சர்வஜன வாக்கெடுப்புக்கான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் !! (கட்டுரை)
மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றிபெற்ற அரசாங்கத்துக்கு, அரசமைப்பில் ஒரு திருத்தத்தை கொண்டுவந்து, வெற்றிகரமாக நிறைவேற்றுவது, ஒரு பெரிய காரியமாக இருக்கப் போவதில்லை என்றே, ஆரம்பத்தில் பரவலாகக் கருதப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலின் மற்றுமொரு பேரிடர் ஏற்பட்டுள்ளமையால், இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை, இலாவகமாக வெற்றிபெற வைக்கலாம் என்ற அனுமானங்களும் வெளியாகியிருந்தன.
உத்தேச திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பரிசீலித்த நீதியரசர் குழாம் எடுத்திருக்கும் தீர்மானம், இது விடயத்தில், அரசாங்கத்துக்குச் சட்டரீதியான சவாலை உருவாக்கியுள்ளது.
ஏனெனில், உத்தேச திருத்தச் சட்டமூலத்தில், பல சரத்துகளை நிறைவேற்றப் பச்சைக்கொடி காட்டியுள்ள உயர்நீதிமன்றம், சில சரத்துகளை நிறைவேற்றுவதென்றால், சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று வியாக்கியானம் எழுதியுள்ளது.
20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள், சரத்துகள், அவற்றின் நோக்கங்கள் பற்றி, பொதுஜன பெரமுனவும் அக்கட்சிக்குத் துணைநிற்கின்ற ஏனைய கட்சிகளும் என்னதான் கற்பிதம் கூறினாலும், உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானமே சட்ட ரீதியாக மேலோங்கி நிற்கும். அந்த வகையில், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவது என்றால், இந்தத் தடைகளைப் புதிய உபாயங்களின் ஊடாக, அரசாங்கம் தாண்ட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
1978ஆம் ஆண்டின் அரசமைப்பில், 20ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கான உத்தேச திருத்தச் சட்டமூலத்தை, செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி, அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்தது. நல்லாட்சிக் காலத்தில் சட்டமாக்கப்பட்ட 19ஆவது திருத்தத்தை வறிதாக்குவதைப் பிரதான நோக்காகக் கொண்டே, உத்தேச திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், அதையும் தாண்டிய பல முன்மொழிவுகள், உத்தேச திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக, ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் மீளக் குவிக்கப்படுவதற்கு வசதியளிக்கும் சட்ட ஏற்பாட்டை, இந்த உத்தேச திருத்தச் சட்டமூலம் கொண்டுள்ளது என்பது பரவலான அபிப்பிராயமாகும். “ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சி” என்றே, இதை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
அதுமட்டுமன்றி, ஆளும் பொதுஜன பெரமுனவுக்கு உள்ளேயே, இதுவிடயத்தில் சின்னச் சின்ன சலசலப்புகள் இருக்கின்றன. அத்துடன், பெரமுனவுடன் கூட்டணி அமைத்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு பல முன்மொழிவுகள் தொடர்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதையெல்லாம் சூட்சுமமாக, எவ்வாறு சமாளிப்பது என்பதை, ராஜபக்ஷர்கள் நன்கு அறிவார்கள். 20ஐ நிறைவேற்றுவது, சிக்கலான காரியமாக இருக்காது என்றே அவர்கள் அனுமானித்திருப்பர்.
இந்தக் கட்டத்திலேயே, கொரோனா வைரஸ் பரவுகை, பேரிடராக நாட்டு மக்களின் சுகாதார நலனுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றது. மக்கள் எல்லோரும், வைரஸ் பரவலிலேயே முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருப்பது மட்டுமன்றி, 20இற்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்த முடியாத கட்டுப்பாடுகளும் காணப்படுகின்றன.
எனவே, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சத்தமில்லாமல் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை, பொதுஜன பெரமுன கட்சி நிறைவேற்றிவிடும் என்ற முன்கணிப்புகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில்தான், உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம், எதிர்பாராத சவாலை ஆளும் கட்சிக்கு ஏற்படுத்தி இருக்கின்றது.
புதிய அரசமைப்பு ஒன்றைக் கொண்டு வருவதற்கு முன்னதாக, அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான திருத்தச் சட்டமூலம், நாடாளுமற்றத்தில் முன்வைக்கப்பட்ட பின்னர், இதற்கு எதிராக 39 மனுக்கள், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதுமட்டுமன்றி, 20 இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களைத் தொடர்ச்சியாகப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம், இறுதித் தீர்மானத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் எடுத்தது.
இதன்படி, உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில், முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படைத் திருத்த முன்மொழிவுகளுக்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இருப்பினும், அதிலுள்ள நான்கு சரத்துகள், நடைமுறையில் உள்ள அரசமைப்பை மீறுவதாக, உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது. எனவே, அவற்றைத் திருத்தாமல், உள்ளபடியே நிறைவேற்ற வேண்டுமாயின், அரசமைப்பின் 83ஆவது உறுப்புரைக்கு அமைவாக, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஐவரடங்கிய நீதியரசர் குழாத்தில், நான்கு பேர் என்ற பெரும்பான்மை நீதியரசர்களின் முடிவுக்கு அமைய, இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வியாக்கியானத்தை உயர்நீதிமன்றம், சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பிவைத்துள்ளது. இவ்விவகாரத்தில், இது நீதிமன்றத் தீர்ப்புக்கு ஒப்பானதாகும்.
