மிளகு !! (மருத்துவம்)

Read Time:13 Minute, 35 Second

மருந்தாகவும் உணவாகவும் பயன்படுகிற, அடுக்களையில் அஞ்சறைப் பெட்டியில் அனைவர் இல்லத்திலும் தவறாது வைத்திருக்கும் ஒரு பொருள் மிளகு ஆகும். உணவுக்கு சுவை தரும் இந்த மிளகு, மருந்தாகி உடல்நலமும் காப்பதாக அமைகிறது என்பதையே இந்த அத்தியாயத்தில் பார்க்க இருக்கிறோம்… இந்தோ – மலேசியப் பகுதிகளைப் பிறப்பிடமாகக் கொண்டது மிளகு. தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும், கன்னட மாநிலத்திலும், கேரளம், மகாராஷ்டிரம் பகுதியிலும் மிளகு அதிகமாகப் பயிராகிறது. ஆங்கிலத்தில் Black pepper என்று அழைக்கப்படும் மிளகுக்கு, Piper nigrum என்பது தாவரவியல் பெயராகும். வடமொழியில் கிருஷ்ணா, உஷ்ணா என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. விஷ்ணு பகவானின் 10 அவதாரங்களுள் ஒன்று கிருஷ்ணர் அவதாரம். ஒரு வகையில் உலகோர் மனதில் அதிகமான இடத்தைக் கவர்ந்துள்ளதும் கிருஷ்ணர் அவதாரமாகும். அதுபோல மிளகும் நமக்கு முக்கியமான ஒன்றாக இருப்பதால் கிருஷ்ணருடைய பெயரை மிளகுக்கு வைத்திருக்கிறார்கள் என்றும் புரிந்துகொள்ளலாம். மேலும் உஷ்ணா என்றொரு பெயராலும் மிளகு அழைக்கப்படுவதால், ‘அது உடலுக்கு உஷ்ணத்தைத் தரக்கூடியது’ என்பதை அதன் பெயரே உணர்த்துவதாகவும் புரிந்துகொள்ளலாம்.

மிளகின் மருத்துவ குணங்கள்

காரத்தை உண்டாக்குவது, வலியைப் போக்குவது, வீக்கத்தைக் கரைப்பது, நச்சை முறிப்பது, சிறுநீரைப் பெருக்குவது, காலரா நாசினி, எச்சில் சுரப்பி, வயிற்றுநோய் போக்கி, ஆஸ்துமா நிவாரணி, சுரம் போக்கி, பசியைத் தூண்டுவது என்று பல்வேறு மருத்துவ குணங்கள் மிளகுக்கு உண்டு. குடல் பகுதியின் உட்புறமாக உள்ள ம்யூகஸ் மெம்பரேன் என்னும் பகுதியை பலப்படுத்தவல்லது. சிறு பெருங்குடல்களின் இயக்கத்தைத் தூண்டவல்லது. மிளகு காரமாக இருப்பதற்கு Piperine, Amides, Piperidines போன்ற காரமுள்ள வேதிப்பொருட்கள் உள்ளடங்கியிருப்பதே காரணம். மிளகை மருந்தாகப் பயன்படுத்தும்போது 500 மி.கி. முதல் 1000 மி.கி. வரை ஒரு வேளைக்குப் போதுமானதாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேனில் குழைத்தோ அல்லது வெந்நீரில் கலந்தோ உள்ளுக்குக் குடிக்கலாம்.

மிளகு பற்றிய அகத்தியர் பாடல் ‘அளவையுறாக்காரம் அடைந்திருக்கும் வாத விளைவையெல்லாம் அறுக்கும் மெய்யே – மிளகின்காய் கண்டவர்க்கும் இன்பமாம் காரிகையே! சீழ்மூலங்கொண்டவர்க்கு நன்மருந்தாங் கூறு. மேற்கூறப்பட்ட பாடலில் மிளகு மிகுந்த காரத்தைப் பெற்றுள்ளது. மனிதருக்கு வாதத்தால் வந்த நோய்கள் அத்தனையையும் போக்க வல்லது. மேலும் சீழ் வடியும் நிலையில் உள்ள மூலநோயினருக்கு நன்மை தரக்கூடிய மருந்தாக மிளகு அமைகிறது என்கிறார் அகத்தியர். இதேபோல் தேரையர் குணபாடம் என்னும் நூலில் மிளகின் சிறப்பு விரித்துரைக்கப்பட்டுள்ளது. ‘கோணுகின்ற பக்கவலி குய்யரோகம் வாத

