மின்சாரத்துடன் எப்படி வாழ முடிகிறது?! (மகளிர் பக்கம்)
நமது சுயநலத்திற்காக இயற்கையை வரைமுறையின்றி சிதைத்து இருக்கிறோம். அதாவது நிலத்தை, பெருங்கடலை விஷமாக்கி, பல்லுயிர் சூழலை நாசமாக்கி நம் தேவைகளை பூர்த்தி செய்துள்ளோம். சூழலியலை சிதைத்ததன் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் அழிந்திருக்கின்றன.லட்சக்கணக்கான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இந்த அழிவிற்கு பல காரணிகள் இருந்தாலும் முன் நிற்பது மின்சாரம். மின்சாரத்தால் பெரும் பயன் அடைந்தாலும், இன்றைய தலைமுறை சந்திக்கும் பெரும்பான்மையான பிரச்சினைகளுக்குக் காரணம் இதுவே.
மின்சாரத்தின் நுகர்வு இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாமல் பழக்கப்பட்டிருக்கும் நம் மத்தியில், பல ஆண்டுகளாக மின்சார பயன்பாடு இல்லாமல் இயற்கையோடு இைணந்து வாழ்ந்து வருகிறார் 79 வயதான டாக்டர் ஹேமா சேன். புனேயில் புத்வார் பேத் என்னுமிடத்தில் வசித்து வரும் இவர் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் மிகவும் நேசிப்பதால் மின்சாரத்தை விரும்பவில்லை என்கிறார்.“உணவு, உடை, இருப்பிடம் ஆகியவைதான் வாழ்வாதாரத்துக்கு அடிப்படை. ஒரு காலத்தில் மின்சாரம் இல்லாமல்தான் இருந்தது. தற்போது மின்சாரம் இருந்தாலும், எனக்கு இது ஒன்றும் பெரிதாகத் தேவைப்படவில்லை.
எனக்கு இயற்கையும், அதைச் சார்ந்த சுற்றுச்சூழலும்தான் பிடித்திருக்கிறது. அதனால் மின்சாரம் இல்லாதது பெரும் குறையாக இல்லை. மக்கள் என்னை முட்டாள் என்று நினைக்கிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. என் வாழ்க்கையை என் விருப்பம் போல் வாழ்கிறேன்” என்கிறார்.
டாக்டர் ஹேமா சேன், தனது சொத்தாகக் கூறுவது ஒரு நாய், இரண்டு பூனை, கீரிப்பிள்ைள மற்றும் பல வகை பறவைகள். பல்வேறு மரங்களுக்கு நடுவே ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்து வரும் ஹேமாவை சுற்றிலும் பறவைகள் இருந்து கொண்டேயிருக்கின்றன. அவரது ஒவ்வொரு நாளும் காலை பறவைகளின் மெல்லிய சத்தங்களுடன் தொடங்கி, இயற்கை ஒளியுடன் இரவு முடிகிறது.
தாவரவியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள ஹேமா, எப்போதெல்லாம் தனியாக இருக்கிறாரோ அப்போதெல்லாம் புதிய புத்தகங்களை எழுத இவரின் கைகள் ஆயத்தமாகின்றன.
சுற்றுச்சூழல் தொடர்பான ஆராய்ச்சிகள் மூலம் அவருக்குத் தெரியாத பறவைகள் மற்றும் மரங்களே இல்லை. புனே பல்கலைக்கழகமான சாவித்ரிபாய் புலேவில் தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பல ஆண்டுகளாக கர்வவேர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
“என் வாழ்நாள் முழுவதும் மின்சாரம் இன்றிதான் வாழ்ந்திருக்கிறேன். பலரும் என்னிடம் மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ முடிகிறது என்று கேட்கிறார்கள். நான் பதிலுக்கு மின்சாரத்துடன் எப்படி வாழ முடிகிறது என்று கேள்வி எழுப்புகிறேன்” என்று கூறும் ஹேமா, “இந்தப் பறவைகள்தான் என் நண்பர்கள். எப்போது வீட்டு வேலை பார்த்தாலும் அவைகள் என் பக்கத்தில் வரும். மக்கள் பலரும் இந்த வீட்டை விற்றால் நிறைய பணம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
ஆனால், என்னால் இந்த மரங்கள், பறவைகளை விட்டு எங்கும் இருக்க முடியாது. நான் எந்தவொரு செய்தியையோ அல்லது பாடத்தையோ யாருக்கும் அளிக்கவில்லை. புத்தரின் புகழ்பெற்ற மேற்கோளான ‘உங்கள் வாழ்க்கைக்கான பாதையை நீங்களே தேர்வு செய்யுங்கள்’ என்பதைத்தான் நான் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.
நல்வாழ்வு என்பது குறித்த நம் புரிதல் மாற வேண்டும். அதிகம் நுகர்வதுதான் சிறந்த வாழ்வு என்ற இந்த சமூக புரிதலையும் நாம் மாற்றிக் கொள்வது அவசியம். சக மனிதர்களுடன் நல்லுறவுடன் வாழ்வது, இயற்கையுடன் இணைந்து வாழ்வதுதான் நல்வாழ்வு என்ற புரிதல் நமக்குள் உண்டாகட்டும்.
இத்தனை காலமாக பொருளாதார வல்லுநர்கள் இயற்கையை பண்டமாக, பணமாகத்தான் மதிப்பிட்டிருக்கிறார்கள். இப்படியாக கூறினால்தான் அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் புரியும் என்பது பொருளாதார வல்லுநர்களின் வாதம். ஆனால், சில சூழலியலாளர்கள் இந்த பார்வைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இந்த பார்வையானது இயற்கைக்கு ஊறு விளைவிக்கிறது, இயற்கையையும் மற்றொரு பண்டமாகவே பார்க்க உதவுகிறது. இயற்கையை டாலராக, பவுண்டாக, ரூபாயாகப் பார்ப்பது மாற வேண்டும் என்பது ஹேமா போன்றவர்களின் வாதம்.
Average Rating