எங்கள் மீது வெளிச்சம் பட வேண்டும்!! (மகளிர் பக்கம்)
சங்க காலம் தொட்டே இயல், இசை, நாடகம் எனப் பல கலைகளின் பிறப்பிடமாகவும் அவற்றின் பாதுகாப்பான வளர்ப்பிடமாகவும் தமிழகம் விளங்கிஉள்ளது. அதற்குத் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் உறுதுணையாக இருந்ததும் முக்கிய காரணமாகும்.
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் நாயகன்கூட கலைக்கு அடிமையாக நடன மங்கையையே சுற்றி வந்துள்ளான். அதில் கூறப்பட்ட குடக்கூத்து என்ற ஆடல் கலையைத்தான் இன்று கரகாட்டம் எனக் கூறுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டும் பிறக்கிறபோது அதைக் கொண்டாடி மகிழும் முறைகளைப் பார்க்கும் போது நாம் இன்னும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறோமா அல்லது நாம் அவர்கள் கலாச்சாரம், வாழ்க்கை முறைகளை நமதாக்கிக் கொண்டோமா என்கிற ஐயம் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் சமீபத்தில் முடிந்த தமிழ்ப் புத்தாண்டின்போது இது போன்ற கொண்டாட்டங்களும் குதூகலங்களும் குறைந்து காணப்படுதலேயாகும்.
பள்ளிகளிலும் சரி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சரி அதில் பங்கேற்கும் குழந்தைகள் மேற்கத்திய நடனம், பாடல்களினால் தமிழர்களின் பாரம்பரிய ஆடல், பாடல், கலைகளை பின்னுக்குத் தள்ளிவிடுவார்களோ என்ற பயமும், ஆதங்கமும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஆகவே நமது கலை நடனங்களைப் பற்றி நாம், நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதன் வாயிலாக இந்த அச்சத்திலிருந்து சற்று விடுபடலாம் என்பதால் கரகாட்டம் பற்றி சொல்ல இந்த கட்டுரை விரிகிறது.
கரகாட்டம் தமிழகத்தில் சோழர்கள் ஆண்ட தஞ்சையில் தோன்றினாலும், அது விரிவடைந்து புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை என தமிழகம் முழுவதும் பரவிய தமிழர்களின் பாரம்பரியக் கலையாட்டமாகும்.
பின்பு கர்நாடகா, ஆந்திரா எனப் பரவி இன்று நாட்டின் எல்லைகளைக் கடந்து தமிழர்கள் குடிபெயர்ந்துள்ள சிங்கப்பூர், மலேசியா,இலங்கை,லண்டன் என தனது எல்லைகளை விரித்துக்கொண்டாலும், கரகாட்டத்தையே தமிழகத்தின் மூலைமுடுக்குகளுக்கும் பட்டி தொட்டிகளுக்கும் எடுத்துச் சென்ற பெருமை 1989 ஆம் ஆண்டில் வெளியான ‘கரகாட்டக்காரன்’ என்னும் திரைப்படத்தையே சாரும்.
இன்று நுனி நாக்கில் ஆங்கிலத்தை தடவி விட்டு இதயத்திலிருந்து தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் வேரோடு பிடுங்கிக்கொண்டிருக்கும் ஆங்கில வழிக்கல்வி பயிலும் நம் தமிழ்க் குழந்தைகள் மனதில், நம் மொழியையும் கலாச்சாரத்தையும் வேரூன்ற வைப்பது நமது கடமையல்லவா? அப்படி ஒரு கடமையை தான் சார்ந்த கரகாட்ட கலை மூலம் பல சாதனைகளை நிகழ்த்தி கரகாட்டக் கலையின் மேல் பார்வையை விழச் செய்துள்ளார் சேலத்தைச் சேர்ந்த துர்கா தேவி.
“எனக்குப் பத்து வயது இருக்கும். எங்கள் வீட்டு பக்கத்தில் பரதம் சொல்லி கொடுத்திட்டு இருந்தாங்க. அவர்களை பார்க்கையில் எனக்கும் ஆட வேண்டுமென்ற ஆசையினால் மறைந்திருந்து பார்ப்பேன். அம்மா சின்ன வயதா இருக்கும் போதே இறந்துட்டாங்க.
அப்பயிருந்து இப்ப வரை அம்மாவாகவும், அப்பாவாகவும், தோழனாகவும் இருப்பது என்னுடைய அப்பா குஞ்சிதபாதம். அவர்கிட்ட பரதம் கத்துக்கிறேன்னு சொன்னதுமே எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் உடனே சேர்த்துவிட்டார். அப்படிதான் 12வது வயதில் எனது அரங்கேற்றம் நிகழ்ந்தது” என்கிறார் துர்கா.
அதன் பின் பல திருவிழாக்களில் பரதமும், அம்மன் வேடமிட்டும் நடனமாடி வந்த துர்காவிற்கு கரகாட்டம் மேல் ஈர்ப்பு வருவதற்கான காரணம் சுவாரஸ்யமானது. “திருமணமாகி ஒரு பையன், பொண்ணு இருக்காங்க. இதே தொழிலில் இருவரும் பயணித்தோம். இடையில் எங்கள் பாதையில் முற்கள் தோன்ற மன வேறுபாடு காரணமாக பிரிந்து தற்போது அப்பாவின் துணையில் இருக்கிறேன். எங்களுக்கான வருமானம் இந்த கலையின் மூலம்தான். பத்து வயதிலிருந்தே கஷ்டப்பட்டு ஏதாவது சாதிக்க வேண்டுமென்று செய்து வருகிறேன்.
