நான் போக்கர் ராணி! (மகளிர் பக்கம்)
‘‘போக்கர் ஒரு கனவு விளையாட்டு. விளையாட்டை பொறுத்தவரை நான் எதையும் தேர்வு செய்திருக்கலாம். ஆனால் போக்கர் விளையாட்டுதான் என்னை தேர்வு செய்தது’’ என்கிறார் போக்கர் விளையாட்டு வீராங்கனை மற்றும் சமூக ஆய்வாளரான முஸ்கான் சேத்தி தேசிய விருது பெற்ற முதல் இந்தியப் பெண்.
‘‘போக்கர் விளையாட்டினை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் என் அப்பா. அப்ப நான் சின்ன பொண்ணு. அப்பா டாக்டர் என்றாலும் போக்கர் விளையாட்டு பிரியர். அவர் இணையத்தில் இந்த விளையாட்டை பார்ப்பது வழக்கம். அவர் பார்க்கும் போது நானும் அவருடன் சேர்ந்து பார்ப்பேன். அப்போது அது என்ன விளையாட்டுன்னு தெரியாது. அந்த வயசில் புரியவும் புரியாது. அப்பா பார்ப்பார் நானும் பார்த்தேன் அவ்வளவு தான். என்னுடைய பாட்டியை நான் பார்த்தது இல்லை. பிரிட்ஜ், ரம்மி தவிர வேறு சீட்டுக்கட்டு விளையாட்டில் அவங்கள தோற்கடிக்க முடியாதுன்னு அப்பா சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன்.
அம்மாவும் கார்ட்ஸ் விளையாடுவாங்க. அது என்னுடைய ஜீனில் கலந்து இருக்குன்னு நினைக்கிறேன்’’ என்றவர் முகநூல் மூலமாக தான் முதன்முதலில் விளையாட ஆரம்பித்துள்ளார். ‘‘குழந்தையாக இருக்கும் போது டி.வியில் கார்ட்டூன் பார்ப்பதை விட்டுவிட்டு அப்பாவுடன் போக்கர் பார்த்துக் கொண்டு இருப்பேன். அப்போது அந்த விளையாட்டு பிடிக்கவில்லை. 20 வயசில் முகநூலில்தான் முதலில் விளையாட ஆரம்பிச்சேன். ஜாலியா இருந்தது. தொடர்ந்து விளையாடினேன். அப்போது தான் தெரிந்தது, அந்த விளையாட்டு எனக்குள் எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்ததுன்னு. என் நண்பர்களுடன் விளையாடும் போது, எல்லாரையும் நான் தோற்கடித்து விடுவேன். அந்த வெற்றியின் சுவை இந்த விளையாட்டை சீரியசா விளையாட தூண்டியது. முகநூலில் சிங்கா போக்கர், ஆன்லைன் போக்கர் விளையாட்டு. அதில் விளையாடி 10 லட்சம் புள்ளிகள் வென்றேன். நான் விளையாடுவதை பார்த்து என் கணவரும் விளையாடினார்.
ஆனால் அவர் 15 நிமிடத்தில் நான் சேர்த்து வைத்து இருந்த அத்தனை புள்ளிகளையும் இழந்துவிட்டார். அதை பார்த்ததும் எனக்கு மிகவும் வெறுப்பாகிவிட்டது. அவர் என்னிடம் சொன்ன ஒரே விஷயம், இது விளையாட்டு, வெற்றி, தோல்வி இருக்கும். மேலும் இது முழுமையா நம் அதிர்ஷ்டம் சார்ந்தது. என்னை ஒரு தரமான முழுமையான போக்கர் விளையாட்டு இணையத்தில் இணைய சொன்னார். அவர் சொன்னது போல் போக்கர்ஸ்டார்ஸ்.காம் என்ற இணையத்தில் நான் எனக்கான கணக்கினை 2014ம் ஆண்டு துவங்கினேன். நான் சேர்ந்த போது, கட்டணம் இல்லாத விளையாட்டிற்கான அழைப்பு வந்தது. அதாவது ஜெயிப்பவர்களுக்கு பணம் பரிசாக வழங்கப்படும். மொத்தம் 20 ஆயிரம் போட்டியாளர்கள். அதில் முதல் 20ல் வருபவர்களுக்கு ஷார்க் கேஜ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு என்றும் அறிவித்து இருந்தனர். போக்கர் விளையாட்டே ஒரு வித போதை என்றாலும் அதன் மூலம் நமக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் போது அது போதையின் அளவை அதிகரிக்க தானே செய்யும். அதனால் நான் அந்தப் போட்டியில் பங்கு பெற்றேன்.
