சிரிய அகதிகளும் வெளிவிவகார அரசியலும் !! (கட்டுரை)
சிரியாவில் மோதலின் தொடக்கத்திலிருந்து சிரிய அகதிகள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பிரச்சினையானது சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் அறிக்கைகள், சிரிய மோதலில் ஈடுபட்டுள்ள வகிபங்குதாரர்களின் நடவடிக்கைகள் பற்றி எழுதப்பட்ட பல கட்டுரைகளில் சித்தரிக்கப்பட்டிருந்த போதிலும், அரசியல் நலன்களுக்காக பொதுமக்கள் பணயமாக வைக்கப்படுதலுக்கு ஒரு மோசமான உதாரணம் கிழக்கு சிரியாவில் ஐக்கிய அமெரிக்காவின் விருப்பத்துடன் இணங்கிச் செயற்படும் ஆயுதக்குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் அல்-டான்ஃப் தளத்தை சுற்றி 55 கிலோ மீற்றர் மண்டலத்துக்குள் அமைந்துள்ள ருக்பான் அகதிகள் முகாம் ஆகும்.
உத்தியோகபூர்வ தகவல்களின்படி, 50,000 க்கும் மேற்பட்ட மக்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த முகாமில் தற்போது வாழ்கின்றனர். இது ஒரு சிறிய நகரத்தின் மக்கள் தொகையுடன் ஒப்பிடக்கூடிய பெரிய எண்ணிக்கையாகும். ருக்பானில் உள்ள மக்களின் அவல நிலையை போக்கி அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பும் வகையில் மனிதாபிமான முறையில் தரைப்பாதையைத் திறக்குமாறு பலதரப்பும் குறித்த ஆயுத குழுக்களை வேண்டியிருப்பினும், அத்தகைய அனைத்து வேண்டுதல்களும் குறித்த ஆயுத தரப்பினரால் புறக்கணிக்கப்பட்டன. குறித்த ஆயுதக்குழுக்கள் முகாமுக்கு முதலுதவி பொருட்களை வழங்க மறுக்கிறது என்பதும், சிரியாவில் உள்ள பல தற்காலிக தடுப்புக்காவல் நிலையங்களில் ருக்பன் மிகப் பெரியதாக இருந்தபோதிலும், அண்மைய நாடான ஜோர்தான் மனிதாபிமான உதவிகளை செய்வதற்கும் குறித்த ஆயுத குழுக்கள் தடை விதிக்கின்றன என்றும், குறித்த ஆயுத குழுக்கள் ஐ. அமெரிக்காவின் நிழல் யுத்த பங்குதாரர்களாக காட்டிக்கொள்கின்றமையே குறித்த தடுப்புக்காவலில் உள்ள மக்களுக்கு பிறிதொரு சக்திகளும் உதவி வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட காரணமாகின்றது என குற்றஞ் சுமத்துகிறது சிரிய அரசாங்கம்.
எது எவ்வாறு இருப்பினும், சிரியாவின் உள்நாட்டு யுத்தம் அதன் சிக்கலான தன்மையை கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கின்றது. ஜனாதிபதி பஷர் அல்-அசாட், ரஷ்ய மற்றும் ஈரானிய ஆதரவுடன் சிரியாவின் அரசாங்கத்தில் மீண்டும் பலம்பொருந்திய ஆட்சியாளராக இருப்பதுடன் இந்நிலை மேலதிகமாக ஜனாதிபதி அசாட்டின் அரசாங்கமானது சிரியா முழுவதிலும் தனது ஆட்சியை மீண்டும் உறுதிப்படுத்த முடியும் என்று நம்புவதாக தெரிகிறது. பிரிவினையின் பேச்சு, புதிய அரசாங்கம் அமைத்தல் என்பன வலுவிழந்து, கிளர்ச்சியாளர்கள் சிரிய அரசாங்கத்துக்கு எதிரான போரியலை தற்சமயம் கைவிட்டுள்ளனர். அலெப்போ நகரானது மீண்டும் அரசாங்கத்தின் கைகளில் உள்ளது. றக்காவில் சிரிய இராணுவமானது யுத்தத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஆனால், சிரியா ஒரு தசாப்த காலமாக போரில் ஈடுபட்டுள்ள காரணத்தால், பல ஆயுத, ஆயுதமற்ற