எங்களது நடன நிகழ்ச்சி முடிந்ததும், கோயில் விழாக் களில் கரகாட்டம் போடுவாங்க. கரகம் ஆடும் போது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தலையில் கரகம் வைத்து ஆடும் பெண்கள், பின் கரகத்தை ஓரத்தில் வைத்து விட்டு, கிளாமராக ஆடுவாங்க. இந்த ஆபாசத்தைத் தான் இன்று மக்கள் ரசிக்கிறார்கள். கரகத்திற்கு உண்டான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆபாச நடனம் வந்ததால் கரகத்திற்கான வேலை இல்லாமல் போய்விட்டது.
நமது பாரம்பரியக் கிராமிய கலை கரகம். இதை வைத்து நாம் செய்து பார்க்கலாம். இவர்கள் இரண்டு நிமிடம் வைத்து பண்ணியதை, நாம் கீழ் இறக்காமல் ஆடி மக்கள் மத்தியில் மீண்டும் கரகத்திற்கான மதிப்பை உருவாக்கலாம் என்று மதுரையிலிருந்து கரகம் வாங்கி வீட்டிலேயே ஆடி பழகினேன்” என்றார் துர்கா.
நாட்டுப்புற கலைகள் அழிந்து வரும் நிலையில் மீண்டும் இதை மக்கள் நினைவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் உலக சாதனைக்கான நிகழ்ச்சிக்காக கரகாட்டத்தில் புதுமை புகுத்துகிறார் துர்கா. “ஒவ்வொரு பொருட்கள் வைத்து பயிற்சி எடுத்தேன். அதன் படி பாட்டில், பானை மீது ஏறி நின்று , ஏழு அடுக்கு கரகத்தில் தீ வைத்து, கால் கட்ட விரலால் நெற்றியில் பொட்டு வைத்து, சைக்கிள் சக்கரத்தில் தீ பற்ற வைத்து, 50 டியூப் லைட்களை ஆடியே உடைத்து, பிளைடு, ஊசியினை கண்களால் எடுத்து… என 21 வகையான பொருட்கள் வைத்து கரகமாடினேன்.
இதில் சில புதுமையாக இருந்தாலும், பல நம் பாரம்பரியத்திலே நிகழ்த்தி வருகின்றனர். புதிதாக ஏதும் நான் செய்யவில்லை. சிறு வயதில் கரகமாடியவர்களிடம் நான் பார்த்தது, நாம் மறந்ததை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சிகளில் இறங்கி இருக்கிறேன். தற்போது இரண்டு உலக சாதனைகள் இதன் மூலம் நிகழ்த்தியதால் இந்த கலைஞர்கள் மீது வெளிச்சம் பட்டுள்ளது.
நலிவடைந்த நிலையில் இருக்கும் எங்களை போன்றோர்களை, வெறும் கோவில் திருவிழாக்களுக்கு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், திருமணம், திருமண வரவேற்பு, கலாச்சார நிகழ்வுகள், உள் அரங்கில் நிகழும் நிகழ்வுகள்… என கூப்பிட்டால் கலைஞர்களுக்கான வாழ்வாதார பிரச்னைகள் தீர்வதோடு, நமது பாரம்பரிய கலைகளும் அழியாமல் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதற்கான வாய்ப்பும் உருவாகும். எங்களை கடைசி வரைக்கும் தெருவில் ஆட வைத்துத்தானே பார்க்கிறார்கள். தற்போது அதற்கான சூழலும் இல்லாமல் இருப்பதுதான் வருத்தம். ஒரு சில இடங்களில் மட்டுமே திருவிழாக்கள் நடக்கிறது” என்கிறார் துர்கா.
அடுத்து கின்னஸ் சாதனைக்கு தயாராகி வரும் துர்கா, “அதில் 200 டியூப்லைட்டுகளை ஒடித்தும், 21 பொருட்களிலிருந்து 50 பொருட்களை வைத்து கரகம் ஆட வேண்டும். எங்களை போன்ற கலைஞர்களின் வாழ்வோடு, இந்த கலைகளும் காப்பாற்றப்பட வேண்டும்” என்ற கோரிக்கையையும் வைக்கிறார்.
திரைப்படத்தின் தாக்கத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட கிராமியக் கலைகளில் கரகாட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கரகாட்டத்தில் கரகத்தை தலையில் வைத்து அது கீழே விழாமல் உடலை வளைத்து ஊசியை எடுத்தல், கைக்குட்டையை எடுத்தல், உருளும் பலகையில் நடத்தல் போன்ற சாகசங்கள் நம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதன் வாயிலாக நல்ல உடற்பயிற்சியும் மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும் அவர்கள் கற்றுக்கொள்ள முடியும்.
இன்றும் கலையம்சம் நிறைந்த கரகாட்டத்தைக் கிராமப்புறங்களில் ஒருசில பகுதிகளில் காண முடிகிறது என்றால் அதற்குக் காரணம் படித்த பெண்கள் சிலர் கரகாட்டம் கற்றுக்கொண்டு ஆட வந்ததுதான். இது தொடர வேண்டுமெனில் இளைய தலைமுறைக்குள் கரகாட்டம் செல்லவேண்டும்.
இது வெறும் நடனம் அல்ல… நம் கலாச்சாரம், பண்பாடு. நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற நல்ல உடற்பயிற்சி, மனப்பயிற்சி என்னும் மிகப்பெரிய சொத்து. அதைப் பேணிக்காக்க வேண்டியதும் அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொடுப்பதும் நமது கடமை.
Average Rating