பாராளுமன்றத்திலும் ஆட்டம் காட்டிய ”கொரோனா”!! (கட்டுரை)

Read Time:30 Minute, 52 Second

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா கொத்தணி சமூகத்துக்குள் இறங்கியதனால் 1050 க்கும் மேற்பட்டோர் ஒரு சில தினங்களுக்குள் கொரோனா தொற்றாளர்களானதுடன் இலங்கையின் 16 மாவட்டங்கள் கொரோனாவின் ஆட்சிக்குள் வந்துள்ள போதும் கடந்த வார பாராளுமன்ற அமர்வுகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று முடிந்துள்ளன.

பாராளுமன்ற அமர்வுகளுக்கு கொரோனாவினால் தடை ஏற்படாதபோதும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் அரச,எதிர்க்கட்சியினரிடையில் சபையில் ஏற்பட்ட கருத்து மோதல்களினால் கொரோனாவின் தாக்கம் பாராளுமன்றத்திலும் வெளிப்பட்டது. முதல் நாள் அமர்வான செவ்வாய்க்கிழமையே கொரோனா கொத்தணியை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்குமென எதிர்பார்க்கப்பட்டபோதும் அன்றைய நாள் அமைதியாகவே கடந்தநிலையில்அதற்கடுத்த மூன்று தினங்களும் பாராளுமன்றத்திலும் கொரோனாவின் ஆதிக்கம் ஏற்பட்டது.

சண்டையை தொடங்கிய சஜித்

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் ஏற்படட கொரோனாத் தொற்றைக்கட்டுப்படுத்துவதில் அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை. கொரோனாவை அரசு விளையாட்டாக எடுத்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய ஏற்பாடுகள் இல்லை, கொரோனா தொற்று பரிசோதனை மற்றும் விதிமுறைகளுக்குட்படாது இந்திய பிரஜையோ அல்லது இந்திய பிரஜைகள் குழுவொன்றோ ஆடைத் தொழிற்சாலைக்கு வந்ததன் மூலமாகவே இலங்கையில் கொரோனா சமூகத்திற்குள் பரவியதாக கூறப்படும் விடயம் உண்மையா அல்லது பொய்யா என்பது தொடர்பில் சுகாதார அமைச்சர் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் புதன்கிழமை வலியுறுத்தியதையடுத்து பெரும் சர்ச்சை மூண்டது.

எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச சிறப்பு கூற்றொன்றை முன்வைத்து கொவிட் -19 வைரஸ் பரவல் நிலவரம் குறித்து சபையில் கேள்வி எழுப்புகையில், திவுலபிடிய பிரதேசத்தில்கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது, கொரோனா கொத்தணி நிலையிலிருந்து சமூக பரவலாக மாறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . ஆகவே கொரோனா தொற்றாளர்களுக்கான கட்டில்கள், வெண்டிலேடர்கள் போதாமையும் மருத்து வ வசதிகள் இல்லாத நிலைமையும் காணப்படுகின்றது. முதலாம் படிமுறை பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றதே தவிர இரண்டாம், மூன்றாம் கட்ட பரிசோதனைகள் இடம்பெறவில்லை. இது மோசமான நிலையை ஏற்படுத்தும்.

அதேவேளை இப்போது அடையாளம் காணப்பட்ட பெண் முதல் நபர் அல்ல என்றும் முதலில் யாருக்கு பரவியது என்பதும் கண்டறியப்படவில்லை. இந்த நெருக்கடிகளில் சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் உருப்படியான பதில் ஒன்றும் கூறவில்லை. செவ்வாய்க்கிழமை அவர் பாராளுமன்றத்தில் ஏதாவது அறிவிப்பை விடுப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால் அதுவும் நடக்கவில்லை. உண்மையான நிலவரம் என்ன, அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் என்ன என்பது குறித்து இன்னமும் பேசவில்லை.

இன்றும் அவர் வரவில்லை என்று கூறிக்கொண்டிருந்தபோது சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சபைக்குள் வந்தார். அப்போது அரச தரப்பினர் இதோ வந்து விட்டார் எனக் கோஷமிட்டனர்.

