வாழ்வென்பது பெருங்கனவு !! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 12 Second

யோகா ஆசிரியை கல்பனா

அக்னித்தலமான திருவண்ணாமலை கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பாக ஊர் கூடி நிற்கிறது, முடியுமா? சாத்தியமா என அனைவர் முகத்திலும் ஒரு வித எதிர்பார்ப்பு. கோபுரத்தின் வெளியே ஒரு சொகுசு கார் நிற்கிறது. கார் செல்லக்கூடிய பாதையைத் தவிர்த்து மற்றபடி எங்கும் கூட்டம். அந்த நடுத்தர வயதுப் பெண்ணைப் பார்த்ததும், ‘இவங்கதாம்பா காரை முடியில கட்டி இழுக்கப்போறாங்க’ என பரபரப்பு எழுகிறது. அப்போது ஒலிபெருக்கியில் அறிவிப்பு. அதைத்தொடர்ந்து கார் பம்பரும் கல்பனா என்ற அந்த பெண்ணின் கூந்தலும் தாம்புக்கயிறால் முடிச்சிடப்படுகிறது. உம் என்ற அடிமூச்சு ஓசையுடன் கல்பனா ஒரு அடி எடுத்து வைக்கிறார், கார் லேசாக அசைகிறது. அடுத்த அடிக்கு கார் உருள தொடர்ந்து கல்பனா நடக்க கார் உடன் பயணிக்கிறது.

நாநூறு மீட்டர் தூரத்தில் உள்ள டவுன் போலீஸ் ஸ்டேஷன் தாண்டி ஒரே மூச்சாக தனது தலைமுடியால் அந்த இயந்திரப் பிசாசை கல்பனா அசால்ட்டாக இழுத்து வந்ததைப் பார்த்த மக்கள் கூட்டம் பலத்தக் கைத்தட்டலுடன் ஆரவாரிக்கிறது. அசாத்தியத் துணிச்சலும், மனஉறுதியும் தன்னம்பிக்கையும் பெண்களுக்கு ஏற்பட வேண்டும் என உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், ‘பெண் சக்தியால் மலையைக்கூட ….ல் அசைக்க முடியும்’ என சாதித்த கல்பனாவுக்கு விருது வழங்குகிறேன் என காவல்துறை டி.எஸ்.பி. அண்ணாதுரை பாராட்டினார். கல்பனாவைச் சந்தித்துப் பேச்சுக் கொடுத்தோம், பரிதவிப்பு, நிராசை, பெருங்கனவு என அருவியாய் அவரிடமிருந்து வார்த்தைகள் விழுந்தன. இனி அவரே பேசுகிறார்.

‘‘அப்பா ரவிச்சந்திரன், அம்மா மஞ்சுளா, கவிதாவும், பாபுவும் தங்கை தம்பி. எங்கள் பகுதியில் உள்ள விக்டோரியா மகளிர் நடுநிலைப் பள்ளியில் அடிப்படைக் கல்வி. கர்நாடக மாநிலம் கோலார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். சொல்லிக்கொள்ளும் வகையில் குடும்பத்தில் பொருளாதாரம் இல்லை. எனினும், சிறு வயதிலேயே கையிலிருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணும் பாங்கு இருந்தது. அப்போது, கலெக்டர் ஆகி ஊருக்கும் நல்லது செய்ய வேண்டும் என நினைத்தேன். அக்கம்பக்கத்திலிருந்தவர்களும் எனது கலெக்டர் ஆசைக்கு ஊக்கமளித்தனர். பொருளாதார நெருக்கடியால் எனது கனவு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புடன் சிதைந்தது. அப்போதெல்லாம் டி.வியில் சாதனையாளர்கள் என பலரது பேட்டி ஒளிபரப்பாகும். இந்த மாதிரி நீயும் சாதிக்கணும்மா அப்படீன்னு எங்க அப்பா என்னை திட்டிக்கிட்டும், தூண்டிவிட்டுக்கிட்டும் இருந்தார்.

