காலம் கடந்து நிற்கும் செப்புச் சிலைகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 31 Second

ஆயக்கலை 64ல் மிக முக்கியமான கலையாகக் கருதப்படுவது சிற்பக் கலை. தமிழர்களின் கலைத்திறனான சிற்பக்கலைகள் ஒரு காலத்தில் சிகரம் தொட்டு இருந்ததன் அடையாளம்தான் இன்று நாம் பார்த்து வியக்கும் பல்லவர், சோழர், பாண்டியர்கள் காலத்துச் சிற்பங்கள். இவை நம்மை என்றும் ஈர்க்கத் தவறுவதேயில்லை.

கல், மண், உலோகம் போன்றவற்றால் உருவாக்கப்படுகின்ற சிற்பங்கள் ஏராளம். ஆனால், இக்காலத்திலோ கைவினைச் சிலைகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. நவீன நாகரிக முறையில் இவ்வுலகம் வளர்ந்து வருவதால், பாரம்பரிய கலைத்திறனை மெல்ல மெல்ல மறந்து வருகிறோம். இப்படி பலரால் மறக்கப்பட்டிருக்கும் இந்த சிற்பக் கலையை இந்த காலத்திற்கு ஏற்றார் போல் நவீன முறையில் அழகாக செதுக்கி வருகிறார், சென்னை சோழமண்டல சிற்பி ஹேமலதா சேனாதிபதி.

“என்னுடைய அப்பா சேனாதிபதி ஓர் ஓவியர், சிற்பக் கலைஞர். 1970-80களில் செப்புத் தகடுகள் மூலமாக எம்போசிங் வேலைகள் செய்து கொண்டிருந்தார். பள்ளிக்குப் போகும் நேரம் தவிர வீட்டில் அவருடைய வேலைகளை கவனிப்பேன். இப்படி தினம் தினம் என்னோடு, சிற்பக் கலை மீதான ஆர்வமும் வளர்ந்தது. அப்பாக்கு கூடமாட உதவியும் செய்ய ஆரம்பித்தேன். நான் இந்த துறைக்கு வருவதற்கு அப்பாக்கு விருப்பம் இல்லை. அன்றைய கால கட்டம், ஏன் இந்த கால கட்டத்திலும் ஒரு கலைஞனுக்கான அங்கீகாரம் சரியாகக் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியே. இருந்தாலும் எனது ஆர்வத்தால் அதை முழுமையாக கற்றுக் கொண்டேன்” என்றார்.

செப்பு பாரம்

பரியமானது. பழங்காலத்தில் கோயில்கள் கட்டும் போது கட்டடக் கலைக்கு என்ன முக்கியத்துவம் கொடுத்தனரோ, அதே முக்கியத்துவத்தைச் சிற்பக் கலைக்கும் கொடுத்தனர். கோவில் கோபுரம், உட்பிரகாரம், வெளிப் பிரகாரம், தூண் போன்ற அனைத்து இடங்களிலும் சிற்பங்களைச் செதுக்கினர். இதுமட்டுமின்றி, காலத்தால் அழியாத செப்பு உலோக சிற்பங்களைக் கோவில் தூண்கள், கொடி மரங்களில் பதித்தனர்.

இவ்வாறு சிறப்பு வாய்ந்த இந்த சிற்பக் கலையைத்தான் முதன் முதலில் செய்த அனுபவங்கள் பற்றிப் பேசிய ஹேமலதா, “அப்பாவிற்கு உதவினாலும், என்னுடைய முழு ஈடுபாட்டில் ஒன்று செய்து பார்க்க வேண்டுமென்ற ஆசை உறுத்திக் கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் சின்னச் சின்ன பீஸ் எடுத்து செய்து பார்த்தேன். அதன் அனுபவம் கொண்டு விநாயகர் உருவத்தினை முதலில் வடித்தேன். இதைப் பார்த்த வெளிநாட்டவர் ஒருவர் விலைக்கு வாங்கி சென்றார். இந்த சம்பவம் எனக்கு இன்னும் ஊக்க சக்தியாக அமைந்தது.

நம் படைப்பை ஒருவர் வாங்கிச் செல்கிறார், அதற்காக நாம் இன்னும் உழைக்க வேண்டுமென்று செயல்பட ஆரம்பித்தேன். தொடர்ந்து பல மெட்டல் சிலைகள் உருவாக்கினேன். அதை அப்பாவுடைய கண்காட்சியோடு அனுப்பியும் வைத்தேன். எனது படைப்பைப் பார்த்து 1991 ஆம் ஆண்டு தமிழக அரசின் ‘லலித் கலா அகாடமி’ விருது கிடைத்தது” என்றவர், இதற்காகத் தனியாகப் பயிற்சி ஏதும் எடுத்துக் கொண்டதில்லை. தன் அப்பாவோடு இணைந்து பணியாற்றிய அனுபவத்தை மட்டுமே கொண்டு பல அற்புதமான படைப்புகளை உருவாக்கியிருக்கிறார்.