தன் குற்றச்சாட்டிடத்தொடர்ந்த சஜித் பிரேமதாச ,இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நாம் இந்த வைரஸ் பரவலின் அச்சறுத்தல் நிலைமைகள் குறித்து பேசியபோது ஆளும் தரப்பினர் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டனர். பொதுத் தேர்தல் காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அரசாங்கம் கூறியது, அப்படியென்றால் மீண்டும் எவ்வாறு இவ்வாறான வைரஸ் பரவல் ஏற்பட்டது? எந்தவித பரிசோதனையும் செய்யாது, கொரோனா பரிசோதனை செய்யாது இந்திய பிரஜையோ அல்லது இந்திய பிரஜைகள் குழுவொன்றோ குறித்த தொழிற்சாலைக்கு வந்ததன் மூலமாகவே மீண்டும் இலங்கையில் கொரோனா பரவியதாக கூறுகின்றனர். இந்த விடயம் உண்மையா அல்லதுபொய் யா என்பது குறித்து சுகாதார அமைச்சர்நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

மனுஷ நாணயக்கார எம்.பி கூறுகையில்,நாட்டில் கொரோனா தொற்றுநோய் பரவல் கட்டுப்பாட்டில் இருந்தது உண்மை என்றால், எந்தவித தனிமைப்படுத்தல் நடவடிக்கைளும் இல்லாது விமான நிலையத்தில் எந்த பரிசோதனைகளும் செய்யாது யாருடைய அதிகாரத்திற்கு அமைவாக இந்திய பிரஜைகள் குறித்த பி றேண்டெக்ஸ் நிறுவனத்திற்கு அழைத்துவரப்பட்டனர். குறித்த நிறுவனத்தில் முகாமைத்துவ பணிப்பாளர் மூலமாகவே இவர்கள் வரவழைக்கப்பட்டதாக கூறுகின்றனர். முதலில் இது குறித்து ஆராயுங்கள். எங்கிருந்து மீண்டும் கொண்டுவரப்பட்டது என ஆராயுங்கள் என்றார்.

இதற்கு சுகாதார அமைச்சர் பதில் வழங்கவில்லை. ஆனால் சபாநாயகர் அப்படி எதுவும் உங்களுக்கு தெரிந்தால் முறையிடுங்கள் என்றார்.இதனைப்போன்றே எதிர்க்கட்சி எம்.பி.க்களான ஹர்ஷ டி சில்வா ஹர்ஷன ராஜகருணா போன்றவர்களும் அரசுக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தனர்.

சுகாதார அமைச்சரின் பதிலடி

எனினும் எதிர்க்கட்சியினரின் அனைத்துக்குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்த சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, தனது தந்தையின் நினைவுதினம் காரணமாகவே செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்கு வரமுடியவில்லை எனக்கூறி மன்னிப்பும் கேட்டார். அத்துடன் அரசாங்கம் எந்த தகவல்களையும் மறைக்கவில்லை . சிலர் இதனை வைத்து அரசியல் இலாபம் தேட முனைகின்றனர். எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது போல் அரசாங்கம் அரசியல் தேவைக்காக எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையின் உயர் மட்டத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்..அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதாரத்துறையின் ஆலோசனைகளை பின்பற்றியே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளு பதிலளிக்கையில் அரசாங்கம் எந்த தகவல்களையும் மறைக்கவில்லை . சிலர் இதனை வைத்து அரசியல் இலாபம் தேட முனைகின்றனர். எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது போல் அரசாங்கம் அரசியல் தேவைக்காக எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையின் உயர் மட்டத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இன்று [நேற்று]காலையும் ஜனாதிபதியின் தலைமையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதாரத்துறையின் ஆலோசனைகளை பின்பற்றியே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளை நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது எங்கிருந்து இந்த தொற்று முதல் நோயாளருக்கு வந்துள்ளது என்பது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்.

4800 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மட்டுமன்றி அவர்களோடு தொடர்புபட்ட அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.அதற்கிணங்க 1816 பேருக்கு சமூகத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவதுபோல நோய் சந்தேகத்துக்குரிய அவர்களும் சாதாரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களும் ஒரே வாகனத்தில் கொண்டு சொல்லப்படுவதில்லை. தொற்று இனங்காணப்பட்ட நோயாளிகள் அம்புலன்ஸ் மூலமே ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். மருத்துவத் துறை அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் தங்குவதற்கு தனியான ஹோட்டல்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நோயாளிகளுடன் தங்கவைக்கப்படுவதில்லை.

பிசிஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 303160 பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடளாவிய அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஒரு நாளில் குறைந்தது பத்து பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இங்கு ஊரடங்குச் சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் சில விடயங்களை கூறினர்.நாடு முழுவதற்கும் ஊரடங்கு சட்டம் பிறப்பித்து நாட்டை முடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.அவ்வாறு செய்வது அரசாங்கத்திற்கு சுலபம் என்றாலும் அவ்வாறு செயற்படப் போவதில்லை.பம் என்றாலும் அவ்வாறு செயற்படப் போவதில்லை என தெரிவித்த அமைச்சர், கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் இனங்கானப் படும்அவசியமான பிரதேசங்களுக்கு மட்டுமே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்றார்.

