20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது!! (கட்டுரை)

Read Time:13 Minute, 29 Second

அரசமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் நகல் மீதான உயர்நீதிமன்றத்தின் விசாரணை, கடந்த ஐந்தாம் திகதி முடிவடைந்ததோடு, அதன் வியாக்கியானம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு, 10ஆம் திகதி அனுப்பப்பட்டு இருந்தது.

உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் படி, 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஓரிரு வாசகங்களை மாற்ற வேண்டும் என்றும், ஏனையவற்றை ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் உயர்நீதிமன்றம் வியாக்கியானப்படுத்தி உள்ளதாகத் தெரியவருகிறது.

உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, நாடாளுமன்றம் மீண்டும் கூடிய பின்னர், சபாநாயகரால் பகிரங்கப்படுத்துவதே மரபாகும். இருந்தபோதிலும், அதற்கு முன்னரே, அது வெளியாகி உள்ளதாகத் தெரிகிறது. சில பத்திரிகைகளும் சமூக வலைத்தளங்களும் இவ்வாறு கசிந்த தகவல்களை வெளியிட்டுள்ளன.

இவ்வாறு, அது எப்படிக் கசிய முடியும்? உயர்நீதிமன்றம் நேரடியாக ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் மட்டுமே தனது வியாக்கியானத்தை அனுப்ப வேண்டும். அவ்வாறாயின், அது உயர்நீதிமன்றம் மூலமாகவோ, ஜனாதிபதி மூலமாகவோ, சபாநாயகர் மூலமாகவோ தான் கசிந்து இருக்க வேண்டும். இவர்கள், அவ்வாறு செய்வார்களா? சிலவேளை, இவர்களின் அலுவலகங்களில் உள்ள எவராவது, எவ்வகையிலாவது, திருடி வெளியிட்டு இருக்க வேண்டும்.

செய்திகளின்படி, திருத்தச் சட்டமூலத்தின் சில வாசகங்கள், அரசமைப்புக்கு முரணாக இருப்பதாகவும் அவற்றை நிறைவேற்ற வேண்டுமாயின், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அவை நிறைவேற்றப்பட்டு, அதற்குப் புறம்பாக, சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம், அவை மக்களாலும் அங்கிகரிக்கப்பட வேண்டும் என, உயர்நீதிமன்றம் வியாக்கியானப்படுத்தி உள்ளது.

உயர்நீதிமன்றம் எத்தகைய வியாக்கியானத்தை வழங்கி இருந்தபோதிலும், ஆளும் கட்சிக்குள்ளேயே சிலர் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில வாசகங்களைக் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கோட்டாபய ராஜபக்‌ஷவையும் பொதுத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவையும் ஆதரித்த சில முக்கிய பௌத்த பிக்குகள் உள்ளிட்ட அக்கட்சியின் சில முக்கிய ஆதரவாளர்கள், இத்திருத்தச் சட்டமூலத்தின் சில வாசகங்களைப் பற்றி, கவலையடைந்து இருப்பதாகவும் தெரிகிறது.

இத் திருத்தச் சட்டமூலம் அமுலுக்கு வந்தால், கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருக்கும் வரை பிரச்சினை ஏற்படாது என்றும், அதன் பின்னர் நாடு பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் பொதுஜன பெரமுனவின் முக்கிய ஆதரவாளரான எல்லே குணவன்ச தேரர் தெரிவித்திருந்தார்.

“20ஆவது திருத்தச் சட்டமூலம், கோட்டாபய ராஜபக்‌ஷவின் பதவிக் காலத்தின் பின்னர், அவரது கழுத்தைப் பதம் பார்க்கும் ஒரு வாளாகலாம்” என, முன்னாள் நீதி அமைச்சரும் தற்போதைய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி விஜேதாச ராஜபக்‌ஷ, ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது கூறியிருந்தார். “மனச் சாட்சியோடு, இதை ஆதரிக்க முடியாது” எனவும் கூறியிருக்கிறார்.

