கோடையில் குளிர்ச்சி தரும் பானங்கள்!! (மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தற்போது கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளும் வகையில், மாதுளை, கொத்துமல்லி, ரோஜா போன்றவற்றை கொண்டு தயாரிக்கும் பானங்கள் குறித்து பார்க்கலாம்.
கோடைகாலத்தில் உடல் உஷ்ணமாவதால் சிறுநீர்தாரையில் எரிச்சல், கண்களில் எரிச்சல், நாவறட்சி, வியர்வை, கொப்புளங்கள், தோலில் கருமை, சுருக்கங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மாதுளை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதில், கால்சியம், மினரல் உள்ளது. வயிற்றுபோக்கு, ரத்தக்கசிவை தடுக்கும் தன்மை கொண்டது. கொத்துமல்லி குளிர்ச்சி தரக்கூடியது. தோல்நோய்களை குணப்படுத்தவல்லது.
மாதுளையை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாதுளை, பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பங்கு மாதுளை சாறு, ஒன்னரை பங்கு கற்கண்டு பொடி சேர்த்து பாகுப்பதத்தில் காய்ச்சவும். இதை எடுத்து வைத்துக் கொண்டு ஓரிரு ஸ்பூன் எடுத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உள் உறுப்புகள் குளிர்ச்சி அடையும். வயிற்று எரிச்சல், சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். வாந்தி, குமட்டலை சரிசெய்யும்.
கொத்துமல்லியை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொத்துமல்லி, சந்தனத்தூள், பனங்கற்கண்டு. செய்முறை: கொத்துமல்லி சாறு எடுக்கவும். இதனுடன், சிறிது சந்தன தூள், பனங்கற்கண்டு சேர்த்து பாகுப்பதத்தில் கொதிக்க வைக்கவும். இதில் இருந்து சிறிது எடுத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உடல் எரிச்சல் சரியாகும். உஷ்ணத்தை தணிக்கிறது. சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. ஆசனவாய் எரிச்சலை அகற்றும் அற்புத பானமாகிறது. உடலுக்கு பலம் தருகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
ரோஜா பூவை பயன்படுத்தி, பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல், மயக்கத்தை சரிசெய்யும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ரோஜா பூ, நார்த்தங்காய், கற்கண்டு பொடி. செய்முறை: ரோஜாப்பூ பசையுடன் நார்த்தங்காய் சாறு, கற்கண்டுபொடி சேர்த்து பாகுபதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதிலிருந்து சிறிது எடுத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உடல் சூடு தணியும். நீர்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். உடலுக்கு வலிமை, உற்சாகம் தரும் பானமாக விளங்கும். தலைச்சுற்றல், மயக்கம் குணமாகும்.
ரோஜா பூ அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. பல்வேறு நன்மைகளை கொண்ட ரோஜாவில், விட்டமின் சி, இரும்புச்சத்து, மினரல் உள்ளது. இது, துவர்ப்பு சுவையுடையதால் உள் உறுப்புகளில் ஏற்படும் ரத்த கசிவை குணமாக்கும். புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரும். கோடையில் அதிக வெயில் காரணமாக உடல் உஷ்ணமாகும். இதனால் பித்தம் அதிகமாகி ஈரல் பாதிக்க வாய்ப்புண்டு. இந்த பானங்களை குடித்துவர ஈரல் பாதுகாக்கப்படும்.
சொரி, சிரங்கு, படர்தாமரை போன்றவற்றுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். கோடைகாலத்தில் இப்பிரச்னைகள் எளிதில் பற்றும். இதற்கு எலுமிச்சை மருந்தாகிறது. எலுமிச்சை சாறுடன் சந்தன விழுது சேர்த்து நன்றாக கலந்து மேல்பூச்சாக போடுவதால் சொரி, சிரங்கு, படர்தாமரை பிரச்னை சரியாகும்.
Average Rating