’ஷொக்’ அடிக்கும் கலர் லைட்டுகள்!! (கட்டுரை)
மின்சாரத் துண்டிப்புத் தொடர்பான அறிவிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து, கொழும்பில் பல நிறுவனங்கள் அன்றைய தினத்தில், தங்களது ஊழியர்களைத் திரும்ப வீட்டுக்கே அனுப்பியிருந்தன. இவ்வாறு வீடு திரும்பிய பலரும், அன்றைய தினம் ஏற்பட்ட வாகன நெரிசல்களால், பெரும்பாலான நேரங்களை வீதியிலேயே செலவிட நேர்ந்தது. நாடு முழுவதிலும் ஏற்பட்டிருந்த மின்தடையால், கொழும்பில் உள்ள வீதி சமிக்ஞை விளக்குகள், முற்றாகச் செயலிழந்திருந்தமையே இதற்குக் காரணம்.
15 ஆயிரம் பஸ்கள், 10 ஆயிரம் ட்ரக் வண்டிகள், இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் தனியார் வாகனங்களென, நாளொன்றில் கொழும்புக்கு, இரண்டரை இலட்சம் வாகனங்கள் வந்து செல்வதால், ஏனைய நகரங்களைவிட, கொழும்பில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கிறதென, ஆய்வுகள் சொல்கின்றன.
நாட்டின் ஏனைய நகரங்களைவிட, கொழும்பில் சிறந்த சுகாதார, கல்விச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற காரணங்களாலும் அரசியல், வர்த்தகக் காரணங்களாலும், இலங்கையின் ஏனைய நகரங்களைவிட, கொழும்பு மிக முக்கியமான நகராக இருந்து வருகிறது.
இந்த வாகன நெரிசல்களால், வாகனங்கள் அதிக நேரங்கள் வீதியிலேயே காத்திருப்பதாலும் குறைவான வேகத்தில் பயணிப்பதாலும், எரிபொருள் விரயமாகிறதோடு, இதனால் பொருளாதாரப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
இவ்வாறான வாகன நெரிசல்களைக் குறைப்பதற்காகவும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும், கொழும்பு மாநகர சபையால் பராமரிக்கப்படுகின்ற வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு, கோடிக்கணக்கான பணம் வருடந்தோறும் செலவிடப்படுவது, தகலறியும் உரிமைச் சட்டத்தினூடாக (RTI) தெரியவந்தது.
கொழும்பு மாநகர சபையால் பராமரிக்கப்படுகின்ற வீதி சமிக்ஞை விளக்குகளின் மின் கட்டணம், அதன் பராமரிப்புச் செலவுகள் தொடர்பில், 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்கத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கொழும்பு மாநகர சபையிடம், தமிழ்மிரர் தகவல்களைப் பெற்றுக்கொண்டது.
கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட 144 இடங்களில், சுமார் 3 ஆயிரத்து 900 வீதி சமிக்ஞை விளக்குகள் காணப்படுவதாக, கொழும்பு மாநகர சபையின் பதில் மாநகர ஆணையாளரும் தகவலதிகாரியுமான கே.ஜீ.ஐ.எஸ்.கால்லகே கைச்சாத்திட்டு அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு, வருடாந்த மின்சாரக் கட்டணமாக 4.8 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படுவதோடு, இவற்றைப் பராமரிப்பதற்காக, வருடமொன்றுக்குச் சராசரியாக ஒரு கோடியே 28 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்படுவதும், தகலறியும் உரிமைச் சட்டத்தினூடாகத் தெரியவந்துள்ளது.
