ஆர்வம் இருந்தால் 80 வயதிலும் எழுத்தாளராகலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 58 Second

ஆர்வம் இருந்தால் எந்த வயசிலும் சாதிக்க முடியும். வயசு என்பது நம்முடைய உடலில் ஏற்படும் சுருக்கங்களுக்குதான். நம்முடைய மனதிற்கோ அல்லது மூளைக்கோ இல்லை’’ என்கிறார் 80 வயதான சீதா துரைசாமி. இவர் இந்த வயதில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 101 கோயில்கள் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த வயதிலும் ஒவ்வொரு கோயிலாக சென்று அதன் சிறப்பு, விசேஷங்கள் மற்றும் வரலாற்றினை பற்றி புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘‘நான் பிறந்த ஊர் நீடாமங்களம். எங்க வீட்டுக்கு பக்கத்து காம்பவுண்டே கோயில் தான். கோயிலில் நடக்கும் பூஜை, நாதஸ்வர இசையைக் கேட்டு தான் நான் வளர்ந்தேன்.

வீட்டில் அப்பா, அத்தை எல்லாம் நல்லா பாடுவாங்க. அதனால நானும் பாட்டு கத்துக்கிட்டேன். என்னுடைய ஐந்து வயசில் இருந்தே நானும் அப்பா, அத்தையுடன் சேர்ந்து பாடுவேன். அந்த காலத்தில் பெண் பிள்ளைகள் வயசுக்கு வந்தவுடன் அவர்களை வெளியே அனுப்ப மாட்டாங்க. எனக்கு நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளணும், படிக்கணும்ன்னு ஆசை. என் ஆர்வத்துக்கு உரம் போட்டு வளர்த்தவர் என் தாத்தா தான். அவர் என் ஆர்வத்தை தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தார். அவர் என்னிடம் சொன்ன ஒரே விஷயம். ‘உனக்கு எழுத ஆர்வம் இருந்தா எழுது.

மத்தவங்க கிண்டல் செய்வாங்க, ஏதும் சொல்வாங்கன்னு பயப்பட வேண்டாம்’ன்னு எனக்குள் எழுத்து ஆர்வத்தை ஏற்படுத்தினார். நான் நல்லா படிப்பேன். கல்லூரியில் சேர அட்மிஷன் கிடைத்தும், அப்பா எனக்கு திருமணம் பேசி முடிச்சிட்டார். 18 வயசில் கல்யாணமாயிடுச்சு’’ என்றவர் அதற்கு பிறகு தான் முழு வேகமாக பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்துள்ளார். ‘‘வீட்டுக்கு பக்கத்தில் கோயில் இருந்ததால் சின்ன வயசில் இருந்தே எனக்கு கோயில் செல்வதில் தனி ஆர்வமுண்டு. கல்யாணத்திற்கு பிறகு எனக்குள் இருக்கும் கோயில் ஆர்வத்தை பார்த்து என் கணவர் பல கோயில்களுக்கு அழைத்து சென்றார்.

எனக்கு ஒரு பழக்கமுண்டு. நான் எங்க வெளியே போனாலும், அந்த இடத்தைப் பற்றிய குறிப்பு எடுப்பது வழக்கம். ஒரு முறை ராமேஸ்வரம் போன போது, அந்த கோயில் பற்றிய வரலாறு மற்றும் விசேஷங்கள் பற்றி கோயில் குருக்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். என்னுடைய ஆர்வத்தை பார்த்தவர், ‘‘இவ்வளவு குறிப்பு எடுக்கிறீங்க. இதை ஏன் பத்திரிகையில் எழுதக்கூடாதுன்னு கேட்டார்’. அவரின் அந்த வார்த்தை தான் என்னை புத்தகத்தில் எழுத ஒரு ஊன்றுகோலாக அமைந்தது’’ என்றவர் அதன் பின் 12 வருடமாக கோயில்கள் பற்றி மாத பத்திரிகை ஒன்றில் எழுத ஆரம்பித்துள்ளார்.

