அவுஸ்திரேலியாவின் கொரோனாச் சவால்!! (கட்டுரை)

Read Time:12 Minute, 0 Second

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத் தலைநகரான மெல்பேர்ன் கொரோனாத் தொற்றுக்கு மீண்டும் முகங்கொடுக்கின்றது.

அவுஸ்திரேலியாவின் முதலாவது கொரோனாத் தொற்று மெல்பேர்னிலேயே சனவரி 25ல் ஆரம்பமாகியது. அதன்பின்னர், வெவ்வேறு மாநிலங்களிலும் தொற்று ஏற்பட்டது. கொரோனாத் தொற்றினால் முதலாவது உயிரிழப்பு பெர்த் நகரத்தில் ஏற்பட்டது. சமூகப்பரவல் மார்ச் 2ல் ஆரம்பமாகியது.

அவுஸ்திரேலியாவின் எல்லைகள் மார்ச் 20ல் மூடப்பட்டன. வெவ்வேறு மாநிலங்களும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை அறிவித்தன. அத்தியாவசியமற்ற சேவைகளின் செயற்பாடுகள், மார்ச் 21 முதல் படிப்படியாகக் குறைக்கப்பட்டன. கட்டிட நிர்மாணம், உற்பத்தி மற்றும் வர்த்தகச் செயற்பாடுகள் தொடர அனுமதிக்கப்பட்டன.

குரூஸ் என்று சொல்லப்படுகின்ற உல்லாசப் பயணக் கப்பல்கள் மூலமாக, அவுஸ்திரேலியாவில் கொரோனாத் தொற்று வேகமடைந்தது. ரூபி பிரின்சஸ் என்னும் கப்பலில் வந்தவர்கள் மூலமாக, மார்ச் 28ல் 284வரையான தொற்று அடையாளமாகின. அதிலிருந்து இரண்டு தினங்கள் கழித்து, மேலும் 440 தொற்று அடையாளமாகின.

விக்டோரியா மாநிலத்தில் மார்ச் 16ல் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை, மே 31வரை இரண்டு தடவை நீட்டிக்கப்பட்டது. கொரோனாத் தொற்றை அரசு வேகமாகக் கையாண்டது. வெவ்வேறு மாநிலங்களிலும், மே மாதப் பிற்பகுதியளவில், தொற்றுக் குறைய ஆரம்பித்தது.

யூன் 6ல், நியூசவுத்வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களில், புதிய தொற்று எதுவும் அடையாளப்படவில்லை. கொரோனாத் தொற்று முழுமையாக நீங்கிய முதலாவது மாநிலமாகத் தஸ்மேனியா யூன் 12ல் அறிவிக்கப்பட்டது. அதேகாலப்பகுதியில், பல்வேறு மாநிலங்களிலும் இயல்புநிலை திரும்புவதான தோற்றப்பாடு ஏற்பட்டது.

சுமார் இரண்டுவாரங்களின் பின்னர், கொரோனாத் தொற்றுக் குறித்த அச்சம் மீண்டும் மெல்பேர்னில் ஏற்பட்டது. சமூகப்பரவல் ஏற்படுவதான சமிக்ஞைகள் யூன் 20ல் தென்பட்டன. அதனால், மெல்பேர்னில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதேகாலப்பகுதியில், மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் தொற்று முழுமையாக நீக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது.

மெல்பேர்னின் புறநகர்ப்பகுதிகளில் யூன் 30ல் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. அடர்த்தியான குடியிருப்புகளைக் கொண்ட, அரச குடிமனைத்தொகுதிகளில் சமூகப்பரவல் அதிகரிப்பதான அச்சம் ஏற்பட்டது. மூவாயிரம் வரையான குடியிருப்பாளர்களைக் கொண்ட, ஒன்பது வரையான குடியிருப்புத் தொகுதிகளில், லொக்டவுன் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதேவேளையில், நியுசவுத்வேல்ஸ் மாநிலத் தலைநகரான சிட்னியில், யூலை 3ல் கொரோனாத் தொற்று அடையாளமாகியது. மெல்பேர்னில் இருந்து சென்றவர் மூலமாகவே அங்கு தொற்றுப் பரவியதான சந்தேகம் ஏற்பட்டது. அன்றையகாலத்தில், மெல்பேர்னில் சமூகப்பரவல் ஆரம்பமாகியிருந்தது. அதனால், தமது மாநிலங்களிடையேயான எல்லைகளை மூடுவதாக, நியுசவுத்வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநில அரசுகள் யூலை இரண்டாவது வாரத்தில் அறிவித்தன.