2015 – 2019ஆம் ஆண்டு வரையிலான மின்கட்டணம்
2015ஆம் ஆண்டில், 48 இலட்சத்து 51 ஆயிரத்து 751 ரூபாயும் 2016ஆம் ஆண்டில், 49 இலட்சத்து 89 ஆயிரத்து 664 ரூபாயும், 2017இல் 44 இலட்சத்து 69 ஆயிரத்து 440 ரூபாயும் 2018இல் 30 இலட்சத்து 27 ஆயிரத்து 429 ரூபாயும் 2019இல் 30 இலட்சத்து 93 ஆயிரத்து 125 ரூபாயும், மின் கட்டணமாகச் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, சராசரியாக வருடமொன்றுக்கு, 48 இலட்சம் ரூபாய், வீதி சமிக்ஞை விளக்குகளுக்கான மின்சாரக் கட்டணமாகச் செலுத்தப்படுகிறது. 2015ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டுக்கான மின் கட்டணத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கடந்த நான்கு வருடங்களில், மின் கட்டணம் 13 இலட்சம் ரூபாயாகக் குறைவடைந்துள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
வீதி சமிக்ஞைகளுக்கான மின்சாரக் கட்டணம், கடந்த நான்கு வருடங்களில் குறிப்பாக, 2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறைவடைந்திருக்கிறது. 2015ஆம் ஆண்டின் மின் கட்டணத்தோடு ஒப்பிடும்போது, 2016இல், வீதி சமிக்ஞைகளுக்கான மின் கட்டணம், ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 913 ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும், 2016ஐ விட 2017இல், வீதி சமிக்ஞைகளுக்கான மின் கட்டணம், சுமார் 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகக் குறைவடைந்துள்ளது.
அதேபோல, 2017ஐ விட, 2018ஆம் ஆண்டில், சுமார் 14 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் குறைவடைந்துள்ளது. 2018ஆம் ஆண்டைவிட 2019இல், சுமார் 65 ஆயிரமாக மின் கட்டணம் உயர்வடைந்துள்ளது.
அதிகூடிய மின் கட்டணம் பதிவாகும் இடங்கள் எவை?
கொழும்பு மாநகர சபையால் பராமரிக்கப்படும் வீதி சமிக்ஞை விளக்குகளில், 2019ஆம் ஆண்டில் அதிகூடிய மின் கட்டணம் செலுத்தப்படும் இடங்களாக ஆறு இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
இதில், பஞ்சிகாவத்த சுற்றுவட்டத்திலுள்ள மின் சமிக்ஞைகளுக்கே, 2019இல் அதிகளவாக, அதாவது 69 ஆயிரத்து 290 ரூபாய், மின் கட்டணமாகச் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக, லேக்ஹவுஸ் சந்தியில் உள்ள மின் சமிக்ஞைகளுக்கு – 64 ஆயிரத்து 625 ரூபாயும், கொம்பனித் தெரு சந்தியில் உள்ள வீதி சமிக்ஞைக்கு – 57 ஆயிரத்து 448 ரூபாயும், காலி வீதி டபிள்யு. ஏ.டி.சில்வா வீதிச் சந்தியில் உள்ள வீதி சமிக்ஞைக்கு – 51 ஆயிரத்து 924 ரூபாயும், ஸ்ரீ ஜயவர்த்தனபுர வீதி, ஆயுர்வேத சுற்றுவட்டத்தில் உள்ள வீதி சமிக்ஞைக்கு – 50 ஆயிரத்து 716 ரூபாயும், ஆமர் வீதி/ ஜேதவனா வீதிச் சந்தியில் உள்ள வீதி சமிக்ஞைக்கு – 48 ஆயிரத்து 51 ரூபாயும், மின் கட்டணங்களாகச் செலுத்தப்படுகின்றன.
குறைவான மின் கட்டணங்கள் பதிவாகும் இடங்கள்
இதேவேளை, கொழும்பு மாநகர சபையால் பராமரிக்கப்படுகின்ற மூன்று இடங்களில் உள்ள வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு, குறைவான மின் கட்டணம் செலுத்தப்படுகின்றன.
காலி வீதியின் சமுத்திரா ஹோட்டலுக்கு எதிரில் உள்ள பாதசாரிக் கடவை, காலி வீதியின் புனித மைக்கல் வீதிச் சந்தி, காலிமுகச் சுற்றுவட்டத்துக்கு அண்மையிலுள்ள பாதசாரிகளுக்கான சமிக்ஞைகளிலேயே, குறைவான மின் கட்டணம் செலுத்தப்படுகிறது. எனினும், அது எவ்வளவு என்ற தகவல்கள் கோரப்பட்டிருந்த போதிலும், அந்தத் தகவல்கள் வழங்கப்படவில்லை.
