எம்.பிக்கள் சேவையாற்றுவது அவசியம் !! (கட்டுரை)
அரசியல்வாதிகள் யாரையும் அரசியலுக்குள் மக்கள் வலிந்து தள்ளிவிடுவதில்லை. அவர்களே அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். எனவே தமது சுய விருப்பு – வெறுப்புகளுக்கு அப்பால் நின்று மக்களுக்காகச் சேவையாற்றுவது தார்மீகம் மட்டுமல்ல, அவர்கள் ஏற்றுக் கொண்ட தொழிலின் கடமையும் ஆகும்.
இம்முறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம், தமிழ் எம்.பி.க்கள் இதனை அடுத்துவரும் ஐந்து வருடங்களுக்கு நினைவில் வைத்திருக்க வேண்டும்.
இலங்கையில் வாழுகின்ற 22 மில்லியன் மக்களின் பிரதிநிதியாக 225 பேர்தான் நாடாளுமன்றம் செல்கின்றனர். எல்லோருக்கும் காலம் இந்த வாய்ப்பை வழங்குவதில்லை. இந்தமுறை தேர்தலில் போட்டியிட்ட 7,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
சிலர் சொற்ப வாக்குகளால் வெற்றியை நழுவவிட்டிருக்கின்றனர். எனவே இதனையும் தாண்டி 196பேர் வெற்றி பெற்றிருக்கின்றனர். 27 பேர் தேசியபட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் இருவர் நியமிக்கப்படவிருக்கின்றனர்.
ஏழாயிரம் வேட்பாளர்களைத் தோற்கடித்த மக்களுக்கு இன்று தெரிவு செய்யப்பட்டுள்ள யாரை வேண்டுமானாலும் தோல்வியடையச் செய்வது முடியாத காரியமல்ல. ஆனால், ஏதோவொரு காரணத்துக்காக அவர்களை வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். இதுவே பெரும் வரப்பிரசாதம்தான். இது தவிர மேலும் பல வரப்பிரசாதங்களும் சிறப்புச் சலுகைகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாதாந்தச் சம்பளம் 54,285 ரூபாயாகும். இதற்கு மேலதிகமாக, ஒவ்வொரு நாடாளு மன்ற கூட்டத்துக்கும் செல்வதற்காக 2,500 ரூபாய், அமர்வு இல்லாத நாள்களில் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 2,500 ரூபாய், அலுவலகம் ஒன்றை நடாத்துவதற்காக ரூபாய் 1 இலட்சம், நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிக்காக மாதத்துக்கு 50,000 ரூபாய் வழங்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தின் தூரத்தைப் பொறுத்து எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படும். உதாரணமாக, கொழும்புக்கு 283.94 லீற்றர், கம்பஹாவுக்கு 355.58 லீற்றர் டீசலுக்கான கொடுப்பனவு வழங்கப்படும். தனிப்பட்ட பணியாள்களின் போக்குவரத்துக்காக மாதமொன்றுக்கு 10ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆயிரம் ரூபாய் கேளிக்கை கொடுப்பனவும் உண்டு.
தூர இடங்களைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு வீடொன்று வழங்கப்படும் அல்லது வாடகை வீட்டில் இருந்தால் அதற்கு குறிப்பிட்டளவான வாடகை கொடுப்பனவு வசதி கிடைக்கும். மக்கள் பிரநிதிநிதிகள் என்ற வகையில் அவர்களுக்கு வருடமொன்றுக்கு 350,000 ரூபாய் கொடுப்பனவு முத்திரைச் செலவுக்காக நாடாளுமன்றத்தால் வழங்கப்படுகின்றது.
அதிசொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக தீர்வை விலக்கு பத்திரங்கள் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வழங்கப்படும். அமைச்சர்கள் அல்லது இராஜாங்க அமைச்சர்களாக இருப்போருக்கு சம்பளம் மேலும் அதிகம் என்பதுடன், அவர்களது அமைச்சுகளின் ஊடாக மேலும் பல சலுகைகளும் கொடுப்பனவுகளும் கிடைக்கின்றன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தம்மைத் தெரிவு செய்த மக்களுக்காகக் குரல் கொடுக்கின்றாரா? அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்றாரா என்பதையெல்லாம் கவனத்திற் கொள்ளாமல், தொடர்ச்சியாகவோ, பல தடவைகளிலோ (மொத்தமாக) ஐந்து வருடங்கள் எம்.பி.யாக பதவி வகிக்கும் ஒருவருக்கு ஓய்வூதியமும் கிடைக்கப் பெறும்.
இதற்கு மேலதிகமாக சமூக கௌரவம், வி.ஐ.பி. கடவுச் சீட்டு மற்றும் விசா வசதிகள், பொலிஸ் பாதுகாப்பு, குறைந்த செலவில் நாடாளுமன்றில் உணவு வசதி மற்றும் எம்.பி.க்கள் என்ற வகையில் சிறப்பு வரப்பிரசாதங்கள் எனப் பல.
