20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்; கஜேந்திரகுமார்!! (கட்டுரை)
“சிறிலங்கா ஒரு பன்மைத்துவம் கொண்ட நாடு என்பதை அதாவது இங்கு சிங்கள தேசம் தமிழர் தேசம் மற்றும் முஸ்லிம்களையும் கூட தேசமாக அங்கீகரிக்க மறுத்து பன்மைத்துவத்தை நிராகரிக்கும் மனோநிலையும் மறுதலிப்பும் பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தொடர்ச்சியாக மறுத்தமையும் அனைத்து அதிகாரத்தையும் தனி ஒரு இடமாக மத்தியினுள் மையப்படுத்தும் போக்கு மட்டுமல்ல சர்வாதிகாரத்தை நோக்கிக் கொண்டு செல்லும் நிலையை உருவாக்கி விட்டிருக்கின்றது என்பதை நான் மிகுந்த பொறுப்புணர்வுடன் இந்த சபையில் வெளிப்படுத்துகிறேன்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
20ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் நேற்று வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த்; தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் உரையாற்றும் பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது உரையின் முழுவிபரம் வருமாறு;
“பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் உரையினையடுத்து எனக்கு உரையாற்றக் கிடைத்ததையிட்டு நான் மனமகிழ்வடைகிறேன். இதயத்தில் முற்போக்குக் கொள்கைகளைக் கொண்டவராக இருந்த போதிலும், இச்சட்டமூலம் இங்கு சமர்ப்பிக்கப்படுகையில், அவர் தவறானவர்களின் பக்கம் அமர்ந்திருக்க வேண்டிய நிலையேற்பட்டிருக்கிறது.
சபையின் எதிர்த்தரப்பிலிருந்து பலரும் இச்சட்டமூலத்தில் உள்ள ஜனநாயக குறைபாடுகள் குறித்தும் அரசின் அதிகாரம் தனியொருவரின் கைகளில் குவிக்கப்பட்டிருப்பது பற்றியும் விரிவாகப் பேசியிருக்கிறார்கள். ஆதலால் நான் இத்திருத்தச் சட்டமூலம் தொடர்பான விபரங்களைப் பற்றிப் பேசுவதற்கு தேவையிருப்பதாக எண்ணவில்லை.
ஆனால் இந்நாடு இவ்வாறான நிலையை ஏன் எதிர்கொள்கிறது என்பது பற்றி நிச்சயமாக நீஙகள் உங்களையே கேள்வி கேட்டுகொள்ளலாம் என்பதிலிருந்து ஆரம்பிக்கலாம் என எண்ணுகிறேன்.
1978ம் ஆண்டு அரசியல்யாப்பு கொண்டுவரப்பட்டு பத்தாண்டுகளின் பின்னர், குறிப்பாக 1994ம் ஆண்டிலிருந்து, இச்சபையின் இருதரப்பிலிருப்பவர்களினாலும், அந்தந்த தரப்புகள் அதிகாரத்திலிருக்கும்போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது சர்வாதிகாரத்தன்மையினைக் கொண்டது என்பதனை உணர்ந்து, ஜனாதிபதி முறைமை முற்றாக நீக்கப்பட வேண்டும், ஐனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும், ஆட்சி முறைமையினை ஜனநாயகப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என தெளிவான பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால்,அந்த முயற்சிகள்யாவும் இன்று பின்நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன. ஏன் இவ்வாறு நடைபெறுகின்றது என்று நாம் எமக்குள் கேள்வி எழுப்பலாம்.
ஆனால் நானோ எனது கட்சியோ இதுகுறித்து ஆச்சரியபடுவதற்கு புதிதாக ஒன்றும் எதுவும் இருப்பதாக கருதவில்லை. ஆயினும் இங்கு உருவாகியிருக்கும் இந்த நிலமை குறித்தே நான் எனது கருத்தினை இன்று இங்கே வெளிப்படுத்த விரும்புகிறேன்.
