சிறுத்தைகளின் மரணசாசனங்கள்!! (கட்டுரை)
அண்மை நாட்களில் இலங்கையில் வேட்டைக்கு வைக்கப்படும் தடங்களில் சிக்கி சிறுத்தைகள் மரணிப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த வாரத்தில் மலையக பகுதிகளில் சுருக்கு தடத்தில் சிக்கி இறந்த இலங்கையில் உயிருடன் அவதானிக்கப்பட்ட ஒரே ஒரு கருஞ்சிறுத்தையும் சில மாதங்களுக்கு தடத்துடன் மரத்தில் ஏறி இறந்த சிறுத்தையும் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இவை இரண்டும் வனவிலங்கு திணைக்கள கால்நடை வைத்தியர்களால் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டிருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இறந்திருந்தன. இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்களால் சமூக ஊடகங்களிலும் சிங்கள ஆங்கில பத்திரிகைகளிலும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. தமிழ்ச்சூழலில் இது தொடர்பான செய்திகளை பெரியளவில் காண முடியவில்லை. இந்த கட்டுரையின் நோக்கம் மேற்படி சிறுத்தைகளின் மரணத்துடன் தொடர்புடைய பின்புலங்களை ஆராய்வதாகும்.
முதலில் அண்மையில் இறந்த கருஞ்சிறுத்தையின் விடயத்தை பார்ப்போம். கருஞ்சிறுத்தைகள் தனியான இனம் கிடையாது. உலகிலுள்ள 25 ற்கு மேற்பட்ட சிறுத்தை உப இனங்களில் பந்தீரா பார்டுஸ் கொட்டியா [ panthera pardus kotiya ] எனும் இலங்கை சிறுத்தைகளும் ஒரு உப இனமாகும் . பிறப்பின் போது மரபுப்பொருளில் ஏற்படும் மாற்றத்தால் அதிகமாக மெலனின் [ Melanistic leopard ] ஏற்றப்பட்டவைதான் இந்த கருஞ் சிறுத்தைகள். இலங்கை இந்தியா நாடுகளில் குறைவாகவும் மலேசிய தீபகற்பத்தில் ஏறக்குறைய பெரும்பாலான சிறுத்தைகளும் மெலனின் அதிகமாக ஏற்றப்பட்ட கரிய நிறமானவை. சிறுத்தைகள் மட்டுமன்றி ஜாகுவார் போன்ற வேறு சில பூனைக் குடும்ப விலங்குகளிலும் இந்த நிறமேற்றம் நிகழ்கிறது. சிறுத்தை மற்றும் ஜகுவாரின் மெலனின் ஏற்றப்பட்ட விலங்குகளை கருப்பு பந்தீர் [ black panther] என பொதுவில் அழைப்பார்கள். அதாவது சாதாரண சிறுத்தைகளில் தோல் மஞ்சள்- பொன் மஞ்சள் நிற பின்னணியில் கறுப்பு புள்ளிகள் காணப்படும் அதேவேளை கருஞ்சிறுத்தைகளில் பின்னணியும் கறுப்பு நிறமாகவே காணப்படும். கூர்ந்து அவதானித்தால் கரிய தோலில் வழமையான சிறுத்தைகளிலுள்ள அடர்ந்த கரும்புள்ளிகள் தெரியும்.
