வயிற்று கோளாறுகளை போக்கும் மிளகு!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்று கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், தோல்நோய்களை போக்கவல்லதும், மூலநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டதுமான மிளகின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.
‘10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டு பந்தியிலும் அமரலாம்’ என்று கூறும் அளவுக்கு மிளகு பல்வேறு நன்மைகளை உள்ளிடக்கியது. மிளகு காரச் சுவை கொண்டது. இது, பசியின்மை, குமட்டல், வாந்தி, உடல் வலி, காய்ச்சல், மாதவிலக்கு போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
மிளகை பயன்படுத்தி செரிமான கோளாறு, வயிறுமாந்த பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது மிளகுப் பொடி, பெருங்காயப் பொடி, சுக்கு பொடி, திப்லி பொடி, சோம்புதூள், சமையல் உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்துவர வயிற்று கோளாறுகள் சரியாகும். பசியை தூண்டும். இது பித்த சமனியாக விளங்குகிறது. மாந்தத்தால் எற்படும் கழிச்சலை குணமாக்குகிறது.
மிளகு பூஞ்சை காளான்களை போக்கும் தன்மை உடையது. நுண்கிருமிகளை அளிக்கும். வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளக் கூடியது. வலியை போக்க கூடியது. வயிற்று வலி, சிறுநீரக பாதையில் ஏற்படும் வலி, மார்பு வலி போன்றவற்றை குணப்படுத்தும். சுக்கு, மிளகு, திப்லி ஆகியவை சேர்ந்தது திரிகடுகம் என்று அழைக்கப்படுகிறது. இது, மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதயத்துக்கு சுக்கு பலம் கொடுக்கிறது. செரிமானத்தை சீர் செய்கிறது. தலைபாரத்தை குறைக்கிறது.
மிளகை பயன்படுத்தி மூலநோய்க்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மிளகுப் பொடி, சோம்பு பொடி, தேன். செய்முறை: கால் ஸ்பூன் மிளகுப் பொடி, ஒரு ஸ்பூன் சோம்பு பொடி ஆகியவற்றை கலந்து, இதனுடன் சிறிது நீர்விட்டு வேக வைத்து தேன் சேர்த்து கலக்கவும். இதை ஆறவைத்து காலை, மாலை என இருவேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மூலநோய் குணமாகும். ரத்த, வெளி, உள் மூலத்துக்கு இது நல்ல பலன் கொடுக்கும்.
மிளகை பயன்படுத்தி புழுவெட்டுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம், உப்பு, மிளகுப்பொடி.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சின்ன வெங்காய சாறு எடுக்கவும். இதனுடன் சிறிது உப்பு, மிளகுப்பொடி சேர்த்து கலந்து புழுவெட்டு இருக்கும் இடத்தில் பஞ்சால் நனைத்து தேய்த்துவர புழுவெட்டு சரியாகும். புழுவெட்டால் முடி உதிர்வது நிற்கும். அன்றாடம் பயன்பட கூடிய முக்கிய உணவுப்பொருள் மிளகு. இதில் புரதம், மினரல் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இது தோல்நோய்களை போக்கவல்லது. உணவுக்கு சுவை தரக்கூடியது. மிளகை உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு நன்மை தரும். வியர்வையால் உண்டாகும் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர் ஆகியவற்றை சம அளவு வாங்கி பொடித்து, இதனுடன் சிறிது பாசிபயறு சேர்த்து உடலுக்கு தேய்த்து குளித்துவர துர்நாற்றம் இல்லாமல் போகும்.
Average Rating