சிறிலங்காவின் அரச கட்டமைப்பானது ஒரு தொடர்ச்சியான செயல்முறைகள் மூலம் ஒரு கட்டமைப்பு மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது என்பதை நான் இந்தச்சபையில் வெளிப்படுத்த விரும்புகிறேன். சிறிலங்கா அரசில் நடைபெற்றுவரும் கட்டமைப்பு மாற்றங்கள் ஒரு குறித்த செல்நெறியிலேயே நகர்வதை இன்று இங்கு நடக்கும் நிகழ்வுகளும் மீளவும் உறுதிப்படுத்துகிறது.
இவ்விடயத்திலேதான் நான் சக உறுப்பினர் நண்பர் திரு. சுமந்திரனின் கருத்துடன் முரண்படுகிறேன். (சிறிலங்கா அரசின் ஜனநாயக செல்நெறியில் சென்ருகொண்டிருப்பதாகவும் அதில் இந்த 20 ம் திருத்தமே ஒரு கரும்புள்ளி எனும் தொனிப்படவும் திரு சுமந்திரன் உரையாற்றியிருந்தார்). அவரது இக்கருத்துடன் நான் இணங்கவில்லை.
எம்மைப் பொறுத்தவரையில் 17ம், 19ம் திருத்தசட்டமூலங்கள் சிறிலங்கா அரசின் தொடர்ச்சியான தெளிவான செல்நெறிக்கு இடையில் வந்த ஒரு அசாதரணமான விதிவிலக்காகவே கருதப்படவேண்டியவை. அதாவது 72 வருடங்களாக அரசகட்டமைப்பு பயணித்துக்கொண்டிருக்கும் திசைக்கு எதிராக , விதிவிலக்காக அமைந்திருந்த சிறு அம்சங்களே.
சிறிலங்கா அரச கட்டமைப்பின் (பௌத்த சிங்கள மேலாதிக்க) செல்நெறி தொடர்பில் ஒரு தொடர்ச்சியான புரிதலை ஏற்படுத்த பிரித்தானியர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறியதன் பின்னர் இந்த நாட்டில் பின்பற்றப்பட்ட முதலாவது யாப்பான சோல்பரி யாப்பில் இருந்து சிலவிடயங்களிலிருந்து இந்த அவையின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
1936ம் ஆண்டு ஜனவரிமாதம் அரசியல் நிர்ணய சபையில் தனிச்சிங்கள அமைச்சரவை அமைக்கப்பட்டதன் பின்புலத்திலேயே சோல்பரி அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. அப்போதிருந்த தமிழ் அரசியற் தலைவர்கள் இந்த முயற்சியை எதிர்த்திருந்தார்கள். இந்த அரசியல் அமைப்பானது சிங்கள தேசியவாதத்தின் மேலாதிக்கத்தை உறுதிசெய்யும் வகையில் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இருந்த ஒரு சமூகத்திற்கு அரச அதிகாரத்தை வழங்குகின்றதாக அரசகட்டமைப்பு மாற்றப்படும் நிலையை நோக்கிச் செல்லும் என்பதனை உணரந்ததனாலேயே தமிழ்த் தலைவர்கள் அதனை எதிர்த்தார்கள்.
ஈற்றில், அந்த அரசியலமைப்பானது, பிரித்தானியாவின் ஆட்சிமுறையைப் பின்பற்றி ஓரளவு பழமைவாதத்தன்மை கொண்டதும் தாராண்மைவாத ஜனநாயக அடிப்படைகளைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டது.
இருப்பினும் அந்த சோல்பரி ஆணைக்குழு, ஏதாவது வகையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் இருக்கவேண்டும் என்ற கரிசனையை முக்கியமானதாகக் கொண்டிருந்தது. தேசிய அளவில் மக்களின் கூட்டுமனவுணர்வில் இந்நாடானது ஒரு பல்லின சமூகங்கள் வாழும் நாடாக இருக்கவேண்டும் என ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
அதன் சரத்து 29-2, நாடாளுமன்றத்தில் எந்த ஒரு சமூகத்தினர் மற்றைய சமூகத்தினரினதும், மதப்பிரிவினர்களினதும் ஒப்புதலின்றி தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதனை தடுப்பதாக அமைந்திருந்தது.