இந்த கருஞ்சிறுத்தைகள் சாதாரண சிறுத்தைகள் போன்றவைதான். இவற்றுக்கு பிறக்கும் குட்டிகள் பெரும்பாலும் சாதாரண சிறுத்தைகள் போலத்தான் பிறக்கும். இது எப்படியென்றால் மனிதர்களில் வெள்ளைக்காரர் போன்ற அல்பினிசம் எனும் நிறமூர்த பிரச்சனையால் வெளிறிய மனிதர்கள் பிறப்பதும் அவர்களுக்கு சாதாரண பிள்ளைகள் பிறப்பது போன்ற நிலையாகும். சிங்கங்கள், புலிகள், பாம்புகளில் அல்பினிச நிலை அதாவது வெளிறிய நிலை ஏற்படுவதுண்டு. தமிழக வண்டலூர் மிருக காட்சி சாலையில் ‘’பீஷ்மர்’’ எனும் அல்பினிச வெண் புலியை கடந்த வருடம் கண்டிருந்தேன். கருஞ் சிறுத்தைகளாக இருப்பதன் அனுகூலங்கள் தொடர்பாக சில கருதுகோள்கள் முன்வைக்கப் படுகின்றன. பெரும்பாலும் அடர்ந்த இருண்ட மழைக் காடுகளை அண்மித்த பகுதிகளிலேயே பெரும்பாலும் அவை அவதானிக்கபடுகின்றன .இதன் காரணமாகவே அடர்த்தியான மலேசிய காடுகளில் கருஞ் சிறுத்தைகள் அதிகரிக்கின்றதையும், இலங்கையில் அவதானிக்கபட்ட எல்லா கருஞ் சிறுத்தைகளும் மழைக் காடுகளிலேயே வாழ்ந்தமையையும் உதாரணமாக கூறலாம்..
மேலும் வறண்ட உலர் வலய ஐதான காடுகள் மற்றும் பாலை வன பகுதிகளில் அதிகம் பொன் மஞ்சள் நிறமான சாதாரணமான சிறுத்தைகளே காணப்படுகின்றன. அதாவது இலங்கை, இந்திய உலர் பகுதி மற்றும் ஆபிரிக்க பாலைவன பகுதிகளில் இவை வாழ்கின்றன. இந்த இயல்பு சில வேளைகளில் வெப்ப பாதுகாப்பாக இயற்கையால் தகவமைக்கப்பட்டதாக இருக்கலாம். அத்துடன் மலேசிய பகுதி அடர் காடுகளில் சிறுத்தைகளை வேட்டையாடும் புலிகளில் இருந்து பாதுகாக்க இந்த ஏற்பாடு அமைந்திருக்கலாம். ஆபிரிக்க பாலைவன பகுதிகளில் பொன் மஞ்சள் நிறம் சிறுத்தைகளை அவற்றை வேட்டையாடும் புலி சிங்கங்களில் இருந்து பாதுகாக்க உதவியாக இருக்கலாம். இலங்கையில் புலி , சிங்கங்கள் இல்லாத நிலையில் சிறுத்தை தான் அதி உச்ச வேட்டை விலங்கு [ Apex predator] . இது தொடர்பான எதிர்கால ஆய்வுகள் மிக முக்கியமானவை.
கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் சில கருஞ்சிறுத்தைகள் இறந்த நிலையில் கிடைத்திருந்தாலும் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சிவனொளிபாத மலைக் காடுகளிலுள்ள நல்லதண்ணி பகுதி தோட்டப்புறத்தில் ஒரு கருஞ்சிறுத்தையின் நடமாட்டம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வன விலங்குகள் கால்நடை வைத்தியர்களான மாலக்க அபேரத்ன, மனோஜ் அகலங்கவால் தானியங்கி புகைப்பட கருவி மூலம் மூலம் முதன்முதலில் படமாக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு வைத்தியர்களும் தான் மேற்படி சிறுத்தைக்கு சிகிச்சையளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிரிதலே வனவிலங்கு கால்நடை வைத்தியசாலையில் பல வருடங்களுக்கு முன் இறந்த கருஞ்சிறுத்தைக் குட்டியின் பாடம் செய்யப்பட்ட உடல் உள்ளது. மேலும் இறந்த சகல சிறுத்தைகளும் சுருக்கு தடங்களில் சிக்கியே இறந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
காட்டுப்பன்றி மான் மரை போன்ற விலங்குகளை பிடிக்க வைக்கப்படும் கம்பித் தடங்களில் அதிகமாக சிறுத்தைகள் சிக்குகின்றன. பயிர்களை சேதமாக்கும் விலங்குகளை பிடிக்கவும் இறைச்சித் தேவைக்காகவும் தடங்கள் வைக்கப்படுகின்றன. கடந்த சில வருடங்களில் மட்டும் முப்பதுக்கு மேற்பட்ட சிறுத்தைகள் இந்த தடங்களில் சிக்கியிருக்கின்றன. ஒரு சில காப்பாற்றப்பட்டாலும் பெரும்பாலானவை தடத்தில் சிக்கியதால் ஏற்படும் பக்க விளைவுகளால் இறந்துவிட்டன. சிறுத்தைகளின் பெரும்பாலும் கழுத்து மற்றும் இடுப்பு பகுதிகள் இறுகியே மரணம் சம்பவிக்கிறது. கழுத்து இறுகினால் மூச்சு குழாய் அடைபட்டும் உடலுக்குரிய இரத்த ஓட்டம் தடைப் பட்டும் இடுப்பு பகுதி இறுகினால் அப்பகுதிக்குரிய பகுதியின் இரத்த மற்றும் நரம்பு தொடர்பு அறுபட்டு சிறுநீரக செயழிழப்பு நிகழ்ந்தும் விலங்குகள் இறக்கின்றன.