இது வரை நூற்றுக்கும் மேற்பட்ட குழு கண்காட்சிகளில் பங்கெடுத்திருக்கும் ஹேமலதா நான்கு தனி கண்காட்சிகளை நடத்தியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக தற்போது ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை சென்னையில் அமைந்துள்ள ஆர்ட் ஓர்ல்டில் கண்காட்சி நடத்தியுள்ளார். இது பற்றி கூறும் ஹேமலதா, “ஒரு கலைஞன் செய்த வேலையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் போது அதற்குக் கிடைக்கும், பாராட்டுகளும் விமர்சனங்களும் மிகவும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் எனது படைப்புகளை காட்சிப் பொருளாக வைத்துள்ளேன். இதைச் சிலர் ரசிக்கின்றனர். சிலர் வாங்கி செல்கின்றனர். சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

உலோகத்தில் ஒரு சிலை வடிப்பது கடினமானது. இதனாலேயே அதிகமாக பெண்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை. ஏன் ஆண்களே சொற்பம். இப்படி இருக்கும் போது பலர் நான் செய்யும் வேலைகளைப் பார்த்துக் கேட்கும் போதும், பாராட்டும் போதும் அதை மேலும் மெருகேற்ற கஷ்டமாக இருந்தாலும் முழு நேரமாக இதையே செய்து கொண்டிருக்கிறேன்.

வீட்டில் கணவரின் ஊக்கமும், இரண்டு மகள்களின் அன்பும் என்னை பலப்படுத்துகிறது. மூத்தவளுக்குத் திருமணமாகிவிட்டது. இளையவள் என்னைப் போல் இந்த துறையில் ஆர்வமாக இருக்கிறாள்.இன்றைய சூழலில் இது போன்ற கலைகளை மக்கள் மத்தியில் கொண்டு போகும் வேலை ஒவ்வொரு கலைஞருக்கும் இருக்கிறது. பொழுது போக்கிற்காக எங்காவது ஒருவர் வரைந்த ஒரு ஓவியத்தையோ, சிற்பத்தையோ குறைந்த விலைக்கு விற்கும் போது, இதையே நம்பி இருப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் கலைக்கான மதிப்பு குறைந்துப் போய்க் கொண்டிருக்கிறது. இதோடு கணினியில் டிசைன் டவுன்லோடு செய்து சிலர் செய்கின்றனர். இங்கு உண்மைத் தன்மை இல்லாமல் போகிறது” என்றார்.

“மக்களிடையே கலை மூலம் சமூக மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும்” என்று கூறும் ஹேமலதாவின் உலோக சிற்பங்களில், இசையை மீட்டி மெய்மறக்கும் மனிதன், மனித உருவங்களின் நிழல்கள் என பல்வேறு சிந்தனைகள், கற்பனைகள், உணர்ச்சிகள் இயல்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விநாயகர், குழல் ஊதும் கிருஷ்ணன், ஏசு கிறிஸ்து உள்ளிட்ட தெய்வீக செப்பு உலோக சிலைகள் காண்போரைக் கவர்ந்து இழுக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.

“பறவைகள், விலங்குகள், மித்தாலஜி கதாபாத்திரங்கள், மனிதனின் வடிவங்கள், காதல், அன்பு, பாசம்… என என் மனதிற்கு என்னென்ன தோன்றுகிறதோ அதெல்லாம் படைப்பில் படைத்திருக்கிறேன். இதில் ஒற்றுமையையே பிரதானமாக வலியுறுத்துகிறேன். இதைப் பார்க்கும் போது உங்கள் மனதில் மகிழ்ச்சியும், ஆசுவாசம் மட்டுமே ஏற்படுத்தும்” என்கிறார் ஹேமலதா.

செப்புத் தகட்டில் பின்பக்கமாக உளி கொண்டு செதுக்கி, முன்பக்கமாக உருவம் கொண்டு வருவது சவாலான விஷயம். சற்று பிசகினாலும் கவனம் சிதறினாலும் செப்பு சிற்பம் உருக்குலைந்து விடும். ஹேமலதாவின் சிற்பங்களைப் பார்க்கும்போது, தடைகளைக் கடந்து சாதித்து உள்ளது
புலனாகிறது. பாரம்பரிய கலை என்றாலும் அதில் நவீனத் தொழில்நுட்பத்தையும் உரிய முறையில் புகுத்தியுள்ளார். செப்பு சிற்பங்களில் வெள்ளி முலாம் பூச்சு, எனாமல் கலப்பு, ஆயில் பெயிண்டிங் மிளிர்வதால் செப்பு உலோக சிலைகள் காலம் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாய் புண்களை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)
Next post சீறிப்பாய்ந்த தோட்டா!! (மகளிர் பக்கம்)