செவிலியர் இன்னொரு தாய்!! (மகளிர் பக்கம்)
செவிலியர் பணி, தொழில் அல்ல, ஒரு வகை தொண்டு. செய்யும் வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவையில் இருந்து போர்கால மருத்துவ சேவைகள் வரை இவர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார்கள்.
சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்புத் தன்மையுடன் ஆற்றும் சேவை தான் செவிலியர் பணி. செவிலியர்களுக்கென சமுதாயத்தில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தியவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். இவரின் பிறந்த நாளான மே 12ம் தேதியினை உலக செவிலியர் நாள் (International Nurses Day) என உலக நாடுகள் அனைத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் மே 12ம் தேதியன்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) இந்த தினம் மிகவும் விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இங்குள்ள செவிலியர் மாளிகையில் விளக்கு ஏற்றப்பட்டு செவிலியர்கள் ஒவ்வொரு
வராலும் கைமாறப்பட்டு பின்னர் அந்த விளக்கு அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
அப்படிப்பட்ட பணியில் தன்னை 40 ஆண்டுகாலமாக அர்ப்பணித்து வருகிறார் நிர்மலா. 25 ஆண்டுகளாக ராணுவத்தில் வீரர்களுக்கு தன் சேவையை அர்ப்பணித்து வந்தவர் தற்போது சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் நர்சிங் துறையின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
‘‘ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த தமிழ்நாட்டு பொண்ணு நான். 18 வயசில் நான் இந்த வேலையில் சேர்ந்தேன். விருப்பப்பட்டு தான் இந்த துறையை தேர்வு செய்தேன். ஒரு முறை ராணுவ மருத்துவமனைக்கு செல்ல நேரிட்டது. அங்கு நான் பார்த்த அந்த காட்சி தான் எனக்குள் ராணுவத்தில் நர்சிங் துறையில் சேரணும்ன்னு தூண்டியது.
பொதுவாக மருத்துவமனையில் செவிலியர்கள் வெள்ளை உடை தலையில் கேப் அணிந்து இருப்பாங்க. இங்க செவிலியர்கள் கூட ராணுவ உடையில் தான் இருப்பாங்க. எல்லாரும் அவங்களுக்கு மரியாதை கொடுத்தாங்க. அவங்களின் கம்பீரமான நடை எல்லாம் ரொம்ப பிடிச்சு இருந்தது. அப்ப முடிவு செய்தேன் ராணுவத்தில் செவிலியரா சேரணும்ன்னு’’ என்றவர் பி.யு.சி முடிச்ச கையோடு இங்கு சேர்ந்துள்ளார்.
‘‘எனக்கு அப்ப சிவில் நர்சிங் பத்தி எல்லாம் தெரியாது. என்னுடைய மனசில் ராணுவம் மட்டுமே ஓங்கி இருந்தது. அதனால் சேர்ந்துட்டேன். இதில் சேர்வது அவ்வளவு எளிதல்ல. படிப்பு மட்டும் இல்லை பயிற்சிகளும் கொஞ்சம் கடினமாதான் இருக்கும். ராணுவ நர்சிங் கல்லூரியில் சேர்வதற்கு தனித்தேர்வு எழுதணும். அதில் தேர்ச்சி பெற்றால் தான் சேர முடியும். நானும் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு தான் கல்லூரியில் சேர்ந்தேன். நாம நினைப்பது போல கல்லூரியில் எந்த ஒரு வாலு தனமும் செய்ய முடியாது.
அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பாங்க. அவங்களுக்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. அதை பின்பற்றணும். காலையில் கல்லூரியில் பாடம் நடக்கும். மாலையில் வார்டில் போய் சர்வீஸ் செய்யணும். ஆயுதங்களை ஏந்தும் பயிற்சியும் உண்டு. 18 வயசில் எனக்கு இது வித்தியாசமா இருந்தது. கல்சுரல் ஷாக்குன்னு கூட சொல்லலாம்.
எனக்கு ஹிந்தி தெரியாது. அங்கு பெரும்பாலும் ஹிந்தி, ஆங்கிலம் தான் பேசுவாங்க. ஆனால் நான் வைராக்கியத்துடன் பயிற்சி எடுத்தேன். 25 வருஷம் ராணுவத்தில் சர்வீஸ் செய்த நான் லெஃப்டினென்ட் ஜெனரல் பதவியில் இருக்கும் போது குடும்பச் சூழல் காரணமாக ஓய்வு பெற்று வந்துட்டேன்.
சென்னைக்கு வந்து ஒரு வருஷமாகுது. இங்கு ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சிங் துறையின் இயக்குனரா பணியாற்றி வருகிறேன்’’ என்றவர் அந்த துறைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டார்.
‘‘நர்சிங் ரொம்ப எமோஷனலான வேலை. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் திடமா இருக்கணும். இந்த துறையை பொறுத்தவரை ஒருவரின் பிறப்பு மற்றும் இறப்பு இரண்டையும் இவர்களால் மட்டுமே மனதைரியத்துடன் கையாள முடியும். ஒரே நாளில் பல விதமான நோயாளிகளை நாங்க சந்திப்போம். அவர்கள் குழந்தையாகவும் இருக்கலாம். அல்லது பெரியவர்களாகவும் இருக்கலாம். அவர்களின் நோயின் தாக்கம் எவ்வளவு தீவிரமாக இருந்தாலும், எங்களால் மட்டுமே அதே புன்னகை மாறாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
இதற்கு மனதளவிலும் உடல் அளவிலும் எங்களை தயார் படுத்திக் கொள்ளணும். இது போன்ற நிலையை எதிர்கொள்ள முடியும் என்றால் மட்டுமே ஒருவர் இந்த துறையை தேர்வு செய்ய வேண்டும். அப்பதான் வேலையில் ஈடுபாட்டோடு செயல்பட முடியும். காரணம் நாம் தினமும் சந்திக்கும் நோயாளிகளின் மனநிலை அறிந்து அதற்கு ஏற்ப செயல்படணும். எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க’’ என்றவர் ராணுவத்திற்கும் இங்கு மருத்துவமனையில் வேலை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசத்தை கண்டுள்ளார்.
