யானையின் வலிமை… குதிரையின் சக்தி…!! (மருத்துவம்)
‘சிறிய மூர்த்தி… பெரிய கீர்த்தி என்பார்கள். அஸ்வகந்தாவுக்கு மிகவும் பொருத்தமான வர்ணனை என்று சொல்லலாம். பூமிக்கு மேல் வளரும் சிறிய குறுஞ்செடியாக அஸ்வகந்தா இருந்தாலும் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவும் அதிமுக்கிய மருந்தாக திகழ்கிறது. ஆரோக்கியத்தை கூட்டி உடல் பலத்தை அதிகரிக்கச் செய்கிறது.
இன்னும் சொல்லப் போனால் யானையின் வலிமையையும், குதிரையின் சக்தியையும் தரக் கூடியது அஸ்வகந்தா’’ என்கிறார் சித்த மருத்துவர் ராதிகா. மேலும் அஸ்வகந்தா தரும் பயன்கள் என்னென்னவென்பதையும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் தொடர்ந்து விளக்குகிறார்.
‘‘நம் வாழ்க்கையை தாங்கி பிடித்து ஆதாரமாக திகழும் தூண்களாக விளங்குவது உணவு, தூக்கம் மற்றும் இல்லற வாழ்க்கை. இம்மூன்றையும் பலப்படுத்தும் திறவுகோலாக விளங்கும் சிறிய கீர்த்தி அஸ்வகந்தையாகும். ஆங்கிலத்தில் Indian ginseng என்றும் தாவரவியலில் Withania somnifera என்றும் குறிப்பிடப்படுகிறது.
ராஜ நிகண்டு என்னும் நூலில் அஸ்வகந்தாவுக்கு 23 சம பெயர்கள் கூறப்பட்டுள்ளது. அப்பெயர்களுள் சிலவற்றை அதன் தோற்றத்தையும், அதன் பயனையும், அதன் வேர் வாசனையையும் குறிக்கிறது. வாசனை அடிப்படையில் கந்தப்பத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இக்குறுஞ்செடியின் வேரானது குதிரையின் நாற்றம் போல் இருக்கும். மேலும் பத்திரி என்றால் இலைகள், அதன் இலைகளும் குதிரையின் நாற்றம் போன்றே மிகவும் வாசனையாகயிருக்கும். ஆதலால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.
தோற்றத்தின் அடிப்படையில் கம்புக்காஷ்டா, பிவரா, வராஹபத்திரி, ஸ்யாமலா, பலாஸபர்னி, வனஜா என்று பெயர்கள் உள்ளன. இச்செடி வறட்சியான இடங்களில் மிகுதியாக வளரும். ஆண்மையின் வீரியத்தை அதிகரிக்கும் என்ற பொருளில் காமரூபினி என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. அஸ்வகந்தா உடலுக்கும் மனதுக்கும் சக்தியை தரும். அறிவு மிகுந்த மக்கட்செல்வத்தை ஈட்டித்தரும். குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம் என மூன்று காலத்துக்கும் அஸ்வகந்தா ஏற்புள்ளதாகும்.
அஸ்வகந்தாவின் தன்மைகசப்பு, துவர்ப்பு, கார சுவை கொண்டது. உஷ்ண குணம், மக்கட் பேறு பெறுவதற்கும் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது. வாத, கப தோஷங்களை குறைக்கும். பலத்தை அதிகரிக்கும், இளமையான தோற்றத்தை அளிக்கும், முதுமையை குறைக்கும், புதிய செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும், பசியைத் தூண்டும், நல்ல உறக்கத்தைத் தரும். காசம் என்றழைக்கப்படுகிற சளி, இருமல், மூச்சுத் திணறல், காயம், வெண் சரும நோய், தோல் நோய்கள்(குஷ்டம்), வீக்கம் ஆகிய நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டது அஸ்வகந்தா.
அஸ்வகந்தாவின் மருத்துவ பயன்கள்
அஸ்வகந்தாவின் சாரத்தை சமமற்ற அளவில் தேனையும் நெய்யையும் சேர்த்து கலந்து அடிக்கடி உண்பது பல்வேறு நலனைப் பெற்றுத்தரும். தூக்கமின்மை குறைபாட்டை சரி செய்து, சுகமான தூக்கம் பெற அஸ்வகந்தாவின் சூரணத்தை சர்க்கரையுடனும் நெய்யுடனும் சேர்த்து கலந்து இரவில் தூங்குவதற்கு முன் உணவு சாப்பிட்ட பிறகு உண்டு வந்தால் பலன் பெறலாம்.
கட்டிகள் எந்தவிதமாக இருப்பினும் அதை சரி செய்யும் திறன் கொண்டது அஸ்வகந்தா. அனைத்துவிதமான கட்டிகளை கரைக்க அஸ்வகந்தாவின் இலைகளை வைத்து பற்று போட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன சித்த மருத்துவ நூல்கள்.
வாதத்தினால் ஏற்படும் இதய நோயை குணப்படுத்த அஸ்வகந்தா இலையை அரைத்து அதை பசையாக்கி, அதில் தான்றிக்காயின் பொடி மற்றும் வெல்லத்தை சேர்த்து வெந்நீருடன் உணவு உண்ட பிறகு அல்லது ஒவ்வொரு சாத உருண்டையுடன் சேர்த்து அல்லது ஒவ்வொரு சாத உருண்டைக்கு நடுவிலும் பருகி வரலாம்.
குழந்தை புஷ்டியாகவும் ஆரோக்கியமாக வளர அஸ்வகந்தாவால் செய்யப்பட்ட நெய்யை சாப்பிட்ட பிறகு பருக வைக்க வேண்டும். அஸ்வகந்தா பால் கஷாயத்தை நெய்யுடன் சேர்த்து மாதவிடாய் முடிந்து, ருது காலத்தில் உள்ள பெண்கள் குளித்த பிறகு பருகினால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.
மெலிந்து போன அங்கங்களையும் அஸ்வகந்தாவினால் செய்த தைலத்தை கொண்டு தேய்த்தால் பலம் மிகுந்தவையாக மாற்ற முடியும்.
குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும் கிடைக்க அஸ்வகந்தாவின் வேறில் பால் கஷாயம் செய்து நெய் சேர்த்து பால் கொண்டு உணவு உண்ட பிறகு பருக வைக்க வேண்டும்.
முதுமையில் இளமை காண அஸ்வகந்தாவின் தண்டத்தை சூரணம் செய்து அதனுடன் சமமற்ற அளவில் நெய்யையும் தேனையும் சேர்த்து ஒரு மாதம் சாப்பிட வேண்டும். உடலில் புதிய செல்கள் உற்பத்தியாகவும், ஆரோக்கியம் மேம்படவும் தினமும் அஸ்வகந்தா சூரணத்தை பால் அல்லது நெய் அல்லது தைலத்தோடு சேர்த்து உண்ண வேண்டும். இதை 15 நாட்கள் பின்பற்றலாம். இவ்வாறான பல தனித்துவ மருத்துவ குணங்களை கொண்டுள்ளதால்தான் கீர்த்தி பெரிது என்று அஸ்வகந்தாவைக் குறிப்பிடுகிறார்கள்!’’
Average Rating