பனம்பழம் பத்தும் செய்யும்!! (மருத்துவம்)
‘விதைக்க வேண்டியதுமில்லை… வளர்க்க வேண்டியதுமில்லை என்கிற அளவில் நமக்கு சிரமம் தராதது பனைமரம். ஆனால் நுங்கு, பதநீர், கருப்பட்டி என்று அது தரும் பயன்களோ ஏராளம். இவற்றைப் போலவே பனை மரத்தின் பழமும் எண்ணற்ற சத்துக்களைக் கொண்டது.கிராமப்புற மக்கள் சுவையான உணவு என்ற கோணத்தில் பனம்பழத்தை உண்பது வழக்கம். அதன் சத்துக்களை முழுமையாக அறிந்தால் எல்லோருமே உண்ண விரும்புவார்கள்’’ என்கிற யோகா மற்றும் இயற்கை மருத்துவர் தீபா, அதன் மருத்துவப்பலன்களைப் பட்டியலிடுகிறார்.
* பனை மரத்தை பொறுத்தளவு பனை சுளை, பனங்கள் அதன் மூலம் கிடைக்கக்கூடிய கருப்பட்டி, பதநீர் போன்றவை மேலும், பனங்கிழங்கு போன்றவை நமக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. அதேபோல பனை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய பழமே பனம்பழமாகும்.
* பனை மரத்தில் சுளைக்காக வெட்டாமல் அப்படியே விட்டுவிட்டால் காய் முற்றி பழமாக பழுத்துவிடும். இது உருவத்தில் தேங்காயை விட பெரிதாகவும், உருண்டையாகவும் இருக்கும்.
* பழம் கருப்பு நிறம் கொண்டதாக இருக்கும். தலையில் அதாவது மேல்பகுதியில் லேசாக சிவந்த நிறத்துடனும் காணப்படும்.
* பனம்பழத்தின் உள்ளே இரண்டு அல்லது மூன்று பெரிய உறுதியான கொட்டைகள் இருக்கும். பனம் பழத்தில் நார் நிறைந்து காணப்படும். நார்களின் நடுவே ஆரஞ்சு அல்லது சிவந்த மஞ்சள் நிறத்துடன் கூடிய கெட்டியான சாறு கலந்திருக்கும். இந்தச் சாறு இனிப்புச் சுவையுடன் இருக்கும்.
* பனம்பழத்தை அவித்தும் சுட்டும், அதன் சாற்றை எடுத்து வதக்கியும் சாப்பிடுவார்கள். இவ்வாறு சாப்பிடும் முறை நம்முடைய தொன்று தொட்டு பாரம்பரியமாக இருந்துவருகிறது. ஆனால், இன்றைக்கு பனம்பழம் சாப்பிடும் பழக்கம் கிராமப்புறங்களில் மட்டும் தான் இருக்கிறது.
* பனம்பழத்தில் பப்பாளி, மாம்பழத்தைவிட கூடுதலாக வைட்டமின் சி மற்றும் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. பனம்பழச் சாற்றில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, உலோக உப்புகள், சர்க்கரை, வைட்டமின் சி மற்றும் கரோட்டின் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக, பார்வைத்திறனை அதிகரிக்கும் பீட்டா கரோட்டின் என்னும் வைட்டமின் ஏ சத்து இந்த பழத்தில் பெரிய அளவு இருக்கிறது.
* பனம்பழம் சிறந்த சத்துணவாகும். இதில் உயிர்ச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இந்தப்பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
* பனம் பழத்தை சாப்பிட விரும்புபவர்கள் நெருப்பு மூட்டி சுட்டும் சாப்பிடலாம் அல்லது நீரில் வேக வைத்தும் சாப்பிடலாம். ஒரு பழத்தில் பாதி அளவு வரை ஒருவர் உட்கொள்ளலாம்.
* நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்குள் உண்டுபண்ணி சரும நோய்களை பனம்பழம் சரி செய்கிறது.
* பனம்பழம் உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தருகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது.
* நீரிழிவு பாதிப்புள்ளவர்களும் பனம்பழத்தை சாப்பிடலாம். இதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.
* பனம்பழத்தை கர்ப்பிணி பெண்கள், மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள், பித்தப்பை பாதிப்பு இருப்பவர்கள், கல்லீரல் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
* பனம்பழச்சாற்றுடன் மாவு சேர்த்துப் பிசைந்து பணியாரம் செய்து சாப்பிடுவார்கள். தேங்காய், வாழைப்பழம், பால், சர்க்கரை சேர்த்து இனிப்பு பலகாரங்கள் செய்வார்கள். தக்காளி ஜாம் போலவும் பனம்பழத்திலிருந்து ஜாம் தயாரிக்கிறார்கள்.
* பனம்பழத்தின் சாற்றை சருமநோய்களுக்குப் பூசுவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
* பனம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டால் கரப்பான், சிரங்கு, மலச்சிக்கல், பித்த வாயு அதிகரித்து நோய்கள் உண்டாகும் என்பதால் அளவுடன் சாப்பிடுவது நல்லது.
* பனம்பழத்திலிருந்து எடுக்கப்படும் சாற்றை, வெயிலில் காய வைத்து அதன்மீது மீண்டும் சாற்றை ஊற்றி, நன்றாகக் காய வைப்பார்கள். அது நன்றாக இறுகி இனிப்புக் கட்டிகளானதும் அதை பயன்படுத்துவார்கள். குறிப்பாக இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயன்படுத்துகின்றனர்.
Average Rating