தடத்தில் சிக்கும் விலங்குகள் எப்படியும் தப்பிக்க நினைத்து பாய்ந்தும் இழுத்தும் கடுமையாக முயற்சிக்க சுருக்கு தடம் மேலும் இறுகிவிடும். உடனடியாக தடத்தை அகற்றி வைத்திய சிகிச்சை செய்யாது போனால் மரணம் ஏற்படும் சாத்தியம் அதிகமாகும். மீளும் சிறுத்தைகள் கூட தமது வாழ்நாள் முழுவதும் பல உடல் உபாதைகளை கொண்டே வாழ வேண்டி ஏற்படுகிறது.
இந்த கருஞ்சிறுத்தை பிடிபட்டவுடன் உடவளவை யானைகள் காப்பு நிலைய வைத்தியர் மாலக்க அபேரத்னவும் றந்தனிகல வனவிலங்கு வைத்தியர் மனோஜ் அகலங்கவும் வந்திருக்கிறார்கள். தங்களது வைத்திய நிலையங்களில் இருந்து மேற்படி நல்லதண்ணி பகுதிக்கு அவர்கள் வரவே பல மணி நேரம் எடுத்திருந்தது. அடிக்கடி வன விலங்கு உயிரிழப்பு நிகழும் அந்த பகுதியை அண்மித்து ஒரு வன விலங்கு வைத்திய சாலை இல்லாதது ஒரு குறைபாடே. சிக்கிய விலங்கை நினைவிழக்க செய்து அந்த பகுதியில் இருந்து மிக அண்மையிலுள்ள வன விலங்கு கால்நடை வைத்திய நிலையமான உடவளவைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்த போதும் சிகிச்சை பலனின்றி பெறுமதிமிக்க அரிய சிறுத்தை இறந்துவிட்டது என்பது வேதனையான விடயமாகும்..
தடத்தில் ஏறிய இரண்டாவது சிறுத்தையின் கதைக்கு வருவோம். இதே நல்லதண்ணி பகுதியில் சிலமாதங்களுக்கு முன் தடத்தில் சிக்கிய சிறுத்தை ஆண் சிறுத்தை ஒன்று இருபது அடி உயரமான மரத்தில் தடம் இணைக்கப்பட்ட கட்டையுடன் ஏறி கிளையில் சிக்கியிருந்தது. ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியர் மனோஜ் அகலங்க அதனை மயக்கி சிகிச்சையளித்த போதும் பலனின்றி அந்த விலங்கு இறந்திருந்தது.
இந்த இரண்டு சம்பவங்களும் சூழ இருந்த பொதுமக்களால் படம் பிடிக்கப்பட்டிருந்தன. இந்த கணொளிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட பின் விலங்குநல ஆர்வலர்கள் பொதுமக்களால் கடும் விமர்சனத்நுக்கு உள்ளாகியிருந்தன. ஒருகட்டத்தில் கால்நடை வைத்தியர்களின் தகமை மற்றும் திறன் தொடர்பிலும் வனவிலங்கு திணைக்களத்தின் நம்பக தன்மை தொடர்பிலும் கேள்விகளை எழுப்பியதோடு உச்ச பட்சமாக ஜனாதிபதியை தலையிட்டு இராணுவத்தை கொண்டு சிகிச்சை செய்ய அனுப்ப வேண்டும் என்பதுமாதிரியான குரல்கள் எழும்பத்தொடங்கியுள்ளன.
