ஈறுகளின் வீக்கத்தை போக்கும் மிளகு!! (மருத்துவம்)
நாட்டு மருத்துவத்தில் பக்கவிளைவில்லாத உணவையே மருந்தாக்கும் வகையில் உணவு பொருட்கள், மூலிகைகள் மற்றும் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு மருந்து தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் காரத்தன்மை கொண்டதும் தொண்டைக்கு இதமளிக்க கூடியதுமான மிளகின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். கேரளாவில் அதிகம் விளையக்கூடிய மருத்துவ குணம் கொண்ட பொருட்களில் ஒன்று மிளகு. காரத்தன்மை கொண்ட மிளகினை அடிக்கடி உணவில் சேர்ப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஏ, சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. சிறிய அளவிலான இந்த மிளகு மணத்தையும், பல மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியுள்ளது. இதில் உள்ள சுண்ணாம்பு, இரும்பு, மெக்னீஷியம், துத்தநாகம் உள்ளிட்ட உப்புக்கள் உடல் செயல்பாட்டுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. குரல் வளத்தை தூண்ட செய்கிறது. பாலில் கலந்து குடிப்பதால் நல்ல தூக்கத்தை தந்து உடல் களைப்பினை அகற்றுகிறது. மிளகினை பயன்படுத்தி எளிதான மருந்து தயாரிப்பது குறித்து பார்க்கலாம். அஜீரணம், கழிச்சலை சரிசெய்யும் சூரணம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: மிளகு, கசகசா. செய்முறை: வானலியில் மிளகு மற்றும் கசகசாவை வறுத்துக் கொள்ளவும். கசகசா பொரிந்ததும், பெருங்காய பொடி சேர்த்து பொடித்துக் கொள்ளவும். அஜீரண கோளாறு நேரங்களில், ஒரு கப் நீரில் இந்த பொடியுடன், சுவைக்கு உப்பு சேர்த்து அருந்துவதால் உடல் உபாதை சரியாகும். மிளகில் பெப்பரின் என்ற வேதிப்பொருளும், நோய் தடுப்பான் என்றழைக்கப்படும் கெரட்டீன் என்ற வேதிப்பொருளும் இருப்பதால் வாயுவை வெளித்தள்ளி உடலை சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது. கழிச்சலை தவிர்க்கிறது. செரிமானத்தை சீர்செய்கிறது.
மிளகை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மிளகு, பாதாம், பனங்கற்கண்டு. செய்முறை: வறுத்த மிளகு(1 பங்கு), பாதாம்(5 பங்கு) எடுக்கவும். மிளகு, பாதாம், பனங்கற்கண்டு ஆகிய மூன்றையும் பொடித்து வைத்துக் கொள்ளவும். தினமும் இந்த பொடியில் ஒரு தேக்கரண்டியை பாலில் கலந்து குடித்து வருவதால், நரம்புகள் பலப்படும். கை, கால் வலி சரியாகும். உடலுக்கு சூட்டினை தருகிறது. மனதுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. மிளகை கொண்டு பல் வலி, ஈறுகளின் வீக்கத்துக்கு மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: மிளகு பொடி, பெருங்காய பொடி, உப்பு. செய்முறை: மிளகு பொடி, பெருங்காய பொடி, உப்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து பற்களில் பூசலாம். அதுமட்டுமல்லாது ஈறுகளில் வலி எடுக்கும்போது அவற்றின் மேல் வைத்து அழுத்தினால் சிறிது நேரத்தில் வலி குறையும். ஈறுகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுகிறது. ஈறு வீக்கங்களில் இருக்கின்ற கெட்ட நீரினை பெருங்காயம் வெளித்தள்ளி, இதமான சூழலை ஏற்படுத்துகிறது. வாரம் ஒருமுறை இந்த கலவையை பற்களுக்கு பயன்படுத்தி வருவதால் பல் சொத்தை, ஈறு வீக்கம், ரத்த கசிவு ஆகியவற்றிலிருந்து விடுபடலாம்.
Average Rating