அஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம்!! (மருத்துவம்)
நாட்டு மருத்துவத்தில் அன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு மூலிகை, அதன் பயன்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் மூலிகை, பழங்கள், வீட்டு சமையலறைகளில் உள்ள பொருட்களை கொண்டு எளிதான வகையில் உடல் உபாதைகளுக்கு உடனடி நிவாரணம் தரும் மருந்து தயார் செய்து வருகிறோம். இன்று குடல் சுருக்கம், ஜீரண சக்தி குறைபாடு, வாயு தொல்லைகளால் அவதிப்படுவோருக்கு இஞ்சி, வில்வ பழம் கொண்டு செரிமானத்தை தூண்டும் மருந்து செய்வது பற்றி பார்க்கலாம். அஜீரண கழிச்சலை சரிசெய்யும் இஞ்சி பச்சடி தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: இஞ்சி (நறுக்கியது), சீரகம், வரமிளகாய், தயிர், உப்பு. செய்முறை: சிறிதாக நறுக்கிய இஞ்சி, விதை நீக்கிய வரமிளகாய், சீரகம், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். இதனுடன் தயிர் சேர்த்து பச்சடியாக மதிய வேளையில் சாப்பிடும்போது, கழிச்சல் சரியாகிறது. இன்றைய காலகட்டத்தில் சத்து பற்றாக்குறைக்கு மிக முக்கியமான காரணமாக அமைவது செயற்கை உணவுகளின் பயன்பாடு. இந்த உணவுகள் சுவையாகவும், விரைவில் சமைக்க கூடியதாகவும் இருந்தாலும், உட்கொள்ளும்போது உடலில் நச்சு தன்மைகளை சேர்ப்பதுடன், மிகுந்த அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் செரிமான சக்தி குறைந்து, நாளடைவில் உண்ணுகின்ற உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களும் சரியாக உறியப்படாத நிலை ஏற்படுகிறது. இந்த பச்சடியை அடிக்கடி உணவுடன் எடுத்துக்கொள்வதால் காரத்தன்மை கொண்ட இஞ்சி வாயுக்களை வெளியேற்றி, குடலில் ஜீரணத்துக்கு தேவையான ‘பெப்டிக்’ அமிலத்தை சுரக்க செய்து உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்ச செய்கிறது. வாயுவை வெளித்தள்ளும் வில்வபழ சர்பத் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வில்வ பழத்தின் சதைப்பகுதி, தேன். செய்முறை: வில்வ பழத்தின் சதைப்பகுதியில் நெல்லிக்காய் அளவு எடுத்து, ஒரு கப் நீரில் கொதிக்க விடவும்.
சாறு நன்கு நீரில் கலந்தவுடன் வடிகட்டி தேன் சேர்த்து அருந்தவும். வில்வ பழ சர்பத் குடலின் உறிஞ்சு தன்மை குறைபாட்டினை சரிசெய்கிறது. வயிற்றில் புண்கள் இருந்தாலோ, வயிற்றில் வாயுக்கள் இருந்தாலோ அவற்றை சரிசெய்து பசியினை தூண்டுகிறது. வில்வபழம் வீக்கத்தை குறைத்து, வலியை போக்கக்கூடியது. சிறுங்குடல், பெருங்குடலின் சுருங்கி விரியும் தன்மையை வேகப்படுத்தி, உடலை சுறுசுறுப்புடன் இயங்க செய்கிறது. குடலின் உறிஞ்சும் தன்மையை சீராக்கும் தேநீர் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: திரிகடுக சூரணம், வெந்தயம், சோம்பு, சீரகம். செய்முறை: வானலியில் வெந்தயம், சீரகம், சோம்பு சேர்த்து லேசாக வறுக்கவும். பின்னர் அதனுடன் திரிகடுக சூரணப்பொடி சேர்த்து, 1 கப் நீர் விட்டு கொதிக்க விடவும். இந்த தேநீருடன் தேன் விட்டு அவ்வப்போது அருந்துவதால் வயிற்று உப்பசம், குடல் சுருக்கம், இருமல் உள்ளிட்ட உபாதைகள் நீங்குகின்றன. சுக்கு மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து வறுத்து பொடித்து கொள்வதே சூரணப்பொடியாகும்.
காரத்தன்மை கொண்ட இந்த சூரணத்துடன் உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம், செரிமானத்தை தூண்டும் சோம்பு சேர்க்கப்படுகிறது. வெந்தயத்தில் உள்ள நார்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் சத்துகள் உடலை சுறுசுறுப்புடன் இயக்குகிறது. இதனால் உடலில் வாயு தேங்காமல் குடல் முறையாக சுருங்கி விரிய செய்கிறது. இந்த தேநீரை அருந்துவதால், பசியை தூண்டி வயிற்று செரிமானத்தை சீராக்குகிறது. அது மட்டுமல்லாது சளி தொல்லைகளில் இருந்தும் சிறந்த நிவாரணம் தருகிறது.
Average Rating