வாய்துர்நாற்றம், பல்வலிக்கு விளா மருத்துவம்!! (மருத்துவம்)
அன்றாடம் ஒரு உணவு, ஒரு மூலிகை அவை தீர்க்கும் நோய்கள் என எளிய மருத்துவத்தை வீட்டில் இருந்தபடியே, அமர்ந்தபடியே பணச்செலவு, பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான மருத்துவ முறைகளை அறிந்து பயன் பெற்று வருகிறோம். அந்த வகையில் இன்று விளாவின் மருத்துவ பயன்கள் மற்றும் உணவுமுறை குறித்து அறிந்து கொள்வோம். முழுமுதற் கடவுளாம் விநாயகனுக்கு உகந்த பழம் விளாம் பழம். தற்ேபாது சீசனும் கூட. ஆங்கிலத்தில் இதனை உட்ஆப்பிள், எலிபென்ட் ஆப்பிள் என்று கூறுவர். இது உன்னதமான மருத்துவகுணங்களை உள்ளடக்கியது. பழம் மட்டுமின்றி இதன் இலை, வேர், பட்டை, காய் என அனைத்து பாகங்களும் மகத்தான மருத்துவகுணங்களை கொண்டது.
இதில் வைட்டமின் சி, இரும்புசத்து, கால்சியம், பொட்டாஷியம், மெக்னீஷியம், பாஸ்பரஸ் என ஏராளமான சத்துகள் உள்ளது. எனவே விளாம் பழம் உடலுக்கு மருந்தாகி உணவும் ஆகிறது. அந்த வகையில் இன்று நாம் இதன் மகத்துவம் மற்றும் மருத்துவம் குறித்து அறிந்து பயன்பெறுவோம். முதலில் பித்தம், தலைசுற்றல், குமட்டல், வாந்தி பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு தரும் விளாம்பழ தேனீர் தயாரிப்பு குறித்து அறிந்து கொள்வோம். இதற்கு தேவையான பொருட்கள்:ஓடு நீக்கிய விளாம் பழத்தின் சதைப்பகுதி சிறிதளவு, நாட்டுசர்க்கரை, சுத்தமான குடிநீர். செய்முறை: விளாம் பழத்தின் சதைப்பகுதியை ஒரு வாணலியில் இட்டு அது சூடானதும் அதில் ஒரு டம்ளர் அளவு நீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து இறக்கும் பதம் வந்ததும் அதில் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி ஆறவிடவும். அதனை வடிகட்டி இளம் சூட்டில் குடித்துவர மேற்சொன்ன பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். ஒரு நாளில் இரண்டு மூன்று முறை கூட இந்த தேனீரை பருகலாம்.
இது பித்த சமனியாக, நோய்நீக்கியாக செயல்படுகிறது. குடல் புண்களை ஆற்றும் சிறந்த மருந்து இது. இனி விளா இலைகளை பயன்படுத்தி வாய்துர்நாற்றம், பல்வலி, ஈறுவீக்க பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் முறை குறித்து அறிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: விளா இலை, மிளகு, ஓமம், பெருங்காயத்தூள், செய்முறை: விளா இலைகளை எடுத்து சுத்தம் செய்து கழுவி ஒரு வாணலியில் இலைகளை கசக்கி போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதி வரும் போது மிளகு 10, சிறிது ஓமம், பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் வடிகட்டி விருப்பத்துக்கு ஏற்ப சிட்டிகை உப்பு அல்லது ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து பருகலாம். இது வயிற்றில் உள்ள நுண் கிருமிகளையும் போக்கி வயிற்று உபாதைகளை விரட்டுகிறது. அடுத்து விளாங்காயை பயன்படுத்தி பசியை தூண்டும், செரிமானத்தை சீர்செய்யும் உணவுக்கு சுவை சேர்க்கும் துவையல் தயாரிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்: விளாங்காய், வரமிளகாய், புளி, உப்பு, நெய். செய்முறை: விளாங்காயை உடைத்து ஓடுகளை நீக்கி அதன் சதைப்பகுதியை எடுத்து கொள்ளவும். ஒரு வாணலியை சூடாக்கி அதில் சிறிதளவு நெய் ஊற்றி அது காய்ந்ததும் அதில் விளாங்காயின் சதைப்பகுதியை போட்டு வதக்கவும். அதனுடன் வரமிளகாய், புளி, உப்பு சேர்த்து வதக்கவும். இந்த கலவைைய ஆறவைத்து மிக்சியில் அரைத்து துவையலாக பயன்படுத்தலாம். இது வயிற்றில் உள்ள வாயுவை போக்கி வயிற்று கோளாறுகளை உடனடியாக சீர் செய்யும். அன்றாட உணவில் இதனை எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியம் கூடும். உடல் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி பெறும். விளாம் பழத்தை போலவே ஏராளமான மருத்துவகுணங்களை உள்ளடக்கியது வில்வ பழம். விளாம் பழத்தின் ஓடு மற்றும் வில்வ பழத்தின் சதைப்பகுதி இரண்டையும் சேர்த்து தேனீராக்கி குடித்துவர வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும். சருமத்துக்கு பாதுகாப்பு கிடைக்கும். எலும்புகள் வலுப்பெறும்.
Average Rating