், இதுவரை ஆளும் கட்சியினரால் முஸ்லிம்கள் மீது குத்திய முத்திரை, தொடர்ந்தும் செல்லுபடியாகுமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த முஸ்லிம் எம்.பிக்கள், எவ்வித பிரதியுபகாரத்தையும் எதிர்பாராது தான், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்தார்கள் என்று கூற முடியாது. அவர்கள் எதிர்பார்த்தவை எல்லாம், சிலவேளை கிடைக்காது; ஆனால், ஏதாவது கிடைக்கும். அப்போது, பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்றெல்லாம் கூறியவர்கள், அதை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்பதைப் பார்க்க, வினோதமாகவே இருக்கும்.

சில முஸ்லிம்கள், இவ்வாறு நடந்தவற்றை வைத்து, மனதைச் சாந்தப்படுத்திக் கொள்ள முனையலாம். ஆனால், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை விளங்கிக் கொண்டால், தாம் செய்ததன் பாரதூரத் தன்மையை, அவர்கள் புரிந்து கொள்வார்கள். இது, அரசாட்சிக்குரிய சகல அதிகாரங்களையும், தனிநபர் ஒருவரிடம் கையளித்து, சர்வாதிகாரத்தை உருவாக்கும் ஒரு திருத்தச் சட்டமூலமாகும். இந்தத் திருத்தச் சட்டமூலத்தின் விளைவுகள் எதற்கும், இந்த ஆறு முஸ்லிம்களும் பொறுப்பானவர்கள் ஆவர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புத்திஜீவிகள் மத்தியில், இந்த ஆறு பேரும் எவ்வாறு மதிப்பிடப்படுவார்கள், முஸ்லிம்கள் எவ்வாறு மதிப்பிடப்படுவார்கள்?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு, எவ்வாறானது என்பது சகலரும் அறிந்த விடயம். புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களை, பசில் ராஜபக்‌ஷவுடன் சேர்ந்து, மன்னாரில் குடியமர்த்தியதற்காக ரிஷாட் பதியுதீனை இவர்கள், ‘வீரப்பன்’ ஆக்கினார்கள். உயிர்த்த ஞாயிறுத் தினப் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முழு முஸ்லிம் சமூகத்தையே, ‘பயங்கரவாதிகள்’ ஆக்கினார்கள். தேர்தலுக்காக, டொக்டர் ஷாபியை ‘அரக்கன்’ ஆக்கினார்கள். பிக்குகள் உண்ணாவிரதம் இருந்து, முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உலை வைக்கும் பாரியதோர் இனக்கலவரத்தின் விளிம்புக்கே முழு நாட்டையும் இட்டுச்சென்றார்கள்.

இவ்வாறு இருக்க, இந்த ஆறு முஸ்லிம் எம்.பிக்களும், எவ்வித ரோஷமுமின்றி, 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை, ஏன் ஆதரிக்க வேண்டும்? அதுவும், மோசமான ஒரு திருத்தச் சட்டமூலத்துக்கு? ‘பட்ஜெட்’ போன்ற ஒன்றை ஆதரித்தாலும் பரவாயில்லை. ஒன்றில் அவர்கள், ஏதாவது சமூக நலனைக் கண்டிருக்க வேண்டும்; அல்லது, தனிப்பட்ட நலனைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆறு பேரையும், அரசாங்கத் தரப்பினர், குறைந்த பட்சம் பகிரங்கமாகப் பாராட்டவாவது இன்னமும் முன்வரவில்லை.

“அரசாங்கம், சிறுபான்மையின எம்.பிக்களை நாடிப் போகவில்லை; அவர்கள்தான், அரசாங்கத்தை நாடி வந்தார்கள்” என, நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியிருந்தார். அத்தோடு, முஸ்லிம்கள் வாக்களிக்காவிட்டாலும் டயனாவினதும் அரவிந்த குமாரினதும் வாக்கைப் பெற்று, 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றியிருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். அதாவது, முஸ்லிம்களது வாக்குகள், தீண்டத்தகாதவை என்றே, அவர் கருதுகிறார். இந்தத் தீண்டத்தகாத வாக்குகளுக்காகத் திரைமறைவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து, அவருக்குத் தெரியாது போலும்!

