ரத்தசோகையை போக்கும் பீட்ரூட்!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைபெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பீட்ரூட்டின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
உணவாக பயன்படும் பீட்ரூட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதில், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, விட்டமின் சி சத்துக்கள் உள்ளன. பீட்ரூட் புத்துணர்வு தரக்கூடியதாக விளங்குகிறது. இதயத்துக்கு பலம் தருகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. கொழுப்புச்சத்தை குறைக்கிறது.
கண்களுக்கு பலம் தரும், ரத்த சோகையை போக்கும் பீட்ரூட் இலை பொறியல் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பீட்ரூட் இலை, நல்லெண்ணெய், கடுகு, சீரகம், வரமிளகாய், பூண்டு, வெங்காயம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். சிறிது சீரகம், வரமிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன், நறுக்கி வைத்திருக்கும் பீட்ரூட் இலையை சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இந்த பீட்ரூட் இலை பொறியலை சாப்பிட்டுவர ரத்த சோகை சரியாகும். கண்களுக்கு பலம் தரும்.
பீட்ரூட்டின் அனைத்து பாகங்களும் பயன் தரக்கூடியது. பீட்ரூட் இலை ரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது. இதய அடைப்பு வராமல் தடுக்கிறது. அழகு, ஆரோக்கியத்தை தரக்கூடியதாக விளங்குகிறது. பீட்ரூட் இலை பொறியலை வாரம் ஓரிரு முறை செய்து சாப்பிடுவது நல்லது.பீட்ரூட்டை பயன்படுத்தி உயர் ரத்த அழுத்தத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பீட்ரூட், மிளகு, சீரகம், மஞ்சள். செய்முறை: பீட்ரூட் சாறு 100 மில்லி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மிளகுப்பொடி, அரை ஸ்பூன் சீரகப்பொடி, சிறிது மஞ்சள் சேர்த்து கலந்து குடித்துவர உயர் ரத்த அழுத்தம் குறையும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்து குறையும். ரத்த நாளங்களில் அடைப்பை சரிசெய்யும். நரம்புகளில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாகிறது. உடலுக்கு பலம் கொடுக்கிறது.
பீட்ரூட் இலையை பயன்படுத்தி கூந்தலுக்கு பலம் தரும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பீட்ரூட் இலை, கறிவேப்பிலை, நெல்லிவற்றல். செய்முறை: நெல்லிவற்றலை 2 மணி நேரம் ஊறவைக்கவும். இதனுடன் பீட்ரூட் இலை, கறிவேப்பிலை சேர்த்து பசையாக அரைத்து எடுக்கவும். இதை, தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்துவர முடி கொட்டுவது நிற்கும், முடி ஆரோக்கியமாக இருக்கும். பீட்ரூட் இலை, கறிவேப்பிலை, நெல்லி வற்றல் ஆகியவற்றில் விட்டமின் சி, இரும்பு சத்து உள்ளது.
பீட்ரூட் இலை தலைமுடிக்கு ஆரோக்கியம், ரத்த ஓட்டத்தை கொடுக்கிறது. முடி அடர்த்தி, கருமையாக இருப்பதற்கு வழிவகுக்கிறது. உடலில் தடிப்பு, அரிப்பு, சிவந்த தன்மை, கண் எரிச்சலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். வயிற்றில் கிருமிகள் அதிகமாகும்போது இப்பிரச்னைகள் ஏற்படும். மூக்கிரட்டை கீரையின் வேரை எடுத்து நசுக்கி விளக்கெண்ணெயில் இட்டு தைலப்பதத்தில் காய்ச்சி, மேல்பூச்சாக பயன்படுத்தும்போது அரிப்பு, தடிப்பு சரியாகும்.
Average Rating