காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், விஷ காய்ச்சல்களை குணப்படுத்த கூடியதும், விஷத்தை முறிக்கும் தன்மை உடையதும், நுண்கிருமிகளை அழிக்க கூடியதுமான நிலவேம்பு, ஆடாதோடை ஆகியவற்றின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது நிலவேம்பு. எந்தவகை காய்ச்சலையும் குணப்படுத்தும் தன்மை நிலவேம்பு, ஆடாதோடைக்கு உண்டு. நுண்கிருமிகளை அழிப்பதுடன், காய்ச்சலை தணிக்கும். சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். பல்வேறு நோய்களை குணப்படுத்தும். நிலவேம்புவை பயன்படுத்தி காய்ச்சலை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருள்: நிலவேம்பு குடிநீர் சூரணம். செய்முறை: பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர் விடவும். இதனுடன் அரை ஸ்பூன் நிலவேம்பு குடிநீர் சூரணம் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் உணவுக்கு முன்பு குடித்துவர காய்ச்சல் குணமாகும். அல்சர் உள்ளவர்கள் சாப்பிட்ட பின்பு குடிக்கலாம். நிலவேம்பு அனைத்து வகை காய்ச்சலையும் குணப்படுத்துகிறது. பாதுகாப்பான ஒன்றாக விளங்குகிறது.
பல்வேறு நன்மைகளை கொண்ட நிலவேம்பு மிகுந்த கசப்பு சுவை உடையது. இது, பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது. பால்வினை நோய்களை தணிக்கும். நுண்கிருமிகளால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தும். மருத்துவரின் அறிவுரைப்படி இதை பயன்படுத்த வேண்டும். நிலவேம்பு குடிநீர் வைரஸ் காய்ச்சலை தணிக்கும். ஆடாதோடையை கொண்டு காய்ச்சலை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆடாதோடை இலை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், தனியா, திப்பிலி, சுக்கு, மிளகு, பனங்கற்கண்டு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதனுடன் 20 மில்லி அளவுக்கு ஆடாதோடை இலைசாறு, ஒரு துண்டு லவங்க பட்டை சேர்க்கவும். இதனுடன், கிராம்பு, ஏலக்காய், திப்பிலி, தனியா ஆகியவற்றை தட்டிப்போடவும். சிறிது பனங்கற்கண்டு, சுக்குப்பொடி, மிளகுப்பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர குளிர் ஜுரம் சரியாகும். நுண்கிருமிகளால் ஏற்பட்ட காய்ச்சல் குணமாகும். உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. சளியை வெளியேற்றி சுவாசத்தை சீர் செய்கிறது.
அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட ஆடாதோடையானது நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நுண்கிருமிகளை அழித்து காய்ச்சலை தணிக்கிறது. ஈரலுக்கு பலம் தருகிறது. தொண்டைக்கட்டுவை போக்கும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: திப்பிலி, தேன். செய்முறை: திப்லியை பொடித்து, அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன், தேன் கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர தொண்டையை பற்றிய சளி வெளியேறும். சுவாச பாதையை சீர்செய்கிறது. இதனால் தொண்டைக்கட்டு வெகு விரைவில் சரியாகும்.
Average Rating