உடலுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவம்!! (மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலை குளிர்ச்சி அடைய செய்யும் மருந்து மற்றும் உணவுகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். உடலில் உஷ்ணம் அதிகமாகும்போது சிறுநீர்தாரையில் எரிச்சல், ஆசனவாயில் எரிச்சல், வயிற்று வலி போன்றவை ஏற்படும்.
இப்பிரச்னைகளுக்கு நாவல் பழம், பருப்பு கீரை, இளநீர் ஆகியவை மருந்தாகி பயன்தருகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது நாவல் பழம். உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று புண்களை ஆற்றுகிறது. பருப்பு கீரை அற்புதமான மருந்தாகி பயன் தருகிறது. பறவைகள் விரும்பி உண்ணும் இது, எலும்பு, கண்களுக்கு பலம் தருகிறது. சிறுநீர்தாரையில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துகிறது. இளநீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. உடலில் நீர்ச்சத்து குறையும்போது அதை சரிசெய்யும் மருந்தாகிறது. நாவல் பழத்தை பயன்படுத்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, சீதக்கழிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நாவல்பழம், வெல்லம், சுக்குப்பொடி, எலுமிச்சை. செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெல்லக்கரைசல் எடுத்து பாகு பதத்தில் காய்ச்சவும். இதனுடன், நாவல் பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு அரைத்து சேர்க்கவும். சிறிது சுக்குப்பொடி, சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
இதை ஆறவைத்து எடுத்துக்கொள்ளவும். தேவையானபோது இதில் நீர்விட்டு கலந்து குடித்துவர சீதக்கழிச்சல், வயிற்றுப்போக்கு, நாவறட்சி, வயிற்று வலி குணமாகும். பருப்பு கீரையை பயன்படுத்தி உடல் சூட்டை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பருப்பு கீரை, வெண்ணெய். செய்முறை: பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் எடுக்கவும். இது உருகியதும் அரைத்து வைத்திருக்கும் பருப்பு கீரை பசை ஒரு ஸ்பூன் சேர்த்து வேகவைக்கவும்.
இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, உடல் சூடு, சிறுநீர்தாரை எரிச்சல், வாயில் உண்டாகும் கொப்புளங்கள் சரியாகும். பருப்பு கீரை விட்டமின் சி சத்து நிறைந்தது. கண்கள், முடி, தோல், எலும்புகளுக்கு பலம் தருகிறது. சிறுநீரை பெருக்க வல்லது. பருப்பு கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும். இளநீரை கொண்டு கோடைகாலத்தில் ஏற்படும் நீரிழப்பு, உடல் சோர்வை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: இளநீர், ஏலக்காய், பனங்கற்கண்டு. செய்முறை: இளநீருடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு பொடி சேர்த்து கலந்து வடிகட்டி குடித்துவர உடல் சோர்வு நீங்கும். இளநீர் பருகுவதற்கு இனிமையானது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. அதிக வியர்வையால் உப்புச்சத்து வெளியேறி நாவறட்சி, சோர்வு, மயக்கம் ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு இளநீர் மருந்தாகிறது. அதிக வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். குளிக்கும் நீரில் அரை எலுமிச்சை சாறு கலந்து குளித்துவர உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், வியர்வை நாற்றம் விலகிப்போகும்.
Average Rating