நெஞ்சக கோளாறுகளை போக்கும் தும்பை!! (மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் வைத்திருக்கும் உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நெஞ்சக சளி, அஜீரணம், மலச்சிக்கல் போன்றவற்றை சரிசெய்யும் மருத்துவத்தை காணலாம். தும்பை, அரிசி திப்லி ஆகியவை இப்பிரச்னைகளுக்கு அற்புதமான மருந்தாகிறது.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது தும்பை. பித்தசமனியாக விளங்குகிறது. தும்பையின் பூ, இலை, வேர் ஆகியவை பயன்தருகிறது. அரிசி திப்லி உள் உறுப்புகளை தூண்டும் தன்மை கொண்டது. செரிமானத்தை சீர் செய்யும். நெஞ்சக சளியை வெளியேற்றுகிறது. கோடை மற்றும் குளிர்காலத்தில் தொற்றுநோய் வராமல் தடுக்கிறது.
தும்பையை பயன்படுத்தி நெஞ்சக கோளாறுகளை சரிசெய்யும் ரசம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தும்பை இலை, பூ, நல்லெண்ணெய், வரமிளகாய், பூண்டு, கடுகு, புளிகரைசல், மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு, மிளகுப்பொடி, சீரகப்பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றவும். இதில் கடுகு போட்டு பொறிந்ததும் வரமிளகாய், பூண்டு பற்கள் தட்டி போடவும். இதில் தும்பையின் இலை, பூக்களை சுத்தப்படுத்தி போட்டு வதக்கவும். பின்னர் புளிகரைசல் சேர்க்கவும். இதில், நீர்விட்டு மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு, மிளகுப்பொடி, சீரகப்பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து லேசாக கொதிக்க வைக்கவும். இந்த ரசத்தை குடித்துவர நெஞ்சக கோளாறுகள் சரியாகும்.
தும்பை நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நுண்கிருமிகளை அழிக்கும். தும்பையை துவையல், ரசமாக செய்து சாப்பிட்டுவர நெஞ்சக சளி, வயிற்றுகோளாறுகள், மலச்சிக்கல், பித்தம், மாதவிலக்கு பிரச்னைகள் சரியாகும். அரிசி திப்பிலியை பயன்படுத்தி ஜீரணத்தை தூண்டும் ரசம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அரிசி திப்லி, தனியா, வரமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, நல்லெண்ணெய், பெருங்காயம், கடுகு, மஞ்சள் பொடி, மிளகுத்தூள், சீரகப்பொடி, புளிகரைசல், தக்காளி, உப்பு, கொத்துமல்லி.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தனியா, 10 அரிசி திப்லி, ஒரு வரமிளகாய், கருவேப்பிலை, இஞ்சி சேர்த்து வறுத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்தவுடன் பெருங்காயம் சேர்க்கவும். கடுகு சேர்த்து அது பொறிந்தவுடன், ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் கலவையை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் பொடி, மிளகுத்தூள், சீரகப்பொடி சேர்த்து வதக்கவும். பின்னர், புளிகரைசல், தக்காளி சேர்க்கவும்.
இதில் நீர்விட்டு உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்த ரசத்தை குடித்துவர வயிற்றில் இருக்கும் வாயு வெளியேறும். ஜீரணத்தை தூண்டும். சளியை போக்கும். இருமலை அகற்றும். உள் உறுப்புகளை தூண்டி ஆரோக்கியத்தை கொடுக்கும். தினமும் இந்த ரசத்தை சாப்பிட்டு வருவது உடல் நலத்துக்கு நன்மை தரும்.
வியர்வையினால் உண்டாகும் உடல் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். அதிக பணி செய்பவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு வியர்வை அதிகளவில் வெளியாகும். எலுமிச்சை சாற்றை சிறிது நேரம் அக்குள்களில் தடவி குளிப்பதாலும், குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை கலந்து குளிப்பதால் துர்நாற்றம் விலகிப்போகும்.
Average Rating