செப்டெம்பரில், அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் 3ஆம், 5ஆம், 14ஆம், 22ஆம் சரத்துகளே, தற்போதுள்ள அரசமைப்பின் குறிப்பிட்ட ஏற்பாடுகளுக்கு முரணாக உள்ளதாக, உயர்நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இதில் 3, 14 ஆகிய சரத்துகளை நிறைவேற்றுவது பற்றியதான ஆதரவை, நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும். மற்றைய இரு சரத்துகளையும் அப்படியே நிறைவேற்ற வேண்டுமாயின், மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட 4 சரத்துகள், ஜனாதிபதியின் தத்துவங்களும் பணிகளும், அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான விடுபாட்டுரிமை, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தல், கலைத்தல், கூட்டுதல், சுயாதீன தேர்தல்களை நடத்துதல் போன்ற விடயங்களுடன் தொடர்புபட்ட சரத்துகளாகும்.
உயர்நீதிமன்றம், இவ்வாறான தீர்மானமொன்றை எடுத்துள்ளமை, நீதித்துறை பற்றிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அதாவது, ‘இவர்களது ஆட்சியில், நீதியின் ஆட்சி இருக்கமாட்டாது’ என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இவ்வாறான சூழலில், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில், குறிப்பிட்ட சில திருத்தங்களில் மாற்றங்கள் செய்யாமல், உள்ளபடியே நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளமை, நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை எடுத்துக் காட்டுவதாகவும் கருதலாம்.
நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு, எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம், சபாநாயகர் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பார். அதற்கிடையில், இத்தீர்மானம் பற்றிய தகவல்கள் எல்லா மட்டங்களிலும் கசிந்துள்ளதுடன், அதுபற்றிய கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.
எவ்வாறிருப்பினும், 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக, மூன்றிலிரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை உறுதிப்படுத்துவது எவ்வாறு எனத் தலையைப் போட்டுக் குடைந்து கொண்டிருந்த அரசாங்கத்துக்கு, நீதிமன்றத்தின் மேற்படி தீர்மானம், இன்னுமொரு தலையிடியை ஏற்படுத்தும் என்றே தோன்றுகின்றது.
எனவே, 20 இனை நிறைவேற்றும் விடயத்தில் ஆளும்கட்சி, முன்வைத்த காலைப் பின்வைக்குமா அல்லது, சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுமா என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.
ஆனால், பொதுஜன பெரமுன, 20இனை முற்றாகக் கைவிடுவதற்கான எந்தச் சாத்தியங்களும் இல்லை. 4ஆம், 2ஆம் சரத்துக்களுக்கு, மக்கள் அபிப்பிராயம் தேவை என்பதற்காக, தனது முயற்சியில் ராஜபக்ஷர்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள்.
அதுபோல, சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்வதும் சாத்தியமற்றது என்றே தோன்றுகின்றது. கொரோனா வைரஸ் பரவுகை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஒரு திருத்தச் சட்ட மூலத்துக்காக மக்கள் அபிப்பிராயத்தைப் பெறுவது, இலகுவான காரியமும் இல்லை. அது, முதன்மைத் தெரிவாக இருக்கப் போவதும் இல்லை.
20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றிய சிறிது காலத்தில், புதியதோர் அரசமைப்பைக் கொண்டு வருவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. ஆகவே, அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றாலும், இப்போதிருக்கின்ற களநிலைவரங்களின் படி, சில விடயங்கள் நடப்பதற்கான நிகழ்தகவுகள் இருப்பதாகச் சொல்ல முடியும். அதாவது, நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட பிறகு, குழுநிலை விவாதத்தின் போது, மேற்படி 3, 14ஆம் சரத்துகளை நிறைவேற்றுவதற்கான ஒப்புதல் ஆதரவை அரசாங்கம் பெறலாம்.
அதேபோன்று, ஏனைய 5ஆம், 22ஆம் சரத்திலுள்ள முன்மொழிவுகளை, அப்படியே நிறைவேற்றுவதில் சட்டச் சிக்கல் காணப்படுகின்றமையால், அநேகமாக இதில் நுட்பரீதியான மாற்றங்களை ஏற்படுத்தி, 20(அ)திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வருவதன் ஊடாக, பொதுஜன பெரமுன அரசாங்கம் தான் நினைத்ததைப் பெருமளவுக்கு சாதிப்பதற்கான முயற்சிகளை எடுக்கும்.
‘சாதிக்க முடியாதவற்றை சாதித்துக் காட்டும் கலைதான் அரசியல்’ என்பது, இவ்விடத்தில் நினைவுக்கு வருகின்றது.
Average Rating