அரசியல் பேய்க்காட்டல் !! (கட்டுரை)
பெரும்பாலான அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தம்மை அதீத புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருப்பது மட்டுமன்றி, தாங்கள் முற்றுமுழுதாக, மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்று காட்டிக் கொள்ளவும் முனைகின்றனர். இந்த அதிமேதாவித்தனம், அநேக சந்தர்ப்பங்களில் வேண்டாத விளைவுகளுக்கு இட்டுச் சென்று விடுகின்றன.
தமது பிழையான நகர்வுகளையும் முட்டாள்தனமான முடிவுகளையும் எவ்வாறு நியாயப்படுத்தலாம்? மக்களை எவ்வாறு பேய்க்காட்ட முடியும்? எனத் தெரிந்து வைத்திருப்பதுதான், இன்றைய நிலையில் உயர்ந்தபட்ச அரசியல் சாணக்கியமாக ஆக்கப்பட்டிருக்கின்றது.
முஸ்லிம், தமிழ் அரசியலில் மட்டுமன்றி, பெருந்தேசிய அரசியலிலும் இதுதான் நிதர்சனமாக இருக்கின்றது. தேர்தல் காலத்தில், ஒரு விதமாகவும் தேர்தல் முடிந்த பிறகு, வேறுவிதமாகவும் மக்களை வழிநடத்துவதில் இவர்கள் சிவாஜி கணேசனையே விஞ்சிவிடுவார்கள் போல தோன்றுவதுண்டு.
ஆளும் கட்சியில், பதவிகளில் இருக்கும் காலங்களில், அதிகாரத் தோரணையைக் காட்டி, மக்கள் விடயத்தில் எகத்தாளமாகச் செயற்படும் இவ்வாறான அரசியல்வாதிகள், அதிகாரமில்லாதபோது அதனையே சாட்டாக வைத்துக் கொண்டு, சமூகத்தை மறந்து விடுவதையும் காண முடிகின்றது. இது ஏற்புடையதல்ல.
நாம் முன்னைய பத்திகளில் குறிப்பிட்டதைப் போல, இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவொரு முக்கிய காலகட்டமாகும். அரசாங்கம் புதியதோர் அரசமைப்பைக் கொண்டு வருவதற்கான பூர்வாங்க திட்டங்களை வகுத்துள்ளது. அதற்கு முன்னதாக அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது எதிரணியில் மாத்திரமன்றி ஆளும் கட்சிக்குள்ளேயேயும் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
அதேபோல், 13ஆவது திருத்தம்; அதாவது, மாகாண சபை முறைமைகள் நீக்கப்படுவது உள்ளடங்கலாக, உத்தேச அரசமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள பலதரப்பட்ட ஏற்பாடுகள் பற்றியும் இப்போது, அரசியலரங்கில் வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அரசாங்கம், மாகாண சபை முறைமையை முற்றாக ஒழிக்கப் போவதாகவும் இலங்கையின் மாகாணங்களைக் குறைக்கப் போவதாகவும் மாறுபட்ட தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இது பற்றியெல்லாம் சிறுபான்மைக் கட்சிகள், மக்களை தெளிவுபடுத்தும் முயற்சிகளை இன்னும் ஆரம்பித்ததாகத் தெரியவில்லை. தமிழ்க் கட்சிகள் கொஞ்சமாவது நடப்பு விவகாரங்கள் பற்றி வாய்திறந்தாலும் முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைவர்கள் உள்ளடங்கலான ஏனைய அரசியல்வாதிகளும் இவை பற்றியெல்லாம் பேசுவதற்கு இன்னும் நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மக்களுக்காகவே அரசமைப்பு என்றால், மக்களுக்காகவே இந்தக் கட்சிகள் எல்லாம் அரசியல் செய்கின்றன என்பது கொஞ்சமாவது உண்மையென்றால், சம்பந்தப்பட்ட தரப்பினர், நாட்டு மக்களுக்கு அரசமைப்பு பற்றியும் அதன் திருத்தங்களில் உள்ள உள்ளடக்கங்களின் உண்மையான தாக்கம் எவ்வாறிருக்கும் என்பது பற்றியும் நல்லது, கெட்டதுகளை விளக்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.
அவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டதன் முதன்மை நோக்கம், பதவிகளை வகிப்பதும், வாகன அனுமதிப்பத்திரம் போன்ற வெகுமதிகளைச் சுகிப்பதும் சுகபோகங்களை, அனுபவிப்பதும் அல்ல. மாறாக, மக்களுக்குச் சேவையாற்றுவது ஆகும்.
