வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)
மனிதனாய் பிறப்பது ஒரு வரம். எல்லைகளின்றி கனவு காண முடியும். அந்த கனவு நிறைவேறும் போது அவனது மனமும், உடலும் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அந்த ஆனந்த கனவுகளை நிறைவேற்றுவது பற்றி மாணவர்களிடையே வாழ்க்கைத்திறன் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மனநல ஆலோசகர் காயத்ரி கூறுவது…
“இந்த உலகமே சொற்களில் தான் இயங்குகிறது. சொற்களின் மூலமாக தான் அனைத்து வகையான உணர்வுகளின் பரிமாற்றங்களும் நிகழ்கிறது. சொற்களின் மூலமாக தான் நேசிக்கும் குணத்தை, அன்பை வெளிப்படுத்த முடிகிறது. சொற்களின் மூலமாக தான் வெறுப்பை உமிழ முடிகிறது. வெறுப்பின் கோர முகத்தை காண்பித்து, அருவெறுக்கத்தக்க வகையில் மனிதனுக்குள் உறைந்து கிடக்கும் மிருக குணத்தை உயிர்ப்பிக்க முடிகிறது.
மனிதனுடைய எல்லா மன உணர்வுகளையும் சொற்கள் தான் பிரதிபலிக்கும்.
அன்பு, பாசம், விருப்பம், மகிழ்ச்சி, காதல், ஏக்கம், தயக்கம், அவமானம், கோபம், கருணை, கடமை, ஆக்ரோஷம், வெறுப்பு, குற்றவுணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, நன்றியுணர்ச்சி, வெட்கம், தாய்மைப்பண்பு இத்தனை உணர்வுகளையும் சொற்கள் தான் பிரதிபலிக்கிறது. இதன் மூலமாக தான் மனித வாழ்க்கை மகிழ்ச்சியாகவோ, துயரமானதாகவோ இருக்க முடிகிறது. மனித குல வரலாற்றில் சொற்களின் மூலமாக உணர்வுகளை பரிமாறுவது முதல் கட்டம். சொற்களின் மூலமாக செய்திகளை பரிமாறுவது இரண்டாவது கட்டம்.
பரிமாறப்பட்ட செய்திகள் குறுஞ்செய்திகளாகவும், மிகப்பெருஞ்செய்திகளாகவும் மனிதர்களிடையே கடத்தப்பட்டு வந்தது. குறுஞ்செய்தி ஏதோ ஒரு அதிகாரத்தில் குறளாக இருந்தது. மிகப்பெரிய செய்தி வால்மீகி எழுதிய ராமாயணம் மற்றும் வியாசர் எழுதிய மகாபாரதமாகவும் இருந்தது. இப்படியாக சொற்களை யாரும், யாரிடமும் பகிராமல் இருக்கும் போது தான் உளவியல் ரீதியான விழிப்புணர்வு மற்றும் கவுன்சிலிங் செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய அப்பா மற்றும் அம்மா கலெக்டர் ஆக வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்த்தார்கள்.
நானும் ஐ.ஏ.எஸ். பரீட்சைக்கு படிக்கவும் செய்தேன். ஆனால் அதில் நான் தோற்று விட்டேன். ஆனால் அங்கு எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என்னை உளவியல் ரீதியான துறைக்கு அனுப்பியது. படித்த மக்கள் பொதுவாக சண்டை போடுவதோ, விவாதம் செய்வதோ கீழ்த்தரமான செயல் என்று அவர்கள் நினைத்துக் கொண்டு அவர்களுக்கு பிடித்த உறவுகளுடன் பேசாமல் அமைதியை நிலைநாட்டுகின்றனர். இதனால் அவர்களும், அவர்கள் கூட இருக்கும் மனிதர்களும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இது மட்டும் இல்லாமல் இன்று அனைவரது கைகளிலும் போன் இருந்தாலும் பேச நேரமில்லை என்ற காரணத்தை சொல்லி உறவுகளிடம் இருந்து மனதளவில் தொலைதூரத்தில் இருக்கின்றனர். நான் வியந்து பார்த்த மனிதர்கள் தொழிலில் மற்றும் சமூகத்தில் மிக நல்லவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் திருமண பந்தத்தில் அவர்கள் வாழ்க்கையை தொலைத்து விவாகரத்து வாங்கி இருக்கிறார்கள். அதனால் இன்னும் எனது உளவியல் சார்ந்த தேடலை அதிகப்படுத்தி பல இடங்களில் மனிதனது உணர்வு சார்ந்த விஷயங்களை மக்களிடையே பேசி வருகிறேன்.
மனித பிறப்பு உணர்வுகளால் நிரம்பியது. ஆனால் இன்று சிறு குழந்தை முதல் பெரியவர் வரை மன உளைச்சல், மன அழுத்தம், தூக்கமின்மை, சமூகத்தை விட்டு ஒதுங்கி இருத்தல் என்று மனதளவில் ஒரு பெரிய மனித கூட்டம் அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருக்கிறது. நான் வசிக்கும் வீட்டின் அருகில் 8 வயது சிறுமி பெற்றோரை பிரித்து இருக்க வைப்பதில் பல வேலைகள் செய்கிறாள். ஏன் என்றால் அந்த பெற்றோர் தனித்தனியாக இருக்கும் போது தான் அவள் மனநிறைவு அடையும் வரை பல பொருட்கள் கிடைக்கிறது என்று சொல்கிறாள்.