மெல்பேர்னிலும், அதனை அண்டிய மிச்சேல்ஷயர் பகுதியிலும் ஆறுவார லொக்டவுன் யூலை 9ல் அறிமுகமாகியது. அன்றையகாலப்பகுதியில், தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க ஆரம்பித்தது. அதனால், தொற்று எவ்வாறு ஆரம்பித்தது என்னும் கேள்வி பரவலாக எழுந்தது.

மார்ச் மாதம் முதலாக, கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மெல்பேர்ன் உட்பட்டிருந்தது. தொற்றைக் கட்டுப்படுத்துவதில், யூன் ஆரம்பத்தில் பெருமளவு வெற்றி பெற்றிருந்தது. அப்படியாயின், மீண்டும் எவ்வாறு மெல்பேர்னில் தொற்று ஆரம்பமாகியது என்னும் கேள்வி தவிர்க்க முடியாததாகியது.

விக்டோரியா அரசின் முகாமைத்துவத்திலேயான கட்டாயத் தனிமைப்படுத்தலில் காணப்பட்ட ஓட்டைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. அங்கு காணப்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. காட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தவர்கள், முறையற்ற வழிகளில் சமூகத்துடன் ஊடாடிய தகவல்கள் வெளிவந்தன. அவ்வாறான ஊடாட்டங்கள் மூலமாக, கொரோனாத் தொற்று சமூகத்தில் பரவியிருக்கலாம் எனத் தற்போது சந்தேகிக்கப்படுகின்றது.

அச்சமூட்டுகின்ற வகையில், யூலை நடுப்பகுதியிலே சமூகப்பரவல் மெல்பேர்னில் அதிகரித்தது. தொடர்ச்சியாக மாற்றமடைந்த சூழ்நிலைகளுக்கு ஈடுகொடுத்து அரசும் செயற்பட்டது. பொது சுகாதார நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. யூலை 22 முதல் வெளியே செல்லும்போது முகக்கவசம் (மாஸ்க்) அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அவசரகால நிலை ஆகஸ்ட் 16வரையில் நீட்டிக்கப்பட்டது.

லொக்டவுன் ஆரம்பமாகிய பின்னரும், மெல்பேர்னில் சமூகப்பரவல் அதிகரித்தது. அஃது பொதுமக்களின் கவனக்குறைவால் ஏற்பட்டிருக்கலாம் என்னும் ஊகங்கள் காணப்படுகின்றன. இரண்டு தரப்பினரை நோக்கியே விரல்கள் நீள்கின்றன. முதலாவது தரப்பு – தொற்று அறிகுறி ஏற்பட்டவுடனே தனிமைப்படுத்திக் கொள்ளாதவர்கள். இரண்டாவது தரப்பு – கொரோனாத் தொற்றுக்கான பரிசோதனை முடிவு வெளியாகும்வரையில் தனிமைப்படுத்திக் கொள்ளாதவர்கள். இவ்விரண்டு தரப்பினருமே சமூகப்பரவல் ஏற்படுவதற்கு காரணமாகிவிட்டனர் எனக் கருதப்படுகின்றது.