இவ்வாறான கொடுப்பனவுகள், சலுகைகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அது அவர்கள் இலகுவாக இயங்குவதற்கும் மக்களுக்குச் சேவையாற்றுவதற்கும் அவசியமாக வழங்கப்பட வேண்டியவை எனலாம்.
ஆனால், இவ்வாறான வரப்பிரசாதங்களை பெறுகின்ற எம்.பி.க்கள், ‘மக்கள் பிரநிதிதி’ என்ற தொழிலின் தார்ப்பரியம் அறிந்து செயற்படுவதே இங்கு முக்கியமானதாகும். மக்கள்தான் தம்மைச் தெரிவுசெய்தார்கள் என்பதையும், மக்களின் பிரதிநிதி என்ற காரணத்துக்காகவே இந்தக் கௌரவமும் வரப்பிரசாதங்களும் தமக்குக் கிடைக்கின்றன என்பதையும் எம்.பி.க்கள் மறந்து விடக் கூடாது. சிறுபான்மை தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இது விடயத்தில் அதிக பொறுப்பிருக்கின்றது. பெருந்தேசிய அரசியல் சுழிக்குள் அகப்பட்டுள்ள சிறுபான்மையினரின் அரசியலை முன்கொண்டு செல்வதற்கு நாடாளுமன்றத்தை மிகவும் புத்திக்கூர்மையுடன் பயன்படுத்த வேண்டியுள்ளது.
கடந்த காலத்தில் தமிழ் அரசியல்வாதிகள் ஒப்பீட்டளவில் நாடாளுமன்றத்தை சிறப்பாக பயன்படுத்திய போதும் முஸ்லிம் எம்.பி.க்கள் வரப்பிரசாதங்களை அனுபவித்தனரே தவிர மக்கள் நலனுக்காக செயற்படுவதில் பாரிய தவறிழைத்திருக்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட கட்சியில் போட்டியிடும் வேட்பாளரை மக்கள் வாக்களித்து வெல்ல வைத்த பிறகு அவர் வேறொரு கட்சிக்கு தாவுவதும், பேரம்பேசுதல் என்ற பெயரில் பதவிகளையும் ‘வெகுமானங்களை’யும் பெற்றுக் கொண்டு ஆதரவளிக்கும் தீர்மானத்தை எடுப்பதும் குறிப்பாக முஸ்லிம் அரசியலில் பல தடவை இடம்பெற்றிருக்கின்றது.
தொழில் வழங்குவதற்காக இளைஞர்க ளிடம் பணம் பெறுதல், கடைசியில் தொழிலுமின்றி பணத்தையும் வழங்கா மல் ஏமாற்றுதல், அரசாங்கத்தால் வழங்க ப்படுகின்ற திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு கட்டட ஒப்பந்தக் காரர்களிடம் தரகு பெறுதல், பாரிய செயற்றி ட்டங்களுக்காக குறிப்பிட்ட வீதத்தில் கையூட்டல் கோருதல் என வேறுபல குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிப்பதையும் பொது வாக எம்.பி.க்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடையே காண முடிகின்றது.
இதனால், தேர்தலுக்கு முன்பு வரை ஒரு நடுத்தர குடும்பத்தவராக இருந்த அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினரானதும் கோடிகளைச் சம்பாதித்து விடுகின்றார். பெரும் சொத்துகள், உள்நாட்டு, வெளிநாட்டு வங்கிகளில் சேமிப்புகள் என கொள்வனவு செய்து, ஒரு பரம்பரை பணக்காரனைப் போல குறுகிய காலத்துக்குள்ளேயே முன்னேறி விடுவதை காண்கின்றோம். இதில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே விதிவிலக்கு.
ஆனால், இந்த எம்.பிக்களுக்கு வாக்களித்த மக்களின் வாழ்க்கைநிலை அப்படியேதான் இருக்கின்றது. அவர்கள் எதிர்பார்த்த உரிமை யையும் தமது பிரதிநிதிகளான எம்.பி.க்கள் பெற்றுத் தரவில்லை, அபிவிருத்தியையும் மேற்கொள்ளவில்லை. ஆக மொத்தத்தில் மக்களையன்றி தம்மை, தமது குடும்பத்தை, தம்மை சுற்றியிருக்கும் கூட்டத்தையே அவர்கள் வளர்த்துக் கொள்கின்றார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இப் பத்தியின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட வரப்பிரசாதங்கள், கொடுப்பனவுகள் எல்லாம் வழங்கப்படுகின்றன என்றால் அது அவர்களது திறமைக்காகவோ அவர்கள் பெற்ற பட்டத்துக்காகவோ அல்ல. ஏனெனில் கடந்த நாடாளுமன்றில் க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் சித்தியடையாதவர்கள் கூட அங்கம் வகித்தனர். எனவே, இதுவெல்லாம் தரப்படுவது மக்களுக்கு சேவையாற்றும் பணிக்கு வசதியளிப்பதற்காக ஆகும்.