‘‘என் இளைய மகள் அமெரிக்காவில் இருக்கா. அவளை பார்க்க அங்கு போன போது தான் அங்கு ‘தென்றல்’ என்ற பத்திரிகை பற்றி கேள்விப்பட்டு, தொடர்ந்து படித்து வந்தேன். தென்றல் மற்றும் நயாகரா நீர்வீழ்ச்சி தலைப்பில் கவிதை ஒன்றை எழுதி அந்த பத்திரிகைக்கு அனுப்பினேன். அவர்கள் அதை பிரசுரம் செய்தாங்க. அதன் பிறகு கோயில் பற்றிய கட்டுரைகளை 12 வருடம் தொடர்ந்து எழுதினேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. அந்த சமயத்தில் பத்திரிகையில் எழுதுவது மட்டுமே தான் என் குறிக்கோளாக இருந்தது.

நான் எழுதிய கட்டுரைகளை புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அதற்கு காரணம் என் மகன். அவன் இறப்பதற்கு முந்தைய தினம் என்னிடம் வந்து, ‘அம்மா நீங்க பத்திரிகையில் கோயில்கள் குறித்து எழுதி இருக்கீங்க. அதை எல்லாம் தொகுப்பா புத்தகமா வெளியிடலாமே’ன்னு சொன்னான். அவன் சொன்ன போது கூட எனக்கு புத்தகம் வெளியிடணும்ன்னு எண்ணம் ஏற்படல. ஆனா மறுநாள் அவன் இனி என்னுடன் இருக்கவே மாட்டான் என்று தெரிந்த போது, அவனுடைய கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று என் மனதில் தோன்றியது.

இப்போது அவன் இல்லை. அவன் நினைவா இந்த புத்தகங்கள் தான் என்னிடம் இருக்கு’’ என்று சொல்லும் போது சீதாம்மாவின் குரல் தழுதழுத்தது. ‘‘நான் பத்திரிகையில் கோயில்கள் பற்றி எழுதும் போது, ஒவ்வொரு கோயில்கள் பற்றிய விவரங்கள் மட்டும் இல்லாமல், நான் சந்தித்த அனுபவங்களையும் குறிப்பிட்டு இருந்தேன். அவை எல்லாம் தமிழில் தான் வெளியானது. அந்த தொகுப்பினை தான் தமிழில் ‘அருள் தரும் ஆலய தரிசனம்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டேன். என் மகனுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வமுண்டு.

குறிப்பா ஆங்கில புத்தகம். அவனுக்காக ஆங்கிலத்திலும் இதை மொழிபெயர்த்து ‘Temples Of India – A Spiritual Journey ’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு இருக்கேன். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க எனக்கு சுந்தர் கிருஷ்ணன் மற்றும் அவரின் மனைவி ரேகா இருவரும் மிகவும் உதவியா இருந்தாங்க. சுந்தர் கிருஷ்ணன் மொழிபெயர்க்க அவரின் மனைவி ரேகா அதை சரி செய்து எடிட்டும் செய்து கொடுத்தார். அவங்க இருவரும் இல்லை என்றால் இதை ஆங்கிலத்தில் வெளியிட்டு இருக்க முடியாது.

அதுமட்டும் இல்லாமல் புத்தகம் வெளியிடுவதற்கு சென்னையிலும், அமெரிக்காவிலும் என் இரு மகள்கள் உதவியாக இருந்தனர். என்னுடைய முக்கிய நோக்கம் என் மகனுடைய வாக்கை நிறைவேற்றணும். 80 வயதில் நான் எழுதுவேன்… புத்தகம் வெளியிடுவேன் என்று நான் கனவிலும் நினைச்சு பார்க்கல’’ என்றவர் புத்தகம் எழுதும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ‘‘நான் 300க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு சென்று இருக்கேன். அதில் 101 கோயில்களை தேர்வு செய்து எழுதினேன். கோயில்களை பற்றி எழுத காரணம் நான் சென்று இறைவனை தரிசித்தது போல் மற்றவர்களும் இறையருள் கிடைக்க வேண்டும் என்பது தான்.

