ராஜபக்ஷக்களின் 20ஆவது திருத்தத்தினூடான செய்தி !! (கட்டுரை)
இலங்கை அரசமைப்பில் 18ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றோடு சரியாக 10 ஆண்டுகளும் இரண்டு நாள்களும் ஆகின்றன.
2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷக்கள் தங்களது அதிகார எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்து அதன் அதியுச்ச எல்லையை செப்டெம்பர் 08, 2010இல் 18ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் காலாகாலத்துக்குமாக இறுதி செய்ய நினைத்தார்கள்.
நாடாளுமன்றம் என்ற ஒன்றோ அதற்குள் எதிர்க்கட்சிகள் என்கிற ஜனநாயக விழுமியமோ கிஞ்சித்தும் மதிக்கப்படாமல் ஜனாதிபதி, அவர்தன் பரிவாரம் என்கிற அடிப்படைகளோடு நாட்டின் ஆட்சிக் கட்டமைப்பினை உறுதிப்படுத்தினார்கள். ஜனநாயக அடிப்படைகளில் ஒன்றான தேர்த ல்களை மாத்திரம் மக்கள் ஆணைக்கான ஒரு பொருட்டாக ராஜபக்ஷக்கள் அனு மதித்திருந்தார்கள். அதுதான், அவர்களை 2015 தோற்கடிப்பதற்கும் காரணமாக இருந்தது.
இலங்கை அரசியல் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது என்பது அவ்வளவு பெரிய சிக்கல் இல்லை. தேர்தல்களின் போது, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைய முடியாவிட்டாலும், பதவி ஆசை மற்றும் மிரட்டல் வழிகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஆளுங்கட்சிக்குள் உள்வாங்குவது எல்லாமும் இலகுவான வழிமு றைகள்தான். அதில் ராஜபக்ஷக்கள் பெரும் கில்லாடிகள். ஏனெனில், அரசியலில் கனவான் தன்மையை பேணுபவர்கள் மிகமிகக் குறைவு. அரசியல் என்பது பதவி குறித்தது என்கிற ஒற்றைப்படையான சிந்தனையோடுதான், 90 சதவீதமானவர்கள் அரசியலுக்குள்ளேயே வருகின்றார்கள். அவர்களை குதிரை பேரத்தினூடாக கட்சிதாவச் செய்வதெல்லாம் பெரிய சிரமமான காரியமல்ல.
அப்படியான நிலையில், ஆளுங்கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதும், அதனூடாக தமக்கு வேண்டிய அரசமைப்பு மாற்றங்களைச் செய்வதும் பெரிய விடயமல்ல. அதன்போக்கில் நோக்கினால், இலங்கையில் நிறைவேற்றப்படும் அரசமை ப்பும், அதன் திருத்தங்களும் என்றைக்குமே மாற்றமுடியாத ஒன்றாக இருப்பதில்லை. ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1978இல் தொகுதி வாரி தேர்தல் முறையினால் பெற்ற ஆறில் ஐந்து பெரும்பான்மை வெற்றிக்கும், தற்போது ராஜபக்ஷக்கள் விகிதாசாரத் தேர்தலினூடாக பெற்றிருக்கின்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றிக்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை. ஒப்பீட்டளவில் ஜே.ஆரின் வெற்றியைவிட ராஜபக்ஷக்களின் வெற்றி வீதம் பொியதே.
என்றைக்குமே எந்தவொரு கட்சியும் ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பெற்றுவிடக்கூடாது, ஐக்கிய தேசிய கட்சி எந்தக் காலத்திலும் தோற்றுவிடக் கூடாது, அதிகாரம் என்பது தன்னைச் சுற்றியே இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில்தான் 1978இல் புதிய அரசமைப்பை ஜே.ஆர் நிறைவேற்றினார். ஆனால், அவரது கட்சி ஒட்டுமொத்தமாக தோற்று ஒரு தேசியபட்டியல் ஆசனத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், புதிய அரசமைப்பொன்று நாட்டுக்கு வரவிருக்கின்றது. அந்த அரசமைப்பு எப்படியிருக்கும் என்பதற்கான கட்டியத்தினை சில நாள்களுக்குள் நிறைவேற்றப்படப் போகும் 20ஆவது திருத்தச் சட்டம் கூறுகின்றது.
18ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி, நல்லாட்சி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம், ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைத்தது. ஜனாதிபதி ஒருவர் இரண்டு முறை மாத்திரமே பதவியில் இருக்க முடியும் என்கிற வரையறையை செய்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. மேற்கண்ட விடயங்களில் எந்தவித தலையீடுகளையும் செய்யாது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடம் இருந்து அதிகாரங்களை நாடாளுமன்றத்தோடு பகிர்ந்த அனைத்துச் சரத்துகளையும் நீக்கிவிட்டு, 20ஆவது திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றத. அது, 18ஆவது திருத்தச் சட்டத்தையும் தாண்டிய ஓர் அச்சுறுத்தலான நிலையைக் கொண்டிருக்கின்றது. அதாவது, 18 பிளஸ். இந்தப் 18 பிளஸ்தான், அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய அரசமைப்புக்கான அடிப்படை.
அதிகாரத்தை ஓர் இடத்தில் குவிப்பது என்பது எப்போதுமே அத்துமீறல்களுக்கு வலுச் சேர்க்கும். அது, ஓர் அமைப்பாக இருந்தாலும், கட்சியாக இருந்தாலும், ஆட்சி யாக இருந்தாலும் நிலைமை அப்படித்தான். ஐக்கிய தேசிய கட்சி இன்றைக்கு அழிந்து சின்னாமின்னமாகிப் போயிருப்பதற்கும், அகற்றவே முடியாத தலைமைத்துவம் என்கிற அதிகாரம் முக்கிய காரணமாகும்.
2015 ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என்ற அடிப்படையில் மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்காது விட்டாலும், பாரிய மாற்றங்களைச் செய்து அதிகாரங்களை நாடாளுமன்றத்தோடு பகிரச் செய்தது. அது, முக்கியமான கட்டம். ஆனால், நல்லதைச் செய்வோம் என்று கூறிக்கொண்டு வந்த நல்லாட்சிக்காரர்கள் நடுவழியில் தடம்புரண்டது, தோற்றுப் போன தரப்பு கடந்த முறையைக் காட்டிலும் இன்னும் அசுர பலத்தோடு ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு காரணமாய் அமைந்தது.
18ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்ப ட்ட போது, நாடு முழுவதும் கறுப்புப் பட்டியணிந்து போராட வேண்டும் என்கிற அழைப்பு எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்பு களிடம் இருந்து விடுக்கப்பட்டிருந்தது. ஜனநாயகத்தின் இறுதி நாள் என்றெல்லாம் முழங்கப்பட்டது. அன்று ஆரம்பித்த ஜனநாயகத்துக்கான எழுச்சிதான் 2015 ஆட்சி மாற்றத்துக்கும் காரணமானது. ஆனால், இன்றைக்கு 18 பிளஸ் 20ஆவது திருத்தம் என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்படுகின்ற போது, அது குறித்து எந்தவோர் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் காண முடியவில்லை. ஏனெனில், மாபெரும் மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்டு வந்திருக்கிறார்கள் ராஜபக்ஷக்கள். வெற்றியின் சூடு ஆறுவதற்குள்ளேயே தங்களுக்கான அனைத்து மாற்றங்களையும் செய்து கொள்கிறார்கள்.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ராஜபக்ஷக்கள் தமது வெற்றிக்கான அத்திபாரத்தைப் போட ஆரம்பித்ததுமே நல்லாட்சிக்காரர்கள் தங்களுக்கு இடையில் முரண்படத் தொங்கிவிட்டார்கள். அதுதான், மைத்திரி- ரணிலுக்கு இடையிலான முறுகலுக்கும் நல்லாட்சியின் தோல்விக்கும் காரணமானது.