விக்டோரியா அரசின் கட்டாய தனிமைப்படுத்தலில் ஏற்பட்ட தொய்வு, முகக்கவசம் (மாஸ்க்) அணிவது தொடர்பில் அரச நிலைப்பாட்டில் காணப்பட்ட தளம்பல், தொற்று ஏற்பட்டவர்களை வேகமாக அடையாளப்படுத்துகின்ற (காண்டாக்ட் டிரேசிங்) செயற்பாட்டில் வேகமின்மை என்பவை தொடர்பில் விசனங்கள் ஏற்பட்டன. அதுவே, அரசு தொற்றைக் கையாள்வது தொடர்பிலான நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தின. விக்டோரியா அரசு பொறுப்பைத் தட்டிக்கழிக்கவில்லை. அரசு தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களைக் கவனத்தில் கொள்கின்றது. தொற்றைக் கையாள்வதில் ஏற்பட்ட குறைகளை நிவர்த்தி செய்கின்றது. அத்துடன், தொற்றைக் கையாள்வதில் ஏற்படக்கூடிய அடுத்தகட்டச் சவால்கள் குறித்தும் கவனத்தில் கொள்கின்றது. அந்தவகையில், மெல்பேர்னில் ஏற்பட்டுள்ள சமூகப்பரவல் தொடர்பில் விக்டோரியா அரசு கூர்மையான கவனத்தைக் கொண்டிருக்கின்றது.

அதேவேளையில், கொரோனாத் தொற்று தொடர்பிலான நாடுதழுவிய மூலோபாயம் குறித்த கேள்விகள் காணப்படுகின்றன. அவுஸ்திரேலியா சமஷ்டி ஆட்சிமுறையைக் கொண்டதாகும். கல்வி, சுகாதாரம், பொலிஸ் போன்ற விடயங்களில் சட்டம் இயற்றும் சுயாதீன அதிகாரம் மாநிலங்களிடம் காணப்படுகின்றன. அதனால், கொரோனாத் தொற்றைக் கையாளுவது தொடர்பிலான மூலோபாயங்கள் வேறுபடுகின்றன.

சில மாநிலங்கள், கொரோனாத் தொற்று நீக்கத்தை (எலிமினேஷன்) மூலோபாயமாகக் கொண்டுள்ள தோற்றத்தை வெளிப்படுத்துகின்றன. மற்றயவை, கொரோனாத் தொற்று அடக்கலை (சப்றஷன்) மூலோபாயமாகக் கருதுகின்றன. குவின்ஸ்லாந்து, மேற்கு அவுஸ்திரேலியா, தஸ்மேனியா உள்ளிட்ட மாநிலங்கள் தொற்று நீக்கத்தில் முன்னிலை வகிக்கின்றன. விக்டோரியாவின் மெல்பேர்ன் சமூகப்பரவலினால் திணறுகின்றது. கொரோனாவுடன் வாழப்பழகுதல் என்னும் சொல்லாடல், சிட்னியில், அரச உயர்மட்டங்களில் அதிகம் உச்சரிக்கப்படுகின்றது.

இத்தகைய மாறுபட்ட அணுகுமுறைகளினால், தொற்றுத் தொடர்பில், மாறுபட்ட பெறுபேறுகளே மாநிலங்களிலே காணப்படுகின்றன. அதனால், மாநிலங்களிடையே போக்குவரவு நிறுத்தப்பட்டிருக்கின்றது. விக்டோரியா மாநிலத்துடனான எல்லைகளை ஐந்து வரையான மாநிலங்கள் மூடிவைத்திருக்கின்றன.

தொற்றைக் கையாள்வதில் காணப்படுகின்ற மாறுபட்ட மூலோபாயம் சூழ்நிலையைச் சிக்கலாக்குகின்றது. தொற்றுத் தொடர்பில் நாடுதழுவிய பெறுபேறுகள் கிடைக்கவில்லை. அதனால், நாடுதழுவிய போக்குவரவைக் கட்டுப்படுத்தவேண்டியுள்ளது. இல்லாவிடில், மாநில எல்லைகளைக் கடந்து தொற்றுப் பரவும் அபாயம் காணப்படுகின்றது. ஆனால், எல்லைகளை நெடுங்காலத்துக்கு மூடிவைத்திருப்பது சாத்தியமில்லை. அதனால், கொரோனாத் தொற்றைக் கையாளுவதற்கான நாடுதழுவிய மூலோபாயத்தைக் கண்டடைவதே அவுஸ்திரேலியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சித்த மருத்துவத்தை அறிய தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் ஜப்பானியர்கள்! (மருத்துவம்)
Next post ஆண்களுக்கு ‘ஜி ஸ்பாட்’ உண்டா? (அவ்வப்போது கிளாமர்)