பராமரிப்புச் செலவு
இந்த வீதிச் சமிக்ஞை விளக்குகளைப் பராமரிப்பதற்கு, கொழும்பு மாநகர சபையால் செலவிடப்படும் செலவுகள் உண்மையிலேயே ‘ஷொக்’ அடிக்க வைக்கின்றன. மின் கட்டணங்களைவிட இந்தத் தொகை, பல மடங்கு அதிகரித்து, கோடிக்கணக்கில் இருக்கிறது.
2015ஆம் ஆண்டு வரையில், இலட்சங்களாக இருந்த பராமரிப்புச் செலவுகள், 2016ஆம் ஆண்டு முதல் இரட்டிப்பாகி, கோடிக்கணக்காக மாறியிருக்கிறது.
69 இலட்சத்து 43 ஆயிரத்து 200 ரூபாயாக இருந்த 2015ஆம் ஆண்டின் வீதி சமிக்ஞை பராமரிப்புச் செலவுகள், 2016 முதல் இரட்டிப்பாகி, ஒரு கோடியே 29 இலட்சத்து 38 ஆயிரத்து 200 ரூபாயாகவும் 2017இல் – ஒரு கோடியே 38 இலட்சத்து 25 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.
அதுபோல, 2018ஆம் ஆண்டில் – ஒரு கோடியே 43 இலட்சத்து 47 ஆயிரத்து 300 ரூபாயாகவும் 2019இல் – ஒரு கோடியே 60 இலட்சத்து 66 ஆயிரத்து 400 ரூபாயாகவும், பராமரிப்புச் செலவு பன்மடங்காக அதிகரித்துள்ளது.
பராமரிப்புச் செலவுகளுக்கான காரணங்கள், RTI விண்ணப்பத்தில் கோரப்பட்டிருந்த போதிலும், அதற்கான பதில்கள், கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
எவ்வாறு கட்டுப்படுத்துவது?
வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு ஏற்படும் மின்சாரச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் மின்சாரத்தைச் சேமிப்பதற்கும், கொழும்பு மாநகர சபையிடம் உள்ள திட்டங்கள் என்னவெனவும் வினவியிருந்தோம்.
இதற்குப் பதில் வழங்கியுள்ள கொழும்பு மாநகர சபை, “மின் கட்டணத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, முன்பிருந்த மின்சார ஹலோஜன் குமிழ்களை, LED (Light Existing Diode) குமிழ்களாக மாற்றுதல், கடந்த காலங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டது. தற்போது, ஒரு சந்தியில் மாத்திரம் ஹலோஜன் குமிழ்கள் காணப்படுகின்றன. அதனையும் எதிர்காலத்தில் LEDஆக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதில் வழங்கப்பட்டிருக்கிறது.
இதேவேளை, கொழும்பு மாநகர சபையால் பராமரிக்கப்படுகின்ற வீதி சமிக்ஞைகள், பல காரணங்களால் உடைந்துப் போகிறதெனவும் அவற்றைப் பழைய நிலைமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் அவ்வப்போதே எடுக்கப்பட்டுள்ளன எனவும், கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.
எந்த நேரத்தில் அதிகளவிலான மின்சாரம் பயன்படுகிறது?
வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு, எந்த நேரத்தில் அதிகளவான மின்சாரம் பயன்படுகிறது, அதற்கான காரணம் என்ன? எனவும் நாம் வினவியிருந்தோம்.
இதற்குப் பதிலளித்துள்ள கொழும்பு மாநகரசபை, பகல் நேரத்தில் முழுமையான வீதி சமிக்ஞைகள் செயற்படுத்தப்படுவதால், கூடுதலான மின்சாரம் செலவாவதுடன், இரவு நேரங்களில் அம்பர் நிறம் (Amber Flashing) விட்டு விட்டு எரியும் சந்தர்ப்பங்களில், மின்சாரம் குறைவாகவே செலவாகும்” என்றும் பதிலளிக்கப்பட்டுள்ளது.
Average Rating