தூக்கமின்மைக்கு தீர்வாகும் ஸர்ப்பகந்தா!! (மருத்துவம்)
நலம் தரும் நாட்டு மருத்துவம் பகுதியில் இன்று நாம் ஸர்ப்பகந்தா மூலிகையை கொண்டு தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை போக்கும் மூலிகை மருத்துவம் குறித்து அறிந்து பயன்பெற உள்ளோம். ஸர்ப்பகந்தா என்ற மூலிகை சாலை ஓரங்கள், மற்றும் குன்றுகள் என அனைத்து இடங்களிலும் மிக எளிதாக கிடைக்கக்கூடியது. ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஸர்ப்பகந்தா மூலிகை மிகுந்த பயனளிக்க வல்லது. எளிய முறையில் மருத்துவம் செய்து பலன் பெறலாம். ஆன்டிடோட் என்று அழைக்கப்படும் இது பாம்புகடிக்கு குறிப்பாக கோப்ரா, ராஜநாகம் எனப்படும் கருநாக பாம்பின் விஷத்தை முறிக்கும் தன்மை உடையது. மேலும் சிலந்திக்கடி, தேள்கடிக்கும் தீர்வாகிறது. இதன் காய்கள் மிக அழகாக சிறியதாக மணிகளைப்போல் இருக்கும். ஸர்ப்பகந்தா என்ற இந்த தாவரம் ஸர்ப்பகந்தி என்றும் அறியப்படுகிறது.
ஆயுர்வேதம் இதனை இன்சானிடி பிளான்ட் என்று கூறுகிறது. மனோநிலைக்கான சிறப்பு மூலிகை என்ற புகழ் கொண்ட ஸர்ப்பகந்தா மூட் ஸ்விங்க் எனப்படும் மனநிலை மாறுபாட்டை சீர்செய்வதில் சிறந்து விளங்குகிறது. மனோநிலைக்கான மூலிகை என்ற தனிச்சிறப்பும் இதற்கு உண்டு. மேலும் ஸர்ப்பகந்தாவில் சர்ப்பைன், சர்பன்டைன், அஜ்மோனின் போன்ற மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுதியாக உள்ளது. எனவே ஸர்ப்பகந்தா மூலிகையை பயன்படுத்தி தூக்கமின்மை, மன உளைச்சல், டிமென்ஷியா எனப்படும் மறதி நோய், ரத்த சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம், காய்ச்சல், மாதவிலக்கு பிரச்னைகள், உள்உறுப்புகளை தூண்டி வலுப்படுத்துதல் போன்ற நோய்களுக்கு தீர்வுகாணமுடியும்.
முதலில் முறையற்ற மாதவிடாய் பிரச்னைக்கு தீர்வுதரும் ஸர்ப்பகந்தா மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை குறித்து அறிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: ஸர்ப்பகந்தா மூலிகை வேர்(நாட்டு மருந்து மற்றும் சித்த மருந்து கடைகளில் பொடியாகவும் கிடைக்கும்), மிளகுப்பொடி, இஞ்சி. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க விடவும். கொதிக்கும் அந்த நீரில் ஸர்ப்பகந்தா மூலிகை வேர் ஒரு கைப்பிடி அளவு போட்டு அதனுடன் மிளகுப்பொடி அரை டீஸ்பூன், சிறிது நசுக்கிய இஞ்சி போட்டு கொதிக்க வைத்து இறக்கி ஆற வைத்து வடிகட்டி தொடர்ந்து குடித்துவர மாதவிடாய் பிரச்னை, அதிக உதிரப்போக்கு கட்டுப்படுதல், கர்ப்பப்பை ஆரோக்கியம் பெறுதல், உடல் வலுப்பெறுதல் போன்ற பலன்கள் கிடைக்கும். இதனால் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது.
அடுத்து உயர்ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை நோய், தூக்கமின்மைக்கு ஸர்ப்பகந்தா மூலிகை தேநீர். தேவையான பொருட்கள்: ஸர்ப்பகந்தா மூலிகை வேர், திரிபலா சூரணம், மிளகுப்பொடி, சீரகப்பொடி. செய்முறை:ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு அதில் ஸர்ப்பகந்தா வேர், அரை தேக்கரண்டி அளவு திரிபலா சூரணம், மிளகுப்பொடி, சீரகப்பொடி போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அன்றாடம் குடித்து வரலாம். காலை மாலை இருவேளைகளிலும் குடிக்கலாம். மேற்சொன்ன பிரச்னைகளுக்கு எளிய தீர்வாக அமையும்.
இனி தூக்கமின்மை, மனஇறுக்கம், தோல் நோய்களுக்கு ஸர்ப்பகந்தா மருத்துவம். தேவையான பொருட்கள்:ஸர்ப்பகந்தா வேர், ஜடாமஞ்சில் சூரணம்(நாட்டு மருந்து மற்றும் சித்த மருந்து கடைகளில் பொடியாகவும் கிடைக்கும்), பனங்கற்கண்டு. செய்முறை: மேற்சொன்ன பொருட்களை நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைத்து பருகி வர மேற்சொன்ன பிரச்னைகளுக்கு எளிய தீர்வு கிடைக்கும். இனி கால் பாதங்களில் ஏற்படும் வெடிப்புக்கு மருந்து. மாமரத்தில் இருந்து கிடைக்கும் பிசினை எடுத்து கால் பகுதியில் வெடிப்பு உள்ள இடங்களில் அழுத்தி தேய்த்து சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர பாதவெடிப்பு பிரச்னை தீரும்.
Average Rating