கனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா? (கட்டுரை)
ரஸ்யா நாட்டிலும் கொரோனாவின் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டிருக்கின்றது. தொடக்க காலத்தில் ரஸ்யா கொரோனா தொற்றே தங்கள் நாட்டில் இல்லை என்று மகிழ்வடைந்தது. ஆனால் அவர்கள் எதிர்பாராதவிதமாக இப்போது அங்கு கொரோனா தொற்று பரவத் தொடங்கிவிட்டது. சராசரி பத்தாயிரம் பேர்வரை தினமும் அங்கு பாதிக்கப்படுகிறார்கள்.
எல்லா நாடுகளையும் பின் தள்ளி இப்போது இரண்டாவது இடத்தில் ரஸ்யா நிற்கின்றது. முதலாவது இடத்தில் அமெரிக்காவும் மூன்றாவது இடத்தில் பிரேஸில் நாடும் இருக்கின்றன. சுகாதாரப்பணி புரிபவர்கள் கொரோனா பாதுகாப்பு கவசங்களை அணிந்து கவனமாக செயற்பட்டாலும் ரஸ்யாவின் ரூலா என்ற இடத்து மருத்துவ மனையில் பணிபுரிந்த 20 வயதான தாதி ஒருவர் கண்ணாடி போன்ற கவச ஆடைக்குள்ளால் தெரியக்கூடியதாக உள்ளாடை மட்டும் அணிந்து சேவை செய்ததால், யாரோ அதைப்புகைப்படம் எடுத்துப் போட்டிருந்தார்கள். கடமையின்போது, தாதிகளுக்கான உடை அவர் அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகத் தெரிகின்றது. ஆண்கள் மட்டுமே உள்ள வாட்டில் அவர் பணியாற்றியாலும், நோயாளர் யாரும் அதை ஒரு குறையாக எடுத்து மேலிடத்திற்கு முறைப்பாடு செய்யவில்லை.
ஒன்ராறியோ முதல்வரின் பரிந்துரையின் படி வாகனங்களுக்கும் கூடிய இடைவெளி தேவை என்பதையும் குடும்ப அங்கத்தவர் தவிர வேறுயாரும் ஒரே வாகனத்தில் பயணிக்க்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வாகனங்களுக்குக் குறைந்தது இரண்டு மீட்டர் இடைவெளியாவது இருக்க வேண்டும். இதுவரை உள்ள அவசர உத்தரவுகளும், அனைத்து கட்டுப்பாடுகளும் மே மாதம் 29 ஆம் திகதிவரை தொடரும் என்பதையும் தெரிவித்துள்ளார். ஒன்ராறியோவில் இதுவரை 24,187 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1,993 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 18,580 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 577,682 பேர் இதுவரை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ஒன்ராறியோவில் ஆண்களைவிட (42.5 வீதம்,) பெண்கள்தான் அதிகம் (56.8 வீதம்) பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கனடாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. சுமார் 33,000 பேர் வரையில் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகின்றார்கள். இவர்களில் சுமார் 500 வரையிலான தொற்று நோயாளர்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதியோர் இல்லங்களில் அவசர உதவிக்காகச் சென்று பணியாற்றிய படையினரில் 28 படையினர் நோய் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர். முதற்குடி மக்களுக்குக் கொரோனா தொற்று பாதுகாப்பிகாக மேலதிகமாக 75 மில்லியன் டொலர் ஒதுக்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கொரோனா வைரஸின் பாதிப்பு இரண்டாவது சுற்று வருமேயானால் அதற்கான ஆயத்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்று கனடியன் மெடிக்கல் அசோஸியேசன் தலைவர் அறிவித்திருக்கின்றார். உலக நாடுகள் பொருளாதார நன்மை கருதி சில கட்டுப்பாடுகள் தளர்த்தியது போலவே, கனடாவும் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருக்கின்றது.
நிலைமையையைப் பார்த்து கட்டம் கட்டமாக இவை நடைமுறைப்படுத்தப்படும். கனடாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக (21-5-2020) இதுவரை 81,324 பேர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். சென்ற வாரத்தைவிட 10,000 பேர் வரையில் அதிகமாகப் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 1,222 பேர் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கியூபெக்கில் 45,495 பேரும், ஒன்ராறியோவில் 24,187 பேரும், அல்பேர்டாவில் 6,768 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2,479 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனைய மாகாணங்களில் சிறு தொகையினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நோய் தொற்றுக் காரணமாக இதுவரை 6,152 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் 36,091 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 1,379,655 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் அதிக அளவிலான மக்களுக்கு, அதாவது 1 கோடியே 26 லட்சம் பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால், கொரோனா தொற்று உள்ளவர்களை அதிக அளவில் கண்டுபிடிக்க முடிந்தது என்று அமெரிக்க அதிபர் குறிப்பிட்டார். தொழில் நுட்பவல்லுனர்களின் சேவையைப் பாராட்டிய அவர், இது பெருமைப்பட வேண்டிய விடயம்தான் என்று மேலும் குறிப்பிட்டார். அமெரிக்காவில் கொரோன வைரஸ் காரணமாக 1,584,700 பேர் இதுவரை, (21-05-2020) பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 94,717 பேர் மரணமாகி இருக்கிறார்கள். தனிப்பட்ட வீடுகளில் மரணமானவர்களின் தொகை இதில் இடம் பெறவில்லை. மரணத்தில் மூன்றில் ஒரு பங்கு நியூஜோர்க்கிலும், நியூஜேர்சியிலும் இடம் பெற்றிருக்கின்றன. 28,663 பேர் நியூயோர்க்கிலும், இதற்கு அடுத்ததாக நியூஜேர்சியில் 10,843 பேரும் மரணித்திருக்கிறார்கள். முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி இருக்கின்றது. இங்கே பல முதியவர்களும், உதவியாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் 30,000 மேற்பட்டோர் மரணமடைந்திருக்கிறார்கள். அமெரிக்க சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் 44,000 பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 462 பேர் மரணமாகி இருக்கிறார்கள்.
21-05-2020 வரை உலகத்தில் மொத்தமாக 5,075,181 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 1,620,902 ஸ்பெயின் 280,117 ரஸ்யா 317,554 இங்கிலாந்து 250,908 இத்தாலி 228,006 பிறேசில் 310,921 பிரான்ஸ் 181,826 ஜெர்மனி 179,021 துருக்கி 153,548 ஈரான் 129,341, இந்தியா 118, 501, பெரு 108,769 ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. பிரேஸிலில் ஓரு வாரத்தில் சுமார் ஒரு லட்சத்திகும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்தியாவும், பெருவும் ஒரு லட்சத்தைக் கடந்திருக்கிறார்கள். சீனா 82,971 பேருடன் கணக்கை நிறுத்திக் கொண்டது.
இந்தியா சென்ற வாரம் 78,810 ஆக இருந்தது இன்று 118,501 ஆகி இருக்கிறது. இனிவரும் காலத்தில் இன்னும் அதிகமாகலாம். கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 334,622 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டவர்களில் இதுவரை 2,081,511 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். கோடை முடிந்து குளிர் காலம் வரும்போது இரண்டாவது சுற்று கொரோனா வைரஸின் தாக்குதல் நடக்கலாம் என எதிர்பார்க்கிறார்கள். அதற்கிடையில் இதற்கான மருந்துகள் கண்டுபிடித்து விடுவார்கள் என நம்புவோம்.
Average Rating