உடலுக்கு பலம் தரும் தினை!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், எலும்பு மற்றும் நரம்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், கொழுப்பை கரைக்கும் தன்மை உடையதும், ரத்த ஓட்டத்தை சீர்செய்ய கூடியதுமான தினையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். தினை அதிக சத்துக்களை உள்ளடக்கியது. அரிசி, கோதுமையை விட இதில் சர்க்கரை சத்து குறைவாக உள்ளது. கொழுப்பு சத்தை கரைத்து உடலை சீர்செய்கிறது. மூளைக்கு இதமான சூழலை ஏற்படுத்தி மன உளைச்சலைபோக்கும் மருந்தாக தினை விளங்குகிறது. ஒற்றை தலைவலி, மாரடைப்பு வராமல் தடுக்கிறது. நார்ச்சத்து மிக்கது என்பதால் மலச்சிக்கலை சரிசெய்கிறது.
தினையை கொண்டு எலும்புகளை பலப்படுத்தும் உணவு தயாரிக்கலாம். தினை மாவுடன் தேன், நெய் விட்டு கலக்கவும். இதை தினமும் 2 தேக்கரண்டி வரை சாப்பிட்டு வர எலும்பு, நரம்புகளை பலப்படுத்தும். ஆரோக்கியத்தை கொடுக்கும். கொழுப்பை கரைக்கும். சிறிய தினையானது பெரிய மருத்துவத்தை பெற்றிருக்கிறது. உடலுக்கு பலம் தரும் தினை பாயாசம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தினை, வெல்லம், ஏலக்காய், முந்திரி, பாதாம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தினை மாவு எடுத்து நீர்விட்டு வேக வைக்கவும். இது, கஞ்சி பதத்தில் வந்தவுடன் வெல்லக்கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனுடன் ஏலக்காய், முந்திரி, பாதாம் சேர்த்து கலந்து சிறிது நெய்விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் விட்டு கலந்து எடுக்கவும். இது உடலுக்கு பலம் தரும் உணவாகிறது.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட தினை, இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. ரத்த ஓட்டத்தை சீர்செய்ய கூடியது. உறுப்புகளுக்கு பலம் தந்து ஆரோக்கியம் அளிக்கிறது. தினை சிறிது சிறிதாக எரிசக்தியை வெளிப்படுத்த கூடியதால், தாமதமாக செரிமானம் ஆகும். இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக தினை விளங்குகிறது. உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் தினை பொங்கல் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தினை, வெல்லக்கரைசல், ஏலக்காய், பாதாம், முந்திரி, நெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெல்லக்கரைசல் எடுத்து பாகு போன்று காய்ச்சவும். இதனுடன் தினை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும்.
பின்னர், ஏலக்காய் பொடி, ஊறவைத்து வைத்திருக்கும் பாதாம், முந்திரி சேர்த்து நெய்விட்டு கலக்கவும். இந்த தினை பொங்கலை சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியமாக இருக்கும். இது சத்தான உணவு என்பதால், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவருக்கும் ஏற்றுகொள்ளும் தானியமாக தினை விளங்குகிறது. இது, ஒவ்வாமை இல்லாத உணவாகிறது. சிறுவர்களுக்கு நெஞ்சக சளியை கரைக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இதற்கு முருங்கை கீரை அற்புதமான மருந்தாக விளங்குகிறது. இளம் முருங்கை கீரையை சாறாக்கி, ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இந்த சாறுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து கொடுப்பத்தால் நெஞ்சக சளி கரைந்து வெளியேறும். சுவாசம் சீராகும். இருமலை இல்லாமல் செய்யும்.
Average Rating