வாழ்க்கை வாழ்வதற்கே!! (மகளிர் பக்கம்)
‘அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே’ என கணீர் குரலில் அந்த பட்டிமன்றம் தொடங்குகிறது. நடுவராக வீற்றிருந்து மிக எளிதாக அனைவருக்கும் புரியும் மொழியில் தீர்ப்பை வாசிக்கிறார். அந்த பெண்மணியின் பேச்சு ஆன்மிக வட்டாரங் களில் மிகப் பிரபலம். அவர் பேராசிரியை மணிமேகலை. தற்போது தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளராக பரிமாணம் எடுத்துள்ளார். சமீபகாலமாக துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை, தூக்கு மாட்டி மாணவர் தற்கொலை போன்ற செய்திகளை அடிக்கடி செய்தித்தாள்களில் காண முடிகிறது. இதற்கு பணியில் இருக்கும் போலீஸ்காரருக்கு உயர் அதிகாரிகள் கொடுக்கும் டார்ச்சரால் ஏற்படும் மனஅழுத்தம்,
தேர்வு தோல்வியை சந்திக்கும் திறன் இன்மை, காதல் தோல்வியை எதிர்கொள்ளும் திறன் இல்லாமை என பல காரணங்கள் உள்ளன. இதற்கு முடிவு தற்கொலை என எண்ணி அவர்கள் சார்ந்த குடும்பத்தை தவிக்க விட்டு சென்றுவிடுகிறார்கள். இதுபோன்ற தன்னம்பிக்கை குறைந்த போலீஸ்காரர்கள், மாணவர்களுக்கு அருமருந்தாக விளங்குகிறார் பேராசிரியை மணிமேகலை. மதுரை செந்தமிழ் கல்லூரியில் படித்தவர். தமிழில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார். ஆசிரியையாக பணிபுரிந்த அவர் தற்போது விருப்ப ஓய்வு பெற்று முழுநேர சொற்பொழிவாளராக உள்ளார். சென்னை கீழ்பாக்கம் பகுதியில் வசிக்கும் இவர் பட்டிமன்ற பேச்சாளர், ஆன்மிக சொற்பொழிவாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், கவிஞர் என பல பரிமாணங்களில் மின்னுகிறார். 35 ஆண்டுகளாக இலக்கிய துறையிலும்
பணியாற்றி வருகிறார்…
இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட காரணம்?
சங்கத்தமிழ் வளர்த்த மதுரை தான் என் சொந்த ஊர். அப்பா விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். கூடவே மேடைப்பாடகரும் கூட. அவரது நாடகங்களை பார்த்து வளர்ந்த எனக்கு தமிழ் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அப்ப எனக்கு 17 வயசு. மதுரை பொன்னரகம் கேப்ரன்ஹால் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தேன். பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்களின் அறிமுகம் கிடைச்சது. அவர் தான் என்னை சொற்பொழிவு செய்ய வழிகாட்டினார். அதன் பிறகு எனக்கு படிப்படியாக இலக்கியம் மேல் ஈடுபாடு ஏற்பட்டது. எனக்கு மேலும் இலக்கியத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்க காரணமானவர்கள் முனைவர் சின்னப்பா, கந்தசாமி, பட்டிமன்ற நடுவர் தி.ராஜகோபால் உள்ளிட்டோர்.
இதுவரை எத்தனை பட்டிமன்றங்கள், பாட்டுமன்றங்களில் பங்கேற்றுள்ளீர்கள்?
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங் களில் பேச்சாளராகவும் நடுவராகவும் பணியாற்றியுள்ளேன். இது தவிர 500க்கும் மேற்பட்ட பாட்டுமன்றங்களில் என் பாடல்கள் ஒலித்துள்ளன. குறிப்பாக ஆன்மிக பட்டிமன்றங்களில் அதிகம் பங்கேற்றுள்ளேன். சென்னை மட்டுமின்றி மதுரை, நெல்லை, கோவை, ஈரோடு, தவிர மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கையில் நடைபெற்ற பட்டிமன்றங்களில் கலந்து கொண்டுள்ளேன். பள்ளி மாணவர்களுக்காக 15 நாடகங்களும் எழுதி இருக்கேன். நான் பணியாற்றிய பள்ளியில் படித்த மாணவர்கள் எழுதிய கவிதைகளை ‘தேன்துளிகள்’ என்ற தலைப்பில் ஹைக்கூ கவிதை புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.
விருதுகள்…
செந்தமிழ் செல்வி, தங்கத்தாரகை, இலக்கிய சாரல், கவியரசி போன்ற விருதுகள் உள்பட 60க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளேன். இது தவிர பல்வேறு தொலைக்காட்சியில் எனது சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளேன். பொதிகையில் ‘பழமொழி புதுமொழி’ என்ற நிகழ்ச்சி மூலம் பழமொழிகள் எப்படி மருவிவிட்டன என்பது பற்றி நகைச்சுவையாக சொல்லி வருகிறேன்.
தன்னம்பிக்கை பேச்சு அவசியமா?
கண்டிப்பாக. நாம் போட்டி நிறைந்த உலகில் வாழ்ந்து வருகிறோம். இன்றைய காலக்கட்டத்தில் ஒருவரை அடித்து எப்படி மேலே வரலாம் என்று தான் பலர் சிந்திக்கிறார்கள். இதன் காரணமாக தான் நாம் தினசரியில் தற்கொலை போன்ற செய்தியை அதிகம் படிக்க நேரிடுகிறது. தற்கொலை செய்வதால் எந்த பயனும் இல்லை. வாழ்க்கையை எதிர்த்து போராட தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மனதில் தன்னம்பிக்கையை விதைத்து எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக என்னுடைய பேச்சு இருக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். சமீபத்தில ஆவடியில் போலீசார்களின் மன அழுத்தத்தை போக்கும் விதமான தன்னம்பிக்கை
சொற்பொழிவாற்றினேன்.
Average Rating