புற்றுநோயை தடுக்கும் தக்காளி!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மலச்சிக்கலை போக்க கூடியதும், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை உடையதும், கொழுப்பை கரைக்க கூடியதுமான தக்காளியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது தக்காளி. விட்டமின் சி சத்து நிறைந்த இது, புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மார்பக புற்று, குடலில் புற்று வராமல் தடுக்கிறது. இதில், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. தக்காளி செடியை பயன்படுத்தி சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சல், கைகால் வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தக்காளி இலை மற்றும் தண்டு, சீரகம். செய்முறை: தக்காளி இலை, தண்டு பகுதியை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி காலை, மாலை வேளைகளில் 50 முதல் 100 மில்லி குடிப்பதால் சிறுநீரை பெருக்கும். கை, கால், முகத்தில் ஏற்படும் வீக்கம், உடலில் தேவையற்ற நீரை குறைக்கிறது. சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும்.
உணவாக பயன்படும் தக்காளி உன்னதமான மருந்தாகிறது. தக்காளியை பயன்படுத்தி மலச்சிக்கல், உடல் எடையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தக்காளி, நல்லெண்ணெய், உப்பு, மிளகு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் அதில், தக்காளி துண்டுகளை போட்டு வதக்கவும். சிறிது உப்பு, மிளகுப்பொடி சேர்த்து கலந்து காலை வேளையில் 100 முதல் 200 கிராம் எடுத்துவர மலச்சிக்கல் சரியாகும். உடல் எடை குறையும். கொழுப்பை கரைத்து ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். தோல், எலும்பு, பற்கள், கண்களுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது. தக்காளியை பயன்படுத்தி உடலில் ஏற்படும் நீர் இழப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தக்காளி, உப்பு, சீரகம், மஞ்சள்.
செய்முறை: தக்காளி சாறுடன், உப்பு, சீரகப்பொடி, மஞ்சள் பொடி சேர்த்து குடித்துவர நீர் இழப்பு, ரத்த ஓட்டம் சீராகும். தக்காளி நீர்ச்சத்தை தரக்கூடியது. உடல் தேற்றியாக விளங்குகிறது. உடல் சோர்வை மாற்றி பலம் தரும் பானமாக விளங்குகிறது. இதை அவ்வப்போது குடித்துவர மாரடைப்பு வராமல் தடுக்கிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட தக்காளியை அடிக்கடி உணவில் சேர்ப்பது உடலுக்கு நன்மை தரும். மூச்சிரைப்பை சரிசெய்யும் மருத்துவத்தை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: உளுந்தம் பருப்பு, பெருங்காயம். செய்முறை: உளுந்தம் பருப்பை பொடித்து எடுக்கவும். இதனுடன் சிறிது பெருங்காயத்தை பொடித்து சேர்த்து நெருப்பில் இட்டு புகையை நுகர வேண்டும். இவ்வாறு செய்தால் மூக்கடைப்பு விலகும். மூச்சிரைப்பு தணிந்து போகும்.
Average Rating