ஆனால், என்னவோ தெரியாது, அந்நியன் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம்போல, தேர்தல் காலத்தில் ஒரு மாதிரியும் தேர்தல் முடிந்தபிறகு வேறு மாதிரியும் இவர்கள் மாறிவிடுவதைக் காண முடிகின்றது.
புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு இடையிலேயே, தற்போது நடைமுறையில் உள்ள 1978ஆம் ஆண்டு அரசமைப்பில் இருபதாவது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு, ஆளும் பொதுஜன பெரமுன அவதிப்படுகின்றது. சட்ட ஏற்பாடுகளில், அவசரமாக தமக்குத் தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள்வதற்கும் அதனூடாக, அறுதிப் பெரும்பான்மையை முன்-பரீட்சித்துப் பார்ப்பதற்கும்; ஆளும் கட்சி, இந்த உத்தேச சட்டமூலத்தை பயன்படுத்தலாம்.
உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலமானது, 19 இனை இல்லாமலாக்குகின்ற ஒன்றாக மேலோட்டமாகக் கூறப்பட்டாலும் அதற்கு அப்பால் ஏகப்பட்ட முன்மொழிவுகள் அதில் உள்ளன.
இதன்படி, 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசமைப்பின் அத்தியாயங்கள் 31, 33, 35, 54, 61, 65, 70, 78, 85, 91, 92, 103, 104, 107, 109, 111, 121, 122, 124, 134, 153, 154, 155, 156, 170 ஆகியவற்றில் ஏதாவது ஓர் உப பிரிவு அல்லது உட்பந்தி திருத்தப்பட முன்மொழியப்பட்டுள்ளது. சில அத்தியாயங்கள் முற்றாக திருத்தப்படுவதற்கும் இன்னும் ஒருசில அத்தியாயங்கள் முற்றாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக, புதிய அத்தியாயத்தை உட்சேர்ப்பதற்கும் வர்த்தமானியில் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டள்ளன.
இந்தத் திருத்தச் சட்டமூலம் எதிர்பாராத விதமாக ஆளும் தரப்புக்குள்ளேயே, கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அதிலுள்ள சில முன்மொழிவுகள் ஏதோவொரு விதத்தில், தமக்கு அல்லது மக்களுக்கு பாதகமானது என்று சில சிங்கள அரசியல்வாதிகள் அபிப்பிராயப்படுகின்றனர். இந்தப் பின்னணியில், இது தொடர்பாகக் கலந்துரையாடி 20(ஏ) என்ற பெயரில் திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்படலாம் என்ற அனுமானங்களும் வெளியாகாமல் இல்லை.
ஆனால், ‘மேலதிக திருத்தங்கள் எதுவும் இன்றி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றும் சபை விவாதத்தின் போதே திருத்தங்கள் குறித்துப் பரிசீலிக்கப்படும்’ என்றும் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். அவர் என்னதான் கூறினாலும் ஆளும் கட்சிக்குள் இதுவிடயத்தில் புகைச்சல் இருக்கின்றது என்பதையும் இணக்கப்பாட்டை ஏற்படுத்த, பேச்சுகள் தொடர்கின்றன என்பதையும் மறைக்க முடியாது.
ஆளும் தரப்புக்குள்ளேயே, இத்தனை கருத்து வேற்றுமைகளை ஏதோ ஓர் அடிப்படையில் இந்த 20 தோற்றுவித்திருக்கின்றது என்றால், முற்போக்கு அமைப்புகள் குறிப்பிடுவதைப் போல, அதன் உள்ளடக்கமானது ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சூட்சுமங்களைக் கொண்டது என்றே எண்ணத் தோன்றுகின்றது. எனவே, அதுபற்றி முஸ்லிம் கட்சிகளும் தமிழ்க் கட்சிகளும் இன்னும் அதிகமாக, கரிசனை காட்ட வேண்டியிருக்கின்றது.
இந்நிலையில், உத்தேச திருத்தச் சட்டமூலம் தொடர்பில், மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது. ஆனால், தமிழ், முஸ்லிம் கட்சிகள் இவ்வாறான தெளிவுபடுத்தல் பற்றி சிந்திக்கவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
பகல் முழுக்க தமது தொழிலில் கவனத்தைச் செலுத்திவிட்டு, தேநீர்க் கடையில் மாத்திரம் சமூகத்தைப் பற்றிப் பேசுகின்ற ஒரு பொதுமகனைப் போல, தமிழ்க் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் வேறு விடயங்களிலேயே கவனத்தைக் குவித்திருக்கின்றன. ஓய்வு நேரங்களில் மாத்திரமே உத்தேச திருத்தம், எதிர்காலத்தில் கொண்டு வரப்படவுள்ள புதிய அரசமைப்புப் பற்றியெல்லாம் அக்கறையை வெளிப்படுத்துகின்றன. அதுகூட, அரசியல் சார்புள்ள அறிக்கைகளே தவிர, மக்களுக்கு விளக்கமளிக்கும் பாங்கிலானவை அல்ல. முஸ்லிம் அரசியலில் இந்நிலைமை அதிகமாகும்.
