உடல் உஷ்ணத்தை போக்கும் கரும்பு!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், கரும்புசாறின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.கோடைகாலத்தில் அதிக உஷ்ணத்தால் காய்ச்சல் ஏற்பட்டது போல் இருக்கும். வாய் உலர்ந்து போகுதல், நாவறட்சி, அதிக தாகம் ஏற்படுதல், சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படும். உஷ்ணத்தை குறைப்பதால் இப்பிரச்னைகள் தீரும். இதற்கு கரும்புச்சாறு அற்புத பானமாக விளங்குகிறது.
கரும்பு சாறு எளிதாக கிடைக்க கூடிய ஒன்று. இதை குடிப்பதால் பல உஷ்ண நோய்கள் குணமாகும். இதில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு சத்துக்கள் உள்ளன. பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. வாய் துர்நாற்றத்தை போக்கும். வயிற்று புண்களை ஆற்றும். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இது, வயிற்றுபோக்கை சரிசெய்கிறது.
கரும்புவை பயன்படுத்தி உடல் உஷ்ணம், அசதியை போக்கும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கரும்புச்சாறு, சோற்றுக்கற்றாழை, எலுமிச்சை. செய்முறை: சோற்றுக்கற்றாழையின் சதை பகுதியை நன்றாக தண்ணீரில் சுத்தப்படுத்தி எடுக்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அரைக்கவும். பின்னர், கரும்புச்சாறு சேர்த்து கலந்து குடித்துவர உடல் உஷ்ணம் குறையும். சோர்வு நீங்கும்.
இனிய சுவையுடைய கரும்பு அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. உடலில் நீர்ச்சத்து வற்றிபோகும்போது சோர்வு, மயக்க நிலை ஏற்படும். பல்வேறு நன்மைகளை கொண்ட சோற்றுக்கற்றாழை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. வயிற்று புண்களை ஆற்றும். எலுமிச்சை சாறு பசியை தூண்டக் கூடியது. வெயில் காலத்தில் உணவின் மீது நாட்டம் இருக்காது. இதை எலுமிச்சை சாறு சரிசெய்கிறது.
கரும்புவை பயன்படுத்தி அடிவயிற்றில் ஏற்படும் வலியை போக்கும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கரும்புச்சாறு, தயிர். செய்முறை: 2 ஸ்பூன் தயிர் எடுக்கவும். இதனுடன் சிறிது கரும்பு சாறு சேர்த்து அரைக்கவும். இந்த பானத்தை குடித்துவர அடிவயிற்றில் ஏற்படும் வலி, சிறுநீர் எரிச்சல் சரியாகும். உடல் குளிர்ச்சி அடையும். புரதச்சத்து கிடைக்கும். வைட்டமின் சி உள்ள இந்த பானம் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. இது சிறுநீரக கோளாறுகளுக்கு அற்புத மருந்தாகிறது.
கரும்பை பயன்படுத்தி தலைசுற்றல், மயக்கத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கரும்புச்சாறு, ஏலக்காய், இஞ்சி.செய்முறை: ஏலக்காய், இஞ்சி ஆகியவற்றை நசுக்கி எடுக்கவும். இதனுடன் கரும்பு சாறு சேர்த்து கலந்து வடிகட்டி குடித்துவர தலைசுற்றல், மயக்கம் சரியாகும். உஷ்ணத்தால் ஏற்படும் அடிவயிற்று வலி குணமாகும். குடல்புண் சரியாகும்.
மூட்டு வலியை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: லவங்கப்பட்டை, தேன். தற்போதைய உணவு பழக்கவழக்கத்தால் உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் மூட்டுகளில் வலி ஏற்படுகிறது. லவங்கப்பட்டையை தூளாக்கி அரை ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து காலை, மாலை என ஒரு மாதம் சாப்பிட்டுவர மூட்டுவலி இல்லாமல் போகும்.
Average Rating