10வது நபராக தேர்ச்சி பெற்றேன். பார்சிலோனாவில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன். அதில் உலகில் இருந்து பிரபல போக்கர் விளையாட்டு வீரர்களுடன் ஒரு மில்லியன் டாலருக்கு போட்டியிட்டேன்’’ என்றவர் உலகில் எங்கு போக்கருக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றாலும், அதில் பங்கு பெற ஆரம்பித்துள்ளார். ‘‘நிகழ்ச்சியை முடித்துவிட்டு இந்தியாவிற்கு வந்த போது போக்கர் விளையாட்டு பெரிய அளவில் முன்னேறி இருந்தது. இந்தியாவில் நிறைய பேர் போக்கர் விளையாட ஆரம்பித்திருந்தனர். அதை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் பாரம்பரிய ஆச்சாரமான பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவள். நான் முதலில் விளையாடிய போது என் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் எல்லாரும், ஒரு பெண் சூதாட்டம் விளையாடி தான் வாழ வேண்டுமா? அப்படிப்பட்ட விளையாட்டு தேவையா? வேற ஏதும் வேலை உனக்கு கிடைக்கல? யாரும் உன்னை கல்யாணம் செய்துக்க மாட்டாங்கன்னு பல விமர்சனங்கள் வந்தது. ஆனால் நான் அதில் இருந்து பின் வாங்கவில்லை.
இது ஒரு விளையாட்டு தான். கையில் கைப்பையை மாட்டிக் கொண்டு வேலைக்கு போகும் மற்ற சராசரி பெண்கள் போல் என்னுடைய வாழ்க்கையை நான் கழிக்க விரும்பவில்லை. வித்தியாசமாக வாழ நினைச்சேன். இது ஒரு பயணம். ஆனால் அழகான பயணம்ன்னு என் அம்மா தான் எனக்கு சொல்லிக் ெகாடுத்தாங்க. போக்கர் விளையாட்டில் என்னுடைய வளர்ச்சிக்கு என் அம்மா தான் காரணம். அவங்க இப்ப இல்லை. 2014ம் ஆண்டு ஒரு விபத்தில் தவறிட்டாங்க. இது சீட்டாட்டம் தான். எங்க அம்மா திட்டுவாங்களோன்னு பயந்து, அவங்களிடம் இருந்து மறைத்து மறைத்துதான் இணையத்தில் விளையாடுவேன். ஒரு நாள் நான் விளை யாடுவதை அவங்க பார்த்திட்டாங்க. போக்கர் விளையாட்டு என் மனதில் எவ்வளவு ஆழமாக பதிந்துள்ளதுன்னு அவங்க புரிஞ்சிக்கிட்டாங்க. நான் வெற்றி பெறுவதையும் பார்த்து சந்தோஷப்பட்டாங்க. அவங்க தான் என்னை மேலும் இந்த விளையாட்டில் ஈடுபட உற்சாகப்படுத்தினாங்க. அவங்களின் இழப்பு என்னை பெரிதும் பாதித்தது. ஆனால் அவங்க கொடுத்த ஊக்கம் தான் என்னை மேலும் மேலும் வளரச் செய்தது.இந்த விளையாட்டிற்கு ஒழுக்கம் அவசியம்’’ என்றார்.
‘‘ஒரு போக்கர் விளையாட்டு வீரர் ஒழுக்கமாக இல்லை என்றால் அவர் செய்யும் தவறுக்கு மன்னிப்பே கிடையாது. நான் ஆரம்பத்தில் இருந்தே இதை விளையாடி வருகிறேன். இந்த விளையாட்டு ஒரு செயல் முறை சார்ந்த, பல்துறை மற்றும் ஒரு குறிப்பான நோக்கம் கொண்டது. மற்ற விளையாட்டினை போல கடினமானது. மன உளைச்சலை அதிகம் ஏற்படுத்தக்கூடியது. விளையாட்டு மேசைக்கு வந்தவுடன் நம்முடைய மனநலம், உடல், உணர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். மனதை சமநிலைப்படுத்தி ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாழ்க்கை நமக்கு சொல்லித் தரும் ஒவ்வொரு பாடங்களையும் நாம் போக்கர் விளையாட்டு மேடையில் நிறுத்துவோம், அது நம்மில் ஒரு ஆர்வம் மற்றும் உள்ளுணர்வை தூண்டும். இது ஆன் லைன் விளையாட்டு. நாம் யார்? ஆணா, பெண்ணா ன்னு எதிரில் விளையாடு பவர்களுக்கு தெரியாது. பெரும்பாலும் ஆண்கள் தான் விளையாடுவார்கள். ஒரு முறை நான் என்னுடைய அடையாளத்தை வெளி யிட்ட போது, ஒருவர் ‘பெண் ணாக இருந்து கொண்டு ஏன் இதை விளையாடுகிறாய்?