குழுக்கள், நாடுகளின் ஆதிக்கத்தை சோதிக்கும் களமாக சிரியா விளங்குகின்றமை, சிரியாவின் பொருளாதாரம் மற்றும் பொருளாதார கட்டமைப்பை பெரிதும் பாதித்துள்ளது. மேலும் பல நகரங்கள் யுத்த அழிவிலிருந்து மீள கட்டுமானம் செய்யப்படாத இந்நிலையில் – குறிப்பாக உலகளாவிய கொவிட்-19 தொற்றுநோய், சிரியாவை ஏற்கெனவே பலவீனமான பொருளாதாரத்தை இன்னும் மீள எழமுடியாத நிலைக்கு தள்ளுகின்றது. மறுமுனையில், போருக்குப் பிந்தைய புனரமைப்பு, பொருளாதார மீட்சிக்கான சிரியாவின் முயற்சிகள் ஐக்கிய அமெரிக்கா தொடர்ச்சியாக விதித்த கடுமையான பொருளாதாரத் தடைகளின் பயனால் தோல்வி அடைந்துள்ளமை குறிப்பாக உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரின் வாழ்வியலை மேலும் துன்பகரமாக்குகின்றது.
மறுபுறத்தில், வெளிநாடுகளில் முகாம்களில் தங்கியிருக்கும் சிரியாவின் அகதிகளுக்கு, குறிப்பாக சிரியாவின் எல்லையிலுள்ள நாடுகளில் ஜோர்தான் மற்றும் துருக்கி ஆகியவற்றின் பொருளாதார நிலைமைகளும் நிலையானதாக இல்லாமை, குறித்த அகதிகளின் வாழ்க்கை நிலையையும் சிக்கலாக்குகின்றது. துருக்கி நீண்ட காலமாக அரசியல் நலன்களைப் பெறுவதில் ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு எதிராக சிரிய அகதிகளை பயன்படுத்தியிருந்தது. இந்நிலையானது, அகதிகளை மனிதாபிமானமற்ற முறையில் தடுத்து வைத்து, தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப அனுமதிக்கப்படாத ரும்பன் அகதிகளின் நிலைக்கு எவ்விதத்திலும் குறைவில்லை என கவலை வெளியிடுகின்றது, சர்வதேச மன்னிப்பு சபை.
தொடர்ச்சியாகவே துருக்கி, வை.பி.ஜியை சிரியாவின் அங்கமாகவே பார்ப்பதும், எனவே, துருக்கி அதன் பிராந்தியத்திலுள்ள ஒரு குர்திஷ் அமைப்பான வை.பி.ஜியை துருக்கியிலுள்ள பி.கே.கே அமைப்பை ஒத்ததாகவே கருதுவதுமே துருக்கி இவ்வாறாக மனிதாபிமான முறை அற்று அகதிகளை தனது சொந்த நலன்களுக்காக முகாம்களில் தங்கவைத்து சித்திரவதை செய்கின்றது எனக் கூறுகின்றது மன்னிப்பு சபை. அனால் துருக்கியை பொறுத்தவரை, துருக்கியின் உள்நாட்டு விவகாரங்களில் எவ்வாறு பி.கே.கே குர்திஷ் மக்களுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்துக்கான அழைப்பு விடுக்கின்றதோ, அதேபோன்று பிராந்தியத்தில் துருக்கிக்கு எதிரான ஒரு குர்திஷ் தன்னாட்சி அரசு அமைவதற்கு வை.பி.ஜி வழிவகுத்துவிடும் என கருத்துவதன் அடிப்படை ஆகும் என்பதையும் சர்வதேச நாடுகள் உணராமல் இல்லை. இருந்தபோதிலும், ரஷ்யாவும், ஐ. அமெரிக்காவும் வை.பி.ஜியை ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட மறுத்த வெளிவிவகாரக் கொள்கையால் பாதிக்கப்படுவது ஏனோ சிரியாவின் அகதிகளே என்பது ஏறுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இதனடிப்படையிலேயே அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சிரியாவின் அகதிகள் தொடர்பான விடயத்தை ஆராய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கருத்து முன்வைத்தமை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
Average Rating