உண்மையில் இது மனித விலங்கு முரண்பாடு தொடர்பானது. தொடர்ச்சியான வாழ்விட இழப்பு காரணமாக சிறுத்தைகள் , யானைகள் போன்ற பல காட்டு விலங்குகள் மனிதனுடன் முரண்பட்டு இறுதியில் காட்டுவிலங்குகள் மற்றும் மனித இழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இலங்கையில் உலர்வலயத்திலும் மலைப்பகுதி காடுகளிலும் சிறுத்தைகள் வாழ்கின்றன. உலர் வலய சிறுத்தைகள் காடுகளில் தண்ணீர் இன்றி மனித குடியேற்றங்களுக்கு வந்து கிணறுகளில் விழுந்து இறப்பதும் அவை உட்கொள்ளும் மான் மரை கட்டுப் பன்றிகளின் அளவு குறைவடைய மனிதர்கள் வளர்க்கும் கால்நடைகள் மற்றும் நாய்களை இலக்கு வைத்து குடியேற்றங்களுக்கு வருவதால் மக்களால் நஞ்சூட்டியும் அடித்தும் கொல்லப்படுகின்றன.
அண்மையில் கிளிநொச்சியில் மக்கள் நடமாட்டம் மிக்க பகுதிக்கு வந்த சிறுத்தை பகுதி மக்களால் அடித்துக் கொல்லப் பட்டதை இந்த இடத்தில் நினைவு படுத்துகிறேன். பத்து வருடங்களுக்கு முன் கிளிநொச்சி பகுதியிலும் தடத்தில் சிக்கி சிறுத்தைகள் இறந்ததை செய்திகள் வாயிலாக அறிந்திருக்கிறேன். உலர் வலயத்தில் பல இடங்களில் காடுகளை அண்மித்து ஆடு, மாடுகளை மேய்க்கும் போது சிறுத்தைகள் அவற்றை பிடிக்கின்றன. இதனால் கோபமுறும் மக்கள் இறந்த விலங்கு உடல்களிலேயே நஞ்சூட்டி அந்த சிறுத்தைகளை கொலை செய்கின்றனர். இந்த மாதிரியான பெரும்பாலான கொலைகள் வெளிப்படுத்தப்படுவதில்லை. ரகசியமாக அவை அடக்கம் செய்யப்படுகின்றன.
மலைப்பகுதி சிறுத்தைகள் பெரும்பாலும் தடத்தில் சிக்கியே இறக்கின்றன. தேயிலை தோட்டங்களின் விஸ்தரிப்பு , புதிய நீர்த்தேக்கங்களின் உருவாக்கம் மற்றும் மக்கள் குடியேற்றங்களின் அதிகரிப்பு , புதிய உல்லாச பயண விடுதிகளின் அதிகரிப்பு காரணமாக மலைபகுதி காடுகள் அழிவதால் சிறுத்தைகளின் இயற்கையான பல வாழ்விடங்கள் அழிக்கப் பட்டுள்ளன. அத்துடன் சிறுத்தைகளின் இரை விலங்குகளான மான் மரைகள் குறைவடைய உணவு தேடி மக்கள் குடியிருப்புகளுக்கு சிறுத்தைகள் அதிக அதிகமாக வருகின்றன. அண்மைக் காலத்தில் அவற்றின் பிரதான உணவு வளர்ப்பு நாய்கள் தான். அண்மையில் செய்த பல ஆய்வுகளின் படி மலைப்பகுதி சிறுத்தைகளின் மலத்தில் 40-50% நாய்களின் பகுதிகள் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.. அண்மையில் பல சீசீ டிவி வீடியோக்களில் வீட்டு நாய்களை சிறுத்தை பிடிப்பதை காண முடிகிறது..இந்திய மும்பை பகுதியில் சிறுத்தைகள் வீதியில் திரியும் நாய்களை உணவுக்காக பிடிப்பதால் தெரு நாய்களின் எண்ணிக்கையை குறைத்து ரேபீஸ் நோயை தடுக்கும் காரணியாக இருபதாக ஒரு விசித்திரமான ஆய்வு கூறுகிறது.