போய் சமையல் அறையில் வேலை செய்’ன்னு சொன்னாங்க. இந்த விளையாட்டில் நான் கற்றுக் கொண்ட பாடம்… நம்முடைய அடையாளத்தை வெளிப்படுத்தினால் நம்மால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியாது. மேலும் விளையாடுபவர்கள் அனைவரும் வெற்றியை மையமாக கொண்டுதான் விளையாடுகிறார்கள். அதை பார்க்கும் போது நமக்குள் ஒரு உற்சாகம், விளையாட்டில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். காலங்கள் மாற மாற எண்ணங்களும் மாறும். வெளிநாட்டில் இந்த விளையாட்டிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு இப்போது தான் இதற்கான அடையாளம் கிடைத்துள்ளது’’ என்று சொல்லும் முஸ்கான் கடந்த ஐந்து வருடமாக போக்கர் விளையாடி வருகிறார். ‘‘நான் லாஸ்வேகாஸ், ஆம்ஸ்டெர்டாம், நாட்டிங்காம், பார்சிலோனா, ப்ரேக் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று விளையாடி இருக்கேன். நான் இந்த விளையாட்டினை விளையாடும் போது எனக்குள் ஒரு உத்வேகம் ஏற்படுகிறது. 2014ம் ஆண்டு வரை பல கனவுகளுடன் இருக்கும் சாதாரண பெண்ணாகதான் இருந்தேன். எனக்கு புதுமையாக வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று தோன்றும். ஆனா என்ன செய்வதுன்னு தெரியாது. சில விஷயங்களை பார்த்து ரொம்பவே உற்சாகமாயிடுவேன்.
ஒரு கட்டத்தில் அந்த வலைக்குள் விழும் போது நானும் ஒரு கார்ப்பரேட் அடிமைன்னு எண்ணம் ஏற்படும். அம்மா என்னை விட்டு பிரிந்த போது நான் தனிமையை உணர்ந்தேன். அந்த தனிமை தான் என்னை போக்கர் விளையாட்டில் ஈடுபட செய்தது. விளையாட ஆரம்பித்த பிறகு தான் தெரிந்தது இது எனக்கான தளம் என்று. ஆமாம், இந்த விளையாட்டு ஒரு விதமான போதை. உங்களை மனதால் தூண்டக்கூடியது. மற்ற விளையாட்டு உங்களின் வயது, இனம் மற்றும் இதர விஷயங்கள் சார்ந்து இருக்கும். போக்கர் அப்படி இல்லை. இதில் வயது வரம்பு, இனம் எதுவுமே தேவையில்லை. நுணுக்கமாக விளையாடணும் அவ்வளவுதான். ஆரம்பத்தில் ஒரு ஜாலிக்காக விளையாட ஆரம்பிச்சேன். இப்போது இது என் தொழிலாகவே மாறிவிட்டது. பணம் சம்மந்தப்பட்ட விளையாட்டு என்றாலும், ஆரம்பத்தில் இலவசமாக விளையாடலாம். ஜெயிச்சா உங்களுக்கு பணம் கிடைக்கும். உங்களால் பணம் வைத்து விளையாட முடியும் என்று நினைத்தால் மட்டுமே நீங்கள் அந்த போட்டியில் பங்கு பெறலாம்.
இதை விளையாட்டாக பார்க்காமல், உங்களின் வேலை என்று பார்த்தால், நீங்கள் விளையாடும் போது மிகவும் கவனமாக மற்றும் கட்டுப்பாட்டோடு விளையாடுவீங்க’’ என்றவர் கடந்த ஆண்டு சாதனை பெண்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.‘‘கடந்த ஆண்டு இறுதியில் திடீரென்று ஜனாதிபதி மாளிகையில் இருந்து அழைப்பு. ஆண் ஆதிக்கம் கொண்ட அரங்கங்களில் நுழைந்த முன்னோடி பெண்களுக்கு குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தேசிய விருது வழங்க இருப்பதாகவும் அதற்கு என்னை தேர்வு செய்து இருந்தனர். யோசித்து பாருங்கள்… போக்கர் விளையாட்டு பற்றி கேள்விப்படாத நாட்டில் அதற்கான தேசிய விருது வழங்கி இதையும் ஒரு விளையாட்டாக அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது. ஜனாதிபதி கையால் விருதினை வாங்கிய போது என்னால் அந்த சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னுடைய அடுத்த இலக்கு இந்த விளையாட்டினை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும். அது மட்டும் இல்லாமல் நான் இதில் சம்பாதிக்கும் பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்த உதவி செய்ய வேண்டும்’’ என்கிறார் போக்கர் ராணி முஸ்கான் சேத்தி.
Average Rating