இதில் ஆறு படை வீடுகள், நவகிரக பரிகார ஸ்தலங்கள், பஞ்சபூத ஸ்தலங்கள், தேவியர் ஆலயங்கள், வைஷ்ணவ ஸ்தலங்கள், சிவ ஸ்தலங்கள், முருகன் கோயில்கள் மற்றும் மகான்களின் ஆலயங்கள் என பிரித்திருக்கேன். தீபாவளி அன்று அன்னப்பூரணியை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான நேரம் அமையல. ஒரு முறை நானும் என் கணவரும் எங்களின் குலதெய்வம் கோயில்களுக்கு செல்ல இருந்தோம். உறவினர் ஒருவர் தவறியதால், குலதெய்வ கோயிலுக்கு போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அந்த சமயம் ஒரு டிராவல் ஏஜென்சி மூலமா காசிக்கு செல்லும் வாய்ப்பு கிடைச்சது.

முதலில் நான் தயங்கினேன். ஆனா என் கணவர் தான் என்னை அழைத்து சென்றார். அன்று தீபாவளி, நான் அன்னப்பூரணியை தரிசனம் செய்து கொண்டு இருந்தேன். அந்த சமயம் யாரோ என் அருகில் ‘நீ வரணும்ன்னு ஆசைப்பட்ட உன் ஆசை நிறைவேறுச்சா’ன்னு அசரீரி மாதிரி இருந்தது. யார் சொன்னாங்கன்னு எனக்கு இன்னும் தெரியல. இதே போல் மற்றொரு சம்பவம், சிருங்கேரி கோயிலுக்கு போன போது, அங்க இருந்த கோயில் குருக்கள், ஆதிசங்கரர் தன் மடத்தை ஸ்தாபனம் செய்தது குறித்து கூறினார். கர்ப்பிணி தவளை ஒன்று வெயிலின் தாக்கத்தால் தவிச்சிட்டு இருந்தது.

அந்த சமயம் நல்ல பாம்பு ஒன்று தவளைக்கு குடை பிடித்துள்ளது. தவளைக்கு பாம்பு பகை என்றாலும் ஆபத்தில் உதவியது. அப்போது தான் ஆதிசங்கரர் தீர்மானித்தார், அங்கு தான் அவரின் மடம் ஸ்தாபனம் செய்யவேண்டும் என்று. இந்த கதையை கேட்ட போது எனக்குள் மெய் சிலிர்த்தது. எந்த கோயில் போகணும்ன்னு நான் தேர்வு செய்யல. கோயில் போகும் போது, அந்த கோயில் பத்தி எழுதி வச்சுப்பேன். என்னோட பேரன்கள் கூட எனக்கு சில விவரங்களை சேகரிச்சு கொடுத்தாங்க. சில கோயில்கள் மருத்துவ குணம் கொண்டவை. நீடாமங்கலத்தில் இருக்கும் கரும்பேஸ்வரர் சர்க்கரை நோய் தீர்ப்பவர்.

இந்த கோயில்களுக்கு வரவங்க ரவையும் சர்க்கரையும் கொண்டு அர்ச்சனை செய்தா நோயின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம். அதே போல் லால்குடியில் இருக்கும் ரத்னேஷ்வரர் கோயில், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தை குடிச்சா அந்த பிரச்னை தீர்வதாக நம்பிக்கை. திருக்கழுக்குன்றம் மலையில் ஏறினா ஆஸ்துமா, மூச்சு சம்பந்தமான வியாதி அகலும். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு கதையுண்டு. ஒரு கெட்ட விஷயத்தை தகர்த்திட தான் இந்த கோயில்கள் உருவாகியிருப்பதாக எனக்குள் ஒரு உணர்வு கொடுத்தது. இறைவன்கள் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாம் ஒன்று தான் என்பதை இந்த புத்தகம் உணர்த்துகிறது’’ என்றார் சீதா துரைசாமி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடல் புண்களை ஆற்றும் ரோஜா!! (மருத்துவம்)
Next post தமிழர்களின் கனவுக்கோட்டை ‘குமரிக்கண்டம்’ !! (வீடியோ)