வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)
ஒருவனுக்கு கேடு விளைவிக்காத மற்றும் என்றும் அழியாத செல்வம் கல்விச் செல்வம். அந்த செல்வம் மற்றவைக்கு எல்லாம் நிகரற்றது. இதுதான் மேலே குறிப்பிட்டு இருக்கும் திருக்குறளின் பொருள். கல்வி எப்படி ஒருவருக்கு நிகரற்ற செல்வமோ அதே போலதான் அதை கற்பிக்கும் ஆசிரியர்களும். குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள். பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இன்றும் அவலநிலையில் தான் உள்ளன. தான் பணிபுரியும் தொடக்கப்பள்ளியை சோலைவனமாக மாற்றி அமைத்துள்ளார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான இந்திரா.
நல்லாசிரியர் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று ஆசிரியைப் பணியை தொடர்ந்து வரும் இவர் தான் கடந்து வந்த பாதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். ‘‘வேலூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் ராஜாவூர். அடிப்படை பேருந்து வசதி இல்லாத இங்குள்ள தொடக்கப்பள்ளியில் நான் தலைமை ஆசிரியையா வேலைப் பார்க்கிறேன். இந்த உலகில் கனவு காணாதவர்கள் யாரும் கிடையாது. நானும் அதில் விதிவிலக்கல்ல. எனக்கு கனவு என்று சொல்வதை விட லட்சியம்னுதான் சொல்லணும். காக்கிச் சட்டை அணிந்து மக்களுக்கு சேவை செய்யணும்னு நினைச்சேன்.
சின்ன வயசில் இருந்தே அதை என் லட்சிய கனவா மனசில் முத்திரை குத்தி வைத்திருந்தேன். ஒரு முறை வந்தா அது கனவு. இருமுறை வந்தால் அது ஆசை. பல முறை வந்தா லட்சியம்’’ என்பார் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். எல்லா கனவுகளும் நினைவாகும்னு சொல்லிட முடியாது. சூழ்நிலை காரணமாக கனவாகவே நம் மனசில் புதைந்து போகும். அதுபோலத்தான் என் ஐ.பி.எஸ் கனவும்’’ என்றவர் தன் கனவு மாறிய பாதையை பற்றி நினைவுகூர்ந்தார். ‘‘வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் ஏழு சகோதர, சகோதரிகளுடன் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள் நான்.
அப்பா மெக்கானிக். அன்றைய காலகட்டத்தில் ஒரு குழந்தைக்கு மூன்று வேளை சாப்பாடு போடுவதே கடினம். நாங்களோ ஏழு பேர். இரண்டு வேளை பட்டினி. ஒரு வேளை சாப்பாடு என்ற நிலையிலும் பள்ளிப் படிப்பை விடாமல் தொடர்ந்தேன். அப்ப நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். வீட்டுச்சூழல், எப்படியாவது எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தரணும்னு அப்பா விரும்பினார். நல்ல வரன் வந்தது. வீட்டிலோ வறுமை, நான் மனசைக் கல்லாக்கிக் கொண்டு கல்யாணத்துக்கு சம்மதித்தேன். என்னோட கனவு சுக்குநூறாக உடைந்து போனது.
ஆனா அப்ப எனக்கு தெரியாது என் கணவரால் என் வாழ்வில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும்னு. என் கணவருக்கு கப்பல் படையில் வேலை. ஆறு மாதம் ஒரு முறை தான் வருவார். என்னால் தான் காவல்துறையில் படிக்க முடியல. அவராவது காவல்துறை அதிகாரியாகட்டும்னு நினைச்சேன். விருப்பத்தை சொல்ல, அவரும் தேர்ச்சி பெற்று காவல்துறை அதிகாரியாக வேலூரில் சேர்ந்தார். ஒரு நாள் என் விருப்பத்தை அவரிடம் சொல்ல, அவர் ‘‘இது பெண்களுக்கு ஏற்ற வேலை இல்லை, உனக்கு மேலே தானே படிக்கணும். வேறு துறை எடுத்து படி’’ன்னு சொல்லி என்னை ஆசிரியர் பயிற்சியில் சேர்த்து விட்டார்.