சோணிதங்க முத்திற்குள் தோன்றுநோய் – காணரிய காதுநோய் மாதர்குன்மங் கர்மாலை மந்தமென்றீர் ஏதுநோய் காயிருக்கில் ஈங்கு.’- தேரையர் குணபாடம்
உடலை கோணச் செய்யும் பக்கவாதம் ஆசனவாயில் உள்ள நோய்கள், வாதத்தால் வந்த கருப்பை நோய்கள், கழுத்தின் உள்ளும் – புறமும் வருகிற நோய்கள், காது நோய்கள், பெண்களின் வயிற்றுவலி, காமாலை, மந்தம் ஆகிய அத்தனை நோய்களும் மிளகால் போகும் என்பது மேற்கண்ட பாடலின் பொருள் ஆகும். மிளகை எவ்வகையிலேனும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் வாத, பித்த, சிலேத்தும நோய்கள் அத்தனையும் மறைந்து போகும். மேலும் திமிர்வாதம், கழலை, வாயு, சளித்தொல்லைகள் குணமாகும் என்கிறது இன்னோர் தேரன் வெண்பா பாடல் ஒன்று.

மிளகின் மருத்துவப் பயன்கள்

மிளகைப் பொதுவாகப் பழுத்தபின் உலர்த்திப் பயன்படுத்துவது வழக்கம். பழுப்பதற்குமுந்தைய பச்சை மிளகினை வாத நோய்களையும் சீழ்வடியும் மூலத்தையும் குணப்படுத்த மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள். மிளகின் இலைக்கும் கூட மருத்துவப் பயன்கள் உண்டு.

மிளகைக் கொண்டு தயாரிக்கப்படும் சில மருந்துகள்

* வீட்டில் எப்போதும் மிளகுத்தூள் வைத்திருப்பது நல்லது. சீரணம் ஆகாதபோதும் வயிறு முட்ட சாப்பிட்டபோதும் வெருகடி அளவு மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்தால் உடனே ஜீரணமாகும்.

* தும்மல், ஜலதோஷம் கண்டபோது 10 கிராம் மிளகுத்தூளோடு சிறிது மஞ்சள் தூளும் சேர்த்து பாலில் இட்டு கொதிக்க வைத்துக் குடிக்க இரண்டொரு நாட்களில் தும்மலும் ஜலதோஷமும் காணாது போகும்.

* மிளகை வறுக்காமல் அப்படியே பொடித்து நீரிலிட்டுக் காய்ச்சி வடித்த தீநீர் கப சம்பந்தமான நோய்களைப் போக்கக்கூடியது.

* மிளகுத்தூளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆறவைத்து வாய் கொப்புளிக்க தொண்டைக்கட்டு, பல்வலி குணமாகும்.

* மிளகு, சுக்கு, திப்பிலி மூன்றையும் சம அளவு சேர்த்து வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு காலை, மாலை வெருகடி அளவு சாப்பிட்டுவர ஈரல் நோய் குணமாகும்.

* மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன் வேர் 18 கிராம் எடுத்து அத்துடன் பனை வெல்லம் போதிய அளவு சேர்த்து அரைத்து தினை அளவு மாத்திரைகளாகச் செய்து வைத்துக்கொண்டு, தினமும் இரு வேளை ஒரு மாத்திரை என உண்கையில் கொருக்கு நோய் என்னும் ஆண்குறியைச் சுற்றி வந்த பால்வினை நோய்க் கொப்புளங்கள் குணமாகும்.

* மிளகைப் பாலில் சேர்த்து அரைத்து தலைக்குத் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து விடப் பொடுகு குணமாகும். தலைமுடி நன்கு வளரும்.

* இரண்டு வெற்றிலையோடு 7-8 மிளகு சேர்த்து உண்ண, பூச்சுக்கடியினால் வந்த தோலைப் பாதிக்கும் நச்சு வெளியேறும்.

* மிளகுப் பொடியுடன் சம அளவு தூதுவளைப் பொடியும் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர அடுக்குத் தும்மல் ணமாகும், ஈரல் பலப்படும்.

* சிறிது பூவரச மரத்தின் கொழுந்திலையுடன் 5-6 மிளகு சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து, மோரில் கரைத்து தினமும் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை குணமாகும்.