சோல்பரி யாப்பின் இந்த 29/2 உறுப்புரையின் கட்டுப்படுத்தும் தன்மையே, அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் அந்த சர்த்துக்கு கட்டுப்பட்டதாகவும் அதனை மீறும் எந்தவொரு முயற்சியும் அரசியல்மைப்பை மீறுகின்ற செயல்பாடாகவும் கருதப்பட வழிவகுத்தது.
இந்த தன்மைதான் இந்த இலங்கைத்தீவில் வாழும் அனைத்து தேசிய இனங்களும் ஒன்றாக ஒரு நாடு எனும் அடையாளத்துக்குள் வாழ முடியும் என்பதற்கான ஒரு அடிப்படை அத்திவாரமாக, ஒரு அடிப்படை சமூக ஒப்பந்தமாக விளங்கியது.
1964ம் ஆண்டு பிரித்தானிய கோமறை மன்றத்திற்கு (Privy Council) கொண்டு செல்லப்பட்ட லஞ்ச ஒழிப்பு திணைக்களத்திற்கும் ரணசிங்கவிற்கும் இடையிலான வழக்கில் கௌரவ பியேர்ஸ் அவரக்ள் வழங்கிய தீர்ப்பு (1964/66/NLR ) 78 ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு கூறுகிறது.
இவையெல்லாம் குறித்து , இந்த அவையில் ஆளும்தரப்போடு இருக்கும் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் நன்கு அறிந்திருப்பார் என நம்புகிறேன்.
அரசியலமைப்பின் உறுப்புரை 29ஃ2 ஆனது இலங்கையின் குடிமக்களிற்கிடையிலான உரிமைகளிற்கு இடையில் ஒரு கௌரவமான சமநிலையை பேணுகின்ற ஒரு சரத்து என்றும் அதன் அடிப்படையிலேயே அவர்கள் இந்த அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டார்கள் , ஆகவே இந்த 29/2 உறுப்புரையானது அரசியலமைப்பில் ஒருபோதும் மாற்றத்துக்குட்படுத்தப்பட முடியாத அம்சமாகும் என அந்த தீர்ப்பு கூறுகிறது.
ஆக, சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கிய இந்த 29/2 உறுப்புரையின் அடிப்படையில் தான் சிறிலங்கா தனி ஒரு நாடாக சுதந்திரம் பெறக்கூடியதாக இருந்தது .
அந்த 29/2 ஆம் உறுப்புரை மூலமாகத்தான் இந்த தீவில் வசிக்கும் சிங்கள பௌத்தரல்லாத ஏனைய இனத்தவர்கள் கூட சிறிலங்கா எனும் கட்டமைப்பின் கீழ் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் இயங்க முடியும் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
அது தவிர அந்த நேரத்திலேயே , தனிச்சிங்கள அமைச்சரவையை 1936 இல் உருவாக்கியிருந்த போது, சிறிலங்கா அரசு செல்லபோகும் செல்நெறி குறித்து கடுமையான விமர்சனத்தை கொண்டிருந்த சிங்களபௌத்தரல்லாத ஏனையவர்களுக்கு அரசியலமைப்பு ரீதியாக பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் இரண்டாவது சபையாக செனட் சபையை உருவாக்குதல், சுயாதீனமான நீதி சேவை ஆணைக்குழு, சுயாதீனமானபொதுசேவை ஆணைக்குழு, கோமறை மன்றிற்கான மேன்முறையீட்டு வசதிகள் போன்ற கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.
ஆனால், அந்த சிறிலங்கா அர்சு செல்லபோகும் பாதை குறித்தான எதிர்வுகூறல்கள் நிதர்சனமாவதற்கு நீண்ட காலம் எடுத்திருக்கவில்லை.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து ஆறுமாத காலத்தினுள்ளேயே இலங்கை குடியுரிமை சட்டம் (1948 ஆம்ஆண்டின் 18 ஆம் இலக்க சட்டம்) அதன் பின்னர் சிங்கள மொழியை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாகியஉத்தியோகபூர்வ மொழி சட்டம், (1956 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க சட்டம்) போன்றன, அரசியக்மைப்பின் 29/2 ஆம் உறுப்புரை இருக்கத்தக்க நிலையிலும், இலங்கையானது ஒரு சிங்கள பௌத்த மேலாதிக்கமுடைய அரசொன்றை நோக்கி உருமாற்றம் அடைவதை தெளிவாக வெளிப்படுத்தி இருந்தது.