இப்போது எனக்கு கிடைத்து இருக்கும் இந்த விருதுக்கு அவரின் உந்துதல் தான் முக்கிய காரணம்’’ என்றவர் தன் பணி அனுபவத்தைப் பற்றி கூறினார். ‘‘பயிற்சி முடிச்சதும், வேலூர் மாவட்டம் பி.கே.புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் என் பணியைத் தொடங்கினேன். 11 மாதக் கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டுதான் வேலைக்குச் சென்றேன். 7 ஆண்டுகள் அங்கேயே பணிபுரிந்தேன். நான் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் விதமும், பெற்றோர்களிடம் அணுகும் முறையும் ஊர் மக்களிடம் என்னை நெருக்கமாகச் செய்தது. அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைக்கச் சொல்லும் அளவுக்கு எனக்கும் அந்த ஊர் மக்களுக்குமான பந்தம் ஏற்பட்டது.
நான் பெயர் சூட்டிய குழந்தைகள் நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறுவதை பார்க்கும் போது எனக்குள் ஒரு சந்தோஷ ஊற்று பெருகும்’’ என்றவரின் வாழ்க்கையில் ஆறு வருடங்களுக்கு முன் ஓர் பேரிடி ஏற்பட்டது. ‘‘வாழ்க்கையில் ஒரு முழுமைப் பெற்ற வளாக நான் உயர ஆரம்பிக்கும்போது என் கணவர் 2012ல் திடீரென மாரடைப்பால் காலமானார். நான் மீள முடியாத துயரத்தில் ஆழ்ந்தேன். வேலையை விட்டுவிடலாம்னு கூட நினைச்சேன். வாழ்க்கை இருண்டது போல் இருந்தது. ‘‘நீ சாதாரண பெண் இல்லை, இரும்புப் பெண்மணியின் பெயரைக் கொண்டவள். அவரைப்போல தைரியமா செயல்படணும்.
உன் கணவர் நீ மேலும் வளரணும்னு விரும்பினார். அதை பூர்த்தி செய்யணும்னு என் உடன் இருந்தவர்கள் தைரியமளித்தனர். நான் திரும்ப பணியை தொடர்ந்தேன். அவரது இழப்பிலிருந்து மீண்டு வர இன்று நான் பணிபுரியும் பள்ளியும் என்னிடம் படிக்கும் குழந்தைகளுமே தான் காரணம். அவர்கள் தான் என் உலகம். எனக்கு ஒரு மகள், ஒரு மகன். என் கனவின் ஒரு பகுதியாக மகனை போலீஸ் அட்மிஸ்ட்ரேஷன் படிக்க வைத்தேன். எனது ரோல் மாடல் அப்துல் கலாம்.
அவரின் கருத்தினை நேசிக்கும் வண்ணம் நான் தற்போது தலைமை ஆசிரியையா இருக்கும் ராஜாவூர் அரசுத் தொடக்கப்பள்ளி வளாகத்தை வனச்சோலையாகவும், மூலிகைத் தோட்டமாகவும் மாற்றியுள்ளேன். எங்கள் பள்ளிக்கு வரும்போது ஒரு சோலை வனத்துக்குள் வருவது போன்ற உணர்வு ஏற்படும். இந்தப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக மாற்றி உயரச் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய முக்கிய நோக்கம்’’ என்று கூறும் தலைமை ஆசிரியர் இந்திரா பல விருதுகளை பெற்றுள்ளார். ‘‘60க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன். 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு எனக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதினை அளித்தது.
2014ல் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் விருதினைப் பெற்றேன். 2015ல் இலங்கை பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தினை வழங்கி கவுரவித்தது. 2016ல் டாக்டர் அம்பேத்கர் தேசிய விருதும், மனித உரிமை ஆணையத்தின் மூலம் அன்னை தெரசா என்ற சர்வதேச விருதும் பெற்றுள்ளேன். ஆனாலும், என் ஆழ்மனதின் லட்சியக்கனவு நிறைவேறவில்லையே என்ற ஞாபகம் வரும்போதெல்லாம் என் கணவருடைய காவல் சீருடையைத் தொட்டுப் பார்த்துக் கொள்வேன். அவர் என்னுடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
ஆசிரியைப் பணி உலகமாகிவிட்டதால், என் மாணவர்களை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., எம்.பி.பி.எஸ்., எஞ்சினியர்கள் என உயரிய பணிக்கு தயார் செய்யும் வகையில் எளிய முறையிலும், பொது அறிவு செய்திகளையும், பாடங்களை கதைகள், பாடல்கள், நாடகங்கள் மூலமாக கற்பித்து வருகிறேன். காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பது கனவாகவே இருந்தாலும், ஆசிரியைப் பணி உன்னதமானது என்பதை என் மாணவர்கள் மூலம் அனுபவித்து வருகிறேன். இந்த ஆனந்தம் நான் காவல்துறையில் சேர்ந்து இருந்தால் கிடைத்து இருக்காது’’ என நிறைவாக முடித்தார்.
Average Rating