இதனையடுத்து எதிர்க்கட்சியினருக்கும் அரச தரப்பினருக்குமிடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது. அமைச்சர் பந்துல குணவர்தன வும் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். கொரோனாவை முற்றுமுழுதாக ஒழித்துவிட்டதாக தேர்தல் காலத்தில் அரசோ அல்லது சுகாதார அமைச்சரோ கூறவில்லை எனவும் வாதிட்டார். சுகாதார அமைச்சரும் தான் அப்படிக்கூறவில்லை என்றும் மக்கள் ஒத்துழைத்தால் முற்றாக ஒழித்துவிட முடியும் என்றே கூறியதாகவும் தெளிவுபடுத்தினார்.

ஆனால் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல,. கொரோனாவை முற்றாக ஒழித்துவிட்டதாக சுகாதார அமைச்சர் கூறியதாகவும் அதனை தான் கேட்டுக்கொண்டிருந்ததாகவும் கூறினார். இவ்வாறு இருதரப்புக்குமிடையில் சுமார் ஒரு மணிநேரம் வரை கொரோனா தர்க்கம் நீடித்தது.

சபாநாயகரின் அறிவிப்பால் அதிர்ந்து போன பாராளுமன்றம்

மறு நாள் வியாழக்கிழமை பாராளுமன்றப்பணியாளர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் விடுத்த அறிவிப்பொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .எனினும்
பாராளுமன்ற பணியாளர் ஒருவரின் குடும்ப உறுப்பினருக்குகொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக பல்வேறு ஊடகங்கள் மற்றும்சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளில் எவ்விதஉண்மையும் இல்லையென பாராளுமன்ற தொடர்பாடல்திணைக்களம் உடனடியாக அறிவித்தது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள அரசாங்க சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள பாராளுமன்றவிவகார பிரிவின் பணியாளர் ஒருவரின் குடும்ப உறுப்பினருக்குகொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டுள்ளதால்நேற்றைய தினம் குறித்த அலுவலகத்துக்குள் பிரவேசிப்பதற்குபாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனையவர்களுக்கு அனுமதிவழங்கப்படவில்லை என கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இங்கு சுட்டிக்காட்டினார்.எனவே பாராளுமன்ற பணியாளர் ஒருவரின் குடும்ப உறுப்பினருக்குகொவிட் 19 வைரஸ் ஏற்பட்டிருப்பதாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

சீனாவாலும் சிக்கல்

இந்நிலையில் இலங்கை வரும்சீனாவின் உயர்மட்ட குழு தொடர்பில் எதிர்க் கட்சி எம்பி ஹர்ச டி சில்வா வினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி பதிலளிக்கையில் , சீனாவிலிருந்து இலங்கை இலங்கை வரும் உயர்மட்ட குழு அந்த நாட்டிலும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் . இலங்கை வந்தவுடன் இங்கும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் அவர்கள் இலங்கையில் ஒருநாள் மட்டுமே தங்கி இருப்பர்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு அரசாங்க சுகாதார துறையினர் அல்லது தனியார் துறையினர் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்கின்றனர். அது கண்டிப்பாக இடம்பெறும்.அந்தவகையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழுவுக்கும் அதே நடைமுறைதான் பின்பற்றப்படும். ஆனால் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதில்லை. எனினும் சமூக இடைவெளி போன்றவற்றை அவர்கள் பேண வேண்டும். முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதத்தில் நீங்கள் கேள்விகளை கேட்க வேண்டாம்.ஒரு நாள் சந்திப்பிற்காகவே இவர்கள் வருகின்றனர். சீன கொமியுனிச கட்சியின் உயர் மட்ட அதிகாரி ஒருவரே இந்த குழுவுடன் வருகின்றார். அவர்கள் எவ்வளவு பலமானவர்கள் என்பது உங்களுக்கும் தெரியும் என்றார்.

கொரோனாவை பயன்படுத்தி பாரிய ஊழல்,மோசடிகள்

இதேநேரம் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமையை பயன்படுத்தி பாரியளவிலான ஊழல், மோசடிகள் இடம்பெறுவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் இலங்கை முதலீட்டு சபையினால் சகல தொழிற்சாலைகளுக்கும் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களில் வாரத்திற்கு 5 வீதமானவர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகளை நடத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக நான்கு தனியார் வைத்தியசாலைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் 10 இலட்சம் வரையான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவ்வாறாயின் வாரத்திற்கு 50,000 பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் அந்தளவுக்கு பரிசோதனைகளை செய்வதற்கான உபகரணங்கள் இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. அதேபோன்று இந்த விடயத்தில் அரசாங்கம் ஒத்துழைக்காது தனியார் வைத்தியசாலைகளுக்கு அதனை வழங்கப்படுகின்றது.

