மலச்சிக்கலை போக்கும் ஆமணக்!! (மருத்துவம்)
நமக்கு அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத, பயனுள்ள, எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மலச்சிக்கலை போக்க கூடியதும், வலி வீக்கத்தை சரிசெய்ய வல்லதும், கீழ்வாதம், மூட்டுவலிக்கு மருந்தாக அமைவதும், ஈரல் நோய்கள், மஞ்சள் காமாலையை குணப்படுத்த கூடியதுமான ஆமணக்கு நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
சாலையோரங்களில், தோட்டத்தில் காணக்கூடியது ஆமணக்கு. இதில் இருந்துதான் விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ஆமணக்கு ஈரலை பலப்படுத்துவதுடன் பித்தத்தை சமன் செய்கிறது. மஞ்சள் கமாலைக்கு மருந்தாகி, வாத நோய்களை போக்குகிறது. வீக்கத்தை வற்ற செய்கிறது. வலியை தணிக்கிறது. குடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கிறது. மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. தோல்நோய்க்கு மருந்தாகிறது.
ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தி மலச்சிக்கலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நெல்லி வற்றல், ஆமணக்கு. செய்முறை: நெல்லி வற்றல் பொடியுடன் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து இரவு படுக்க போகும் முன்பு சாப்பிட்டுவர மலச்சிக்கல் சரியாகும். ஆமணக்கு விதைகளை பயன்படுத்தி கற்கள் அடைப்பால் உண்டாகும் பிரச்னைகளை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஆமணக்கு விதைகளை நசுக்கி போட்டு சூடு செய்யவும். இதை துணியில் கட்டி இளம்சூட்டுடன் அடிவயிற்றில், இடுப்பில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கல்லடைப்பால் ஏற்படும் இடுப்பு வலி சரியாகும். கற்கள் வெகு விரைவில் கரையும்.
ஆமணக்கு இலைகளை பயன்படுத்தி கீழ்வாதம், மூட்டுவலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆமணக்கு இலை, நெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் விடவும். இதில், ஆமணக்கு இலைகளை துண்டுகளாக்கி போட்டு நன்றாக வதக்கவும். இதை எடுத்து இளஞ்சூட்டுடன் மூட்டுகளில் வலி, வீக்கம் உள்ள இடங்களில் கட்டி வைக்க வேண்டும். இதனால், வலி வீக்கம் சரியாகும். கீழ்வாதம் குணமாகும்.
ஆமணக்கு இலைகளை பயன்படுத்தி தோலில் ஏற்படும் சிராய்ப்பு காயங்கள், வெடிப்புக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: ஆமணக்கு இலை, விளக்கெண்ணெய், மஞ்சள். செய்முறை: ஆமணக்கு இலை பசை, மஞ்சள் பொடியுடன் சிறிது விளக்கெண்ணெய் விட்டு கலக்கவும். இதை சிராய்ப்பு காயங்களுக்கு மேல் பூசினால் விரைவில் காயம் ஆறும். இதை பாத வெடிப்புக்கு தொடர்ந்து பயன்படுத்தினால் வெடிப்பு பிரச்னை சரியாகும். வீக்கம், வலி இல்லாமல் போகும்.
பல்வேறு நன்மைகளை கொண்ட ஆமணக்கு ஈரல் நோய்களுக்கு அற்புதமான மருந்தாகிறது. ஈரல் வீக்கம், மஞ்சள் காமலை இல்லாமல் போகும். எளிதாக கிடைக்க கூடிய ஆமணக்கை பயன்படுத்தி உடல் நலம் பெறலாம். தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மறைவதற்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு புங்கன் எண்ணெய், விளக்கெண்ணெய் மருந்தாகிறது. புங்கன் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை நன்றாக குழைத்து தடவுவதால் தோல் சுருக்கங்கள் மறையும்.
Average Rating