பெங்காலுக்கு கிடைத்த நைட்டிங்கேல்! (மகளிர் பக்கம்)
மேற்கு வங்காளம், ராணாகட் ரயில் நிலையம்…. எண்ணை வைக்காத பரட்டை தலை, அழுக்கான தேகம் மற்றும் கரையேறிய பற்களுடன் தோற்றமளிக்கிறார் அந்த பெண்மணி. கடந்த இரண்டு வாரமாக இவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.‘ஏக் பியார் கா நக்மா…’ லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை இவர் ரயில் நிலையத்தில் பாட… அதனை ஒருவர் வீடியோ பிடித்து வலைத்தளங்களில் வலம் விட்டுள்ளார். அன்று முதல் பிரபலமாகிவிட்டார் ரானு மரியா மண்டல். இவரின் பாடல் வீடியோவை 10 லட்சம் மக்கள் பார்த்துள்ளனர்.
வீடியோவில் ரயில்கள் ெசல்லும் சத்தம் பின்னணியில் கேட்டாலும், 56 வயது நிரம்பிய ரானுவின் குரல் நம்முடைய காதினை வருடிச் சென்றது.இவரின் அந்த இரண்டு நிமிட வீடியோ அவரின் வாழ்க்கையின் தரத்தையே மாற்றியுள்ளது. வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டு தனி நபராக ராணாகட்டில் சுற்றிக் கொண்டு இருந்தவருக்கு இப்போது ரேடியோ சானல்கள், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், கேரளாவில் உள்ள மனிதநேய அமைப்புகளில் இருந்து அழைப்புகள் வரத் துவங்கியுள்ளன.
எல்லாவற்றையும் விட பத்து வருடம் முன்பு இவரை விட்டு பிரிந்து சென்ற மகள் இந்த வீடியோவை பார்த்து தன் தாயை தேடி வந்துள்ளார். பலதரப்பட்ட இடங்களில் இருந்து இவருக்கு வாய்ப்பு குவிந்து கொண்டிருக்கிறது. ஜூலை 21ம் தேதி, தன் வீட்டில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராணாகட் ரயில் நிலையத்திற்கு நடந்து வந்துள்ளார் ரானு.
1972ம் ஆண்டு வெளியான ‘ஷோர்’ திரைப்பட பாடலான ‘ஏக் பியார் கா நக்மா..’ என்ற பாடலை ரயில் நிலையத்தில் உள்ள பெஞ்சில் அமர்ந்தபடி பாடியுள்ளார். இவரின் இனிமையான குரலை உணர்ந்த அடின்டிரா சக்கரவர்த்தி என்ற பயணி அதை இரண்டு நிமிடம் தன்னுடைய செல்போனில் பதிவு செய்துள்ளார். அவ்வளவு தான் அடுத்த நிமிடம் முதல் ரானு உலகளவில் பிரபலமாகிவிட்டார்.
‘‘ஒரு பெங்காலி இசைக்குழு என்னை அணுகியுள்ளது. ரானு அடுத்த மாதம் அந்த குழுவில் இணைந்து பாடல் பாட உள்ளார்’’ என்கிறார் சக்கரவர்த்தி. ‘‘நான் அந்த வீடியோவை பதிவு செய்ததால், பலர் ரானுவை என் மூலமாக தொடர்பு கொள்ள முயல்கிறார்கள். ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் என்னை அணுகி பேசினார். கொல்கத்தாவை சேர்ந்த பல தயாரிப்பாளர்கள் இவர் திரைப்படங்களில் பின்னணியில் பாட விரும்புவாரா’’ என்று கேட்கிறார்கள் என்கிறார் சக்கரவர்த்தி.
‘‘ஒரு முறை பாடலை கேட்டா போதும்… அதை அப்படியே டியூன் மாறாமல் பாடுவேன். ஆனால் நான் முறையாக எந்த இசைக்கான பயிற்சியும் எடுத்துக் கொண்டதில்லை. நானும் என் கணவரும் ரொம்ப வருஷம் முன்பு மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகரான பெரோஸ் கான் வீட்டில் வேலைப் பார்த்து இருக்கோம்.
அப்படித்தான் ஹிந்தி கற்றுக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலமும் பேசுவேன். எனக்கு 20 வயசு இருக்கும் போது, ஒரு இசைக்குழுவில் இணைந்து பல மாநிலங்கள் சென்று பாடியிருக்கேன். ஆனால் நான் ஊர் ஊராக சென்று பாடுவது எங்க வீட்டில் யாருக்கும் பிடிக்கல. எல்லாருடைய கட்டாயத்தால் அப்போது நான் என் இசைப் பயணத்தை தொடர முடியாமல் போனது’’ என்றவருக்கு விதி மற்றொருவாய்ப்பினை அள்ளிக் கொடுத்துள்ளது.
இவரின் வீடியோ பிரபலமானதும், அங்குள்ள அழகு நிலையம் அவரை அழகுபடுத்தியுள்ளது. அவரின் சருமத்தை மெருகூட்டி, தலை முடிக்கு டை மற்றும் ஸ்ட்ரெயிடனிங் செய்துள்ளனர். அதுவும் இலவசமாக. ‘‘எனக்கு லதா மங்கேஷ்கர், கிஷோர் குமார், முகமது ரஃபி மற்றும் முகேஷ் அவர்களின் பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.
இது எனக்கு இரண்டாவது வாழ்க்கை. கிட்டத்தட்ட என்னை விட்டு பத்து வருடம் முன் சென்ற என் மகள் இப்போது திரும்ப எனக்கு கிடைத்து இருக்கா. இந்த வாழ்க்கையை நான் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வேன்’’ என்கிறார் புன்னகைத்தபடி ரானு மரியா மண்டல்.
Average Rating