வயிற்றுபோக்கை குணமாக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்றுப்போக்கு பிரச்னையை தீர்க்கும் மருத்துவ முறைகள் குறித்து பார்க்கலாம். கொய்யா இலை, நாவல் இலை, வெண்டைக்காய், அத்திக்காய் ஆகியவை வயிற்றுப்போக்குக்கு மருந்தாகிறது. தொற்று கிருமிகள், அஜீரணம் போன்றவை வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு காரணமாகிறது.
மேலும், முறையற்ற உணவு முறைகளாலும் வயிற்றுபோக்கு உண்டாகிறது. அதிமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது நீர்ச்சத்து குறைந்து மயக்கம், வாந்தி, காய்ச்சல், குமட்டல் போன்றவை ஏற்படும். அதிக காரமுள்ள உணவுப்பொருட்களை சாப்பிடுவதால் ஏற்படும் அல்சர் மற்றும் மன உளைச்சல் காரணமாக வயிற்றுபோக்கு ஏற்படும். நாவல் மரத்தின் இலை, கொய்யா இலை கொழுந்து ஆகியவற்றை பயன்படுத்தி வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் நாவல் இலை, கொய்யா இலைகளின் கொழுந்துகளை எடுத்து துண்டுகளாக்கி போடவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி இருவேளை குடித்துவர எவ்வித வயிற்றுபோக்கும் கட்டுக்குள் வரும். குடல் பலப்படும்.
வெண்டைக்காய் பிஞ்சுகளை பயன்படுத்தி வயிற்றுப்போக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெண்டைக்காய், பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்டைக்காய் பிஞ்சுகளை சிறு துண்டுகளாக்கி போடவும். இதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தினமும் இருவேளை குடித்துவர வயிற்றுக் கடுப்பு, சீதபேதி, ரத்தம் கலந்துவரும் பேதி ஆகியவை குணமாகும். வயிற்றுபோக்கு சமயத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி சரியாகும்.
பல்வேறு நன்மைகளை கொண்ட வெண்டைக்காய் சுவையான உணவாகிறது. வழுவழுப்பு தன்மை உடைய இது உடல், குடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. வயிற்றுப்போக்கு என்பது கோடை, குளிர், மழை என அனைத்து காலங்களிலும் வரக்கூடியது. சாதிக்காயை பயன்படுத்தி வயிற்றுப்போக்குக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சாதிக்காய், பால். செய்முறை: 50 மில்லி காய்ச்சிய பால் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் சாதிக்காய் சேர்த்து கலந்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கு குணமாகும். பல்வேறு மருத்துவ குணங்களை உடைய சாதிக்காய் மிகுந்த துவர்ப்பு சுவை உடையது. இது வயிற்றுபோக்கை குணப்படுத்தும் தன்மை கொண்டது. வயிற்று கோளாறுகள் சரியாகும். நுண்கிருமிகளை போக்க கூடியது.
அத்திக்காயை பயன்படுத்தி வயிற்றுபோக்குக்கான மருந்து தயாரிக்கலாம். அத்தி பிஞ்சுகளை நசுக்கி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் 2 ஸ்பூன் தயிர், சிறிது உப்பு சேர்த்து கலந்து சாப்பிட்டுவர வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி குணமாகும். அத்தி துவர்ப்பு சுவை உடையது. துவர்ப்பு சுவை ரத்தத்தை கட்டக்கூடியது. கழிச்சலை நிறுத்தும் தன்மை உடையது. அத்திக்காயை வற்றலாக சாப்பிட்டுவர வயிற்றுபுண் சரியாகும்.
Average Rating