ஆங்கிலத்தில் கூறுவதைப் போல், இவர்களுக்கு ‘கரட், பிரம்பு’ (Carrot and Stick) இரண்டையும், திரைமறைவில் அரசாங்கம் காட்டியிருக்கலாம். ரிஷாட்டுக்கும் அவரது சகோதரருக்கும், ஏற்கெனவே பிரம்பைப் பகிரங்கமாகவே காட்டினார்கள். அதைக் கண்டு, மற்றவர்கள் அடங்கிப் போனார்களா?

20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போது, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் சிறந்த உரையொன்றை ஆற்றினார். அதேவேளை, மு.கா உறுப்பினர் நஸீர் அஹ்மட், திருத்தச் சட்டமூலத்தைப் பாராட்டிவிட்டு, “மனசாட்சிப்படி வாக்களிக்க, தலைவர் அனுமதியளித்தார்” என்றார். எல்லாம் நடிப்பா? அல்லது, வேறு வழியில்லாமல் மு.கா தலைவர், நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டாரா?

சிங்களவரோ தமிழரோ முஸ்லிமோ, எவருக்கும் அரசியல் என்பது பட்டம் பதவிகளுக்காகவும் பணத்துக்காகவும் செய்யும் ஒரு தொழிலாகும். எனவே, எதிர்க்கட்சியில் இருந்து என்ன பயன் என, இவர்கள் நினைத்திருக்கலாம். இவர்களில் சிலர், அந்தக் காலத்திலிருந்தே, பதவி என்றால் எதையும் செய்யத் துணிந்தவர்கள். இல்லாவிட்டால், கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஏதாவது நன்மையை செய்யலாம் என்றும், சிலவேளை, நினைத்திருக்கலாம்.

ஆனால், இனவாதப் பிரசாரத்தின் மத்தியில், இவர்களால் என்ன தான் செய்ய முடியும்? ஏற்கெனவே, இவர்களது ஆதரவைப் பெற்றமைக்காக, சில பிக்குகள் அரசாங்கத்தைக் குறை கூறி வருகின்றனர். இவர்கள் அரசாங்கத்தை ஆதரித்தாலும், இவர்களை அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என, அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். எனவே அரசாங்கம் இவர்களை கவனிக்க முற்பட்டால் இனவாத சக்திகள் குழம்பாதா?

அரசாங்கத்துக்கு அளிக்கப்பட்ட இந்த உதவியின் காரணமாக, முஸ்லிம்களுக்குக் குத்தப்பட்ட பயங்கரவாத முத்திரை நீங்கிவிடுமா? கிழக்கில், தொல்பொருள் பாதுகாப்புச் செயலணியின் மீதான, சிறுபான்மையின மக்களின் அச்சம் நீங்கிவிடுமா?

ஜனாதிபதித் தேர்தலின் போது, “சிறுபான்மையின வாக்குகளுக்குப் பெறுமதி கிடைப்பதால், நிறைவேற்று ஜனாதிபதி முறை, சிறுபான்மையின மக்களுக்கு நல்லது” என, மு.கா ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கூறியிருந்தார். ஆனால், அந்த ‘நல்லது’, கடந்த காலத்தில் நடைமுறையில் இருக்கவில்லை. அதேவேளை, ஆணைக்குழுக்களால் கட்டுப்படுத்தப்பட்ட ஜனாதிபதியும், சிறுபான்மை வாக்குகளை எதிர்ப்பார்க்கத் தான் செய்வார். எனவே, மர்ஹூம் அஷ்ரபின் கருத்துப் படியும், ஜனாதிபதி சர்வாதிகாரியாக இருக்கத் தேவையில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் இல்லா உலகம்?! (அவ்வப்போது கிளாமர்)
Next post உடலுக்கும் உதட்டுக்கும் பீட்ரூட்!! (மகளிர் பக்கம்)