ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:16 Minute, 47 Second

ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை இந்த மண்ணில் உயிர்ப்பிக்கச் செய்வதே. ஆண், பெண்ணாய்… இருபாலாய் மனித உடல்கள் பிறப்பதன் நோக்கமும் மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்வதே! பெண்களுக்கு மார்புகளும் அந்தரங்க உறுப்புகளும் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் மனித உயிரை இந்த உலகுக்கு உயிர்ப்பித்துத் தருவதே ஆகும். பெண்ணின் அந்தக் குறிப்பிட்ட உறுப்புகளின் மீது ஆணுக்கு ஈர்ப்பு ஏற்படுவதற்கான மனநிலைக்கும் இயற்கையின் காதல் விதிகளே காரணம்.

தான் சந்திக்கும் பெண்களை இம்ப்ரஸ் செய்ய ஆர்வத்தோடு ஆண் இயங்குவதற்கும், எத்தனை ஆண்களைக் கடந்து வந்தாலும், இவன் மூலம் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு இவன் உதவியாக இருப்பானா? என்ற தேடலை பெண்ணுக்குள்ளும் வைத்துஇயக்குவதும் யார்? ஏன் என்று யோசித்துப் பாருங்கள்.உயிர் ஈர்ப்பு விசையான காமம், ஆயுள் வரை ஈர்ப்பு உலர்ந்து விடாமல் காப்பதற்கான காதல் ஜெல்… இவை இரண்டுக்குமான இயங்குதளத்தில் நாம் பொம்மைகளாக இயக்கப்படுகிறோம். பெண்மை, ஆண்மை இரண்டையும் பூட்டி வைக்கவோ, பொத்தி வைக்கவோ இங்கு யாராலும் முடியாது. கைப்பற்றுதலும், களவாடுதலும், உடன் போதலும், உயிராதலும் இயற்கையின் பொது விதிகள்.

இதனை நாகரிகமான முறையில் அணுகவே இங்கு ஒழுக்க விதிகள் பின்பற்றப்படுகிறது. இவையும் காலத்துக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் ஏற்ப இலகுவாக்கப்பட்டே வந்துள்ளது. ஆணாதிக்கம் வகுத்தளித்த விதிமுறைகள், ஆண்மையப்படுத்தப்பட்ட குடும்ப வாழ்க்கை முறை என பெண் மூளையைக் கட்டிப் போடுவதற்கான ஆணின் விதிகளை காமத்தின் வாள் கொண்டு அறுத்தெரிந்து விடுகிறது இயற்கை. ஆம்… காமம் என்பது பெண்ணுக்கான சுதந்திர வெளி. ஆணுக்கான ஈர்ப்பு விதிகளோடு பிறக்கிறாள். மனித இனத்தைத் தன் கருவில் தாங்கிப் பிறக்கச் செய்கிறாள். அதனை அன்போடும், பண்போடும் வளர்த்து இந்தச் சமூகம் உயிர்ப்புடன் இயங்குவதற்கான தலைமையும் அவள் தான் என்பதற்கு இந்த உயிர் ஈர்ப்பு விதியே சாட்சி. பெண்ணுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற துணை நிற்பதே ஆணின் இயல்பாக இங்கு உள்ளது.

காட்டுப்பறவையை தன் கூட்டுப்பறவையாக்கிக் கொள்ளத் துணியும் பொசஸிவ்னஸ் என்ற எண்ணம் ஏன் ஆணுக்கு உருவாகிறது? இப்படி பல கேள்விகள் ஆண் பெண் உறவின் எச்சமாக நிற்கிறது. பாலியல் வன்கொடுமைகள், பலாத்காரங்கள், கொலைகள் இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன என்ற குழப்பமும் நம்மைத் தொடர்கிறது.ஆரோக்கியமும், அன்பும் நிறைந்த தாம்பத்ய முறை ஆயுளின் அந்தி வரை நீடிப்பது இவற்றுக்கெல்லாம் தீர்வாக அமைகிறது. அன்பு ஒன்றே அத்தனை பிரச்னைகளுக்குமான தீர்வு. அன்பிருக்கும் இடத்தில் குறைகள் பெரிதாவதில்லை. காரணங்களைத் தேடிப்பிடித்து பழி வாங்கும் எண்ணம் குறையும். பாலியல் இச்சைக்காக தன்னை எதிர்க்க முடியாத நிலையில் உள்ள பெண்ணை அபகரிக்கும் எண்ணங்கள் எட்டிப் பார்க்காது.