இதன்படி ஒரு பரிசோதனைக்கு 6500 ரூபா என்ற அடிப்படையில் பார்த்தால் வாரத்திற்கு 325 மில்லியன் ரூபாவை செலவழிக்க வேண்டியுள்ளது. இதற்கான உபகரண தொகுதிகளை கொண்டு வரவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இது அதிக இலாபத்தை சம்பாதிக்கும் ஒன்றாகவும் அமையலாம்.
தொழிற்சாலைகளை ஏமாற்றி அவற்றின் உற்பத்திகளை நிறுத்தி அவற்றை மூடும் நிலை வந்தால் என்னவாகும். பரிசோதனை நடவடிக்கைகள் நல்லது. ஆனாலும் அது நடக்கும் முறை தொடர்பாக பிரச்சினை உள்ளது. இந்த இடத்தில் கொவிட் 19 என்ற பெயரில் பாரியளவிலான ஊழல், மோசடிகள் இடம்பெறுகின்றதாகவே கூறவேண்டியுள்ளது என அவர் மேலும் தெரிவித்த போது சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

சித்தார்த்தனுக்கு புரியாத புதிர்

அதே வேளை தமிழ் கூட்டமைப்பு எம்.பி. யான சித்தார்த்தன் .பத்தரமுல்லவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலகத்துக்கு நான் சென்றபோது கொரோனாவை காரணம் காட்டி என்னை உள்ளே அனுமதிக்கவில்லை .உள்ளே இருந்து ஒருவர் வெளியே வந்து எனது தேவையை கேட்டறிந்தார். கொரோனா அச்சுறுத்தலால் ஒரு சில பணியாளர்களுடன் இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலகத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்லவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப்பாராளுமன்றம் மட்டும் கொரோனா அச்சுறுத்தலின்றி, எந்தவித தடையுமின்றி செயற்படுகின்றது என்பதுதான் எனக்கு புரியாத புதிராகவுள்ளது என்றார்.

கொரோனா பரவ யார் காரணம்?

இவ்வாறு வியாழக்கிழமையும் பாராளுமன்றத்தில் கொரோனா அதிர்வலைகள் ஏற்பட்டிருந்த நிலையில் மறுநாள் வெள்ளிக்கிழமையும் அது தொடரவே செய்தது. பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தன்னிலை விளக்கமொன்றை முன்வைத்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. , இலங்கையில் கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஊடகங்களில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் நான் கூறிய போது, சுகாதார அமைச்சர் .இவ்வாறு எதனையும் தான் கூறவில்லையெனவும் அவ்வாறு தான் கூறியிருந்தால் அதனை காட்டுமாறும் எனக்கு சவால் விடுத்தார்.

அதன் பிரகாரம் சுகாதார அமைச்சர் கடந்த மாதம் 3ஆம் திகதி இராணுவ ஊடகத்தின் யூடியுப் அலைவரிசையில் தெரிவித்திருந்த கருத்தை முன்வைக்கின்றேன். அதில் அவர், கொரோனா தொற்று இன்று முழு உலகத்திலும் சமூகங்களுக்கிடையில் பரவியுள்ள தொற்றாகும் . ஆனால் இந்த தொற்று சமூகத்துக்குள் பரவுவதை முழுமையாக இல்லாமலாக்கிய உலகிலுள்ள ஒரே நாடு இலங்கை என நான் நம்புகின்றேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி லங்கா சீ ஊடகத்து க்கு தெரிவிக்கையில், கொரோனா இந்த நாட்டு மக்கள் மத்தியில் தொற்றும் நிலை இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் கொரோனாதொற்று பூரணமாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை எனவும் தொடர்ந்து மக்கள் சுகாதார வழிமுறைகளை பேணி செயற்படவேண்டும் எனவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் என்பன தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்திருந்தன. எனினும் அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்காக கொராேனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தது. அதனால்தான் மக்களும் கொரோனா தொடர்பில் அலட்சியமாக செயற்பட்டு வந்தனர். அதன் விளைவாகேவே தற்போது நாங்கள் இரண்டாம் அலைக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். இதற்கு அரசே பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

இதற்கு பதில்வழங்கிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி,
இலங்கையில் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தி விட்டோம் கொரோனா சமூக பரவலாக மாறும் நிலைமையை கட்டுப்படுத்திய நாடு இலங்கை எனவும் நான் கூறியதாக லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. இங்கு தெரிவித்துள்ளார். ஆனால் நான் கூறிய விடயங்களை இவர்கள் எவரும் முழுமையாக கேட்கவில்லை. நான் கூறியது ”கொரோனா தொற்றை சமூக பரவலாக்க விடாது தற்போது கட்டுப்படுத்தியுள்ளோம்” என்பதுதான் .