அந்த நேரத்தில், பியேர்ஸ் பிரபு வழங்கிய தீர்ப்பு மற்றும் கோடீஸ்வரன் வழக்கு போன்றவற்றின் தீர்ப்புகள்போன்றவற்றில் அரசியமைப்பின் உறுப்புரை 29/2 என்பது ஒரு முக்கிய புள்ளியாக விளங்கியது.
இந்த உறுப்புரை 29/2 என்பதே இலங்கத்தீவில் வாழும் அனைத்து இனங்களுக்குமிடையிலான ஒரு சமூக ஒப்பந்தம் எனவும் அதன் பிரகாரம் இந்த தீவில் வாழும் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஒரு நாடு எனும் அடையாளத்தினை ஏற்க காரணமாக அமைந்தது எனவும் இந்த நாட்டை பிளவுபடுத்தாமல் ஒன்றுபடுத்தி வைத்திருப்பது அந்த சமூக ஒப்பந்தமே என்றும் அந்த வழக்கின் தீர்ப்புகளில் வியாக்கியானப்படுத்தப்பட்டிருந்தது.
1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு இயற்றப்பட்டபோது, பெரியதொரு துர்ப்பாக்கிய நிகழ்வாக இனங்களுக்கிடையிலான அந்த சமூக ஒப்பந்தமானது தூக்கிவீசப்பட்டது.
பிரித்தானிய காலனித்துவத்தின் தேவையற்ற எச்சங்களாக ஒட்டிக்கொண்டிருக்கும் அம்சங்களை அகற்றுவதற்காகவே ஒரு புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுவதாக 1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பு கொண்டு வரப்பட்டபோது கூறப்பட்டது.
அது உண்மையாக இருந்திருக்கலாம். இங்கே இருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்த குடியரசு யாப்பு குறித்து பெருமிதம் அடைவதாக கூறியிருந்தார்.
ஆனால் நடைமுறையில், 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பானது, அதிகாரங்கள் மத்தியில் குவிக்கப்பட்டசிங்கள பௌத்த அரசாக மாறிக்கொண்டிருந்த அந்த அரசு கட்டமைப்பு மாற்றத்தை ஏறத்தாழ பூரணப்படுத்தி இருந்தது. அந்த செல்நெறியிலேயே சிறிலங்கா அரசானது பயணித்திருக்கிறது.
அந்த அரசியலமைப்பிலேயே வரலாற்றில் முதல் தடவையாக சிறிலஙகா ஒரு ஒற்றையாட்சி நாடாக பிரகடனத்தப்பட்டிருந்தது. அத்தோடு நான் ஏற்கனவே குறிப்பிடிருந்தபடி, (எண்ணிக்கையில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கிய ) உறுப்புரை 29 நீக்க்பட்டிருந்தது . கோமறை மன்றிற்கு மேன்முறையீடு செய்யக்கூடிய முறைமை , இரண்டாவது சபை போன்றன நீக்கப்பட்டிருந்ததது. சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக ஆக்கப்பட்டிருந்தது.
இவையெல்லாம் மத்தியிலே அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஒரு சிங்கள பௌத்த அரசாக மாறிக்கொண்டிருக்கும் திசையை நோக்கியே சிறிலங்காவின் செல்நெறி இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தியிருந்தது.
1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்ட்ட அரசியலமைப்பானது சிங்கள பௌத்த மேலாதிக்கபெரும்பான்மைவாதத்தை நோக்கிய பயணத்தை (அதிகாரபூரவ) முறைப்படி ஆரம்பித்து வைத்தது.