ஆண் பெண்ணுக்கான தாம்பத்ய உறவில் சந்திக்கும் சவால்கள், குழப்பங்கள், சிகிச்சைகள் அனைத்தும் அன்பின் மிகுதியால் சமன் செய்து விட முடியும். குறைகளும் தவறுகளும் நிறைந்த இந்த மனிதப் பாலினத்துக்குள் இருந்து காதலும், காமமும் வெளிப்படுவது அன்பு மிகுந்த சூழ்நிலைகளில் மட்டுமே.
அந்த அன்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே கொஞ்சம் நிலவு, கொஞ்சம் நெருப்பு தொடரில் நாம் பயணித்தோம். அந்த அன்பை ஆயுளின் அந்தி வரை நமதாக்கிக் கொள்வதற்கான அன்பு விதிகளை பகிர்ந்து கொள்கிறார் பாலியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ரமேஷ் கண்ணா.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?

*அளவற்று அன்பு செலுத்துங்கள். உங்கள் இணையுடன் இதமாக ஊடல் கொள்ளுங்கள். உங்கள் இணையின் ஊடல் கரைக்க முற்படும் கூடலின் வழியே புதிய இன்பங்களை நீங்கள் கண்டடையலாம்.

* சின்னச் சின்னப் பிரிவுகள் முடிந்து நீங்கள் சந்திக்கும்போது அந்தப் பிரிவின் வலியைச் சமன் செய்வது கூடலே. கூடலைத் தள்ளிப் போடாமல் அதற்கென்று நேரம் ஒதுக்குங்கள். இனிக்க இனிக்க இணையைக் காதலில் மூழ்கிடச் செய்யுங்கள்.

*இணையில் வலியுணர்ந்து கூடுதல் வேலைச் சுமைகள் இருக்கும் போது ஆண் என்கிற முகமூடியைக் கழற்றிவிட்டு தோழனாகி வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவள் மனதில் அன்பு மிகும்.

*நீங்கள் அன்றாடம் செய்யும் வேலையாகக் கூட இருக்கலாம் தினமும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ளுங்கள். குறையே இருந்தாலும் அதை உடனடியாகச் சொல்லாமல், அந்தக் குறையில் இருந்து வெளியில் வர உதவுங்கள். இவள் எனக்கானவள் என்ற நிம்மதி மனதில் பரவும்.
* எதிர்பாராத நேரங்களில் முத்தங்களால், செல்ல அணைப்புகளால் சிறு தனிமைகளையும் காதல் பூக்கச் செய்யுங்கள்.

* உங்களில் ஒருவர் எந்த விஷயத்தைச் சொல்லத் தொடங்கும்போதும் காது கொடுத்துக் கேளுங்கள். அதற்கான தீர்வை அன்பான வார்த்தைகளில் திருப்பிக் கொடுங்கள். இருவருக்குள்ளுமான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

* புதிய இடங்களுக்குச் செல்வது, புதிய முறையில் உடுத்திக் கொள்வது, அறையின் பொருட்களை இடம் மாற்றிப் புதிய உற்சாகத்தை அளிப்பது என புதிதாக உணரச் செய்யும் அனுபவங்களை பரிசளித்துக் கொள்ளுங்கள். இருவருக்குள்ளும் உற்சாகம் மேம்படும்.

* தாம்பத்ய விருப்பங்களை தயக்கம் இன்றி வெளிப்படுத்துங்கள். ஒருவரின் விருப்பத்தை மற்றவர் நனவாக்க முயற்சிப்பது இருவரையும் அன்பு மிகுதியில் மூழ்கிடச் செய்யும்.

* உங்களது இணையின் பிறந்த நாள், காதல் சொன்ன நாள், திருமண நாள் போன்ற முக்கியமான நாட்களில் பரிசளித்து அன்பை மிகுதியாக்குங்கள்.