அது போல் கணவன், மனைவியை ஒன்றாக இருக்க விடாமல் இருக்க கணவன் குடும்பம் அல்லது மனைவி குடும்பம் ஏதோ ஒரு வகையில் பிரித்து வைக்கிறார்கள். ஏன் என்றால் பாசமோ, பணமோ எதிலும் பங்கு வந்து விடக் கூடாது என்று பலரது வீட்டில் நடக்கின்றது. இன்றைய சமூகம் மனிதனை மனிதனிடமிருந்து பிரித்து வைப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. அதற்கு முதலில் செய்வது பேச்சு வார்த்தை நடத்த விடாமல் வைப்பது. இவை அனைத்தும் என் வாழ்வில் மிகப்பெரிய கேள்வியை ஏற்படுத்தியது.
அதற்கு என்னால் முடிந்த அளவு வார்த்தைகளின் சக்தியை, உணர்வுகளின் அற்புதத்தை, உறவுகளின் உன்னதத்தை, மனித சமூகத்தின் தேவையை இன்றைய சமூகத்திடம் உளவியல் ரீதியான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். இந்த திருமணத்தின் உன்னதத்தை மற்றும் மனித உறவுகளின் அற்புதத்தை என்னுடைய பெற்றோர் தான் அவர்களது வாழ்க்கையில் செயல் வடிவில் நிகழ்த்தி வாழ்ந்து காட்டுகின்றனர். எனது பெற்றோர் காதல் திருமணம் புரிந்தவர்கள். அப்பா அரசாங்க பதவியில் இருப்பவர்.
அப்பா என்றுமே அவரது வாழ்வில் வந்த அனைத்து விதமான மனிதர்களிடமும் ஒரே மாதிரியாக நடந்து, அவர்கள் செய்யும் செயலுக்கு உடனடியாக பாராட்டையும், தவறு செய்தால் உடனே மன்னிக்கும் மனோபாவத்தையும் இன்று வரை அவர் கடைபிடித்து வருகின்றார். அம்மா இன்று வரை யார் வந்தாலும் அவர்களுக்கு முதலில் உணவு வழங்கி அவர்களை நிதானமான மனநிலைக்கு கொண்டு வந்து, என்ன மாதிரியான உதவி என்றாலும் செய்து கொடுத்து மனித கூட்டத்தை இருவரும் சேர்த்து கொண்டு வருகின்றனர்.
உறவினர்கள், அக்கம், பக்கத்துக்கு வீட்டினர் என்று பாரபட்சம் இல்லாமல் இன்று வரை நிதானம், பொறுமை, காதல், அன்பு என்று வாழ்வில் ஏதோ ஒன்றை கூட இருக்கும் மனிதனுக்கு செய்து விட வேண்டும் என்ற கடமை இவை அனைத்தையும் எனக்கு அவர்கள் சொல் மற்றும் செயல் மூலம் நிகழ்த்தி வருகின்றனர். என் வீட்டிற்கு நான் ஒரே பெண் என்பதால் செல்லம் அதிகம். அதனால் என்னால் எனக்கு பிடித்த படிப்பு, நான் ரசித்த விஷயங்களை செய்வதில் எனக்கு சுதந்திரம், தோல்வி ஏற்பட்டாலும் அதில் இருந்து எளிதில் மீண்டு வர பெற்றோர் ஆதரவு என்று என்னை ஆசிர்வதித்த பூமிக்கு என்னால் முடிந்த அளவு வார்த்தைகளை மக்களிடம் கொண்டு செல்வது என் கடமை.
அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வாழ்க்கை திறன், வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றம், தோல்வி, வெற்றி யால் கூட இருக்கும் எந்த மனிதனையும் இழந்து விடாதீர்கள் என்று உறவுகளின் முக்கியத்துவத்தை சொல்லி வருகிறேன். பெற்றோர்களுக்கு குழந்தைகளிடம் எதை சொல்ல வேண்டும், எதை மறைக்க வேண்டும் என்று ஒரு தெளிவான விளக்கத்தை சொல்லி வருகிறேன். ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கு முன் மனதளவில் ஏற்படும் மாற்றம் மற்றும் திருமண பந்தத்தை எப்படி வளமாக்குவது என்று அவர்களுக்கு தெரிந்த மற்றும் யோசித்த விஷயங்களை இன்னும் தெளிவாக சொல்லி வருகிறேன்.
ஏன் திருமணத்திற்கு முன் கவுன்சிலிங் தேவை என்றால் பலர் ஏதோ ஒரு கற்பனையில் திருமண வாழ்க்கைக்கு சென்று சில மாதம் மற்றும் வருடங்களில் விவாகரத்து கோரி வருகின்றனர். அதனால் இன்றைய இளைஞர்களுக்கு திருமணத்திற்கு முன் கண்டிப்பாக கவுன்சிலிங் தேவை என்று அனைத்து இடங்களிலும் செய்து வருகிறேன். தமிழ்நாட்டில் சில ஊர்களுக்கு மட்டுமே சென்று விழிப்புணர்வு செய்து வருகிறேன்.
ஆனால் இன்றும் உளவியல் ரீதியான விஷயங்களை எளிதாக மக்கள் எடுத்து கொண்டு அதில் கவனம் செலுத்தாமல் பலர் தற்கொலைக்கு முயல்கின்றனர். அதனால் இன்னும் பல இடங்களுக்கு சென்று உளவியல் புரட்சி ஒன்றை மக்களிடையே கொண்டு வர வேண்டும். ஏன் என்றால் பல புரட்சிகளினால் தான் பல விஷயங்களை நாம் வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம். இன்று உளவியல் புரட்சியின் மூலம் மனோபலம் மற்றும் ஆத்ம பலத்தை மக்களிடையே கொண்டு வருவதே எனது நோக்கம் என்றார்.”
Average Rating