ஆயினும் இது விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக அநேகமான முஸ்லிம் எம்.பி.க்கள் கடந்த காலங்களில் சமூகத்துரோகம் இழைத்துள்ளார்கள் என்றே கூறவேண்டும். இவ்வளவு சுகபோகங்கள், கொடுப்பனவுகளை அனுபவித்துக் கொண்டும் தமது பதவி ஊடாக மக்களுக்கு பெற்றுக் கொடுத்தவை மிகச் சொற்பமாகும்.
நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்பதற்காக, தேர்தலில் மல்லுக்கட்டி வெற்றி பெற்ற முஸ்லிம் எம்.பி.க்கள் எத்தனையே முறை அமர்வுகளுக்குச் சமுகமளிக்கவில்லை. சமுகமளித்த சந்தர்ப்பங்களிலும் இந்த சமூகத்து க்காக நியாயபூர்வமாகப் பேசியவர்கள், பேச்சோடு மட்டும் நின்றுவிடாமல் அதை சாதித்துக் காட்டியவர்கள் மிகக் குறைவு. சில தமிழ் அரசியல்வாதிகளும் இவ்விதமே நாடாளுமன்றத்தைக் கையாண்டனர்.
இந்நிலைமை புதிய நாடாளுமன்றத்திலும் தொடரக் கூடாது. எம்.பி.யாகத் தெரிவு செய்யப்பட்டோமா, அதற்காகச் செலவு செய்த பணத்தை உழைத்தோமா, வங்கி வைப்புகளை கனதியாக்கினோமா, கதிரையைச் சூடாக்கினோமா என்றிருக்காமல்… ஆக்கபூர்மான, அறுவுடமையான எம்.பி.க்களாக சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டியுள்ளது.
இந்த நாடாளுமன்றம் முன்னையவற்றைப் போன்றதல்ல. மூன்றிலிரண்டு பெரும்பா ன்மைப் பலத்தை கொண்ட ஆட்சி என்ப துடன், சிங்கள மக்களின் கிட்டத்தட்ட 75 சதவீத ஆதரவைப் பெற்ற அரசாங்கமும் ஆகும். இந்தப் பலத்தை வைத்துக் கொண்டு 19ஆவது திருத்தத்தை நீக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டு வருதல் மட்டுமன்றி, 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபை முறைமைகளை நீக்குதல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் முறைமையில் மாற்றம் என்பவற்றை உள்ளட க்கிய புதிய அரசமைப்பும் கொண்டு வர ஆட்சி யாளர்கள் விரும்புகின்றார்கள் என்பதையும் மனதிற் கொண்டே ஒவ்வொரு எம்.பியும் தமது கடமையைச் செய்ய வேண்டும்.
குறிப்பாக மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒரு முஸ்லிம் எம்.பி.க்கு கூட அமைச்சுப் பதவி கிடைக்காத நிலையில் ஆளும் தரப்பில் பலமின்றியும், எதிரணியில் எண்ணிக்கை அதிகம் என்றாலும் அதிகாரமின்றியும் இருக்கின்ற முஸ்லிம் எம்.பிகள் மிகவும் புத்திசாலித்தனத்துடன் செயற்படுவது அவசியம்.
முஸ்லிம்களின் இன, மத உரிமையை மறுதலிக்கின்ற திருத்தங்கள் தொடர்பில் விழிப்பாக இருப்பதுடன், கிளர்ச்சியூட்டும் அரசியல் ஊடாக அன்றி மிகப் பக்குவமான அணுகுமுறை ஊடாகவே இந்த நாடாளு மன்றத்தில் சாதிக்கலாம் என்ற விடயத்தை மறந்து விடக் கூடாது. அரசாங்கத்தில் ஒருவர் சிற்றூழியராக நியமிக்கப்பட்டு விட்டால் அதற்குரிய பணியைச் செய்தேயாக வேண்டும். ஓர் அரச உத்தியோகத்தர் சரியாகச் செயற்படவில்லை என்றால் அதற்காக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற ஒரு நடைமுறை அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் விடயத்திலும் கையாளப்பட வேண்டும்.
எனவே, முதலாவது விடயம், இம்முறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள அனைத்து உறுப்பினர்களும் தமக்கான சலுகைகள், வரப்பிரசாதங்களை அனுபவிப்பதுடன் மட்டும் நின்றுவிடாது, அதற்குப் பரிகாரமாக சிறுபான்மை மக்களுக்கு காத்திரமான சேவையைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத எம்.பிக்களிடம் மக்களும், புத்திஜீவிகளும், நாடாளுமன்றமும் கேள்வி கேட்கும் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.
Average Rating