* சிறிது மிளகையும் கறிவேப்பிலையையும் தனித்தனியாக நெய்விட்டு வறுத்து எடுத்து சிறிது வெந்நீர் இட்டு அரைத்து நன்கு கலக்கி அந்த நீரை சிறு குழந்தைகளுக்கு வரும் மாந்தத்துக்கு கொடுக்க மாந்தம் நீங்கி செரிமானம் உண்டாகும்.

* முருங்கை இலைச்சாறு எடுத்து அத்துடன் மிளகுத்தூள் சேர்த்துக் குழைத்து நெற்றிப்பொட்டில் பற்றிட ஒற்றைத்தலைவலி குணமாகும்.

* ஐந்து மிளகுடன் 10 துளசி இலை சேர்த்து அரைத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து குடிக்க இருமல் குணமாகும்.

* மிளகுத்தூளைத் தேனில் குழைத்து சாப்பிட சீதளத்தால் வந்த இருமலும் நெய்யில் குழைத்து சாப்பிட வரட்டு இருமலும் குணமாகும்.

* அரை ஸ்பூன் மிளகுத்தூளை சுடுநீரிலிட்டுப் போதிய பனைவெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட காய்ச்சல் தணியும்.

* வேப்பிலை 5-6 ஐ நீரிலிட்டு கொதிக்க வைத்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டாலும் காய்ச்சல் தணியும்.

* மிளகுத்தூளை நீரிலிட்டு அத்துடன் போதிய வெல்லமும், சிறிது உப்பும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடிக்க வயிற்றுவலி குணமாகும்.

* மிளகுத்தூள் வெருகடி அளவு எடுத்து தேனில் குழைத்து அந்தி சந்தி என இருவேளை சாப்பிட்டு வர ஞாபக சக்தி அதிரிகக்கும். அம்னீஸியா எனப்படும் வயது முதிர்வாலோ, தலையில் அடிபட்டதாலோ, மூளைக் கட்டியாலோ, மூளைத் திசுக்களின் அழிவாலோ, ஒற்றைத் தலைவலியாலோ வந்த ஞாபக மறதி குணமாகும்.

* மிளகு 50 கிராம் சோம்பு 70 கிராம் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொண்டு அத்துடன் 350 கிராம் தேன் சேர்த்து லேகிய பதமாகக் கிண்டி வைத்துக்கொண்டு தினமும் இருவேளை கழற்சிக்காய் அளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர மூலநோய் முற்றிலும் மறையும்.

* மிளகுத்தூளோடு போதிய அளவு உப்பு சேர்த்து பல் துலக்கிவர சிலநாட்களில் பல் சொத்தை, பல்வலி வாய் துர்நாற்றம், பல் கூச்சம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

* ஆண் அல்லது பெண் மலடு என்று எதுவாக இருப்பினும் தினமும் நான்கு பாதாம் பருப்போடு ஆறு மிளகைத் தூளாக்கி சேர்த்து பாலோடு சேர்த்து குடித்து வருவதால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு உண்டாகும்.

* தலையில் மயிர்ப்புழு வெட்டு என்னும் நோயால் கொத்துக் கொத்தாக முடி கொட்டி அந்த இடங்களில் திட்டுத் திட்டாக வழுக்கைத் தலைபோல் தோற்றம் தரும். அப்போது மிளகுத்தூளோடு வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து அரைத்து வந்த விழுதை புழு வெட்டு வந்த இடத்தில் வைத்து சிறிது அழுத்தித் தேய்த்துவர விரைவில் துன்பம் தொலைந்து, கருமையான முடி வளரும்.

* ஒரு கைப்பிடி அருகம்புல்லோடு 10 மிளகை வைத்து அரைத்து தீநீர் வைத்து குடித்துவர பல்வேறு விஷக்கடிகளும் விலகி ஓடும்.

* மிளகையும் தும்பைப் பூவையும் சம அளவு எடுத்து அரைத்து மிளகளவு மாத்திரைகளாக்கி காய வைத்து எடுத்துக்கொண்டு 2-3 மாத்திரைகளை வாயிலிட்டு சிறிது வெந்நீர் அருந்த காய்ச்சல், மூளைக்காய்ச்சல் விலகிவிடும். இப்படிப் பல்வேறு வகைகளில் பல்வேறு நோய்களுக்கு மிளகு மருந்தாவதை மனதில் வைத்துக்கொண்டு அனைவரும் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் சோர்வை போக்கும் பொன்னாங்க!! (மருத்துவம்)
Next post 20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது!! (கட்டுரை)