சிறுத்தைகள் மனிதர்களை கண்டு அச்சமடையக்கூடியவை. அவை தடங்களில் மாட்டும் போது அதனை சூழ மக்கள் அதிகமாக கூட அவை மேலும் கலவரமடைந்து தமது காயத்தை பெருப்பித்துக் கொள்கின்றன. நல்லதண்ணி பகுதியில் மரத்தில் சிக்கிய சிறுத்தை இடுப்பில் தடம் மாட்டியிருக்க அதனை சூழ நூற்றுக்கு மேற்பட்ட மக்களை காணமுடிந்தது. மக்களின் செயற்பாடு காரணமாக தான் அந்த சிறுத்தை அச்சமுற்று மரத்தில் எறியிருக்கிறது. சிறுத்தைகள் அச்சமடைந்து அழுத்தத்துக்கு உள்ளாகும் போது அதன் உடலில் பல்வேறு உடல் திரவங்கள் சுரந்து அதன் உடல் இயக்கத்தை பாதிக்க செய்கின்றன. இதனால் சிகிச்சையளிப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. சிறுத்தைகள் மட்டுமின்றி ஏனைய மனிதர் மற்றும் விலங்குகளுக்கும் அழுத்தமடையும் போது இந்த நிலைதான் ஏற்படுகிறது .
சிறுத்தைகள் பல மணி நேரம் தடத்தில் மாட்டும் போது அதிகமாக களைப்படைவதோடு நீர்ச்சத்தையும் இழக்கின்றன. இதனால் விலங்கை மயக்கமடைய செய்யும் போது சிக்கலை ஏற்படுத்தும். விலங்குகளுக்கு சிகிச்சையளிக்கும் போது அவை அச்சமடைவாதாலும் சிகிச்சை அளிபவருக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலும் அவை பொதுவாக மயக்கமடைய செய்வார்கள். மேலும் சாதாரண நிலையில் மயக்கமடைய செய்ய அதன் உடல் ஆரோக்கிய நிலை, வயது, நிறை என்பவற்றின் அடிப்படையிலேயே மயக்க மருந்து தீர்மானிக்கபடுகிறது. ஆனால் காட்டு விலங்குகளை பொறுத்த வரையில் நிறையை ஓரளவு அனுமானிக்கலாம் என்றபோதும் வயதையும் உடல் நிலையையும் அறிய முடியாது.
இந்த நிலையில் மயக்கமருந்து செலுத்துவது சவாலானது. மேலும் சிறுத்தை யானை போன்ற ஆபத்தான காட்டு விலங்குகளை அருகே சென்று மயக்க முடியாது. தூரத்தே நின்று துப்பாக்கி மூலம் சுட்டே மயக்க மருந்தை செலுத்தமுடியும். மரத்தில் சிக்கிய சிறுத்தையை சுடும் போது அந்த பகுதியில் கடும் காற்று வீசினாலும் தரை மட்டத்திலிருந்து உயரத்தில் இருந்ததாலும் சரிவர வைத்தியரால் இலக்கு வைக்க முடியாது. மேலும் இடுப்பில் கம்பி இறுகியதால் பின் புறத்தின் நரம்பு மற்றும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பின்பகுதி செயலற்று இருக்கும். இந்த நிலையில் மயக்க மருந்து வேலை செய்ய பல மணி நேரம் எடுக்கும்.
சிலவேளை விலங்கு மயக்கமடையாமலே போகலாம் அல்லது நீண்ட நேரத்தை குறைக்க மேலதிக மயக்க மருந்தை செலுத்த வேண்டி ஏற்படலாம். இதுதான் மரத்தில் ஏறிய சிறுத்தையை மீட்கும் போது சிக்கல் தன்மையை தோற்றுவித்திருந்தது.. அத்துடன் முன்புறத்திற்கு செல்வது விலங்கை கலவரமடைய செய்யும் என்பதோடு உயரமான மரத்தில் இருப்பதால் கண் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிப்படையும் என்பதால் வேறு வழியின்றி பின் புறமாகவே மயக்க மருந்து செலுத்தப்பட்டது. மேலும் மரத்தில் இருந்து அந்த விலங்கு இடுப்பில் தடத்துடன் தொங்கக் கூடிய வாய்ப்பு இருந்ததால் கவனமாகவே கையாளப்பட்டது.