கடந்த காலங்களில் இவ்வாறான திருத்தச் சட்டமூலங்கள் அல்லது சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்ட வேளையில், சிறுபான்மைக் கட்சிகள் எவ்விதம் நடந்து கொண்டன என்பதை நாம் இன்னும் மறந்து விடவில்லை. 17, 18, 19 திருத்தங்கள் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் போன்ற ஏனைய சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பங்களில், குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் எவ்விதம் செயற்பட்டன என்பது வாசகர்கள் அறியாததல்ல.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போன்ற தமிழ்க் கட்சிகளில் உள்ள பெயர் குறிப்பிடத்தக்க சில அரசியல்வாதிகள் இவ்வாறான திருத்தங்கள் பற்றிய சாதக, பாதகங்களை ஒப்பீட்டளவில் அதிகமாக மக்களுக்கு எடுத்துரைத்தாலும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அவற்றை ஆய்ந்தறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்தத் தவறிவிட்டனர். ‘ஆளும் தரப்பில் இருந்தால் ஆதரவு’, ‘எதிரணியில் இருந்தால் எதிர்ப்பு’ என்ற எழுதப்படாத விதியைத் தவிர, அவர்கள் வேறெந்த அணுகுமுறையைக் கடந்த காலங்களில் கடைப்பிடித்திருக்கின்றார்கள்?
‘உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலம் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளைப் பாதிக்கும்’ என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்திருக்கின்றார். இதனையொத்த கருத்துகளைப் பல தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர்.
எடுத்த எடுப்பில் 20 தேவையில்லை என்று சொல்வோரும் உள்ளனர். ஆனால், உண்மையில் ஒரு சட்டமூலத்தை அல்லது திருத்தச் சட்டமூலத்தைப் பற்றிப் பேசுவது என்றால், அதனை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது என்றால், அரசியல்வாதிகள் முதலில் அதனது ஆழஅகலங்களை ஐயமற விளங்கிக் கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் அதில் உள்ள சாதக பாதகங்களை, மக்களுக்குத் தெளிவுபடுத்த முடியும்.
மேடைகளில் பேசுவது போல, வாய்க்கு வந்ததைக் கூறி விளக்கமளிக்க முடியாது. அந்த வகையில் நோக்கினால், ஓரிரு தமிழ்க் கட்சிகளும் அரசியல்வாதிகளும் உத்தேச திருத்தச் சட்டமூலம் தொடர்பாகத் தமது காத்திரமான கருத்துகளை முன்வைத்துள்ளனர். ஆனால், மக்களைத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
முஸ்லிம் அரசியலில் முக்கியமான முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தலைமைகளும் இது குறித்து, ஆக்கபூர்வமான கருத்துகளை வெளியிடவில்லை. இந்த இலட்சணத்தில் அவர்கள் மக்களைத் தெளிவுபடுத்துவார்கள் என்று நினைப்பது, கூரையேறி கோழிபிடிக்க முடியாதவர்களின் கதையையே ஞாபகப்படுத்துகின்றது.
ஆக மொத்தத்தில் பொதுவாக, சிறுபான்மைக் கட்சிகள், வேறு வேறு விவகாரங்களில் தமது கவனத்தைச் சிதறச் செய்துள்ளதாகவே தோன்றுகின்றது.
20ஆவது திருத்தச் சட்டமூலம் மட்டுமன்றி அதற்குப் பின்னர் கொண்டு வரப்படவுள்ள, புதிய அரசமைப்பில் மாகாண சபை முறைமைகளை ஒழிப்பதற்கான யோசனை வரை எல்லா விடயங்களையும் முதலில் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் நன்றாகப் படித்தறிந்து கொண்டு, பிறகு மக்களுக்கு போதுமான தெளிவை வழங்க வேண்டும்.
அதைவிடுத்து, நாம் யாருக்கு ஆதரவளிக்கின்றோம், நம்முடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டோ, தாம் இதற்கு ஆதரவளித்தால் ‘என்ன’ கிடைக்கும் என்பதைக் கணக்குப் பார்த்தோ மக்களைப் பேய்க்காட்டுகின்ற அரசியலைச் செய்வதை இனியாது நிறுத்திக் கொள்ள வேண்டும்.
Average Rating