‘‘ராணுவத்தில் இருப்பதற்கும் இங்கு இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அங்கு எல்லாரும் ரொம்பவே டிசிபிளினா இருப்பாங்க. நாம சொல்லும் சொல்லுக்கு எதிர்ப்போ மறு பேச்சோ பேசமாட்டாங்க. காலை மாலைன்னு இரண்டு ஷிப்ட் இருக்கும்.
எப்போதும் நாங்க அலர்ட்டா இருக்கணும். ராணுவத்தில் எப்போது என்ன நடக்கும்ன்னு தெரியாது. திடீரென்று தாக்குதல் ஏற்பட்டு ராணுவ வீரர்களுக்கு அடிபட்டு வரும் போது அதற்கான எல்லா மருத்துவ உபகரணங்களுடன் நாங்க தயாராகவும் கவனமா செயல்படணும். இங்கு ஒரு வீரன் மற்ெறாரு வீரனுக்கு உதவியா இருப்பார்.
அதாவது ஒருத்தருக்கு கையில் அடிபட்டு இருக்கும். மற்றவருக்கு காலில் என்றால், இருவரும் ஒருவருக்கு ஒருவர் தேவையான உதவியை செய்து கொள்வாங்க. பார்க்கும் போது ஒரு மருத்துவமனை போல் இருக்காது.
குடும்பமா செயல்படுவோம். இவர்கள் என்னதான் பார்த்துக் கொண்டாலும் ஒரு செவிலியரா, நோயாளிக்கு எப்ப என்ன மருந்து கொடுக்கணும்ன்னு கவனம் சிதறக்கூடாது. மருந்து கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்கலைன்னா அது அவர்களின் உடல் நிலையை மேலும் பாதிக்கும். காரணம் நோயாளிகளை பொறுத்தவரை டாக்டர்கள் எப்போதும் உடன் இருக்கமாட்டாங்க.
அவங்க என்ன பிரச்னை அதற்கான சிகிச்சை முறைகளை மட்டுமே தான் விவரிப்பாங்க. மத்தபடி அதனை செயல்படுத்த வேண்டியது எங்களின் வேலை. சில சமயம் வீரர்கள் உடம்பெல்லாம் ரத்தக்கறையுடன் வருவாங்க. சிலர் எலும்பு உடைந்து வருவாங்க. அந்த நேரத்தில் அவர்களின் உயிரை காப்பற்ற வேண்டும் என்ற ஒரே சிந்தனை தான் எங்க மனசில் ஓடும். இப்படிப்பட்ட நேரத்தில் இரண்டு மூன்று நாட்கள் கூட மருத்துவமனையிலேயே தங்கி இருந்து இருக்கேன்’’ என்றவர் கார்கில் போரின் போது அவர் சந்தித்த அனுபவத்தை குறிப்பிட்டார்.
‘‘போர் காலத்தில் வீரர்கள் எல்லையில் சண்டைப் போடுவார்கள். நாங்க ஒரு சில மைல் தூரத்தில் மருத்துவ உபகரணங்களுடன் காத்துக் கொண்டு இருப்போம். எப்போது என்ன நடக்கும்ன்னு சொல்ல முடியாது. காயம்பட்ட வீரர்களை விமானம் மூலம் இங்கு கொண்டு வருவாங்க. முதலுதவி செய்து அவர்களை உடனடியாக மருத்துவனைக்கு அனுப்பிடுவோம்.
கார்கில் போரின் போது, தலையில் குண்டடிப்பட்ட வீரர் ஒருவரை கொண்டு வந்தாங்க. ரத்தகாயத்துடன் அவரை கொண்டு வந்த போது பிழைப்பாரான்னு சந்தேகமா இருந்தது. ஒண்ணுமே சொல்ல முடியல. ஷாக்கிங்கா இருந்தது. ேபாராடி உயிரை காப்பாத்திட்டோம். ஆனா அவரின் நினைவுகளை எங்களால் திரும்ப கொண்டு வர முடியல’’ என்றவர் பெண்களுக்கான உகந்த வேலை நர்சிங் துறை என்றார்.
‘‘பெண்களுக்கு பிறவியிலேயே தாய் குணமுண்டு. குழந்தைகள், பெரியவர்கள் பராமரிப்பினை அவர்களை தவிர யாரும் சரியாக செய்யமாட்டார்கள். குறிப்பாக தமிழ்நாட்டு பெண்கள் என்ன தான் வேலைக்கு போனாலும் வீட்டினை பராமரிப்பதை தவறுவதில்லை. அதனால் தான் என்னவோ நர்சிங் படிச்ச நம்மூர் பெண்களுக்கு இந்தியாவில் மட்டும் இல்லை வெளிநாட்டிலும் நல்ல வரவேற்புள்ளது.
காரணம் அவங்க ெடடிகேஷன் மற்றும் இடத்திற்கு ஏற்ப அனுசரித்து செல்லும் குணம். இந்த துறையை பற்றி பலருக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. நோயாளிகளை பராமரிப்பது மட்டும் நர்சிங் வேலையில்லை. இதில் நிறைய பிரிவு இருக்கு. நமக்கான பிரிவினை தேர்வு செய்து கொள்ளலாம்’’ என்றார் நிர்மலா.
Average Rating