தோல் சுருக்கத்தை போக்கும் சோம்பு!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடை சரக்குகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வீக்கத்தை குறைக்க கூடியதும், தோல் சுருக்கத்தை போக்கவல்லதும், செரிமானத்தை தூண்ட கூடியதுமான சோம்புவின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
உணவுக்கு பயன்படும் சோம்பு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இது, ரத்தத்தை சுத்தம் செய்யும். வயிற்றில் உள்ள வாயுவை அகற்றும். புற்றுநோய்க்கு காரணமாக உள்ள நச்சுக்களை வெளியேற்றும். கொழுப்பு சத்தை கரைத்து உடல் எடையை குறைக்கும் தன்மை உடையது. சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. வீக்கத்தை வற்றச்செய்யும். கண்களில் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் கண்பார்வை குறைபாடுகளை தடுக்கும் உணவாக சோம்பு விளங்குகிறது.
சோம்புவை பயன்படுத்தி, கால் வீக்கத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோம்பு, தனியா. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதனுடன் அரை ஸ்பூன் தனியா பொடி, அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி குடித்துவர கால் வீக்கம் சரியாகும். உணவுக்கு மணம் தரும் சோம்பு, உடலில் தேங்கியிருக்கும் நீரை வெளித்தள்ளும்.சோம்புவை பயன்படுத்தி தோலில் ஏற்படும் சுருக்கத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோம்பு, நெல்லி வற்றல், பனங்கற்கண்டுசெய்முறை: ஊறவைத்திருக்கும் நெல்லி வற்றல் 10 வரை எடுக்கவும். இதில், நீர் விடவும். இதனுடன் அரை ஸ்பூன் சோம்பு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தினமும் ஒருவேளை குடித்துவர தோலில் ஏற்படும் சுருக்கம் சரியாகும். மலச்சிக்கல் பிரச்னை தீரும். வயிற்று கோளாறை போக்கும். ரத்தத்தை சீர் செய்து உடலுக்கு பலம் தரும். உடல் பளபளப்பாகும். பொலிவு, அழகு ஏற்படும்.
செரிமானத்தை தூண்டும் தன்மை உடைய சோம்புவை பயன்படுத்தி வயிற்று வலி, வயிற்று கடுப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோம்பு, கசகசா, பனங்கற்கண்டு. செய்முறை: அரை ஸ்பூன் கசகசாவை ஊறவைத்து எடுக்கவும். இதனுடன் நீர் சேர்க்கவும். பின்னர், அரை ஸ்பூன் சோம்பு பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர கடுமையான வயிற்று வலி, வயிற்று கடுப்பு சரியாகும். வயிற்றில் சேரும் அமிலத்தை சோம்பு தடுக்கும். விட்டுவிட்டு உண்டாகும் வலியை போக்கும். கசகசா வலியை போக்கும் தன்மை உடையது.
நுரையீரலில் ஏற்படும் தொற்றுவை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். மழைகாலத்தில் நுரையீரல் தொற்று ஏற்படும். இதனால் சுவாச பாதையில் வீக்கம் உண்டாகும். நுரையீரலில் ஏற்படும் சளி காரணமாக இருமல், காய்ச்சல் பிரச்னை உண்டாகும். இதற்கு தூதுவளை, நெய் மருந்தாகிறது. தூதுவளை சாறுடன், சம அளவு நெய் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிட்டுவர நுரையீரல் தொற்று நீங்கும்.
Average Rating