நாட்டின் அரசியல் நிலைமையைப் பார்த்து, விஜேதாச அடிக்கடி கட்சி மாறியவர்; தமது அரசியல் நிலைப்பாடுகளையும் அடிக்கடி மாற்றிக் கொண்டவர். அவர், இம்முறை அமைச்சுப் பதவியொன்றை எதிர்பார்த்தார். அது கிடைக்காமல் போகவே, மனமுடைந்து போனதாக அவரே கூறியிருக்கிறார். எனவே, அமைச்சுப் பதவியொன்றைக் குறியாக வைத்துக் கொண்டு, இவ்வாறு கூறுவதாகவும் இருக்கலாம். ஆனால், தற்போதைய நிலையில் அரசாங்கம், அவரது கூற்றைப் பாரதூரமாகக் கருத்தில் கொண்டிருக்கும்.

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு, 20 ஆவது திருத்தத்தின் மூலம் வழி வகுப்பதை எதிர்க்கிறார். அவருக்கும், இரட்டைக் குடியுரிமை உள்ளவரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கும் இடையே முறுகல் நிலை இருப்பதாகக் கூறப்படுவதால், இந்த நிலைப்பாட்டை அவர் கொண்டிருப்பதாகக் கருத முடியும்.

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், அரச நிறுவனங்கள் ஆகியன கணக்காய்வுக்கு உட்படாது என, 20 ஆவது திருத்தச் சட்டமூலம் கூறுகிறது. இதை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எதிர்க்கிறார். “அவற்றைக் கணக்காய்வு செய்வதற்கு, ஏன் பயப்பட வேண்டும்” என அவர் கேட்கிறார்.

ஆளும் கட்சிக்குள்ளேயே, பலரிடம் இவ்வாறான கருத்துகள் இருப்பதால், அவர்களுக்கு 20ஆவது திருத்தச் சட்டமூலம் பற்றி, விளக்கம் அளிப்பதற்காகவென வௌ்ளிக்கிழமை (09) ஆளும் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. சமூக வலைத்தளங்களில், மூத்த ஊடகவியலாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் படி, அந்தக் கூட்டம், மாற்றுக் கருத்துடையோரை மேலும் புண்படுத்தி இருக்கிறது. தமது கருத்துகளைத் தெரிவிக்க, பலருக்கு இடமளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள், அதாவது, 150 வாக்குகள் கிடைக்குமா என்ற சந்தேகம், அரசாங்கத்தின் தலைவர்களுக்கு ஏற்படக்கூடும்.

நாம், கடந்த வாரம் கூறியதைப் போல், ஆளும் கட்சிக்கும் அதன் நட்புக் கட்சிகளுக்கும் நாடாளுமன்றத்தில் 150 ஆசனங்கள் இருந்த போதிலும், ஆளும் கட்சியின் ஓர் உறுப்பினர் சபாநாயகராக இருக்கிறார். அரசாங்கத்தின் 150 ஆசனங்களில், 15 ஆசனங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு உரியது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவில், ஸ்ரீ ல.சு.க தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகப் பல விடயங்கள் கூறப்பட்டு வருகின்றன. எனவே, தம்மைக் குறிவைத்து அரசாங்கம் செயற்படுவதாக மைத்திரி கருதினால், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து, அவர் வாக்களிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலர், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில வாசகங்களை எதிர்த்தாலும், இறுதியில் அதை ஆதரித்து வாக்களிக்கும் நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படலாம். அதை ஆதரிக்காத அமைச்சர்கள், அமைச்சுப் பதவிகளை இழக்க நேரிடும். நாடு எந்த நிலைக்குத் தள்ளப்பட்டாலும், பதவிகளை இழக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

அதேவேளை, ஆளும்கட்சி உறுப்பினர்கள் பலருக்கு எதிராக, நீதிமன்றங்களில் வழக்குகள் ஏற்கெனவே இருக்கின்றன. இந்தத் திருத்தத்தை ஆதரிக்காவிட்டால், அவர்களது வழக்குகளில் மோசமான தீர்ப்புகள் கிடைக்கும் வகையில், அரசாங்கம் பொலிஸாரை வழிநடத்தலாம். அவ்வாறான விளைவையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே, தற்போதைய அவர்களது வீராப்பு, ஒன்றும் எடுபடப் போவதில்லை.