கொரோனா தொற்று நிலைமைகள் நான்கு கட்டங்களின் அடிப்படையில் கருத்தில் கொள்ளப்பட்டது. இதில் முதல் கட்டம் தொற்றாளர் இல்லாத கட்டம், இரண்டாம் கட்டம் வெவ்வேறு இடங்களில் தனித்தனி நோயாளர்கள் அடையாளம் காணப்படல், மூன்றாம் கட்டம் கொத்தணிகளாக அடையாளம் காணப்படல், இறுதி கட்டமான நான்காம் கட்டம் நாடு பூராகவும்பெரும் தொகையில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்படல்.

இந்த 4 கட்டங்களின் அடிப்படையில் இலங்கை எந்தக் கட்டத்தில் உள்ளது என்பதை அவதானித்தால் நாம் ஆரோக்கியமான மட்டத்தில் அப்போது இருந்தோம். பரிசோதனை செய்து பார்க்கப்பட்டவர்களில் அச்சுறுத்தலான நிலைமைகள் எதுவும் இருக்கவில்லை .

எனவே சில மாத காலங்களாக நாம் கொரோனா தொற்றாளர் இல்லாத நாடாக இருந்தோம். இவற்றைக் கருத்தில் கொண்டே நான் அவ்வாறான கருத்துக்களை அப்போது முன்வைத்தேன்.

அதேவேளை வேறு நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை அழைக்குமாறு கோரிக்கை விடுத்ததற்கு அமைய அவர்களை வரவழைத்து அதன் மூலம் வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தால் நாடு மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் எனவும் நான் எச்சரித்தேன்.எனவே எனது கருத்தை திரிபுபடுத்த வேண்டாம். இலங்கையில் அச்சுறுத்தல்கள் இருப்பதாக நான் கூறியுள்ளேன்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் நிலைமை நன்றாக இருந்தது, அதனால் தான் தேர்தலை நடத்த முடிந்தது, மக்கள் அச்சமின்று செயற்பட முடிந்தது. எதிர்க்கட்சியினரும் குறிப்பாக சஜித் பிரேமதாசாவும் நீங்களும் [லக்ஷ்மன் கிரியெல்ல] முகக்கவசம் இல்லாது நடமாடியதும் நாம் கூறிய விடயங்கள் மீது நம்பிக்கை வைத்தமையினால் தான் என்பதை மறந்துவிட வேண்டாம்.

எனவே ஆரம்பத்தில் நான் கூறியதைப்போல் நான்காம் கட்ட அச்சுறுத்தல் நிலைமை இன்னமும் இலங்கைக்கு ஏற்படவில்லை. முழு சமூகத்திலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை. இது தான் தற்போதைய உண்மை நிலைமை என்றார்.இதன்போது தற்போது மீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டதற்கான காரணம் என்னவென்ற எதிர்க்கட்சியினரின் கேள்விக்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பதிலளிக்காது தவிர்த்து விட்டார்.

சபாநாயகரிடம் அறிமுகமான ‘சதங்கா’ – ‘சுவதரணி’

இதேவேளை ஆயுர்வேத திணைக்களம் மற்றும் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து கொரோனா நோய்த்தடுப்பு பானம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துக் குளிசைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்த சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமப்புற மற்றும்ஆயுர்வேத மருத்துவமனைகள் மேம்பாடு மற்றும் சமூக ஆரோக்கியம் இராஜாங்கஅமைச்சர் சிசிர ஜெயக்கொடி, இந்த மருந்துகள் அனைத்தும் நூறு சதவீதம் உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்திதயாரிக்கப்படுகின்றன என்றும் அவை ‘சதங்கா’ பானம் மற்றும் ‘சுவதரணி’ நோயெதிர்ப்பு பானம் என பெயரிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்ததுடன் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு குறித்த மருந்து அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நலம் தரும் மருத்துவம்!! (மருத்துவம்)
Next post இரண்டு பேரை அழகாக்க, Shair செய்யலாம்!! (மகளிர் பக்கம்)