டிப்ளமோ முடித்த கையோடு அதுதொடர்பாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சம்பளம் போதுமானதாக இல்லை, வேலையும் திருப்திகரமாக இல்லை. அப்போதுதான், திருவண்ணாமலையில் யோகா, சிலம்பம், ஸ்கேட்டிங் அப்படீன்னு சுரேஷ் சார் ஆரம்பித்தார். தூத்துக்குடியிலும், சென்னையிலும் அவர் பல சாதனையாளர்களை உருவாக்கினது எனக்குத் தெரியவே தெரியாது. நானாக விருப்பப்பட்டு அவரிடம் யோகா பயின்றேன். அப்போதுதான், எலும்புகள் பச்சையாக இருக்கும்போது இந்தக் கலையைப் பயின்றிருந்தால் உடம்பு நன்றாக வளைந்து கொடுத்திருக்குமே, இப்போது இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே என திணறினேன். இருந்தும், பயிற்சியில் மும்முரமாக முழுமூச்சுடன் தீவிர அர்ப்பணிப்பு செலுத்தினேன். போகப்போகத்தான் எனக்குள் தன்னம்பிக்கையும், வைராக்கியமும் உருவெடுத்தது. கலெக்டர்தான் ஆகமுடியவில்லை, கற்றதிலாவது சாதிக்கலாமே எனும் வெறி ஏற்பட்டது. தீவிரமாக களம் இறங்கியதில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகள் குவிக்க முடிந்தது.

குடியரசு தினத்தன்று உள்ளூர் சாதனையாளர் விருதை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் வழங்கினார். தேசிய நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு, தேசிய யோகாப் போட்டியில் 28 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதலிடம், சர்வதேச யோகா போட்டியில் நடுவர்சான்று, சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றின் சார்பாக ஊட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டரேட் பட்டம், உலக இளைஞர் தினத்தில் யோகா மற்றும் சிலம்பம் பயிற்சி அளித்த சான்று என விருதுகளின் பட்டியலுக்கு நான் சொந்தக்காரி. சிகரமாக சர்வதேச சாதனையாளர்கள் கவுன்சில் எனக்கு சிறந்த சமூக சேவையாளர் விருது வழங்கியுள்ளது. கடந்த காலங்களில் யோகா மற்றும் நேச்சுரோபதி பயிற்சிகளை திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வயது பாரபட்சமின்றி அனைவருக்கும் கற்பித்து வருகிறேன். கூடவே தமிழர் பாரம்பரிய கலைகளான சிலம்பம், வில்வித்தைகளும், சதுரங்கம் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சிகளும் அளித்து வருகிறேன்.

மிஸ்ட்டி என்னும் 12 வயது குழந்தை இரண்டரை நிமிடத்தில் 103 ஆசனங்களை நிகழ்த்தி சர்வதேச விருது பெற்றது எனது பயிற்சியில் ஒரு துளியாகும். அதுபோல பத்தாம் வகுப்பு படிக்கும் கல்வியரசு என்னுடைய மனோதிடப் பயிற்சியால் கறுப்புத் துணியால் கண்ணைக் கட்டிக்கொண்டு ஒன்றரைக் கிலோ மீட்டர் ஸ்கேட்டிங் மூலம் உலக சாதனைப் படைத்துள்ளார். மற்றொரு சிறுமி திரித்தி 5வது தான் படிக்கிறாள். மூன்றடுக்கு பானை மீது அமர்ந்து இருபது நிமிடம் அவள் பத்மாசனம் செய்த சாதனை பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுபோல மாணவர்களின் சாதனைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். எனது சாதனையில், நான் மிகவும் அரிதாகக் கருதுவது 2555 ஆணி கூர்முனைகள் மீது 51 ஆசனங்கள் நிகழ்த்தி பெண் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வுக்காக போராடியதை பாக்கியமாகக் கருதுகிறேன்’’ என்றவர் பெண்கள் ஆரோக்கியம் குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நிகழ்த்தி வருகிறார்.