எவ்வாறாயினும், மேலதிகமாக ஓரிரு வாக்குகளை, எதிர்க்கட்சியிடமிருந்து பெறுவதை உறுதி செய்து கொள்வதற்கு அரசாங்கம் முயலலாம். 1964ஆம் ஆண்டு சிறிமா பண்டாரநாயகவின் அரசாங்கம், நாடாளுமன்ற வாக்கெடுப்பொன்றின் போது, ஒரு வாக்குக் குறைந்ததால் வீழ்ந்தது. அக்காலச் சட்டத்தின் படி, ஆளுநரின் சிம்மாசன உரை தொடர்பான வாக்கெடுப்பின் போதே, இது நடைபெற்றது.

மரபின்படி, சிம்மாசன உரை மீதான வாக்கெடுப்பில், ஆளும் கட்சி தோல்வியடைந்தால், அரசாங்கம் இராஜினாமாச் செய்ய வேண்டும். அதன்படி, சிறிமாவின் அரசாங்கம் இராஜினாமாச் செய்தது. அந்த வாக்கெடுப்பின் போது, வாக்களிக்க வந்த பசறை உறுப்பினர் அமராநந்த ரத்னாயகவின் காரில், ஒரு டயர் பழுதடைந்து, அவர் நாடாளுமன்றத்துக்கு வர முடியாமல் போய்விட்டது. அவர், அன்று வந்திருந்தால் சிறிமாவின் அரசாங்கம் தப்பிப் பிழைத்திருக்கும்.

எனவே, ஏற்கெனவே மலையக அரசியல்வாதிகள் சிலரை, அரசாங்கத்தின் தலைவர்கள் அணுகி இருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்காகவோ வேறு தனிப்பட்ட நலன்களுக்காகவோ, சிறுபான்மையினத் தலைவர்கள், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரிப்பதாக இருந்தால், அது வரலாற்றுத் தவறு என்றே கூற வேண்டும். ஏனெனில், இத்திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவைப் பார்க்கிலும், மோசமானதொரு சர்வாதிகாரி உருவாகப் போகிறார்.

சகல உயர்அதிகாரிகளையும் உயர் மட்ட நீதிமன்றங்களின் நீதியரசர்களையும் நியமிக்கும் வல்லமை பெற்ற, ஒரு ஜனாதிபதி உருவாகப்போகிறார். இந்தநிலையில், அரச இயந்திரம் மட்டுமல்லாது, நீதித்துறையும் ஜனாதிபதிக்குத் தலைவணங்கும் நிலை உருவாகும். அது மட்டுமல்லாது, ஜனாதிபதி என்ன செய்தாலும், அதைத் தட்டிக் கேட்க சட்டத்தில் இடமில்லாமல் போகும்.

2018ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசமைப்புக்கு முரணாக, ரணில் விக்கிரசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்‌ஷவை அப்பதவிக்கு நியமித்தார். அதன்பின்னர், அரசமைப்புக்கு முரணாக நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் கீழ், ஜனாதிபதியின் செயற்பாடுகள் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடிந்ததாக இருந்தமையால், அவரது செயல், சட்ட விரோதமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறினால், இது போன்ற மிகத் தெளிவாக, ஜனாதிபதி சட்டத்தை மீறிய சந்தர்ப்பத்திலாவது அதை எதிர்க்க வழியில்லாமல் போய்விடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிளகு !! (மருத்துவம்)
Next post எய்ட்ஸை கண்டறிய புதிய கருவி! (அவ்வப்போது கிளாமர்)