இதை இன்னொரு வகையில் சொல்வதானால், 72 ஆம் ஆண்டு யாப்பானது இந்த அரசானது இங்கே இருக்கும் பல தேச மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்கின்ற ஒரு பன்மைத்துவ சமூகத்தை வைத்திருக்ககூடிய ஒரு கூட்டு சமூக உணர்வை தரும் என கூறப்பட்ட அம்சங்களை நீக்கி , தனது சிஙக்ளபௌத்த அடையாளத்தை வெளிப்படுத்தி அங்கீகரித்திருந்தது.
அந்த 72 ம் ஆண்டின் அரசியலமைப்பு மூலம் சிங்கள பௌத்தர்கள் இந்த நாட்டின் ஃ அரசின் காவலர்களாக உருவகிக்கப்பட்டார்கள்.
இந்த பின்னணியிலும் இந்த செல்நெறியிலும்தான் தான் 1978 ஆம் ஆண்டு 2 வது குடியரசு யாப்பானதுஇயற்றப்பட்டது.
விரைவான ஒரு பொருளாதார வள்ர்ச்சியை அடைவதற்கு ஒரு உறுதியான ஒரு அரசியல் தலைமை ஒன்றினூடான ஸ்திரமான அரசியல் சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதற்காகவே 78 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியர்சுயாப்பு கொண்டுவரப்படுவாதாக சொல்லப்பட்டிருந்தது.
இதன் மூலம் உருவாகும் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதி பாராளுமன்றின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராகவும் எதுவித பிரச்சினைகளும் தடைகளும் இன்றி கவர்ச்சிகரமானதாக இல்லாததக இருப்பினும் சரியான முடிவுகளை எடுக்க கூடிவ்வராகவும் இருப்பார் என கூறப்பட்டிருந்தது .
ஆனால் நடைமுறையில் 78ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல்யாப்பானது அரசின் சிங்கள பௌத்த குணாம்சத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. அதனை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை கோருவது மட்டுமல்ல ஒரு ஒப்பங்கோடல் முறையான சர்வசன வாக்கெடுப்பையும் வேண்டிநிற்கிறது. ஒற்றையாட்சி முறையான அரசமைப்பு, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை ஆகிய இரண்டு சரத்துகளும் இநாட்டை ஒரு சிங்கள பௌத்த நாடாக்கும் குணாம்சத்தை வலுப்படுத்தலின் முதன்மைக் காரணிகளாக அமைந்துள்ளன. இந்தப்பின்புலத்திலேயே நாம் இந்த இருபதாம் திருத்தச்சட்டமூலத்தை விவாதிக்கிறோம்.
தமிழர்களும் சிங்கள பௌத்தரல்லாத ஏனைய இனத்தவர்களும் அரசியலமைப்பு குறித்த விவாதஙகளில் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வந்தார்கள் என்பது ஒருபுறம் இருக்க , 1978 ஆம் ஆண்டு யாப்பின் பின்னர் ஜே. ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதசா காலத்தின் பின்னர் , நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை ஒரு பேரழிவு என்ற விடயத்தில் நாடளுமன்றத்தின் ஆளும் தரப்பினரரினதும் எதிர்த்தரப்பினரதும் பொது உடன்பாட்டுக்கு வந்தார்கள்.
அத்தருணத்தில்தான் சிங்கள தேசமானது இவ்விடயத்தில் ஒரடி பின்நகர்ந்து அரசகட்டமைப்பின் குணாம்சம்பற்றி கேள்வி எழுப்பிய ஒரு சிறு மாற்றம் சிங்கள தேசத்தில் நிகழ்ந்தது . அரசியல் யாப்பினை ஜனநாயகப்படுத்த சிங்கள தேசம் அச்சந்தர்ப்பங்களில் விரும்பியது.
அரசின் சர்வாதிகாரப்போக்கிற்கு எதிராக கிளர்ந்தெழுந்தது. இந்தத் தருணங்களிற்தான் 17ம் திருத்தச்சட்டமூலமும் 19ம் திருத்தச்சட்டமூலமும் கொண்டுவரப்பட்டன.
இன்று அவற்றிலிருந்து பின்நோக்கி நகர்ந்து பழையநிலைக்குச் செல்வது என்பது, 72வருடகாலமாக சிறிலங்கா அரசு அடைந்து கொண்டிருக்கும் கட்டமைப்பு மாற்றத்தின் திசையிலேயே மீண்டும் வலுவாகப் இந்த நாட்டைக் கொண்டுசெல்வதாக அமையும்.