இவை எல்லாம் ஒரு விலங்கை மயக்குவதிலுள்ள சில சவால்கள். இதனைவிட பல சவால்களும் உள்ளன. அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்பவே முடிவுகள் ஏற்படுகின்றன. மனிதர்களை போல வைத்திய சாலைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்க , மயக்க மருந்து வழங்க விலங்குகளுக்கு முடியாத காரியம்.அதுவும் சிறுத்தை யானை போன்ற காட்டு விலங்குகளுக்கு சொல்லவே தேவையில்லை. சில வேளைகளில் தடங்களில் மாட்டும் சிறுத்தைகளை யாரும் காணாது விட்டால் அவை இறப்பது உறுதி.
இந்த நாட்களில் பல சிறுத்தைகள் தடங்களில் சிக்கி மீட்டதாக அந்த வைத்தியர்களிடம் கதைத்ததில் இருந்து உணர முடிந்தது. கருஞ்சிறுத்தை இறந்த மறுநாள் மேற்படி வைத்தியர்கள் எட்டியாந்தோட்டையில் தடத்தில் சிக்கிய சிறுத்தையை மீட்டிருக்கிறார்கள்.நல்ல வேளையாக உடனடியாக சிகிச்சை அளித்ததால் அந்த விலங்கு தப்பிவிட்டது.
குணமடைந்த விலங்கு மீளவும் காட்டுக்குள் விடப்பட்டது. மேற்படி சிறுத்தைகள் தொடர்பாக சமூக ஊடகங்களில், விலங்கு நல ஆர்வலர்கள் குறிப்பாக சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் சிலர் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். மனிதர்களுக்கு சிகிச்சை செய்யும் அதே வசதி கட்டமைப்புகள் இலங்கையில் விலங்குகளுக்கு இன்றைவரை இல்லை எனபது அவர்களுக்கு தெரியாது போலும். ஒரு சில தனியார் கால்நடை வைத்திய நிலையங்களில் ஓரளவு வசதிகள் இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் அந்த வசதிகள் கிடையாது. இலங்கை போன்ற நாடுகளில் கிடைக்கும் மிக குறைந்தளவு வசதிகளை கொண்டே அந்த வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் நிலைமைக்கு தகுந்தது போல திறம்பட செயற்பட்டிருக்கிறார்கள் என்பதே எனது அபிப்பிராயம்.. ஊடகங்களில் வராத எமக்கு தெரியாத எத்தனையோ விலங்குகளை அடர்ந்த காடுகளுக்குள் சென்று பல நாள் போராடி தமது உயிரை துச்சமாக மதித்து காப்பாற்றியிருக்கிறார்கள்.
இன்றைய கொரோனா நிலை காரணமாக வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்கள் அதிகளவாக வீட்டு தோட்டங்களை செய்ய தொடங்கியுள்ளதாலும் உணவுக்கக இறைச்சியை பெறும் தேவை அதிகரித்துள்ளதாலும் இந்த நாட்களில் அதிக தடங்கள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வைக்கபட்டுள்ளன. இதனால் தான் அதிக சிறுத்தைகளின் இறப்புகள் ஏற்படுகின்றன என்பது எனது கணிப்பு. மேலும் அதிகரித்த சமூக ஊடக பாவனையும் இந்த மாதிரியான செய்திகளை உடனடியாக வெளிப்படுத்துகின்றன.