* கடினமான நேரங்களில் கூட கசப்பான வார்த்தைகளைப் பேசி விடாதீர்கள்? அமைதியாக இருங்கள். இருவரது சூழலையும் புரிந்து கொண்டு அன்பு செய்ய முயற்சியுங்கள். பல துன்பக் கடல்களையும், கசப்பான அனுபவங்களையும் தாண்டி இணைந்து பயணிக்க அன்பே படகாகிறது… பின் அன்பே கடலாகும்.

நலம் நலம் அறிதல்

* உடலை நோய் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவு முறையைக் கடைபிடிப்பதில் கண்டிப்பாக இருங்கள்.

* இருவரும் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெற்றுச் சரி செய்து விடுங்கள். அந்த நோயின் தீவிரத்தைக் குறைக்கும் படியான வாழ்க்கை முறை, உணவு முறை என முறைப்படுத்துங்கள்.

* சர்க்கரை நோய் தாம்பத்ய உறவின் எதிரி. சர்க்கரை நோய்த் தாக்குதலுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

*குறிப்பிட்ட நேரம் தூக்கம் அவசியம். இரவு நேரங்களில் வேலை பார்ப்பதைத் தவிர்த்து விடுங்கள்.

* கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் இடங்களில் வேலையினால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் நேரமின்மை ஆகியவையும் தாம்பத்ய உறவுக்கான நல்ல சூழலைக் கெடுக்கும். இந்த மன உளைச்சல்களிலிருந்து வெளியில் வர தாம்பத்யத்துக்கான நேரத்தைத் திட்டமிடுங்கள். வாரம் இருமுறையாவது தாம்பத்ய உறவு கொள்ள வேண்டியது அவசியம்.

* இணைகள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது, டென்ஷன் ஏற்படுவது போலப் பேசுவதையும் குறைத்துக் கொள்ளுங்கள். இது காமத்துக்கான நேரங்களைத் தவிர்க்கச் செய்யும் அல்லது அந்த நேரத்தில் இன்பத்தை அடைவதற்கான வேகத்தடையாகும்.

24 மணி நேரமும் வேலை பார்ப்பது, வேலை பார்ப்பதற்காக சிந்திப்பது என்பதை மாற்றி ரொமான்ஸுக்கான நேரம் ஒதுக்குங்கள். இது உறவின் நலத்தோடு உடல் நலத்தையும் பாதுகாக்கும். ஒருவர் உடல் நலத்தில் அக்கரை இன்றி இருந்தால் மற்றவர் அக்கரையோடு அதனைக் கவனிக்கச் செய்யுங்கள்.
தாம்பத்ய நேரத்தில் ஒருவர் ஓய்வெடுக்க விரும்பினால் மற்றவர் விட்டுக் கொடுப்பதும், காத்திருப்பதும் இன்னொரு பொழுதில் இன்பத்தைக் கூட்டவே செய்யும். மனைவியின் ஊடல் முத்தங்களுக்கான தேடலாக இருக்கலாம். கணவனின் ஊடல் இவள் என்னைக் கண்டு கொள்ளவேமாட்டாளா என்பதாக இருக்கலாம்.

உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது தாம்பத்ய நேரத்தின் வேகத்தைக் குறைக்கலாம். ‘ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும்’ என்கிறார் வள்ளுவர். ஊடலில் தோற்றவரே காமத்தில் வெல்கிறார். யார் தோற்பது என்பதில் போட்டி போடுங்கள் காமம் அழகாகும்.
இதெல்லாம் வேண்டாமே… இருவருக்குள்ளும் சின்னச் சின்ன ரகசியங்கள் இருக்கும். அவை ரகசியமாகவே இருக்கட்டும். மொத்தத்தையும் கண்டுபிடிக்க முயற்சிக்காதீர்கள்.உங்கள் நட்பு வட்டம் உங்கள் இணையின் மனதை நோகடிக்கும் அளவிற்குச் செல்ல வேண்டாம். இரண்டுக்கும் இடையிலான எல்லைக் கோடுகளை வகுத்துக் கொள்ளுங்கள்.

