வீல்சேரில் வாள் சண்டை!! (மகளிர் பக்கம்)
சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய அளவிலான வாள் சண்டைப் போட்டியில்(fencing) கோவையைச் சேர்ந்த தீபிகா ராணி, சென்னையைச் சேர்ந்த சரோஜினி, நாகர்கோவிலைச் சேர்ந்த சுராம்பி மூவரும் இணைந்து தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர். இவர்கள் மூவருமே வீல்சேர் யூஸர்ஸ். அதாவது மாற்றுத் திறனாளிகள். இவர்களின் வெற்றிவாய்ப்பு குறித்து கோவையில் இருந்து விளையாட வந்த மாற்றுத் திறனாளர் தீபிகா ராணியிடம் பேசினோம்…
‘‘சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த 12வது தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு டீம் சார்பாக நாங்கள் வெற்றிபெற்றோம். வாள் சண்டையில் மொத்தம் 3 பிரிவுகள் உள்ளது. மூன்றிலுமே தனி நபர் விளையாட்டு மற்றும் குழு விளையாட்டுக்கள் உள்ளது.
இதில் மற்ற இருவரோடு கோவையில் இருந்து நானும் இணைந்து குழு விளையாட்டு பிரிவுகளில், இரண்டில் இறுதிச் சுற்று வரை வந்தோம். இதில் ஒரு பிரிவில் தங்கமும், மற்றொரு பிரிவில் வெள்ளியும் எங்களுக்கு கிடைத்தது. வாள் சண்டையில் குழு விளையாட்டைப் பொறுத்தவரை நால்வர் இடம் பெறுவர். அதில் ஒருவர் சப்ஸ்டியூட்டாக இருக்க மூவர் களத்தில் இருப்போம்.
பென்சிங்கில் இலகுரக வாள் சண்டை (ஃபாயில்), அடிவாள் சண்டை (சேபர்), குத்து வாள் சண்டை (எப்பி) என மூன்று பிரிவுகள் உண்டு. மூன்றுக்குமான வாள், ஜாக்கெட் மற்றும் ஹெல்மெட் மாறுபடும். நாங்கள் அணிந்திருக்கும் மேக்னெட்டால் ஆன ஜாக்கெட்டில் இருந்து ஒரு வயர் வாளோடு இணைக்கப்பட்டிருக்கும். நாங்கள் எதிராளியை அட்டாக் செய்யும்போது ஜாக்கெட்டின் மேல் வாள் பட்டதுமே, வாளின் முனையில் இருக்கும் லைட் எரியும். அதை வைத்து வெற்றிக்கான எண்கள் கணக்கிடப்படும்.
நான் என் வீட்டிற்கு ஒரே பொண்ணு. என் அப்பா ஒரு பேக்கரி ஊழியர். மூன்று மாதக் குழந்தையாக இருக்கும்போதே போலியோவால் பாதிக்கப்பட்டேன். எனது ஒரு கையும் ஒரு காலும் செயலிழந்தது. பிஸியோதெரபி பயிற்சி எடுத்ததில் சற்று மாற்றம் இருந்தது. கை வலுப்பெற, கால் மட்டும் இன்னும் பலம் அடையவில்லை. மருத்துவர்கள் இடுப்புக்குக் கீழ் 80 சதவிகிதம் ஊனம் என சான்றிதழ் கொடுத்தார்கள்.
வீட்டில் காலிஃபர் போட்டே நடப்பேன். நார்மல் பள்ளியில்தான் படித்தேன். பள்ளி கல்லூரிக்கு செல்லும்வரை அப்பா தினமும் என்னை டூ வீலரில்அழைத்துச் சென்று விடுவார். வளாகத்திற்குள் வீல்சேரை பயன்படுத்திக் கொள்வேன். கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போது, அரசு எனக்கு மூன்று சக்கர ஸ்கூட்டி ஒன்றை வழங்கியது.
ஸ்கூட்டி வந்த பிறகு நானாகவே வெளியில் பயணிக்கத் தொடங்கினேன்.நான் படிக்கும்போதே விளையாட்டில் ஈடுபடும்படி என் நண்பர்கள் அறிவுறுத்த, தனிநபர் விளையாட்டாக பென்சிங்கை(வாள் சண்டை) தேர்வு செய்தேன். விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பலரும் எனக்கு இதில் உதவியாக இருந்தார்கள். கல்லூரி இறுதி ஆண்டில் இருந்தே பயிற்சி எடுக்கத் தொடங்கினேன்.
தொடர்ந்து தேசியப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான் லெஃப்ட் ஹேண்டர் என்பதால் என்னால் வாள் சண்டையில் தனிநபர் விளையாட்டில் விளையாட முடியவில்லை. எனவே குழு விளையாட்டில் மட்டுமே விளையாட முடிந்தது. இதில் சென்னை டீம் எனக்கு ரொம்பவே ஆதரவாகச் செயல்பட்டார்கள். பென்சிங் விளையாடத் தேவையான ஸ்வார்ட், மாஸ்க், ஜாக்கெட் இவைகள் என்னிடம் இல்லை. சென்னையில் விளையாடிய ஆண்கள் டீம் எனக்கு இவற்றைத் தந்து ஆதரவாக செயல்பட்டார்கள்.
வார இறுதி நாட்களில் பயிற்சிகளை மேற்கொண்டதோடு, மற்ற நாட்களில் யூ டியூப்பை பார்த்து நிறைய சின்ன சின்ன நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். இது எனக்கு மிகப் பெரும் உதவியாய் இருந்தது. தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் முயற்சியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அதற்கான தேர்வு நடைமுறைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நானும் தேர்வானால் பயிற்சி எடுப்பதற்கும், போட்டிகளில் கலந்துகொள்வதற்கும் செலவுகள் அதிகம் எடுக்கும்.
அதற்கான ஸ்பான்சர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். பென்சிங் விளையாடத் தேவையான வாள், உடைகள், ஜாக்கெட் மற்றும் ஹெல்மெட்களை வாங்குவதற்கு 1.50 லட்சம் வரை செலவாகும். எனவே இவற்றுக்காக கோவை ஆட்சியரிடம் உதவி கோரி மனு கொடுத்திருக்கிறேன்.
கோவை பி.ஜி. கல்லூரியில் பி.காம்.பி.ஏ. முடித்திருப்பதோடு, தொடர்ந்து வீல் சேர் பாஸ்கெட் பால் டீமிலும் இருக்கிறேன். பொருளாதார ரீதியான பிரச்சனைகளைத் தவிர்த்து நான் மாற்றுத் திறனாளி என்ற எண்ணம் எனக்கு ஒரு நாளும் வந்ததில்லை. அதில் நான் எந்தவிதத்திலும் முடங்கவும் இல்லை. காரணம், என் பெற்றோர்கள்.
அவர்கள் எனக்கு மிகப் பெரும் வழிகாட்டியாக இருந்தார்கள். கஷ்டப்பட்டாவது என் அத்தனை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றினார்கள். கூடவே என்னுடைய ஆசிரியர்களும், நண்பர்களும், விளையாட்டிற்கான அத்தனை பயிற்சியாளர்களும் என்னை ரொம்பவே ஊக்கப்படுத்தினர்’’ என முடித்தார்.
Average Rating