சிங்கள பௌத்தரல்லாதவர்களை, குறிப்பாக தமிழ்தேசத்தை எவ்வாறு இந்த நாடு நடத்தியதியது என்பதும் சிறிலங்கா ஒரு பன்மைத்துவம் கொண்ட நாடு என்பதை அங்கீகரிக்க தொடர்ச்சியாக மறுதலித்தமையும், குறிப்பாக இங்கு சிங்கள தேசம் தமிழர் தேசம் ஏன் முஸ்லிம்களை கூட தேசமாக அங்கீகரிக்க மறுத்து பன்மைத்துவத்தை நிராகரிக்கும் மனோநிலையும் தான் எம்முன்னே இன்று ஒரு பூதமாக எழுந்து நிற்கின்றது.
இந்த மறுதலிப்பும் பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தொடர்ச்சியாக மறுத்தமையும் அனைத்து அதிகாரத்தையும் தனி ஒரு இடமாக மத்தியினுள் மையப்படுத்தும் சிந்தனைபோக்குதான் தான் இந்த பூதத்தை இங்கு இன்று உருவாக்கி விட்டிருக்கின்றது என்பதை நான் மிகுந்த பொறுப்புணர்வுடன் இந்த சபையில் வெளிப்படுத்துகிறேன்.
அன்று நீங்கள் உருவாக்கிய அதே பூதம் தான் இன்று உங்கள் சொந்த ஜனநாயகத்தையே அழித்து நிற்கிறது . ஏனையவர்கள் எண்ணிக்கையில் எவ்வளவு சிறிதாக இருக்கிறார்கள் என்பதற்கு அப்பால், ஏனைய தரப்பு களை அங்கீகரிக்க மறுக்கின்ற அந்த மனோநிலையும் எவருடனும் பகிர்ந்து கொள்ள மறுக்கின்ற சிந்தனைப்போக்கும் , இந்த நாடு எங்கள் அனைவரையும் உள்ளடக்கூடிய அளவுக்கு விசாலமானது என பொறுப்புணர்வுடனும் நம்பிக்கையுடனும் கூற முடியாத அளவுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வும்தான் இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று இங்கு வந்த நிலையிலும் எது வித குற்ற உணர்வுமின்றி , மிக சாதாரணமாக , இந்த நாடு 1994 இல் இருந்து செல்ல முற்பட்ட ஒரு ஜனநாயகபாதையை முற்றாக மாற்றி மீண்டும் எதிர்த்திசையில் தள்ளுவதற்கு இடம் கொடுத்திருக்கிறது. நான் இந்த சபையின் இரு தரப்பில் இருக்கும் அங்கத்தவர்களையும் நோக்கி கேட்டுக்கொள்கிறேன்.
இது ஒரு வெறுமனே ஒரு அதிகாரம் குவிக்க்கப்படுகின்ற ஒரு ஆட்சிமுறறைமை அல்ல, ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம் இது என நான் இங்கு கூறிக்கொள்ளுகிறேன். எதிர்காலத்தில் நீங்கள் மிகப்பெரியளவில் வருந்தக்கூடிய ஒரு தவறை செய்கிறீர்கள். சிங்கள தேசத்தின் ஜனநாயகத்தை திட்டமிட்டு அழிக்கின்ற முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து சிங்கள மக்களுடன் இணைந்து தோழமையுடன் நின்றது சிங்கள பௌத்தரல்லாத மக்களே, குறிப்பாக தமிழர்களே என்பதை நீங்கள் அந்த நேரத்தில் உணர்ந்து கொள்வீர்கள்.
அவ்வேளையில் ஆத்மார்த்தமான உணர்வுடன் தமிழர்கள் முஸ்லிம்கள் மீதான உங்கள் அணுகுமுறையை மாற்றி இங்கு ஒரு பல் தேசங்கள் கொண்ட நாட்டை உருவாக்க முன்வருவீர்கள் என நம்புகிறோம்.”
Average Rating