சோசியல் மீசியாக்களில் உங்களது பர்சனல் விஷயங்களை அப்பட்டமாகப் பகிர்வதைத் தவிருங்கள். இணையுடன் இருக்கும் நேரங்களில் உங்களது மொபைலில் நேரம் செலவளிப்பதைத் தவிருங்கள், பர்சனல் நேரத்தில் உங்களது மொபைலை சைலன்டில் போட்டு விடுவது அவசியம். வீட்டில் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஒருவர் மட்டும் கையில் வைத்திருப்பதைத் தவிருங்கள். இருவரும் இணைந்தே எந்தமுடிவையும் எடுங்கள். பரஸ்பரம் புரிதலுக்கும், அன்புக்கும் அதில் வழியிருக்கும்.

பெண் எத்தனை வயதானாலும் காதற்பொழுதுகளில் தன்னை மழலையாகவே உணர்கிறாள். குறிப்பிட்ட வயதுக்கு மேல் காதலெல்லாம் கிடையாது என்ற மூட நம்பிக்கைகளை விரட்டுங்கள். காதல்தான் உங்களது இளமையை என்றும் தக்கவைக்கிறது. இவைதான் வேண்டும் மீண்டும் மீண்டும்… தாம்பத்ய நேரத்துக்கு உடல், மன ரீதியாக இணையைத் தயார்படுத்துங்கள். இணைக்குப் பிடித்த வகையில் மூட் ஏற்றுங்கள்.
செல்லத் தொடுகை, இன்பத் தூண்டல் என நீங்கள் காதல் வயப்பட்டு காமம் கொண்டாடும் தருணங்களில் அன்பை மட்டுமே வெளிப்படுத்துங்கள். தன் இணையை தாம்பத்ய இன்பத்தில் உச்சம் அடையச் செய்ய வேண்டும் என்பதே இருவரின் இலக்காக இருக்க வேண்டும்.

தாம்பத்ய இன்பத்தில் இணைக்குப் பிடித்ததைச் செய்யத் தயக்கம் காட்டாதீர்கள். என்னென்ன வேண்டும் என்பதையும் கேட்டுப் பெறவும் யோசிக்கத் தேவையில்லை. அவசரப் பட வேண்டாம், மெது மெதுவாய், நிதானமாய் காதலின் கடலில் மூழ்கிடுங்கள். காதோடு பேசுங்கள், பிடித்த வார்த்தைகள் கொச்சையாக இருந்தாலும் பயன்படுத்துங்கள். தேவையை உணர்த்த உணர்த்தத்தான் வேண்டியது கிடைக்கும்.எவ்வளவு மெதுவாகத் துவங்கினாலும் காமம் போர்தான். இணைக்கு வலிக்காமல் காயங்கள் படாமல், துன்புறுத்தாமல் வேகத்திலும் இன்பம் கூட்டித் திணறச் செய்யுங்கள். காமத்தில் வெவ்வேறு நிலைகளைக் கடைபிடியுங்கள். ஒவ்வொரு கூடலும் பெண்ணுக்குப் புதிதாகத் தெரிய வேண்டும். ஒவ்வொரு தேடலிலும் ஆண் வென்றதாய் உணர வேண்டும்.

காமத்தின் முடிவில் மறுபடியும் ‘எப்போது’ என்ற ஏக்கத்துடன் முற்றுப் புள்ளி வைக்க முடியாமல், ஏக்கத்துடன் முடிக்க வேண்டும். இருவருக்கும் இடையில் காற்றும் நுழையாதபடி அணைத்துத் தழுவி கூடலில் இருந்து இரு உடல்களும் விடைபெற வேண்டும்.நீங்கினால் சுடுகிறது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எங்கிருந்து பெற்றாள் என்று அவனை ஏங்கச் செய்ய வேண்டும் பெண். இருவருக்கும் இடையில் உயிர் ஈர்ப்பு விசை குறைந்திடாமல் பார்த்துக் கொள்வது தான் இந்த ஆயுளின் நோக்கம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதல்ல சப்பாத்தி உப்பும் .. அப்பறம் நாம உப்புவோம்!! (வீடியோ)
Next post போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)