சிறுத்தைகள் போன்ற விலங்குகளின் நிலவுகை மனிதன் உட்பட ஏனைய விலங்குகளின் நிலவுகைக்கு தேவை எனும் விடயம் தொடர்பாக மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய தேவை அரசுக்கும் தொடர்பு பட்ட திணைக்களங்களுக்கும் ஊடகங்களுக்கும் உள்ளது. இலங்கையின் வன விலங்குகள் தொடர்பான குற்றங்களுக்குரிய சட்டங்களும் கடுமையாக்க படவேண்டும். மேலும் வன விலங்கு வைத்திய சாலைகள் சரியான வசதிகளுடன் மேலும் பல இடங்களுக்கு விஸ்தரிக்க படுவதுடன் அதிக வனவிலங்கு அதிகாரிகளையும் வைத்தியர்களையும் உள்ளீர்க்க வேண்டும். கடினமான பணி என்பதால் பொதுவாக கால்நடை வைத்தியர்கள் வனவிலங்கு திணைக்களத்துக்கு செல்வதில்லை.எனவே அதற்குரிய சலுகைகளையும் வாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும். அத்துடன் பல முக்கிய இடங்களில் பணியாட்களின் குறைவு காணப் படுவதோடு சில இடங்களில் குறிப்பாக மேற்கு பகுதிகளில் அரசியல் அழுத்தங்கள் காரணமாக அதிக பணியாட்கள் இருப்பதாகவும் குறை கூறப் படுகிறது. பணியாட்களில் பெரும்பாலனவர்கள் சிங்கள மொழி பேசுபவர்களாகவும் தமிழ் பேசுபவர்கள் குறைவாக காணப் படுவதாலும் வடக்கு கிழக்கு மலையக பகுதிகளில் தமிழ் பேசும் மக்களுடன் பணியாற்றும் போது அங்கு பிரச்சனைகள் தோன்றும்போது இனவாத முகம் எடுப்பதை தவிர்க்க முடிவதில்லை. எனவே மேற்படி திணைக்களங்கள் இவ்வாறான பிரச்சனைகளை தீர்க்க முயல வேண்டும். பிரதேச மட்ட கூட்டங்களில் பெரும்பாலும் மக்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் அதிகமாக விமர்சிக்க படும் திணைக்களங்களாக வனவிலங்கு மற்றும் வன இலாகா திணைக்களங்கள் காணப்படுகின்றன.
உலர் வலய பகுதிகளில் நடைமுறைப் படுத்தப் படும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பயிர்ச்செய்கை குடியேற்றங்கள் காரணமாக காடுகள் சுருங்கி அங்கு வாழ்ந்த வன விலங்குகள் பாதிக்கப் படுகின்றன. மனிதனுடன் அந்த விலங்குகள் மோதி உயிரிழப்புகள் ஏற்பட மக்கள் அடிப்படை காரணத்தை விளங்கிக் கொள்ளாமல் மேற்படி அதிகாரிகளுடன் முரண்படுகின்றனர். மனித – விலங்கு முரண்பாட்டுக்கு மேலதிகமாக பொதுமக்கள் வன விலங்கு திணைக்கள அதிகாரிகள் மோதலும் இடம்பெறுகிறது. மேலும் மேம்படுத்தப் பட்ட புதிய நீர்பாசன திட்டங்கள் காரணமாக கிராமங்களில் அதிக பயிர் செய் நடவடிக்கைகள் இடம் பெறுவதால் அந்த பகுதி கால்நடைகளை காடுகளில் மேய்க்கும் நிலையும் ஏற்படுகிறது. இது மான் மரை போன்றவற்றின் மேய்ச்சல் பரப்பை குறைத்து அவற்றை அழிவடைய செய்கின்றன. இதனாலும் அவற்றை உண்ணும் சிறுத்தைகளும் உணவின்றி மக்கள் குடியேற்றங்களுக்கு வரத் தொடங்குகின்றன. மனிதனுடன் மோதுகின்றன.
எனவே இது தொடர்பான ஆபத்தை உணர்ந்து இந்த சிறுத்தைகளின் மரணத்தை ஒரு எச்சரிக்கையாக கொண்டு நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை சகல தரப்பையும் ஒன்றிணைத்து செய்யாது போனால் இந்த தொடர்ச்சியான இழப்புகள் இந்த பூமியில் சகல உயிரினங்களையும் துடைத்தெறியும் நிலைக்கு கொண்டு வந்து விடும் என்பது நிதர்சனம்.
Average Rating