மத்திய அரசின் நேரு யுவகேந்திர இளைஞர் மன்றம் சார்பாக திருவண்ணாமலையில் பெண்கள் நற்பணி மன்றம் தொடங்கி பெண்களுக்கு மனவலிமை, வைராக்கியம், துணிச்சல், தன்னம்பிக்கை போன்றவை ஏற்படுத்தும் நமது பாரம்பரியக் கலைகளான யோகா, சிலம்பம் கற்பித்தலோடு அவர்கள் சொந்தக்காலில் தங்களை முன்னேற்றிக்கொள்ளும் வகையில் தொழில்முனைவோராக்கும் பயிற்சிகள் அளித்து, தொழில் தொடங்க ஆலோசனைகள் கூறி நிதி ஏற்பாடும் செய்து தருகிறேன். பிட் இந்தியா இயக்கத்தின் மூலமாக சைக்கிள் பேரணி நடத்தி உடல் தகுதி விழிப்புணர்வை மாவட்டத்தில் உருவாக்கியுள்ளேன். தற்போது கொரோனா விழிப்புணர்வுக்காக மாவட்டம் முழுவதும் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் தீவிர விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளேன். இச்சமயத்தில் நான் மிகவும் அவசியமாக கூறவிரும்புவது என்னவென்றால், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழியா இருந்துவிடக்கூடாது.

பாரம்பரிய உணவு வகைகளில் இருந்து நாம் மாறுபட்டு பன்னாட்டு கலாச்சாரம் என்ற பெயரில் நம்மை நாமே நோயாளிகளாக மாற்றிக்கொள்ளும் தவறை செய்து வருகிறோம். கொரோனா உள்ளிட்ட கொடிய நோய்களுக்கும் யோகாவில் தீர்வு உண்டு என நான் திடமாக கருதுகிறேன். யோகா உடலுக்கும் மனதுக்கும் உறுதியளித்து ஒருமுகப்படுத்தும் அதி அற்புதக் கலை. இந்தப் பாரம்பரியக்கலையை அழிக்காமல் இன்றைய இளைய சமுதாயம் இதை முழுமூச்சுடன் கற்று உலக அளவில் பரப்ப வேண்டும் என்பதே என் வாழ்வின் பெருங்கனவு. யோகாவைக் கற்பிக்க இளைய சமுதாயம் எங்கிருந்து அழைப்பு விடுத்தாலும் பயிற்சி அளிக்க ஆர்வமாக உள்ளேன்’’ என்ற கூறும் கல்பனாவிற்கு சித்தர்கள் போற்றி மதித்த யோகாவுக்கென தனிப் பயிற்சி நிறுவனம் கூடிய விரைவில் தொடங்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்.

தனுராசனம் , மகாமுத்ரா ஆசனம் தினமும் பத்து நிமிடம் செய்தால், சர்க்கரை அளவு கட்டப்படுத்தும், சுகாசனம், பத்மா சனம் , வஜ்ராசனம் ஆசனங்களை பத்து
நிமிடம் செய்தால் ரத்த அழுத்தம் குறைக்கும் , புஜங்காசனம் , மச்சாசனம் , ஹர்த சிரசாசனம் ஆசனங்களை பத்து நிமிடம் செய்தால் சுவாச நோய்களும் குணமடைவது உறுதி என பேச்சுப்போக்கில் கல்பனா கூறியது நம்மை வியப்பில் ஆழ்த்தியது. பெரிய செலவின்றி மனதையும் உடலையும் ஒருமுகப்படுத்தி உலக சமுதாயத்தை நல்வழிப்படுத்தக் கருதும் கல்பனாவின் கனவு நனவாக வாழ்த்துவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புற்றுநோயை தடுக்கும் சொடக்கு தக்காளி!! (மருத்துவம்)
Next post வீடு தேடி வரும் யோகா..!! (மகளிர் பக்கம்)