பின்னராக ஒக்டோபர் சதிப்புரட்சியை மைத்திரி அரங்கேற்றியதும், நாட்டு மக்கள் நல்லாட்சியின் மீதான நம்பிக்கையையும் உறுதிப்பாட்டையும் இன்னும் இழந்தார்கள். அப்போது, சதிப்புரட்சி ஜனநாயக விரும்பிகளினால் தோற்கடிக்கப்பட்டாலும், அதற்குப் பின்னரான நாள்களில் நாட்டின் ஆட்சியை ஒட்டுமொத்தமான சீரழிவுக்குரியதாக மைத்திரியும் ரணிலும் மாற்றினார்கள்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள், மத்திய வங்கி பிணைமுறி மோசடி என்று ஆட்சி அல்லோலகல்லோலப் பட்டது. நாட்டு மக்கள், நல்லாட்சியின் மீது நம்பிக்கையிழந்து இனவாத கோசத்தோடு எழும்பி வந்த ராஜபக்ஷக்களை தோள்களில் ஏந்திக் கொண்டார்கள். அதுதான், ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் பெரு வெற்றிகளாகப் பிரதிபலித்தது.
இலங்கையின் பௌத்த சிங்கள மேலாதிக்க சித்தாந்தம் என்பது ஒற்றை ஆட்சியாளன், அவனிடத்திலான ஒட்டுமொத்த அதிகாரம் குறித்தே போதித்து வந்திருக்கின்றது. அதாவது, மன்னராட்சிக்கு ஒப்பான ஒன்றுபற்றி. அதற்கு எதிரான எந்தக் கோரிக்கையையும், ஏன் ஜனநாயகக் கோரிக்கையைக்கூட அது அனுமதித்து வந்தது இல்லை. தென் இலங்கையில் தோன்றிய வர்க்கப் போராட்டமாக இருந்தாலும், தமிழ் மக்களின் அரசியலுரிமைப் போராட்டமாக இருந்தாலும் அவற்றையெல்லாம் தங்களது சித்தாந்ததுக்கு எதிரான ஒன்றாகவே பௌத்த சிங்கள மேலாதிக்கம் கருதியது. அந்தப் போராட்டங்களை எப்படியாவது அழித்து ஒழித்துவிட வேண்டும் என்றே இயங்கியது.
அது வெளிப்படையாக நோக்கினால் மேலாதிக்க சிந்தனை மாதிரியாக தெரிந்தாலும், இன்னொரு கட்டத்தின் நோக்கினால் அது தாழ்வுச் சிக்கலுள்ள பிரச்சினை. ஜனநாயகம், அதுசார் விழுமியம் என்று பேசினால், அதற்குள் சிக்கி பௌத்த சிங்கள மேலாதிக்கம் காணாமற்போய்விடும் என்கிற அடிப்படையில், அந்தச் சிந்தாந்தம் ஒற்றை ஆட்சியாளரைத் தாங்கி நிற்கிறது. அதனையே, தன்னுடைய மக்களிடமும் ஆரம்பத்திலிருந்து போதிக்கின்றது. அந்தப் போதனைகளின்படி வரும் மக்கள், கிட்டத்தட்ட 75 வீதமாக இருக்கின்ற நாட்டில், ஜனநாயகமும், அதுசார் விழுமியமும் காக்கப்பட்டுவிடும் என்று நம்ப முடியாது. ஜனநாயகமும், அதுசார் விழுமியமும், அதற்கான கனவான் தன்மையும் இல்லாத ஓர் அரசியல் நெறிக்கூடாக நாடு என்றைக்குமே முன்னோக்கிச் சென்றுவிட முடியாது.
அப்படியான நிலையில், சிறுபான்மை மக்களின் நிலை என்பது இன்னும் இன்னும் மோசமான நிலையை நோக்கியே செல்லும். ஏனெனில், இன விகிதாசார அடிப்படையிலும், பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தாந்த வழியிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைவது என்பது சிங்களக் கட்சிகளுக்கு அவ்வளவு ஒன்றும் சிரமமான காரியமல்ல.
அப்படியான நிலையில், எந்தவோர் அரசியலமைப்பும், அதன் மீதான மாற்றங்களும் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. 19ஆவது திருத்தத்துக்கும் இப்போது அதுதான் நிகழ்ந்திருக்கின்றது.
Average Rating